ஆறு மனமே ஆறு! கேள்விக்கும் கதையுண்டு ஆறு!


 சமயத்துல நம்மைப்பத்தி நாம நெனச்சிட்டிருக்கிறதே (நாம தான் எல்லாங்கிற மாதிரி),பிரச்சினையாப் போய்விடுவதும் உண்டுங்க!

பீர்பால் கதைகள், நம்ம ஊர் தெனாலி ராமன் கதைகள், மரியாதை ராமன் கதைகள் மாதிரியே, கொஞ்சம் சிரிப்பு, கொஞ்சம் வாழ்வியல் உண்மைகள் என்று கலந்து கூட்டாஞ்சோறு மாதிரியே, படிக்க சுவையாக இருக்கும்! கேட்டிருக்கிறீர்களா?

இணையத்துப் பக்கம் வந்தோமா, ஏதோ பத்து மொக்கையைப் படிச்சோமா, கை பர பரன்னதும், நாலு மொக்கையைப் பின்னூட்டமாகப் போட்டோமான்னே பொழுது சரியாப் போயிடுது, இதுல எங்க சாமி அதுக்கெல்லாம் நேரம் அப்படீன்னு வருத்தப் படற, படாத வாலிப,வயோதிகப் பதிவர்களுக்காக, ஒரு சின்னக் கதை
 
தமிழ்மணம் கமழும் கதை! வாசனை தூக்கல், மணம் கமழும் பதிவு, இப்படி நாமே சொல்லிக்கலைன்னா எப்படி
 
யாரோ ஒரு கணேசனோ, முருகனோ வந்து, பக்தா உன் பொறுமையை 'மொக்கினோம்', இந்தவார நட்சத்திர மொக்கை நீ தான்னா சொல்லப் போறாங்க? இல்லேன்னா உங்க பதிவை 4000, 4500, 5000,5500, 6000, 6500 ன்னு ரவுண்டு கட்டி, இந்தப்பக்கம் பள்ளப்பட்டி முசல்மான்கள் நடத்துற கடைகள் வாசல்ல சின்னப்பசங்க ஒக்காந்து "வாங்க சார் வாங்க! வாங்க அம்மா வாங்க"ன்னு கூவிக் கூவி அழைச்சுக் கையப்பிடிச்சு கடைக்கு உள்ளார இழுத்துக்கிட்டுப்போற மாதிரி, அவங்களே ஜோதியில கலக்கச் செய்யவா போறாங்க?! செய்யறாங்க! எப்படிச் செய்யறாங்கன்றதுல தான் சூட்சுமமே!

திரட்டும் புரட்டும் பத்தி அப்புறமாப் பாத்துக்கலாம்! மொதல்ல, இப்பக் கதை!

அக்பருக்குத் தன்னோட ஆட்சியில மக்களெல்லாம் எப்படி இருக்காங்கன்னு தெரிஞ்சுக்க ஒரு நாள் ஆசை வந்துச்சாம். தினசரி தனக்கு சவரம் செய்கிற ஒத்தன்கிட்ட கேட்டாரு.ராஜாவுக்கு சவரம் செய்கிறவனுக்குத் தங்கக் காசுல்ல கிடைக்கும்! உடனே அவன் சொன்னானாம்: "ராஜா, ராஜா! உங்க ஆட்சியில சமத்துவம் மலருது! வேற என்னென்னவோ எப்படி எப்படியோ வளருது!மக்களெல்லாம் நீங்க ஊட்டி விட்ட இலவசங்களில் அப்படியே மெய் மறந்து, வாயப் பொளந்து, மூடக் கூட முடியாம அவ்வளவு சந்தோஷமா இருக்காங்க! ஒரு கொறையுமில்லே! என் தருமநிதியே !தயாநிதியே! துரைநிதியே!"

தன்னுடைய ஆட்சியில் கூட  மக்கள் இவ்வளவு சவுக்கியமா இருக்காங்களான்னுட்டு, ராஜாவுக்கோ பெருமை தாங்கவில்லை! சவரம் செய்ததற்கு கூலி போக, இப்படி விவரம் சொன்னதுக்காகவும் கூடுதலாத் தங்கக் காசை அள்ளி அள்ளி வீசினாராம்! தங்கக் காசு கூடக் கெடச்சா, என்ன வரும்? அப்படி வர்றதுக்கு, இன்னிக்குப் பேர் இலவசம்! நாகரீகமாச் சொன்னாப் புள்ளிவிவரம்!
உண்மையை உடைச்சுச் சொன்னாக் கலவரம்!

