அந்த கறுப்பு தினத்தின் முப்பத்தைந்தாவது நினைவு தினம்!.எது எதற்கோ நினைவு நாள் கொண்டாடுகிறார்கள், எது எதற்கோ பாராட்டு விழா, மாநாடெல்லாம் நடத்துகிறார்கள்.

நடத்திவிட்டுப் போகட்டும்!


இந்திய ஜனநாயகம்  என்பது காங்கிரஸ் கையில் சிக்கிய பூமாலை தான் என்பதைத் தெளிவாக உலகத்துக்கு எடுத்துக் காட்டிய நெருக்கடி நிலை பிரகடனம்  அறிவிக்கப் பட்டு, அதையடுத்துப் பத்தொன்பது மாதங்கள் இம்மென்றால் சிறைவாசம், ஏனென்றால் வனவாசம் பிரிட்டிஷ் குள்ளநரிகள் ஆண்டபோது இருந்ததை விட அதிகமாக நடத்திக் காட்டப் பட்ட இருண்ட காலம்.

1975, ஜூன் 25! இந்தியாவில் நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப் பட்ட அந்த கறுப்பு தினத்தின் முப்பத்தைந்தாவது நினைவு தினம்.

நெருக்கடி நிலை பிரகடனப்படுத்தப் பட்ட பிறகு தான் இந்த தேசத்தில் ஊழலே இல்லாமல், வேலைகள் எல்லாம் ஒழுங்காக நடந்த மாதிரியும், வறுமையே வெளியேறு என்று பூசாரி வேப்பிலை அடித்துக் கூவுவது போல கூவிய பிறகு இந்த தேசத்தில் வறுமையே இல்லாமல் போய்விட்ட மாதிரியும் கோயபல்சை மிஞ்சுகிற வகையில் அரசு இயந்திரமும், காங்கிரஸ் காரர்களும் சாதனைகளைத் தம்பட்டமாக அடித்துக் கொண்டிருந்த இருண்ட காலம்.

குஷ்வந்த் சிங் மாதிரி எழுத்தாளர்கள் கூட நான் ஏன் எமர்ஜென்சியை ஆதரிக்கிறேன் என்று புத்தகம் வெளியிட வைத்த நாட்கள் அவை. 

 நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் தகுதியை இந்திரா காந்தி இழக்கிறார்  என்பதை அலஹாபாத் உயர் நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெளிவாகவே  சொன்னது, ஆக நெருக்கடி வந்தது இந்திரா காந்திக்குத் தானே தவிர, தேசத்துக்கு இல்லை.

மக்கள் பிரதிநிதித்துவ சட்ட விதிகளில் சொல்லப் பட்டதை மீறி தேர்தல் முறைகேடுகளில் ஈடுபட்டது நிரூபிக்கப் பட்டதாகவும், அதனால் இந்திரா காந்தி பாராளுமன்ற உறுப்பினராக இருக்கும் தகுதியை இழக்கிறார் என்றும் ஜூன் மாதம் 12 ஆம் தேதி அலஹாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேல்முறையீடு செய்வதற்கு மூன்று வார அவகாசமும் கொடுக்கப் பட்டது. மேல் முறையீடு செய்யவில்லை என்றாலோ, உச்ச நீதி மன்றம் மேல்முறையீட்டை நிராகரித்தாலோதான் இந்த உத்தரவு நடைமுறைக்கு வரும் என்று தீர்ப்பு சொன்னது.

சகுனிகள் ஆலோசனையின் பேரில் நாட்டில் நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப் பட்டது. ஆள் காட்டிகள் காட்டின பேர்  எல்லாம் மிசா அது இது என்று என்னென்னமோ கறுப்புச் சட்டங்களின் கீழ் சிறையிலடைக்கப் பட்டனர்.

ஜெயப்ரகாஷ் நாராயணன் மாதிரி அனுபவமுள்ள காந்தீயவாதி இந்த இரண்டாவது சுதந்திரப் போரை முன்னின்று நடத்தினார்.

தேவ காந்த பரூவா மாதிரி கிறுக்கு மாய்க்கான்களால் இந்திரா தான் இந்தியா, இந்தியா தான் இந்திரா என்று உளறிக் கொண்டிருந்தவர்களால், இந்திரா என்ற தனிநபருக்கு வந்த நெருக்கடி என்னவோ தேசத்துக்கே வந்த மாதிரி ஒரு பிரச்சாரம் செய்யப்பட்டது. இருபது அம்சத் திட்டம் அது இது என்று என்னென்னவோ செய்து பார்த்தும் கூட, மக்களுடைய அதிருப்தி பெருகிக் கொண்டே போனதைத் தடுக்க முடியவில்லை. 

