இன்பக் கனவுகள்! எண்டமூரி வீரேந்திரநாத்

இன்பக் கனவுகள்எண்டமூரி வீரேந்திரநாத்

சுசீலா கனகதுர்க மொழிபெயர்ப்பில் திருமகள் நிலைய வெளியீடு.
முதலில் வெளிவந்த வருடம் 1992 பக்கங்கள் 136


டித்ததும் பிடித்ததும் என்ற தலைப்பில் இந்தப்பக்கங்களில் எழுதி நீண்ட நாட்களாகி விட்டது இல்லையா?!

த்தனையோ விஷயங்களைப் பற்றிப் படிக்கிறோம். அதில் ஏனோ சில விஷயங்கள் உடனேயே பிடித்துப் போய்விடுகின்றன. நீண்ட நாட்கள் மனதில் தங்கியும் விடுகின்றன. எதனால் அப்படி என்று கேள்வி கேட்டுக் கொண்டோமேயானால், வெவ்வேறு விதமான பதில்கள், அந்தந்த நேரத்துக்குத் தகுந்த மாதிரி
ருவதைப் பார்க்க முடியும்.

"நல்ல இலக்கியம் என்பது உண்மையை ஒரு படைப்பாளன் தேடும் தவம். உண்மையை அவனவன் கண்ட விதத்தில் வெளிப்படுத்தும் போது மனிதக் குரல்களையும் முகங்களையும் போல சாயல்களும் தனித்தன்மையும் வளமாகக் கொழிக்கின்றன. உண்மையைக் காணத் திராணி இல்லாதவர்கள் வேறு எவற்றுக்கேல்லாமோ ஆசைப் பட்டுத் தங்களையே நகல்களாக்கிக் கொண்டு விடுகிறார்கள். பலபேர் வார்ப்படம் வைத்துக் கொண்டு ஒரே மாதிரியாக பொம்மை செய்து கொண்டே போகிறார்கள். போலி என்பதைக் கூட்டிக் கொண்டு போகிறார்கள்."

தி.ஜானகிராமன் இப்படிச் சொல்லியிருந்ததை, அவருடைய அம்மா வந்தாள் புதினத்தைப் பற்றி இந்தப் பக்கங்களில் எழுதியபோது, எடுத்தாண்ட வரிகளை  எண்டமூரி வீரேந்திரநாத் என்ற திறமையான கதை சொல்லி, எழுத்தாளரைப் பற்றி எழுதும்போது நினைத்துப் பார்த்தேன்.

ந்தவொரு எழுத்தாளனுக்கும்  தான் தேடுவது என்ன, தான் கண்டுகொண்டதென்ன என்பதை வெளிப்படுத்துகிற விதமாகத் தான்  அவரவர் எழுத்து அமைந்து விடுகிறது. சிலபேருக்கு மெய்த்தவம். வேறு சிலருக்கோ பூனைத் தவம். எப்படி இருந்தாலும் எழுத்து என்பது வெற்றிடத்தில் இருந்து பிறக்க முடியாது. உண்மையைப் புரிந்து கொண்டு எழுதுவது ஒருவகைத் தவம். உண்மையை நேருக்கு நேர் எதிர் கொள்ளத் திராணியற்றவர்கள், வேறு எதற்கெல்லாமோ ஆசைப்பட்டு, தங்களையே இழந்துவிடுகிற விபரீதத்தையுமே சந்தோஷத்துக்கு ஒரு குறுக்கு வழி திரைப்படம், கதையை இந்தப்பக்கங்களில் தொட்டு எழுதியது நினைவிருக்கிறதா?

ன்று காலை, இன்பக் கனவுகள் என்ற எண்டமூரி வீரேந்திரநாத் எழுதிய ஒரு சிறு நாவலை மறுபடி படித்தபோது, ஆசிரியர் எவ்வளவு நுட்பமாக மனித இயல்புகளைப் படித்திருக்கிறார் என்ற ஆச்சரியம் தான் தி.ஜானகிராமன் எழுதிய மேற்கண்ட வாசகங்களை மறுபடி அசைபோட வைத்தது. 


