அரைச்ச மாவ அரைப்போமா துவச்ச துணியத் துவைப்போமா?


அரைச்ச மாவ அரைப்போமா
துவச்ச துணியத் துவைப்போமா?

இப்படி அரைத்த மாவையே திரும்பத் திரும்ப அரைப்பதில், தமிழ் பேசும் நல் உலகத்திற்கு ஈடு இணையே கிடையாது! நீங்களே ஒவ்வொரு விஷயத்தையும் அதன் ஆதி என்ன மறுபடி இப்போது எந்த வடிவத்தில் வந்திருக்கிறது என்பதைக் கொஞ்சம் கவனித்துத்தான் பாருங்களேன்!

ஒரு இருபத்தைந்து, முப்பது வருடங்களுக்கு முன்னால், தமிழனுக்குப் பொழுதுபோக்கக் குறிப்பிட்ட சில விஷயங்கள் தான் இருந்தன. முதலிடம், சிலோன் வானொலி, அதில் அப்பப்பா, அம்மம்மா, சித்தப்பா, பெத்தப்பா, முத்தப்பா என்று ஒருமுன்னூறு பேர்களை மூச்சு விடாமல் வாசித்து விட்டு, இவர்கள் விரும்பிக் கேட்ட பாடல என்று ஒரு திரைப்படப் பாடல் ஒலிபரப்பாகும். இட்லி மாவையே, தோசை, ஊத்தப்பம் என்று விதவிதமாகச் சுடுவது போல, காதல் பாட்டுக்கள், காதலில் தோல்விப்பாட்டுக்கள், தத்துவப் பாட்டுக்கள் என்று வித விதமாக லேபில் வைத்து, அரைத்த மாவையே அரைப்பதற்கு, சிலோன் வானொலி தான் இன்றைக்கும் முன்னோடி என்றால் நம்ப முடிகிறதா? அதுதான் உண்மை!

அப்புறமாகப் பட்டிமன்றங்கள்!

சிலோன் வானொலி போல சாமர்த்தியமாக லேபில் வைக்கத் தெரியாத, எப்போது பார்த்தாலும் ஒரே மாதிரி கற்பில் சிறந்தவள் கண்ணகியா-மாதவியா, வாலியை மறைந்திருந்து கொன்ற ராமன் குற்றவாளியா-இல்லையா, இப்படித் தமிழ் இலக்கியங்களில் இருந்தே சில சம்பவங்களை மையமாக வைத்து நடக்கும் பட்டி மன்றங்கள். நடுவர் யார் என்பதை வைத்துத் தான் கூட்டம் கூடுவது, குறைவது எல்லாம்!

கண்ணகி, மாதவி கற்பைப் பற்றிப் பேசிப் பேசி ஒருகட்டத்தில் அலுத்துப்போன மாதிரித் தெரிந்த போது, குன்றக்குடி அடிகளார் தான், இன்னும் எத்தனை நாட்கள் தான் கண்ணகி, மாதவியைப் பற்றியே பேசிக் கொண்டிருப்பது, ஜனங்களுக்குப் பயன்படுகிறமாதிரி, ஜனங்களுடைய பிரச்சினைகளைத் தொட்டுப் பேசும் இடமாகப் பட்டிமன்றங்கள் மாற வேண்டும் என்று முதன் முதலாகச் சொன்னார். இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னால், அல்லது அதற்கு ஒன்றிரண்டு வருடங்களுக்கு முன்னால் கூட இருக்கும், மதுரை வடக்கு மாசி வீதி-மேலமாசி வீசி சந்திப்பில் நேரு ஆலால சுந்தர விநாயகர் கோவில் முன்னால் நடந்த ஒரு பட்டி மன்றத்தில், தனது நடுவர் தீர்ப்பைச் சொல்கிற தருணத்தில் சொன்னது, இன்றைக்கும் நினைவில் இருக்கிறது.

சமுதாயப் பிரச்சினைகளைத் தொட்டுப் பேசும் தலைப்புக்களில் பட்டிமன்றங்கள் நடந்தது கொஞ்ச காலமே. மறுபடி, பட்டி மன்றம் என்பது வெறும் வெட்டி மன்றமே என்றாகிப் போனதையும் பார்க்க நேர்ந்தது. இன்றைக்கு நடக்கும் சில பட்டிமன்றங்களைக் கேட்கும் போது சாரு-ஜெமோ சண்டையே கொஞ்சம் தேவலை என்று கூடத் தோன்றும்! அடுத்த பட்டி மன்றத்தில் தொடர்ந்து பேச வாய்ப்புக் கிடைக்க வேண்டும் என்பதற்காக, திரைப்படக் கவிஞர் வாலி ரேஞ்சுக்கு, நடுவரை ஐஸ் வைத்து, காக்காய் பிடிக்கும் கூத்துக்களையும் காணும் போது, நாந்தேன் ஒசத்தி எனப் பீற்றிக் கொள்ளும் சாரு-ஜெமோ கூடத் தேவலை என்று தோன்றுவதில் வியப்பில்லை.

