செய்திகளில் வெளிப்படுகிற அவலம் என்ன மொழி? என்ன நிறம்?

முதலில் தமிழ்நாடு!


வரப்புயர நீர் உயரும்! நீர் உயர நெல் உயரும்!
நீர் உயரக் குடி உயரும்! குடி உயரக் கோன் உயர்வான்


இப்படி அவ்வைக் கிழவி சொல்லி வைத்துப் போனதெல்லாம் செம்மொழியாகாது போல! 


தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம் என்று சொல்லிக் கொண்டதெல்லாம் பொய்யாய்ப்  பழங்கனவாய்ப் போய்விடும்  போல இருக்கிற  அவலத்தை முழுதும் படிக்க.....

"ஏதோ சில காரணங்களால், நெல் சாகுபடிப் பரப்பளவு குறைவதைப் போலவே ஒரு ஹெக்டேருக்கான நெல் உற்பத்தி அளவிலும்கூட குறைவுபட்டுக் கொண்டே வருகிறோம் என்பதையும் அரசு கருத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது. 2008-2009-ம் நிதியாண்டின் புள்ளிவிவரப்படி, தமிழக நெல் சாகுபடியில் ஒரு ஹெக்டேருக்குக் கிடைக்கும் நெல் உற்பத்தி 2,683 கிலோ மட்டுமே.

அப்படியானால் மற்ற மாநிலங்களில் நெல் உற்பத்தி ஒரு ஹெக்டேருக்கு என்னவாக இருக்கிறது? தில்லியில் 4,243 கிலோ, பஞ்சாபில் 4,022 கிலோ, ஆந்திரத்தில் 3,246 கிலோ, அந்தமான் நிகோபார் தீவில் 2,797 கிலோ, ஹரியானாவில் 2,726 கிலோ, தமிழ்நாட்டில் 2,683 கிலோ. அதாவது இந்தியாவில் 7-வது இடத்தில் இருக்கின்றோம். (காவிரித் தண்ணீரை வம்படியாகப் பிடித்து வைத்துக் கொண்டுள்ள கர்நாடகம் 11-வது இடத்தில் இருக்கிறது. அங்கே, ஒரு ஹெக்டேருக்கு 2,511 கிலோ நெல் விளைகிறது).

தமிழ்நாட்டில் நெல் சாகுபடிப் பரப்பு குறையத் தொடங்கியுள்ளது. ஒரு ஹெக்டேருக்கான உற்பத்தி அளவும் குறைவாக இருக்கிறது. ஆனால், நியாயவிலைக் கடைகளில் ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி கிடைப்பதும் சாத்தியமாகிறது.  


நெல்லை விளைவித்து, விற்றதும், விதைநெல்லும் போக, மீதமுள்ளதை வைத்து வயிறார உண்ட விவசாயி, ஒரு ரூபாய் அரிசிக்காக நியாயவிலைக் கடையில் காத்து நிற்கிறார். இது என்ன முரண்?

அப்படியே கொஞ்சம் உலக நடப்பும்....!


மின்தமிழ், தமிழ் மரபுக்கட்டளையின் நிறுவனர்களில் ஒருவரான  முனைவர் நா.கண்ணன் தென் கொரியாவில் இருந்து செம்மொழி மாநாட்டுக்கு தமிழில் உள்ள அரிய விஷயங்களை மின்னாக்கம் செய்வதைப் பற்றிய ஒரு ஆய்வுக் கட்டுரை சமர்ப்பிப்பதற்காக வந்திருக்கிறார். இன்றைய தினமலரில் அவரது பேட்டி வெளியாகியிருக்கிறது. தமிழுடன் தென் கொரிய  மொழிக்குத் தொடர்பு இருக்கிறது. ஹங்குல் என்ற எழுத்து சீர்திருத்தத்திற்குப் பிறகுதான் கொரியா முன்னேற ஆரம்பித்தது என்று சொல்லியிருக்கிறார். கொஞ்சம் தலை சுற்றியது!

இரண்டாவது உலகப்போர் முடிவுக்குப் பிறகு, அமெரிக்காவும், சோவியத் யூனியனும் உலகத்தைப் பங்கு போட ஆரம்பித்ததன தொடர்ச்சியாக, 1948 இல்கொரியாவின் வடபகுதியை ரஷ்யாவும், தென் பகுதியை அமெரிக்காவும் தங்கள்  பனிப்போரை தொடர்ந்து நடத்தும் களமாகக் கூறு போட்டுக் கொண்டன. ஒரு கட்டத்தில் கொரியாவிலிருந்து சோவியத் யூனியன் விலகிக் கொண்டது. வட கொரியாவின் தலைவர்களுக்கு ஆதர்சமாக மாசேதுங் ஆகிப்போன காலகட்டம். 1950 இல் 38 ஆவது அட்சக் கோடு என்று பரவலாக அறியப்படும் கொரியாவை  இரண்டாகப் பிரித்து வைத்திருக்கும் எல்லைக் கோட்டை மீறி, வட கொரியா மூன்றாண்டுகள் தென்பகுதி மீது தாக்குதலைநடத்தியது.. இந்தத் தாக்குதலின் அறுபதாவது ஆண்டு நிறைவின் தருணத்தில் முனைவர் கண்ணனின் இந்த ஒப்பீடு எனக்குக் கொஞ்சம் ஆச்சரியமாக இருக்கிறது. எந்த ஒரு மொழிக்குமே எழுத்து வடிவங்கள் காலம் தோறும் மாறிக் கொண்டே வந்திருக்கின்றன. இன்று நாம் தமிழில் கையாளும் எழுத்துக் குறியீட்டுக்கும், பழைய கல்வெட்டுக்களில் காணப் படுகிற வட்டெழுத்து வடிவத்துக்கும்  நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. மொழி ஆராய்ச்சியை மொழி வல்லுனர்கள் பார்த்துக் கொள்ளட்டும்!