ந்தக் கதையின் கரு அல்லது முடிச்சு மிக மிகச் சிறியது தான்! அந்தச் சிறிய முடிச்சை,  வெகு சாதாரணமாகக்  காணப்படும் மனித இயல்பு ஒன்றை வைத்து, எவ்வளவு லாவகமாகக் கதை பின்னி ருக்கிறார்! 136 பக்கங்களுக்குள் ஒரு அழகான  சித்திரத்தைப் படைத்திருக்கிறார். பக்கங்களின் எண்ணிக்கை வேண்டுமானால் ஒரு குறுநாவல் என்று வகைப்படுத்துகிற விதத்தில் இருக்கலாம்.ஆனால், இந்த சிறிய புதினத்தில் வருகிற ஒவ்வொரு பாத்திரமுமே, அவரவர் குணசித்திரத்தில் நெடிது உயர்ந்து நிற்கிறார்கள்.

சஞ்சு என்ற சஞ்சீவி! இந்தக் கதையின் நாயகன். சிறுவயதில், வீம்பும் பிடிவாதமும் நிறைந்தவனாக இருக்கிறான்.படிப்பில் அவ்வளவு நாட்டமில்லை, உள்ளூர் குட்டி தாதாக்களுக்குத் தலைவனாக அவ்வளவு சேட்டை! தாய் ஜானகி மிகவும் கண்டிப்புக்காரி. ஒரு முடிவு எடுத்து விட்டாள் என்றால்  மாற்றிக் கொள்ளவே மாட்டாள். அவ்வளவு வைராக்கியம்! மகன் செய்கிற ஒவ்வொரு தவறுக்காகவும் கடுமையாகத் தண்டிக்கிறாள். எவ்வளவுக்கெவ்வளவு அம்மாக்காரி தண்டிக்கிறாளோ, அவ்வளவுக்கவ்வளவு பையனுடைய வீம்பும் பிடிவாதமும் அதிகரித்துக் கொண்டே போகிறது. அம்மாக்காரிக்கே ஒரு சலிப்புத் தோன்றி விட, இந்தப் பிள்ளையை உலகத்தில் எவருமே மாற்ற முடியாது, ஒழிந்துபோகட்டும் என்ற முடிவுக்கு வந்து விடுகிறாள்.

அம்மாக்காரிக்கு எவ்வளவு வைராக்கியம் இருந்ததோ அதை விடக் கூடவே அந்த சிறுபையனுடைய வீம்பு, பிடிவாதம், முரட்டுத் தனத்துக்குப் பின்னால்  இருப்பதை வெளிப்படுத்தும் ஒரு தருணமும் வருகிறது. மாறவே மாட்டான் என்று இருந்தவனைத் தலைகீழாகப்
புரட்டிப் போட்டுவிடுகிற தருணமாகவும் அது ஆகிப் போகிறது. தாய் தகப்பனை இழந்து, இவர்கள் வீட்டிலேயே ஒன்றாக வளரும் மாமன் மகள் பாவனி, இந்த முரட்டுப் பிள்ளையிடம் நேசத்தோடு இருக்கிறாள். ஒரு சந்தர்ப்பத்தில் வெளியே செம்மண் சுழலுக்குள் சிக்கிக் கண், வாயெல்லாம் செம்மண் விழுந்து உறுத்தும்போது, மருந்தென்று சொல்லி அவள் கண்களில் எருக்கம் பாலை ஊற்ற, பாவனிக்குக் கண்பார்வை போய்விடுகிறது.

வீட்டுப்பக்கமே இரண்டு நாட்கள் வராமல் சுற்றிக் கொண்டிருந்து விட்டுத் திரும்பும்போது அம்மாக்காரி கடுமையான வார்த்தைகளால் அவனைச் சுடுகிறாள். இனிமேல் வீட்டுப்பக்கமே வராதே போய்விடு என்கிறாள்.

சஞ்சீவி நகர்ந்தான். அவன் நடையில் முன்னைப்போலக் குறும்புத் தனம் இல்லை. ஆயிரம் வருடத்து அனுபவம் இருந்தது. இரண்டு நாள் தூக்கமில்லாத இரவுகளின் தளர்ச்சி தெரிந்தது. அழுது அழுது சோர்ந்து போய்விட்ட மனம் பாரமாயிற்று.

நாலடி முன்னோக்கி வைத்துத் தாயிடம் வந்தான்.

"போறேம்மா" என்றான். அந்த ஒரு வார்த்தையில் செய்த காரியத்தால் வெட்கமும், அதற்கு அனுபவித்த தண்டனையால் அடியுண்ட அவமானமும், அது ஏற்படுத்திய அனுபவமும் துணிச்சலும் கலந்திருந்தன.