ராஜாவுக்குப் பெருமை தாங்க முடியாம, பீர்பால் கிட்ட சொன்னாராம்: "பீர்பால் நீயும் இருக்கியே, எப்பப் பாத்தாலும் அது இருந்தா இது இல்ல, இது இருந்தா அது இல்லைன்னுட்டு! பாரு, எனக்கு சவரம் செய்கிற நாவிதனுக்குத் தெரிந்தது கூட உனக்குத் தெரியலையே?அய்யகோ என் தாழ்ந்த தங்கத் திருநாடே!"


நம்ம பீர் பால் இருக்காரே அந்த ஆள் மகா குசும்பு, லொள்ளு, கூடவே புத்தியும் இருக்கறவர். ராஜா கிட்ட உடனே சொன்னா ஏறாதுன்னு, "எனக்கு ஒரு வாரம் அவகாசம் கொடுங்க, நான் தீர விசாரிச்சுட்டுச் சொல்றேன்" அப்படீன்னு சொன்னாராம்.


அக்பருக்கு இந்த மட்டிலாவது பீர்பால் எதுத்து விவரம் சொல்லாம, எதிர்க்கேள்வி கேக்காம ஒப்புத்துக்கிட்டாரேன்னு சந்தோஷம்! சரின்னுட்டு, டைம் கொடுத்தார்.


உடனே, பீர்பாலும் அந்த நாவிதனை ஆளை விட்டு என்ன செய்கிறான்ன்னு கண்காணிக்க ஏற்பாடு செஞ்சார். ராஜாவுக்கு மனம் குளிர்ற மாதிரியே, எடுப்புத் தொடுப்பாகச் சொல்லியே நெறையத் தங்கக் காசு சேர்ந்துபோச்சு. காசை வச்சு என்ன பண்றதுன்னு கூடத் தெரியலை! தினசரி, ராத்திரி எல்லாரும் தூங்கினப்புறம், தங்கக் காசுகளை எடுத்து எண்ணுறதும், அடுக்கி வச்சு விளையாடுறதுமாகவே பொழுது போக்கினதையும் தெரிஞ்சுகிட்டார். ஆறாம் நாள், நாவிதன் சேத்துவச்சு, பாத்துபாத்துப் பூரிச்சுகிட்டிருந்த தங்கக் காசை ஆளைவைத்து லபக்கிட்டு வரச் செய்தாராம்.


ஏழாம் நாள், அக்பர் சவரம் செய்து கொள்வதற்கு முன்னாலேயே பீர்பால் போயி, "ராசா ராசா! இன்னிக்கு உங்க நாவிதரு என்ன சொல்றாருன்னு கேளுங்க"ன்னு சொன்னாராம்.


அதேபடிக்கு, அக்பரும் நாவிதன்கிட்ட "நம்ம ஊர் நிலவரம் எப்படி? மாதம் மும்மாரி பெய்கிறதா? காத்தடிச்சு காத்தடிச்சு ஏத்தி வச்ச தீபங்களில் இருட்டு இல்லாம [இன்னிக்கு பவர்கட்னு ஏதோ சொல்லிக்கிறோமே அந்த மாதிரி] இருக்கா?" அப்படீன்னு வரிசையா, நம்ம வால்பையன் மாதிரித் தொடர் கேள்விகளாக க் கேட்டாரு.


தமிழ் வலைப் பதிவர்கள் மாதிரி, வேறென்ன போனாலும் கவலையில்லே, ஆஹா! வடை போச்சேன்னு மட்டும் இருக்க அந்த அப்பாவி நாவிதனுக்குத் தெரியல. சேத்து வச்ச தங்கக் காசெல்லாம் போச்சேன்னு வருத்தம், கோபம், சோகம், ஏமாற்றம் இப்படி எல்லாம் சேர்ந்து புலம்பினான்:


"என்ன ஆட்சி நடக்குது? ஏழை எளியவர்களுக்குக் கொஞ்சம் கூடப் பாதுகாப்பே இல்லை.


