நயன் தாரா 'பட்டம் பற பற..கோழி பற பற'

அவசரத்துல அம்மிணி பட்டம் பற பறன்னு வுடுற படம் கிடைக்கலே! முடி பறக்கிற படம் தான் கெடச்சுது! கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க!

சந்திரமுகி படத்தில் நயன் தாரா 'பட்டம் பற பற..கோழி பற பற' என்று ஒரு காட்சியில் பட்டம் விட்டுக் கொண்டே பாடுவார். கதாநாயகன், கதாநாயகியின் பட்டத்தை அறுத்து விட்டு, ஆட்டத்தை அடக்கின பெருமிதத்தோடு தொடர்ந்து பாடுவார். அறுந்த பட்டம் மாதிரி நயன்தாரா பட்டம் காற்றில் அலைவதை ரசித்த நினைவு இருக்கிறதா? அறுந்தபட்டமாக, நயன்தாரா முகம் வாடின காட்சி நினைவிருக்கிறதா?

அருண் ஷூரி பாரதீய ஜனதா கட்சியை, அப்படி "அறுந்த பட்டம்" என்று தான் நேற்று என் டி டி வீக்கு அளித்த பேட்டியில் வர்ணித்திருக்கிறார். வென்றவனுக்கு ஊரே சொந்தம் தோற்றவனுக்குத் தானே பகை என்று சொல்வார்களே, அது இதுதான்! இரண்டு தடவை தோற்றவுடனேயே, இந்தமாதிரி, பூனை இளைத்தபோது, எலி எங்கெங்கோ தட்டி 'ஆட்டைக்கு வர்றியா' என்று கேட்கிற கதைதான்!

ஏன் தோற்றோம் என்று காரணம் தேடக் கூட்டம் நடத்தியவர்கள் ஒருவழியாகக் காரணத்தையும் கண்டுபிடித்துவிட்டார்கள்! நரேந்த்ர மோடி, அருண் ஜெயிட்லி, வருண் காந்தி இவர்கள் தேர்தல் சமயத்தில் பொறுப்பற்ற விதத்தில் பேசியது தான் தோல்விக்குக் காரணம் என்று, ஒருவழியாகக் கண்டுபிடித்திருக்கிறார்கள்! ஆனால், அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுப்பதைப் பற்றிப் பேசினதாகக் காணோம்! ஜஸ்வந்த் சிங் புத்தகம் எழுதியிருக்கிறார், ஜின்னாவைத் தவறாகச் சித்தரிக்கப் பட்டதைப் பற்றிப் புத்தகத்தில் எழுதியிருக்கிறார் என்ற காரணத்திற்காக, கட்சியை விட்டே நீக்கியாயிற்று!

வரலாற்றைச் சரியாகப் புரிந்துகொள்வது, தவறுகளைத் திருத்திக் கொள்வது என்பதெல்லாம், பாரதீய ஜனதா மட்டுமல்ல, காங்கிரசுமே கூட அறியாத ஒன்று தான்!ஆனாலும், பாரதீய ஜனதாவில் இப்போது நடந்து வரும் குழப்பங்களைப் பற்றி காங்கிரஸ் விமரிசிப்பது "ஈயத்தைப் பார்த்து இளித்ததாம் பித்தளை" என்ற கணக்கில் தான் இருக்கிறது.

பெரியகட்சிகள் கதை தான் இப்படி என்றால், "உலகுக்கே நாங்கள் உபதேசம் செய்யப் பிறந்தவர்கள்" என்ற ரீதியில் கருத்து கந்தசாமிகளாக, எல்லாவற்றிலும் புகுந்து குட்டையைக் குழப்பிக் கொண்டிருக்கும் இடது சாரிகள், தாங்கள் தலைகுப்புற விழுந்து கிடப்பது கூடத் தெரியாமல், 'பாரதீய ஜனதா அவ்வளவு தான்' என்று சந்தோஷப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்! போகட்டும், அப்படியாவது தாங்களும் தலைகுப்புற விழுந்துகிடப்பது, வலியெல்லாம் மறந்துவிடும் என்றால், இருந்துவிட்டுப் போகட்டுமே!