அதற்குப் பின் நடந்தவை எல்லாம் சமீப கால சரித்திரம்! இப்போது மறுபடி மறுபடி நினைவு படுத்திப் பார்த்துக் கொள்ள வேண்டிய தருணமும் கூட.

சுதந்திரம், விடுதலை, உரிமைகள் என்பவை எவரோ பார்த்துக் கருணையோடு பஞ்சு மிட்டாய் கொடுப்பது போல அல்ல.

சுதந்திரம் என்பது அதன் அருமையை உணர்ந்து காப்பாற்றிக் கொள்ளத் தெரிந்தவர்களுக்குமட்டுமே நிலைக்கக் கூடிய ஒரு வரம்!

நெருக்கடி நிலையை எதிர்த்து உறுதியாகப் போராடிய பலர் காலம் செய்த கோலத்தில் காங்கிரசோடு கூட்டு சேர்ந்து ரொம்பவுமே நல்லவர்களாகிப் போனார்கள். பதவிக்காக எதையும் செய்யத் தயாராக இருக்கும் தியாகிகளாகவும் ஆனார்கள் என்பதையும் பார்க்கும்போது சுதந்திரத்தைக் காப்பாற்றிக் கொள்வதில் இருக்கும் சிரமங்கள் எவ்வளவென்பது  புரிகிறதா?

உள்நாட்டிலும், வெளியுலகிலும் ரொம்பவுமே அசிங்கப்பட்டுப் போன பிறகு தான் 1977 இல் இந்திரா காந்தி மறுபடி தேர்தலைச் சந்திக்க முன்வந்தார் என்பதும், அந்தத் தேர்தலில் காங்கிரஸ் வேரோடு சாய்க்கப் பட்டது என்பதும் தெரிந்த கதை.

அப்படி வேரோடு சாய்ந்ததை, நம்முடைய அலட்சியத்தாலும், பொறுப்பற்ற தன்மையினாலும், நம்பக் கூடாதவர்களைத் தலைவர்களாக ஏற்றுக் கொண்டதாலும், இந்தியத் தேர்தல் முறைகளில் இருக்கும் குளறுபடிகளாலும் மறுபடி உயிர் கொடுத்திருக்கிறோம் என்பதை நினைவு படுத்திக் கொள்ள வேண்டிய தருணம் இது. 

4 comments:

 1. // அப்படி வேரோடு சாய்ந்ததை, நம்முடைய அலட்சியத்தாலும், பொறுப்பற்ற தன்மையினாலும், நம்பக் கூடாதவர்களைத் தலைவர்களாக ஏற்றுக் கொண்டதாலும், இந்தியத் தேர்தல் முறைகளில் இருக்கும் குளறுபடிகளாலும் மறுபடி உயிர் கொடுத்திருக்கிறோம் என்பதை நினைவு படுத்திக் கொள்ள வேண்டிய தருணம் இது.?//

  அத்திபழத்தை புட்டால் அத்தனையும் சொத்தாய் போகிறதே இதற்கு என்ன செவதாம்.?
  வந்ததும் சரி இல்லை, வாய்த்ததும் சரி இல்லை ,இனி வருவது வழித்துக்கொண்டு சிரிக்கும்படியாய் தான் இருக்கும்.

  நமக்கும், ஜனநாயகத்துக்கும் சற்றும் சரிவராது.
  இங்கு கொலேடுத்தால் தான் குரங்காடும்.
  கட்டுப்பாடு இல்லாத இடத்தில் வளர்ச்சி முன்னேற்றம் இருக்காது. இருப்பதாக இவர்கள் சொல்லுவதெல்லாம் நமீதா போடும் Lip stick பூச்சுதான்.

  ReplyDelete
 2. வாருங்கள் மாணிக்கம்!

  கோல் எடுத்தால் தான் குரங்காடும் என்று நீங்கள் சொல்வதைத் தான் அன்றைக்கும் வேறு வார்த்தைகளில் எமெர்ஜென்சி பிறப்பிக்கப் பட்டதற்கு நியாயம் கற்பிக்கிற மாதிரி இந்திரா காந்தி காரணம் சொன்னார். வாலறுந்த நரி ஒன்று, வால் இல்லாமல் இருப்பதுதான் அழகு என்று மற்ற நரிகளுக்கு பாடம் எடுக்க ஆரம்பித்து விரட்டப்பட்ட அதே பழைய கதையாகிப் போனதே!

  பிரபஞ்சத்தின் அடிப்படை விதி, காலத்தைப் பின்னோக்கி நகர்த்த முடியாது என்பதும், நடந்தவைகள் நடக்கப் போவதன் படிக்கட்டுக்களாக இருக்கும் என்பது தான்.