சமத்துவம் பேசி இருக்கறதையும் பிடுங்கிக் கொள்கிற ஆட்சியெல்லாம் ஆட்சியா? பாதுஷான்னு இங்க ஒருத்தர் இருக்காரா? பாத்துகிட்டு சும்மா இருக்காரா?மானாடும், மயிலாடும்னாங்க! நரியும் எலியும் தான் ஆடுதா இந்த ஆட்சியில, நா சொல்லலே, சனங்க பேசிக்கறாங்க! ஊரெல்லாம் ஒரே ஏச்சு! ஒரே அழுகை!" ன்னு கண்ணீரோட கதறினானாம்.

அக்பருக்கு ஒண்ணும் வெளங்கலை. நேத்து வரைக்கும் இந்த ஆட்சியில மானாட, மயிலாடன்னு சிங்கமும் நரியும் கூடி எலிகளும் பூனைகளும் கூட சமத்துவமா இருக்கறதாச் சொன்னவன், இன்னைக்கு இப்படிக் கேக்கறானேன்னு அதிர்ச்சி. என்ன ஆச்சுன்னும் தெரியல, எப்படிப் பதில் சொல்றதும்னும் புரியல. வழக்கம் போல சவரம் பண்ணி முடிச்சதும் ரெண்டு தங்கக் காசை வீசிவிட்டு, நீ போ, நான் பாத்துக்கறேன்னு சொல்லிட்டு, பீர்பாலைக் கூப்பிட்டு அனுப்பிச்சாராம்.


பீர்பால் வந்தாருங்க! அக்பருக்கு அடக்க முடியவில்லை, புலம்ப ஆரம்பிச்சிட்டார்:



"நேத்து வரை உங்க ஆட்சி மாதிரி வருமான்னான். சாதனைத் திலகம், சமத்துவ நாயகன்னு சொன்னான். உங்க ஆட்சியில் மட்டும் தான் ஏழ்மையின் சிரிப்பில் இறைவனைக் காண முடிஞ்சதுன்னு வேற சொன்னான். இப்ப எல்லாத்தையுமே மாத்திச் சொல்றான்."


"பீர்பால், பைத்தியம் பிடிச்சது அவனுக்கா, எனக்கான்னே தெரியலையே! உனக்காச்சும் தெரியுதா சொல்லு."


பீர்பால் இடையில் நடந்த கதையைச் சொல்லி விட்டு, ஒவ்வொருவனும் தன்னை வைத்தே உலகத்தை எடை போடுகிறான். இந்த நாவிதனும் தான் சௌகரியமாக இருந்ததாக நினைத்தபோது எல்லோருமே அப்படி இருந்ததாகவும், தன்னுடையது களவு போனதும், ஊரே திருடர்களால் நிறைந்து போனமாதிரியும் சொன்னான் என்பதைச் சொன்னார்.


அக்பருக்கு அப்பவும் நம்பிக்கை வரலே. பாத்தார் பீர்பால்.

"கேப்பையிலே சுவை மணம் காரம் நெறைஞ்ச நெய் வடியுதுன்னு சொன்னாக்க, கேக்கறவனுக்கு எங்க போச்சு புத்தி? கேக்கறவன் கேணையனா இருந்தாக்க, கேப்பையில் மட்டுமில்ல, பாக்கறது எல்லாத்துலயுமே நெய் வடியும்!"அப்படீன்னு பீர்பால் சுருக்குன்னு சொன்னதும் தான், இதுக்கு மேலயும் கேள்வி கேட்டா தனக்கு மண்டையில ஒண்ணும் இல்லேங்கிற அரசாங்க ரகசியம் வெளியாயிடும்னு ராசா கப்சிப்னு ஆயிட்டாராம்!

கதை முடிஞ்சது, கத்தரிக்காய் காச்சுது, முத்திச் சந்திக்கும் வந்தாச்சு!

எதுக்கு இந்தக் கதை, என்ன கத்தரிக்காய், காய்ச்சு, முத்தி, சந்தைக்கு வந்ததுன்றீங்களா?
கோவிகண்ணன்அங்க பாத்துட்டு  நச்சுன்னு ஒரு பதிவு இங்க போட்டாருங்களா?

நாமளும் அங்கபோய் சும்மா இருக்காம, கருத்து கந்தசாமியா கடமையை  செய்துவிட்டு வந்தோமுங்க. சொன்னதே சிலது தான்! பலதில்  உடன்பட முடியவில்லைன்னு சொல்லிட்டாருங்கோ!  