ஜஸ்வந்த் சிங் கட்சியிலிருந்து நீக்கப் பட்டதற்காவது வேறு காரணங்களையும் சொல்ல முடியும். அவருக்கும், ராஜஸ்தான் முதலமைச்சராக இருந்த வசுந்தரா ராஜேவுக்கும் ஆகாது. இருவரும், நீயா நானா என்று முட்டிக் கொண்டிருந்தபோது, சத்தமே இல்லாமல், நோஞ்சான் காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்து விட்டது! அம்மிணியைப் பகைத்துக் கொண்டு ராஜஸ்தானில் எந்த இடத்திலும் போட்டியிட்டாலும் அம்பேல் என்பதைப் புரிந்து கொண்டதால் தான், ஜஸ்வந்த் சிங் பாதுகாப்பான டார்ஜீலிங் தொகுதிக்கு ஓடி வந்து பாராளுமன்ற உறுப்பினராக முடிந்தது. இந்த நீக்கத்தின் மூலம், சண்டைக் கோழியாகக் குடைச்சல் கொடுத்துக் கொண்டிருக்கும் வசுந்தராவை சமாதானப் படுத்தும் முயற்சிக்கு அச்சாரம் போடப்பட்டதாகக் கூட சொல்ல முடியும்!

அருண் ஷூரி..? வலிந்து, 'என்னைக் கட்சியில் இருந்து நீக்குங்கள், நான் ஒரு தியாகியாக, வெளியேறுகிறேன்' என்ற ரீதியில் சவால் விட்டிருப்பதாகவே, அவருடைய பேட்டி இருக்கிறது.

ஆர் எஸ் எஸ் கட்சியை ஏற்று நடத்த வேண்டும். இப்போது யார் நடத்துறாங்கண்ணா?

தலைமையை மாற்ற வேண்டும். ராஜ்நாத் சிங்குக்கு ஆப்பு?

வாஜ்பாய் , 2002 கோத்ரா கலவரங்களுக்குப் பிறகு மோடியைப் பதவியில் இருந்து விலக்க வேண்டுமென்று ஒப்புக்கொண்டதாகவும், அத்வானி அதை தடுத்து விட்டதாகவும், அத்வானியும், ராஜ்நாத் சிங்கும், குறிப்பிட்ட ஆறு பத்திரிகையாளர்கள் வழியாக உட்கட்சி விவரங்களைக் கசிய விட்டுக் கொண்டிருப்பதாகவும், அதே நேரம், தன்மீதும் வேறு சிலர் மீதும் ஒழுங்கு நடவடிக்கைகள் தொடர்வதாகவும் அருண் ஷூரி தொடர்ந்து அம்புகள் வீசியிருக்கிறார்!

தேர்தல் வேலைகளை மிக மோசமாக நிர்வகித்ததற்குப் பரிசாக,மாநிலங்களவையில் ஜெயிட்லிக்குப் பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் பதவியை அளித்திருப்பது, ஷூரிக்கு, இன்னும் சிலருக்கும் பிடிக்கவில்லை, அதன் தொடர்ச்சியே, இந்தத் தாக்குதல்கள் என்பது அரசியலைக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருப்பவர்களுக்கு நன்றாகவே தெரிகிறது. தவிர, ஷூரியின்மாநிலங்களவை உறுப்பினர் பதவியும் சீக்கிரமே முடியப்போகிறது. அடுத்த வாய்ப்பு கிடைக்காது என்ற நிலையில், இந்த மாதிரி வம்பைக் கிளப்பி வெளியேற்றப்பட்டால் "தியாகி" ஆகிவிடலாமே!

காங்கிரஸ் கலாசாரம், இந்த நாட்டை மட்டுமல்ல, பதவியைக் கொஞ்சமாவது அனுபவித்துப் பார்த்திருக்கிற அத்தனை பேரையுமே சீரழித்திருக்கிறது. ஒரு தனி நபரின் ஆளுமையை மட்டுமே நம்பிச் செயல் படுகிற அரசியல் கட்சிகள், தாங்கள் சீரழிந்ததுடன், இந்த நாட்டையுமே சீரழித்துக் கொண்டிருக்கின்றன.

காங்கிரசுக்கு, நேரு குடும்பத்தை விட்டால், வேறு தனியான முகம், அடையாளம், பலம் என்பது கிடையாது. நேரு என்ற தனிநபரை மட்டுமே நம்பினதால், கட்சி மட்டுமல்ல, இந்த தேசமும் அனுபவித்து வருகிற பிரச்சினைகள் எப்போதுமே அவர்களுக்குப் புரியாது. முதுகெலும்பு, சுய சிந்தனை, எதுவுமே இல்லாமல், நேரு குடும்பம் பதவி வாங்கிக் கொடுக்கும் வரை மட்டுமே, ஒட்டிக் கொண்டிருக்கும் நபர்களால் ஆனது காங்கிரஸ்.