தாய் பேசவில்லை.

கணபதியின் கண்களில் இருந்து கண்ணீர் உதிர்ந்தது.

சஞ்சீவி நகர்ந்து வாசலுக்கு வரப்போனவன் நின்றான். பாவனி கட்டிலில் படுத்திருந்தான். மெல்ல அந்தப் பக்கமாய்ப் போனான். சந்தடியைக் கேட்டு பாவனி கைகளால் துழாவிப் பார்த்தாள்.

அவள் கைமேல் கையை வைத்தான்.

அவனுக்கு அழுகை வரவில்லை. வெறுப்பாய் இருந்தது. ரோஷமாய் இருந்தது.யார் மேல் என்பதே தெரியாமல் கோபம் வந்தது.

அப்போது அவன் பத்து வயது சிறுவனைப் போலில்லை. விதி ஆடுகிற நாடகத்தின் மிக வேதனையான கட்டத்தை ஏற்று நடத்திக் கொண்டிருந்த சூத்திரதாரியைப் போல இருந்தான்.

அனுபவம் வாய்ந்த சேஷகிரியே வாயடைத்துப் போய்விட்டார்.

அன்பாய்த் தன்னைத் தொட்ட கையை அழுத்தமாகப் பிடித்துக் கொண்டாள். அவன் பேசவில்லை. கன்னங்களில் கண்ணீர் கோடிட்டுக் கொண்டிருந்தது. அவ்விடத்தில் ஒரு வினாடி மௌனமாய் நின்று விட்டு அவன் மெல்ல நகர்ந்தான்.

அந்த நேரத்தில் மட்டும் அவன் மனதிலிருந்த உணர்ச்சிகளெல்லாம் ஒரு உருப் பெற்றுவிட்டிருந்தால், "பாவனி! போயிட்டு வரேன்! டாக்டராகித் திரும்பி வருவேன். உன் கண்களை நானே குணமாக்குகிறேன். என் பணத்திலேயே.....!என்னைப் போகச் சொல்லுகிறாளல்லவா அம்மா? என் முகத்தைப் பார்க்க மாட்டாளாம்! ஆம், நானும் பார்க்க மாட்டேன்--திரும்பவும் உன் கண்கள் குணமாகும் வரை இந்த ஊருக்கே வர மாட்டேன்" என்று சொல்லி இருப்பான்.

அந்த யோசனைகளுடன் அந்த வீட்டை விட்டுப் புறப்பட்டு  விட்டான் அவன்.

ந்தப்பகுதியை கதையைப் பின்னோக்கிப் பார்க்கிற விதத்தில் டாக்டர் சஞ்சீவியாக அவன் ஆன பிறகு அவனுக்கு தங்கள் அவுட் ஹவுசில் தங்க இடமும் கொடுத்து, எல்லா உதவிகளையும் செய்து கொண்டிருக்கிற ஒரு தொழிலதிபர் ரகுநந்தனுடைய  மகளும், சக டாக்டருமான கவிதாவிடம் சொல்கிற மாதிரி வருகிறது. 


பிடிவாதத்தில் ஜெயித்து டாக்டராகியாயிற்று. பாவனிக்கு மருத்துவம் செய்வதற்கு முன்னாள் பரிசோதிப்பதற்காக இவன் அனுப்புகிற டாக்டர்களை அவன் தாய் நிராகரித்து அனுப்பிவிடுகிறாள். அப்படியிருந்தும் வேறு விதமாக பாவனியின் நிலையைத் தொடர்ந்து சஞ்சீவி கவனித்துக் கொண்டு தான் இருக்கிறான்.

ரே பிடிவாதம்! அவனுடைய தவறால் பறிபோன கண்களை பாவனிக்கு மீட்டுக் கொடுத்துவிட வேண்டும்! இதைத் தவிர அவனுக்கு வேறோர் நினைப்பில்லை. அங்கே பாவனி வேறோர் நினைப்பில் இருக்கிறாள்.

