மண்டேன்னா ஒண்ணுதான் எழுதணுமா என்ன?!
நேற்றைக்கு ஒரு வலை நண்பர் அரட்டையில் வந்து ஆணாதிக்கம், அது இது என்று கொஞ்சம் கதைத்து விட்டுப் போனார். இந்த ஆணாதிக்கம், பெண்ணீயம் என்பதற்கெல்லாம் உண்மையிலேயே ஒரு அளவீடு இருக்கிறதா என்ன? எனக்கென்னவோ, ஒவ்வொருவரும் தங்களுடைய சௌகரியங்களுக்கேற்றபடி இந்த வார்த்தைகளை உரக்கக் கூவிக் கொண்டிருப்பதனால் மட்டுமே நிறுவிவிட முயல்வது போலத் தோன்றுகிறது.
இணையத்தில் இன்று காலை இந்த யூட்யூப் வீடியோவைப் பார்க்க நேர்ந்தது! ஐயா தன்னுடைய காதலைச் சொல்லுகிறாராம்!
ஆனாலும் ஆணை ஒரு வக்கிரம் பிடித்தவனாக, ஆதிக்க மனோபாவம் உள்ளவனாக உரக்கக் கூவவும் செய்கிறார்கள்!
கேபிள் சங்கர் பதிவில் இந்தக் குறும்படத்தைப் போன வாரம் பார்த்தேன்! இயக்குனர் எம் பாலாஜி காதலில் சொதப்புவது எப்படி என்ற இந்தக் குறும்படத்தில் நன்றாகவே சொல்லியிருக்கிறார்! ஒரு சொட்டுக் கொடுத்துப் பதிவு எழுதலாம் என்று நினைத்தபோது,இந்த ஆணீய, பெண் ஈயக் கூக்குரல்கள் இடையில் வந்து கவனத்தை வேறுபக்கம் திருப்பி விட்டன!
தாமதமாகச் சொன்னாலும் சொன்னாலும், ஒரு பெரிய சபாஷ், பாலாஜி! சொதப்புவது எப்படி என்பதை சொதப்பாமல் சொன்னதற்கு!
"நிராகரித்ததன் காரணம் என்னவாக இருந்தாலும், நிராகரிக்கப் பட்டதன் வலியை நன்றாகவே உணர முடிகிறது!
ஒரு எல்லை வரை கூடப் பயணம் வருகிறவர்கள், ஏதோ ஒரு தருணத்தில் வேறு வேறு பாதைகளில் பிரிந்து பயணத்தைத் தொடர்வது இயல்புதான்!
பாதையெல்லாம் மாறி வரும்! பயணம் முடிந்துவிடும்!
மாறுவதைப் புரிந்து கொண்டால் மயக்கம் தெளிந்து விடும்!
இது கண்ணதாசன் அனுபவித்துச் சொன்னது!"
இப்படிப் பின்னூட்டம் எழுதிவிட்டு யோசித்தபோது தான், வாழ்க்கையில் ஏதோ ஒரு அல்லது பல தருணங்களில் நம்மில் ஒவ்வொருவருமே ஏதோ ஒரு வகையில் தொடர்ந்து சொதப்பிக் கொண்டே இருப்பதும், அதற்குக் காரணம் நம்மைத் தவிர மற்ற எல்லோரும் தான் என்று குற்றம் சொல்லி அழுதோ அல்லது ஆக்ரோஷமாகவோ எதையாவது செய்து முடித்த பிறகுதான், எல்லாவற்றையும் தொலைத்த பிறகு தான் ஞானம் வருகிறது!
அதற்காக, மண்டே பொழுது விடிந்ததுமே நம்ம உண்மைத் தமிழன் மாதிரி அடேய்ய்ய்..! மசிருக் கோவணாண்டி என்று என்னப்பன் முருகனைக் கோபித்துக் கொண்டு எழுத ஆரம்பித்தால் நன்றாகவா இருக்கும்!
கண்ணியமான வார்த்தைகளில் சொல்லப்படும் Trial and Error எனப்படும் முயற்சி, உடைத்துப் பச்சையாகச் சொல்வதானால், சொதப்பல்ஸ் ஆகி விடுகிறது!
சொதப்புவது மனித இயற்கை!
சொதப்பாமல் இங்கே எதுவுமே செய்யப் பட்டதே இல்லை என்பதை, அவரவர் மனசாட்சியைக் கொஞ்சம் பேசவிட்டுக் கேட்டால், தானே புரிந்து விடும்!
அது புரிவதனால் தான் என்னவோ அடுத்தவர் சொதப்புவதை இவ்வளவு மூர்க்கத் தனமாகக் கடித்துக் குதறி விடுகிறோம்!
"பொதுவாகப் பார்க்கப் போனால், அடுத்தவரிடம் நாம் அதிர்ச்சியடைகிற அளவுக்குப் பார்க்கிற குறை, பெரும்பாலும் நாம் சுமந்து கொண்டு இருப்பது தான்,என்ன கொஞ்சம் வித்தியாசமாக, மறைவாக, அல்லது வேறு விதமாக நம்மை நாமே ஏமாற்றிக் கொள்கிற அளவுக்கு இருப்பது தான், நம்மிடம் இருக்கும் குறை பெரிதாக, தீமை இல்லாததாகத் தெரிவது, அடுத்தவரிடம் பார்க்கும் போது பூதாகாரமாகத் தெரிகிறது!"
இப்படி இங்கே எழுதியதை நினைத்துப் பார்த்துக் கொண்டே.......!
மண்டேன்னா ரெண்டு! சொதப்பல்ஸ்னு முதல்லேயே சொன்னேனா இல்லையா?!
//பொதுவாகப் பார்க்கப் போனால், அடுத்தவரிடம் நாம் அதிர்ச்சியடைகிற அளவுக்குப் பார்க்கிற குறை, பெரும்பாலும் நாம் சுமந்து கொண்டு இருப்பது தான்,என்ன கொஞ்சம் வித்தியாசமாக, மறைவாக, அல்லது வேறு விதமாக நம்மை நாமே ஏமாற்றிக் கொள்கிற அளவுக்கு இருப்பது தான், நம்மிடம் இருக்கும் குறை பெரிதாக, தீமை இல்லாததாகத் தெரிவது, அடுத்தவரிடம் பார்க்கும் போது பூதாகாரமாகத் தெரிகிறது!"//
ReplyDeleteஅசத்தல். :)
வாருங்கள் ராதா கிருஷ்ணன்!
ReplyDeleteமேற்கோளிடப் பட்டிருப்பது என்னுடைய வார்த்தைகள் இல்லை! ஸ்ரீ அரவிந்த அன்னை உரையாடலில் ஒரு பகுதி அது! அதன் முழு வடிவத்தையும் பார்க்க லிங்க் அங்கேயே கீழே இருக்கிறது.
செல்களைப் பற்றி விவரமாகத் தமிழில் படங்களுடன் வந்திருக்கிற உங்களுடைய சமீபத்திய பதிவு நன்றாக இருக்கிறது. முழுமையானதும், தருமி ஐயா சொல்லியிருந்தபடி, விக்கிபீடியாவிலோ, அல்லது அறிவியல் இன்போ என்று கிழக்கு பத்ரியும் நண்பர்களும் சேர்ந்து நடத்துகிற பதிவு மாதிரி, ஏதோ ஒன்றில் சேமித்து வைக்கலாம்.