மாற்றாக ஒன்று வளரவில்லை என்பதாலேயே, இன்னமும்உயிரோடிருக்கும் கட்சி அது.


காங்கிரசுக்கு மாற்று என்று சொன்ன பாரதீய ஜனதா கூட, வாஜ்பாய் என்ற தனிநபரின் மீதிருந்த நம்பிக்கையினால் மட்டுமே ஆட்சிக்கு வர முடிந்தது. முதல் தரம் பதின்மூன்றே நாட்களில் ஆட்சி கவிழ்க்கப் பட்டாலும், அடுத்தமுறை, ஐந்தாண்டுகள் முழுமையாகப் பதவியில் இருக்க முடிந்தது.

ஆர் எஸ் எஸ் வாத்திமார்கள், இதெல்லாம், தங்களுடைய சாதனை என்று நினைத்துக் கொண்டு, அத்வானிகள் அடுத்த பிரதமர் பதவி கனவு கண்டு கொண்டிருந்த போது, ஜனங்கள் தெளிவாகவே, அப்படி இல்லை ஐயா என்று பாடம் சொன்னார்கள்!

இங்கே கருணாநிதி, தன்னுடைய மைனாரிடி நிலைமையைச் சுட்டிக் காட்டிய ஜெயலலிதாவை அவர் எங்களை மைனாரிடி என்று அழைக்கும் வரை அவரைத் திருமதி என்று தான் அழைப்பேன் என்று அபத்தமாகப் பேசியும் கூட ஆட்சியில் இருப்பது, எப்படி?

ஒரு சின்னக் கணக்குப் பாடம்:

தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கை 234. அதில் பாதியாவது இருந்தால் தான் மெஜாரிடி என்று சொல்வது..அதாகப்பட்டது மெஜாரிடியாக இருக்க 117 அல்லது அதற்கு மேல் உறுப்பினர் வேண்டும். தி.மு.. இப்போது இடைத்தேர்தல்களிலும் பெற்ற 'மோக வெற்றிக்குப் பின்னால் கூட வெறும் 99 தான்! ஒத்து ஊதுகிற காங்கிரஸ் 37 ஒத்து இல்லை என்றால் என்ன ஆகும்? இது தான் கணக்கு.

நீங்கள் கணக்குப்பார்த்து என்ன விடை சொன்னாலும், அது தப்பாகத் தான் இருக்கும். ஏனென்றால் இங்கே கூட்டணி தர்மங்கள் என்பது பங்குபிரித்துக் கொள்வதில் இருக்கும் சாமர்த்தியம், கொள்ளையடிப்பதிலும் ஒரு நேர்மை இதைப் பொறுத்து மட்டுமே இருப்பது இந்த நாட்டைப் பீடித்திருக்கும் பெரிய சாபக்கேடு!

தான் என்ற மமதை, கருணாநிதி இதில் எள்ளளவும் குறைந்தவரல்ல என்றாலும், ஜெயலலிதாவின் கண்களை மறக்கிறது. இந்த மமதைதான் சோனியாவைப் பகைத்துக் கொள்ளச் செய்தது. எம்ஜியார் ஒரே ஒருதடவை, மத்தியில் உள்ளவர்களைப் பகைத்துக் கொண்டதன் விளைவைப் பார்த்துப் பாடம் கற்றுக் கொண்டவர். ஜெயலலிதாவுக்கு அந்தப் பாடம், இன்னமும் புரியமாட்டேன் என்கிறது. போகட்டும், சோனியா இல்லை என்றால் இன்னொரு சானியா, மற்றவர்களையாவது அரவணைத்துப் போயிருந்தால்,அப்போதாவது ஒரு பலன் இருந்திருக்கும்!

பாருங்கள், ஆலையில்லா ஊரிலே இலுப்பைப்பூ சக்கரை என்பது மாதிரி, கொஞ்சம் ஓட்டுக்கள் கூட விழுந்தவுடனே, விசயகாந்து என்னமா டயலாக் பேச முடிகிறது?

ஜனங்களுக்கும் அது தெரிகிறது!