  அத்தனையும் சொத்தை என்பதை விட, அத்தனை முயற்சிகள் என்று கூட வைத்துக் கொள்ளலாம். அந்த முயற்சிகள் தோற்றுப்போனதேன் என்று யோசித்துப்பாருங்கள்! முந்தைய முயற்சிகளின் பாடத்தைக் கற்றுக் கொள்ளவில்லை என்பது தான்.

  தெலங்கானா போராட்டம் மிகக் குரூரமான முறையில் அடக்கப் பட்ட பிறகு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களுக்கு ஒரு அடிப்படை கேள்வி, பெரும் குழப்பமாக இருந்தது. இந்தியப் புரட்சி சீனப்பாதையிலா, அல்லது ரஷ்யப் பாதையிலா? ரஷ்யாவின் ஸ்டாலின் ஒரு தெளிவான பதிலை அவர்களுக்குச் சொன்னார். இந்தியாவுக்கு சரியான பாதை ரஷ்யப்பாதையோ, சீனப் பாதையோ அல்ல. அது இந்தியப் பாதையாகத் தான் இருக்கமுடியும், இருக்க வேண்டும் என்று ஆலோசனை சொன்னார். கம்யூனிட் கட்சி பாடத்தைக் கற்றுக் கொள்ளவில்லை. கட்சி இரண்டாகப் பிளவு பட்டதோடு, எதை எதிர்த்துப் போராட வேண்டும் என்பதிலேயே இன்னமும் ஒரு தெளிவான பார்வை அவர்களுக்கு இல்லாமலேயே போனது.

  அதே மாதிரித் தான், காங்கிரஸ் கட்சியும், இரவல் வாங்கின செருப்பு, உடுப்பை வைத்துக் கொண்டு அதற்குத் தகுந்த மாதிரிக் காலை வெட்டுவது, மற்றதை வெட்டுவது என்ற மாதிரிஆட்சி செய்ய ஆரம்பித்தது. ரஷ்யாவைப் பார்த்து ஐந்தாண்டுத் திட்டங்கள் தீட்ட ஆரம்பித்தார்கள். தேர்தல் வாக்குறுதிகளைப் போலவே, இந்த ஐந்தாண்டுத் திட்டங்களும், இலக்குகளும் வெற்று வார்த்தைகளாகிப் போனது.

  ஆக, நமக்கு ஜனநாயகம் ஒத்து வரும் அல்லது ஒத்து வராது என்ற முடிவுக்கு வருவதற்கு முன்னால், நமக்கிருக்கும் வாய்ப்புக்களை எல்லாம் சீர்தூக்கிப் பார்த்தோமா, முயற்சித்தோமா என்றும் பார்க்க வேண்டும் இல்லையா?

  அதையும் கொஞ்சம் யோசித்துப் பாருங்களேன்!

  ReplyDelete
 3. நீங்கள் இன்னும் விரிவாக அலசி இருக்கலாம். என் தந்தை நெருக்கடி காலகட்டம் பற்றி நிறைய என்னிடம் விளக்கி உள்ளார்.
  ஜெய பிரகாஷ் நாராயணன் பற்றி சிலருடன் நான் பேசும்போது அவர்கள் மௌனம்தான் காப்பார்கள். என் அப்பா திரு மொரார்ஜி அவர்கள் பற்றி நிறைய சொல்லுவார்.

  நாம் வழிய வந்த வாய்ப்பை விட்டவர்கள். நம்மைதான் குறை சொல்லவேண்டும்.

  ReplyDelete
 4. திரு கார்த்திக்,

  விரிவாக அலசுவது என்பதை விட,நடந்தவைகளில் இருந்து பாடம் கற்றுக் கொள்வது என்பதே முக்கியம் என்று எனக்குப் படுகிறது.

  எமெர்ஜென்சி கால கட்டத்தில் நான் கல்லூரி மாணவனாக இருந்தேன். தீவீர அரசியல் ஈடுபாட்டை ஏற்படுத்திய காலம் அது. நிறையப் பேசலாம் என்றாலும் அடுத்து என்ன செய்யப் போகிறோம் என்பதில் தான் அந்தப் பேச்சு உதவியா அல்லது வெறும் பேச்சா என்பதே புரிய வரும்.

  இப்போது பழைய விஷயங்களை நினைவு படுத்திக் கொள்வதே கூட அதில் இருந்து சரியான பாடத்தைக் கற்றுக் கொள்ளவில்லையே என்ற ஆதங்கத்தில் தான்.

  ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!