தாபாத்திரங்கள் எண்ணிக்கை இந்தக் கதையைப் போலவே கொஞ்சம் சின்னது தான்! ஆனால் ஒவ்வொரு பாத்திரமும் தனித்துவமாக நிற்கிற மாதிரி, ஒவ்வொரு பாத்திரமும் ஒவ்வொரு வகை மனித இயல்பைத் தொட்டுச் சொல்கிற மாதிரிப் படைத்திருக்கிறார்  எண்டமூரி.வீரேந்திரநாத். 
ன்னுடைய மகளுடைய சிநேகிதன் என்றாலும் தன்னையே பிரதி பலிக்கிற மாதிரி உணர்கிற ரகு நந்தன்,  சிநேகிதியாக வருகிற டாக்டர் கவிதா, அவளை மணந்துகொள்ளப் போகும் மாப்பிள்ளையாக வரும் டாக்டர் ரமேஷ், அவனது ரஷ்ய நண்பர்கள் எல்லோருமே ஒரு விதமென்றால், அங்கே கிராமத்தில் நாயகனுடைய தாய், ஜானகி, சகோதரன் கணபதி, உதவி செய்கிற மாதிரி வந்து பணத்தைக் கொஞ்சம் திருடிக் கொண்டிருக்கும்  சித்தப்பா சேஷகிரி மொத்தத்தையும் சுருட்டத் துணிகிற வஞ்சகத் தனம் கடைசியில் , அவருடைய வெகுளிப் பிள்ளை  பாலு என்று கதா பாத்திரங்கள் ஒவ்வொருவரும், வாழ்க்கையில் நாம் தினசரி பார்த்துக் கொண்டிருக்கிற எவரையோ நினைவு படுத்துகிறார்கள். அல்லது, படித்துக் கொண்டிருக்குபோதே  நாமும் அவர்கள் உலகத்துக்குள் புகுந்து அவர்களோடேயே வாழ்கிறமாதிரியான ஒரு அனுபவத்தைக் கண்முன்னால் கொண்டு வந்து நிறுத்தி விடுவதில் எண்டமூரி கதை சொல்கிற பாணி தனித்து மனதில் நிற்கிறது.

தொலைவில்  இருக்கிற வெளிச்சத்திற்காகத் தவித்துக்
கொண்டு இருந்தேன் என்று  தன்னுடைய தவிப்பைச் சொல்கிறான் கதாநாயகன். பார்வை இழந்த நிலையிலும் கூட, பாவனி அவன் தேடிக் கொண்டு இருந்த வெளிச்சத்தை எப்படிக் காட்டிக் கொடுக்கிறாள் என்பது தான் கதை.

கொஞ்சம் நம்மையே உள்நோக்கிப் பார்த்தோமேயானால், நமக்குள்ளும் முரட்டுப் பிடிவாதமும் வீம்பும்நிறைந்திருப்பதையும், பெரும்பாலான தருணங்களில் உண்மையை, வெளிச்சத்தை மறைக்கிற தடைகளாகவும் வாழ்க்கையின் பெரும்பாலான தருணங்களில் ஆகிப்போயிருப்பதைப் பார்க்க முடியும்.

ன்பக் கனவுகளுக்காகத் தான் ஒவ்வொருவரும் ரகசியமாகவாவது ஏங்கிக் கொண்டிருக்கிறோம்.
எது இன்பக் கனவு என்பதைக் கூட அறியாமலேயே! 

ன்பக் கனவில் ஒரு விதத்தை அற்புதமாகச் சொல்லியிருக்கும் கதை இது. சுசீலா கனகதுர்காவின் மற்ற மொழிபெயர்ப்புக்களைப் போல அல்லாமல், இந்தக் கதையில்  ஜானகி தன்னுடைய மைத்துனர் சேஷகிரியை அழைக்கும் இடங்களில் கொஞ்சம் பிசிரடிக்கிறது.
மச்சினரே..மைத்துனரே இப்படி தெலுங்கில் தன்னுடைய கணவனின் உடன்பிறந்தவர்களை எப்படி அழைப்பார்கள் என்று எனக்குத் தெரியாது.  இப்போது படிக்கும் போது, மொழிபெயர்ப்பில் அப்படி விளிக்கும் பகுதிகள் பிசிரடிப்பதாகத் தோன்றுகிறது.  
கதையின் சுவாரசியம் மொழிபெயர்ப்பில் உள்ள குறைகளையும்  மீறி  வாசகரை ஈர்ப்பதாக இருக்கிறதென்னவோ, இன்றைக்கும் நிஜம்!
No comments:

Post a Comment

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!