இதில் எலிகளுடைய வீரப் பிரதாபம் ஒன்றும் இல்லை!
பூனை இளைத்துப்போய் விட்டது!!! அவ்ளோதான்!

டிஸ்கி ஒண்ணு:

போகும் திசை மறந்து போச்சுன்னு போன பதிவுல எளுதினது, மெய்யாலுமே ஆயிப் பூடுச்சான்னு சந்தேகப் படறவங்களுக்கு: அதெல்லாம் இல்ல!போகும் திசையில தெளிவாத்தான் இருக்கேன்! பயப்பட வேணாம்!

டிஸ்கி ரெண்டு:

யாரு பெத்த பொண்ணோ, மவராசி உன்பேரப் பாத்ததுமே, ஓடிவந்து படிக்கறாங்க பாரு, டயானா என்கிற நயன்தாரா! உனக்கு நன்றி!

டயானா என்று பெயர் இருந்தாலே, இப்படி அறுந்த பட்டம் மாதிரித்தான் ஆயிடுமோ?
அந்த டயானா தான் அப்படின்னா, இந்த டயானாவும் அப்படி ஆக வேண்டாம் தாயீ, நல்லாயிரு!4 comments:

 1. அப்போ அத்வானி ஊர் ஊரா ரத யாத்திரதை போனது,போவது வேஸ்டுன்னு சொல்றிங்களா?

  ReplyDelete
 2. வி பி சிங் மண்டல் கமிஷன் அறிக்கையைத் தூசு தட்டி எடுத்து, அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்தியபோது, அத்வானி நடத்தின முதல் யாத்திரை எதிர் ஆயுதமாக இருந்தது.மசூதி இடிப்பு, ராமர் கோவில் கட்டுவது என்பதெல்லாம் சும்மா உதார் தான்!

  ஆனால் இதை உண்மை என நம்பி ஏகக் களேபரமானது தனிக்கதை.

  அதற்கப்புறம் அர்ஜுன் சிங்! அப்புறம் மன்மோகன் சிங்!இப்படி ஒவ்வொரு சிங்காக என்னத்தையாவது செய்ய, இந்த மனுஷன் பதிலுக்கு ரத யாத்திரைன்னு கிளம்புவது பலனில்லை என்பதோடு, பெரும் கேலிக் கூத்தாகவே முடிந்திருக்கிறது!

  மரியாதை கெடுவதற்கு முன்னாலேயே அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்திருக்கலாம்!

  ஆசை யாரை விட்டது?!

  ReplyDelete
 3. தேர்தல் முடிந்ததும் தோற்றக் கட்சியில் உட்கட்சி பூசல் ஏற்படுவது இயல்பு. தேர்தல் நெருங்கும் போது கட்டி அணைத்துக் கொள்வார்கள், தமிழக சட்டமன்றத் தேர்தலில் தோற்கும் கட்சி அத்தோடு அம்பேல் தான் என்று நினைப்போம், அப்பறம் அடுத்த தேர்தலில் அவங்க வெற்றி பெருவாங்க.

  இப்ப கூட தாத்தாவுக்கு பிறகு திமுக அவ்வளவு தான் என்று தானே நினைக்கிறோம். ஆனாலும் இருக்கும்.

  ReplyDelete
 4. /இப்ப கூட தாத்தாவுக்கு பிறகு திமுக அவ்வளவு தான் என்று தானே நினைக்கிறோம். /

  நாளைய பொழுதாவது நல்ல பொழுதாக இருக்க வேண்டும் என்று நம்புகிறோம்.அப்படியெல்லாம் இல்லை என்று [யாருடையதோ] வயிற்றில் புளியைக் கரைக்கிறீர்கள்! திருப்பணி வாழ்க!

  நம்பிக்கை ஒருபக்கம் இருக்கட்டும்,உயரப் போன ஒன்று கீழேயே வந்தாக வேண்டும், இது நியூட்டன் விதி. அல்லது உயர உயரப்போகிறேன் நீயும் வா என்று பாட்டுப் பாடிக் கொண்டு பரலோகம் தான் போக வேண்டும்! இது மஞ்சள் கலர்ல துண்டு போட்டா நல்லதுன்னு சொல்லிக் கொடுத்தவங்க சொல்ற விதி!

  அந்தரத்தில் என்றுமே தொங்குவது சாதாரண மக்கள்தான்! அவர்களுக்கென்ன வழி?

  ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!