கடவுளுக்கு ஏன் இத்தனை விரோதிகள்?


பட உதவி-ஆஸ்திரேலியாவில் இருந்து திருமதி மைகென் ஜான்சன், யாகூ! 360 இலிருந்து தொடரும் சொந்தம்!தமிழ் தெரியாது என்றாலும், தொடர்பு விட்டுப் போகக் கூடாதே என்று பின்தொடர்ந்து வரும் நல்ல உள்ளத்துக்கு நன்றியுடன்.

நம்ம
வால்ஸ் தொடர்ந்து ஆன்மீகப் பயணம், ஆன்மீகப் பயணத்தோட எதிர்வினை பாகம் ஒண்ணு -ரெண்டுன்னு ரொம்பவுமே தொடர்வெடியாகச் சரவெடி ரவுசு கட்டிட்டிருக்காருன்றது தமிழ்ப் பதிவுலகத்துல லேட்டஸ்ட் நியூசு.

Blogger வால்பையன் said...

//நீங்க கடவுள் இல்லைனு எப்படி முடிவுக்கு வந்தீங்கன்னு தெரிஞ்சா, நானும் ரெண்டு கேள்விகள் கேட்டு ஜோதியில் ஐக்கியம் ஆகிக்குவேன்.//

எதற்கு கடவுள், ஏன் நான் கடவுளை கும்பிடனும் என்ற கேள்விக்கு இதுவரை யாரும் சரியான பதில் சொல்லாததாலும், இதுவரை நடந்த உலக நிகழ்வுகளுக்கு எள்லலவும் கடவுளின் தேவையோ, பங்கோ இல்லாததாலும் கடவுள் இல்லை என்ற மனநிலைக்கு நான் வருகிறேன்!

August 19, 2009 7:21 PM

வழக்கம் போலவே தனக்கு சௌகரியமான சில கேள்விகளை மட்டும் எடுத்துப் போட்டு,கலக்கிக்கிட்டே இருக்காரு! சரி இன்னம் ஒரு நூறு பதிவு கூட எழுதிக் கலக்குவாருன்னு பாத்தாக் கொஞ்சம் சுருதி கொறைஞ்ச மாதிரித் தெரிஞ்சது.

என்ன காரணம்னு நமக்குத் தெரிஞ்சதை வச்சுத் தானே தேடியாகணும்? நானும் அப்படித் தான், நேத்து சாயந்திரம், ஸ்ரீ அன்னை உரையாடல் என்ற சிறு புத்தகத்தை படிச்சிட்டிருந்தப்போ, நம்ம வால்பையனுக்காகவே பேசி வச்ச மாதிரி ஒரு உரையாடல் இருந்தது! நாமும் கொஞ்சம் தெரிஞ்சுப்போமேன்னு படிச்சேன், அது உங்களுக்காகவும்....!
** ** ** ** ** **

"கடவுளைப் பகைத்துக் கொண்டேயிருப்பது, நிந்திப்பது, விரோதம் பாராட்டுவது எதனால்?எதன்பொருட்டு, கடவுளுக்கு ஏன் இத்தனை விரோதிகள்?"
இப்படி ஒரு கேள்வியை அடியவர் ஒருவர் ஸ்ரீ அரவிந்த அன்னையிடம் மிகுந்த இங்க கேட்டார். அன்னை பதில் சொல்கிறார்:

"உன்னுடைய கேள்வியை விட எனக்கு இது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது!என்ன காரணத்தினால், பெரும்பாலான மக்கள் அறியாமையிலேயே இருந்து விடுகின்றனர்? நீ சொல்கிற குறை, அறியாமையின் வெகு இயல்பான விளைவு. அறியாமையிலேயே, இருட்டிலேயே இருந்துவிடுகிறோம் என்று இருந்துவிடுவதே கடவுளை விரோதித்துக் கொள்கிற செயலாகும்."

"அன்னையே! கடவுளின் விரோதி என்றால் என்ன? எதை விரோதிப்பது?"

"இது அவரவர் மனோபாவத்தைப் பொறுத்தது. கடவுள் என்று எதை நமக்குள் உருவகப் படுத்துகிறோமோ, அதனுடன் எப்படிப் பட்ட உறவை ஏற்படுத்திக் கொள்கிறோம் என்பதே நாம் பக்தனா அல்லது பகைவனா என்பதைக் காட்டும்.

அதனால் தான் கடவுளை வெறுப்பவர்களைக் கூட நாம் பரம பக்தர்களாகக் கருதி வந்திருக்கிறோம். மனதின் ஆழத்தில் கடவுள் உண்டு என்ற நிச்சயம் இருப்பதாலேயே, இப்படிப்பட்டவர்கள், கடவுளை இல்லவே இல்லையென்றோ, வெறுத்துப் பகைமை பாராட்டவோ முடிகிறது.......இவர்களால் வேறென்ன செய்ய முடியும்?!