சீனாவின் செல்லப் பிள்ளையாக, மாசேதுங்கின் ஒரே சீடப் பிள்ளையாக (மற்றவர்கள் எல்லாம் உஜாலாவுக்கு மாறுவதைப் போல கொஞ்சம் யதார்த்தத்துக்கு நெருக்கமாக பொருளாதார சீர்திருத்தங்களுக்கு மாறி விட்டார்கள்)  இருக்கும் வட கொரிய அதிபர் கிம் ஜோங் இல், எந்த நேரத்தில் என்ன செய்வார் எப்படி விபரீதமாக இருக்கப் போகிறது என்று புரியாமல் ஜப்பானும், தென் கொரியாவும் அலறிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் கொரியா டைம்ஸ் பத்திரிகையில், கொரிய யுத்தம் முற்றுப் பெறவில்லை, இன்னமும் நடந்து  கொண்டுதான் இருக்கிறது   என்ற செய்திக் கட்டுரையை படிக்க! அறுபதாண்டுகளாகப் புகைந்து கொண்டிருக்கும் ஒரு பிரச்சினை, முற்றினால் எல்லோரையுமே பாதிக்கக் கூடியது என்ற வகையில் தெரிந்து கொள்வதற்காகவும்!





 

4 comments:

  1. நல்ல விசயங்கள் . பகிர்வுக்கு நன்றி . வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. எது நல்லவிஷயம், பகிர்ந்து கொண்டதற்கு நன்றி என்கிறீர்கள் திரு.சரவணன்?

    தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம் என்று சொல்லிக் கொண்ட தஞ்சை டெல்டா பகுதியில் நெல் பயிரிடும் பரப்பு சுருங்கிக் கொண்டே வருகிறது;கண்டுமுதலும் மற்ற மாநிலங்களோடு ஒப்பிடுகையில் மிகவும் குறைச்சல். உழுபவன் கணக்குப் பார்த்தால் உழக்குக் கூட மிஞ்சாது என்பார்களே அப்படி ஒரு அவலம்! இதை வயிறெரிந்து சொல்ல வேண்டியிருக்கிறது.

    ஊருக்குச் சோறுபோட வேண்டிய விவசாயியே ஒற்றை ரூபாய் ரேஷன் அரிசிக்குக் காத்துக்கிடக்கும் நிலைமை எப்படிப்பட்ட முரண் நகையாக இருக்கிறது,என்பதை தினமணி தலையங்கம் சுளீரென்று உரைக்கிற மாதிரிக் கேட்டிருக்கிறது.

    பதிற்றுப் பத்து, பத்துப்பாட்டு, என்று சங்கத்தமிழின் பெருமையைக் கேட்டுக் கொண்டிருந்த தமிழன் இன்றைக்குக் குத்துப்பாட்டை மட்டுமே விரும்பிக் கேட்கிறவனாக மாறிப் போனானே அது நல்ல விஷயம் என்கிறீர்களா? செம்மொழிக்குக் கூடப் பேட்டை ராப் ட்யூன் வேண்டியிருக்கிறதே!

    குடி உயரக் கோன் உயர்வான் என்று அவ்வை சொன்னதெல்லாம் வெறும் ஏட்டுச் சுரைக்காய்! மானாட மயிலாட மங்கையர்கள் மார்பாடக் காண்பித்தாலேயே போதும் என்ற அளவுக்குக் குடிகள் தாழ்ந்து-- கோன்'கள் கூத்தடித்துக் கொண்டிருக்கிறார்களே அதை நல்லவிஷயம் என்று சொல்வீர்களா?

    ReplyDelete
  3. தமிழ் இணைப்புகள் குறிப்பிட்ட காலத்திற்குள் மாற்றி விடுவார்களா? தினமணி தினமலர் இணைப்பு செயல்படவில்லை. ஆங்கில தளம் மட்டும் உயிரோடுஇருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. ஆவணக்காப்பகத்தில் இடம் அதிக அளவில் தேவைப்படுமே! செலவினத்தை சுருக்குகிற வழி!

      Delete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!