கிருஷ்ணமூர்த்தி சொன்னது…
/பல கருத்துக்களோடு ஒத்துப்போக முடியவில்லை/ எனக்கும் தான்! மொக்கை போடுவதிலும், வெறுப்பை வளர்ப்பதிலுமே இது வரை பெரும்பாலான தமிழ் வலைப்பதிவுகள், அவைகளையே முக்கியப்படுத்தி, பிரபலப்படுத்திய திரட்டிகளைக் கவனித்துக் கொண்டு இருப்பவன் என்ற வகையில், எனக்கு நிறைய கருத்துக்கள் உண்டு. இணையத்தைப் பயிற்றுவிக்கப் போகிறேன் என்று கிளம்பியிருப்பவர்களையும், அவர்களது செயல்பாடுகளையுமே கவனித்துக் கொண்டுதான் இருக்கிறேன். ஒரு குறிப்பிட்ட திரட்டியில் இணைவது அல்லது இணையாமல் இருப்பது என்பது என்னுடைய சொந்த விருப்பத்தை மட்டுமல்ல, அந்தத் திரட்டி நிர்வாகம் எப்படி நடந்துகொள்கிறது என்பதையுமே பொறுத்துத் தீர்மானிக்கப்படுகிறது! உங்களுடைய சேவை மாஜிக் மிகவும் நன்றாக இருக்கிறது!//


நியூடன் விதிப்படி அதுக்கு ஒரு எதிர்வினை இல்லாமப் போச்சுன்னா நியூடன் ஐயா புகழ் என்னாகிறது?

அதுதாங்க இது.....பேச்சுப் பேச்சாத் தான் இருக்கோணும் மக்களே! மேல விழுந்து பிராண்டப்படாது!

7 comments:

  1. ஆஹா!
    பீர்பால் கதையோட தற்கால அரசியலையும் கலந்து கட்டி அடிசிடிங்களே!
    அருமை!

    மேலும் உரையாடல் தொடரும்!

    ReplyDelete
  2. உருவகக் கதையும், 'ஆனைப் பாத்தையா, ஆனை?"ங்கற மாதிரி அதைச் சொன்ன அழகும் ச்சும்மா ஒண்டர்புல்!

    ReplyDelete
  3. உங்கப் பதிவை பாலோ பண்ணிக்கிட்டு தான் இருக்கேன்.

    இதை படிச்சு வாரம் ஆச்சு !

    //ஒரு குறிப்பிட்ட திரட்டியில் இணைவது அல்லது இணையாமல் இருப்பது என்பது என்னுடைய சொந்த விருப்பத்தை மட்டுமல்ல, அந்தத் திரட்டி நிர்வாகம் எப்படி நடந்துகொள்கிறது என்பதையுமே பொறுத்துத் தீர்மானிக்கப்படுகிறது! //

    உங்களுக்கு திரட்டியைப் பிடிக்குதா ? திரட்டிக்கு உங்களை பிடிக்குதாங்கிறது பிரச்சனையே அல்ல. எதாவது திரட்டியில் இணைத்தால் தான் உங்கள் எழுத்து 40 பேரில் இருந்து 400 பேருக்கு தெரிய வரும். அப்பறம் சாரு, ஜெமோ மாதிரி புகழ் பெற்றவுடன் திரட்டியில் இணைக்கலாமா வேண்டாமான்னு முடிவு செய்யுங்கள். மறுபரீசிலனை பண்ணலாம்

    உங்கப் பக்கத்துக்கு நான் வந்தது பின்னூட்டத்தை பிடித்து தான். அப்பறம் என்பக்கத்தில் இணைத்து வைத்திருக்கிறேன். எல்லோரும் அப்படி வந்தால் தான் இப்போதைக்கு உங்கள் பதிவை பிடிக்கும் / படிக்கும் நிலை.

    ReplyDelete
  4. கோவி கண்ணன்,

    நீங்க இந்த பதிவுக்கு வந்தது, படிச்சது தெரிஞ்சது தான்!

    இந்தப் பதிவுமே கூடத் திரட்டிகளைப் பற்றி நான் இப்போது மேற்கொண்டிருக்கும் ஒரு சின்ன ப்ராஜெக்ட் சம்பந்தப்பட்டது தான். யாஹூ!360 இல், ஐந்தாண்டுகளுக்கு முன்னால் எழுத ஆரம்பித்த நாட்களிலேயே இந்த சோஷல் நெட் ஒர்கிங், வெப் 2.0 இதைப்பற்றிய ஞானம் கொஞ்சம் இருந்தது. ப்ளாக்கரில் நடக்கும் கூத்துக்களைப் பார்த்த பிறகு, என்ன தான் நடக்கிறது என்று தெரிந்து கொள்ளும் ஆசையும் வந்தது.