இந்தியாவில், புராணக் கதைகளிலும், சரித்திரக் கதைகளிலும் கடவுளின் அண்மையில் செல்வதற்கு, கடவுளுக்கு விரோதியாய் இருக்கும் பாதையையே நாடித் தவம் இருந்தனர் என்றும் பார்க்கிறோம். பக்தி செய்து கடவுளை அடைவதை விட, சண்டை போட்டு விரோதியாய் இருப்பதே, கடவுளிடம் வெகு விரைவில் கொண்டு சேர்க்கும் என்பது இவர்கள் நம்பிக்கை. கடவுள் உண்டா, இல்லையா என்பதைப் பற்றிக் கொஞ்சமும் நினைக்காமல் இருப்பவனை விட, கடவுளை மறுப்பதோ அல்லது வெறுக்கவோ செய்கிற ஒருவன் கடவுளுக்கு எவ்வளவோ பக்கத்தில் இருக்கிறான்!

கடவுள் இல்லை, இல்லவே இல்லை, இதெல்லாம் மனிதனுடைய கற்பனை மட்டுமே என்று ஒருவன் உரக்கச் சொல்லிக் கொண்டே இருக்கிறான். இதன் பொருள் என்ன? இப்படிச் சொல்லிக் கொண்டிருப்பவன் இதைப் பற்றி எத்தனையோ தடவை யோசித்திருக்கிறான். மனதின் அடிஆழத்தில் ஏதோ ஒன்று இதைப்பற்றியே விட்டுவிடாமல் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது என்பது தெளிவு. ஆகக் கடவுளை விரோதிப்பவன், கடவுள் என்றொரு மாயை என வெளியே சொல்லிக் கொண்டிருந்தாலும், மாயையோடு, அதாவது இல்லாத ஒன்றோடு சண்டைபோடுபவன் அல்ல என்பதும் மறுக்க முடியாத உண்மை..

கடைசியாகப் பார்க்கப்போனால், கடவுளை ஒரு விரோதியாகப் பார்ப்பதில் கூட ஒரு உண்மை இருப்பதாகவே தெரிகிறது. இஷ்ட சத்ரு என்று, என்னுடைய பிரியமான எதிரியே என்றெல்லாம் அழைப்பதில்லையா? இப்படிக் கூப்பிடுவதில் ஒரேயடியாக உண்மையே இல்லை என்று சொல்ல முடியாது. பிரியமாக இருப்பதை விட, ஒருவேளை வெறுப்போடு இருப்பது அன்யோன்யமாக, நீ இல்லாமல் நானில்லை என்று கூட ஆகலாம்!

இல்லாத, நமக்குத் தெரியாத ஒன்றோடு சம்பந்தம் வைத்துக் கொள்ள முடியாது. ஆனால், நாம் எதை வெறுக்கிறோமோ, சண்டைக்குக் கூப்பிடுகிறோமோ, அதனுடன் நமக்கு நெருங்கிய தொடர்பு நம்முடைய விரோதத்திலேயே, வெறுப்பதிலேயே உண்டாகி விடுகிறது! இப்படிச் சொல்வதால், நான் வன்மத்தை, வெறுப்பை, நல்லதென்று சொல்வதாக நினைக்க வேண்டாம்.வன்மம், வெறுப்பால் மந்தமாகிப் போனவனுடைய பார்வையில் நேசத்தைக் காண்பது மிகவும் அரிது.

கோபத்தினாலும், விரோதம் பாராட்டுவதாலும் கனல் போலத் தகிக்கும் ஒருவன் பார்வையில் கூட, பலதரம் அன்பைக் காணும் வாய்ப்பு எனக்குக் கிடைத்திருக்கிறது.அங்கே அன்பு பின்னப்பட்டுப் போயிருக்கிறது, விகாரப்பட்டுப்போயிருக்கிறது என்று எத்தனையோ விதமாகச் சொல்லிக்கொண்டே போனாலும், அந்தக் கொடிய, உக்கிரமான பார்வையிலும் கூட ஏதோ ஒன்று சுடர்விட்டு எரிகிறதல்லவா?

உயிரில்லாதவற்றிலும், உயிர் இருந்து அறிவற்றதாக இருக்கும் முழு மந்தத் தன்மையிலும், ஏன் ஒரு கருங்கல்லிலும் கண்ணைக் கவரும் பேரொளியைக் முடியும்-அதுவே கடவுளின் இருப்பு! எங்கும், காணக் கூடியது! பல்வேறு விதத்தில், வடிவங்களில், தருணங்களில் இப்படி, இனிமையாக,

கடவுளை எங்கும், எதிலும் காண முடிகிறபோது,

இல்லை என்பது இல்லாமலேயே போய்விடுகிறது!"


ஸ்ரீ அன்னை உரையாடல் என்ற தலைப்பில் தமிழில் ஸ்ரீ அரவிந்த ஆசிரம வெளியீடாக வந்த சிறுபுத்தகம், ஏப்ரல், 1988 இரண்டாவது பதிப்பில் இருந்து-பக்கம் 101-104, நன்றியுடன் எடுக்கப் பட்டது.


இங்கே ஏற்கெனெவே பார்த்தது தான்! வால்ஸ் மாதிரி சரவெடி வெடிப்பவர்களுக்கும், சரவெடி வெடித்ததில் மயங்கிப் போயிருக்கும் என்னைப் போல உள்ளவர்களுக்கும் கொஞ்சம் உதவும்! வேறென்ன, கொஞ்சம் ஆசுவாசம் தான்!

No comments:

Post a Comment

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!