    திரட்டிகளுடைய அவசியம், தயவு முழுக்க முழுக்க வேண்டாமே என்ற அர்த்தத்தில் இந்தப் பதிவை நான் எழுத வில்லை. திரட்டிகளில் இணைக்காமல், தங்களுடைய நட்பு வட்டத்தின் வழியாக, மிகவும் நுட்பமான விஷயங்களை தமிழில் எழுதிக் கொண்டிருக்கும் வலைப்பதிவர்களையுமே நான் அறிந்திருக்கிறேன், தொடர்ந்து வாசித்துக் கொண்டும் இருக்கிறேன்.

    இந்தப் பதிவு, திரு காசி ஆறுமுகத்தின் பதிவுக்குப் பதிலாக உங்கள் பதிவிலேயே எழுதியிருந்ததைப் அடித்து விட்டு, அந்தப் பதிவுக்குப் போய் என் கருத்துக்களைப் பதிவு செய்த போது, திரு காசி, பல கருத்துக்களில் உடன்பாடு இல்லை என்று ஒற்றை வரியில் பதில் சொல்லத் தூண்டுதலாக இருந்த ஒரு வரி 'நான் தமிழ்மணம் திரட்டியில் என் பதிவை இணைக்கவில்லை-இணைக்கும் உத்தேசமும் இல்லை என்று இருந்தது தான்.

    அதற்கு மெலிதாக நையாண்டி செய்கிற விதத்தில்தான் , காசி தற்போது செய்துகொண்டிருக்கும் சேவை மாஜிக் மிகவும் நன்றாக இருக்கிறது என்று அங்கே மறுபடி சொல்லி விட்டு, காசியின் ஆறு கேள்விகளுக்கு உருப்படியான பதிலை எவராவது எழுதிக் கொண்டிருக்கிறார்களா, அதில் ஏதாவது பயனுள்ள செய்திகள் இருக்கிறதா என்பதை மட்டுமே கவனித்துக் கொண்டிருக்கிறேன்.

    என்னுடைய பதிவு, நம்பர் ஒன் என்று சொல்லிக் கொள்கிற தமிழ்மணம் திரட்டியில் இணைக்கப் படவில்லை. ஆனால், அதற்கடுத்த நிலைகளில், அடுத்தநிலையின் இடைவெளி ரிசல்ட் என்னவோ வெகு தொலைவில் இருந்தாலும் கூட, இரண்டாவது, மூன்றாவது நிலையில் உள்ள தமிழிஷ், திரட்டி, இவைகளில் திரட்டப் படுகிறது.

    வாசிப்பவர்களையும், அவர்கள் என்ன வாசிக்கிறார்கள் என்பதையுமே கவனித்துக் கொண்டு, அதே நேரம், இந்தப் புள்ளிவிவரம், எனக்கு மிகவும் பிடித்தமான வாசித்தலுக்கு இடைஞ்சலாக இல்லாதபடி, வாசிப்புக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்துக் கொண்டு வளைய வந்து கொண்டிருக்கிறேன்.

    தமிழ் மணம் காசிக்கு, அவர் கேட்ட கேள்விகளுக்கு, முதலில் கொஞ்சம் கோர்வையாகவும், உறைக்கிற மாதிரியும் வந்த பதில் உங்கள் பதிவில் தான். அதற்கப்புறம், மருத்துவர் புருனோ, நா.கண்ணன் இருவரும் கொஞ்சம் விவரங்களோடு எழுதியிருந்தார்கள். மற்றவை பெரும்பாலும், துதிபாடுகிற வெற்றுப் பதிவுகள் தான்.

    இந்தப் பின்னணியோடு, பீர்பால் கதையில் வரும் அக்பர்-நாவிதன் இருவரும் உலகத்தை எப்படி எடைபோடுகிறார்கள் என்று இப்போது சொல்லுங்கள்!

    ReplyDelete
  5. //என்னுடைய பதிவு, நம்பர் ஒன் என்று சொல்லிக் கொள்கிற தமிழ்மணம் திரட்டியில் இணைக்கப் படவில்லை.......நம்பர் ஒன் என்று சொல்லிக் கொள்கிற தமிழ்மணம் திரட்டியில் இணைக்கப் படவில்லை. ஆனால், அதற்கடுத்த நிலைகளில், அடுத்தநிலையின் இடைவெளி ரிசல்ட் என்னவோ வெகு தொலைவில் இருந்தாலும் கூட, இரண்டாவது, மூன்றாவது நிலையில் உள்ள தமிழிஷ், திரட்டி, இவைகளில் திரட்டப் படுகிறது.//

    தமிழ்மணம் திரட்டி தாம் தான் நம்பர் ஒண்ணு என்று சொன்னதாக தெரியவில்லை. நான் உட்பட பதிவர்கள் தான் அவ்வாறு சொல்வார்கள்.

    உங்களுக்கு தமிழ்மணம் நிர்வாகிகள் யார் மீதும் தனிப்பட்ட கோவம் இருப்பது போல் தெரியவில்லை.
    :)

    'ஏரி மீது கோவித்துக் கொண்டுங்கிற...' பழமொழி ஞாபகத்துக்கு வந்தாலும் கொஞ்சம் பெரியவங்களாக இருக்கிங்கங்கிறதுக்காக அப்படியா விட்டுவிடுகிறேன் :)

    காசி (தமிழ்மணம் மேஜிக்) சேவை - ங்கிற பொருள் படும் படி நீங்கள் அளித்த பின்னூட்டம் எனக்கு புரிந்தது.

    //இந்தப் பதிவுமே கூடத் திரட்டிகளைப் பற்றி நான் இப்போது மேற்கொண்டிருக்கும் ஒரு சின்ன ப்ராஜெக்ட் சம்பந்தப்பட்டது தான். யாஹூ!360 இல், ஐந்தாண்டுகளுக்கு முன்னால் எழுத ஆரம்பித்த நாட்களிலேயே இந்த சோஷல் நெட் ஒர்கிங், வெப் 2.0 இதைப்பற்றிய ஞானம் கொஞ்சம் இருந்தது. ப்ளாக்கரில் நடக்கும் கூத்துக்களைப் பார்த்த பிறகு, என்ன தான் நடக்கிறது என்று தெரிந்து கொள்ளும் ஆசையும் வந்தது.//

    சத்தியமாக இந்த சேவை விவரங்களெல்லாம் எனக்கு தெரியவே தெரியாது, ஆர்குட் கூட பயன்படுத்துவதில்லை. ப்ளாக்கர் மட்டும் தான் பயன்படுத்தி வருகிறேன்.

    ReplyDelete
  6. /தமிழ்மணம் திரட்டி தாம் தான் நம்பர் ஒண்ணு என்று சொன்னதாக தெரியவில்லை/

    தமிழ்மணம் திரட்டியில் அப்படித் தம்பட்டம் அடித்துக் கொள்ளவில்லை. ஆனால் வெவ்வேறு இடங்களில், அதன் நிர்வாகக் குழுவில் இருப்பவர்கள் சொல்லிக் கொள்கிறார்கள்.

    /உங்களுக்கு தமிழ்மணம் நிர்வாகிகள் யார் மீதும் தனிப்பட்ட கோவம் இருப்பது போல் தெரியவில்லை./

    நோ சான்ஸ். முகம் தெரியாத மனிதர்களோடு கோபப்படமுடியாது. அல்லது மிக அதிகமாகப்பழக்கப்பட்டுப்போன என் முகத்தோடேயே சண்டை போட நேரமில்லை:-))

    /காசி (தமிழ்மணம் மேஜிக்) சேவை - ங்கிற பொருள் படும் படி நீங்கள் அளித்த பின்னூட்டம் எனக்கு புரிந்தது./

    இன்னும் நீங்க சரியாப் புரிஞ்சுக்கலை!

    சேவை மாஜிக் என்று சொன்னது அவர் தமிழ்மணம் மாஜிக் செய்ததல்ல.அவர் இப்போது தயாரித்து விற்பனை செய்து கொண்டிருப்பது 'சேவை மாஜிக்' என்ற பெயரில் இடியாப்பம் பிழிகிற மெஷின்.

    டெமோ வீடியோ பார்த்துத் தான் நன்றாக இருக்கிறது என்று சொன்னேன். அதுவும் எனக்குத் தேவைப்படுகிறது என்று அல்ல!!

    ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!