இப்ப எதுக்கு இவ்வளவு நீளமான பீடிகைன்னுதானே கேக்கறீங்க?

இருக்கு!

நம்ம வால்ஸ், அதாங்க வால்பையன் அருண் திடீர்னு நேயர் விருப்பத்தை நிறைவேற்றுகிற சாக்கில் ஒரு சர வெடியக் கொளுத்திப் போட்டுட்டு, சனி ஞாயிறு லீவுன்னு எஸ்'சாகிட்டாருங்க! சரவெடிய, ஆரம்பிக்கிறார் பாருங்க!

"பலர் நண்பர்கள் சாட்டில் கேட்டு கொண்டே தான் இருந்தார்கள், உங்கள் ஸ்டைல் பதிவுகளை கொஞ்சநாளாக காணோமே என்று, என்ன செய்ய சரியான நேர்கோட்டில் விவாதிக்க சரியான ஆட்கள் கிடைத்தால் தானே எந்த கேள்விக்கும் எதாவது பதில் கிடைக்கும், கடந்த மூன்று மாதகாலமாக தமிழ் வலையுலகில் புதிதாக வந்திருக்கும் நண்பர்களை நான் கவனித்து கொண்டு தான் இருக்கிறேன்!, சிறந்த வாத திறமை உள்ளவர்களாகவும், சிறந்த வாசிப்பனுபவம் உள்ளவர்களாகவும் இருக்கிறார்கள், சரியோ, தவறோ அவர்களது திறமையை வெளிகாட்ட ஒரு களம் தேவைபடுகிறது, அது என் வலையாகத்தான் இருக்கட்டுமே!"
இணையத்துலேயே ஒரு பட்டி மன்றம்! நடுவரெல்லாம் கிடையாது!

வழக்கம் போலவே ஒரு சீரியசான சப்ஜெக்டை மேம்போக்காகவே சொல்லிக் கொண்டே போவதில், ஏற்கெனெவே முடிவெடுத்து விட்டு அதற்கிசைய எழுதுவதில் உள்ள குறைகள் வெளிப்படையாகவே தெரிகின்றன.

"மனிதன் குழுக்கலாக இருந்த பொழுது குழுதலைவனின் உடலை பத்திரமாக புதைத்தனர், வயதானவனே குழுத்தலைவன், மற்ற விலங்குகளிடமிருந்தும், இயற்கை சீற்றங்களிலுருந்தும் தப்பித்தால் மட்டுமே வயதாகியும் வாழமுடியும், அவனது அனுபவத்தை பெற அவனை மக்கள் தலைவனாக ஏற்றுகொண்டனர், நாகரீக காலத்தில் வளர்ந்த கலைவடிவம், சிற்பம், ஓவியம் என தனது வளர்ச்சியை பெருக்கி கொண்டது, சமகாலத்தில் இருந்தது போல் அப்போதைய தலைவர்களுக்கும் சிலை செய்தார்கள், கூடவே அவர் பயன்படுத்திய பொருள், செல்லபிராணிகளுடன் சமாதி செய்தார்கள். அங்கேயிருந்த மனிதர்கள் கொஞ்சம் வரலாற்றின் மேல் அக்கறை கொண்டதால் அதன் சுவடுகளை விட்டு சென்றார்கள்!"
இவர் இங்கே குறிப்பிடுகிற இனத்தலைவன்/தலைவி உடலைப் புதைக்கும்போது, பயன்படுத்திய பொருட்கள், செல்லப் பிராணிகள் மட்டுமல்ல, செவகர்களையுமே உயிரோடு புதைக்கும் வழக்கம் எகிப்தில் மட்டுமே காண முடிகிற ஒரு பழக்கம். உலக நாகரீகங்களில், பெரும்பாலானவைகளில் இந்த மாதிரி மனிதர்களையும் உயிரோடு புதைக்கிற பழக்கம் இருந்ததில்லை.

ஒருவிஷயத்தை, முழுமையாகப் புரிந்துகொள்ளாமலேயே, பொதுமைப் படுத்திவிடுவதில் ஏற்படுகிற ஒரு விதமான "ஆர்வக் கோளாறு" இது!

இந்தியாவின் வரலாறு என எதை சொல்வது, எங்கிருந்து ஆரம்பிப்பது!.
இந்திய வரலாற்றை அறிந்துகொள்வதற்கு, ஏராளமான புத்தகங்கள், ஆராய்ச்சிக் கட்டுரைகள், இருக்கின்றன. அதில் என்ன சொல்லியிருக்கிறது என்பதே தெரியாமல் அப்படியே நிராகரிப்பது, எப்படிச் சரியாக இருக்கும்?
'யுவாங் சுவாங்......பயணகுறிப்புகளில் கோட்டைவாயிலை நெருப்பு கக்கும் ட்ராகன் காத்து கொண்டிருக்கும் என எழுதியுள்ளார், அதை நம்பும் மக்களுக்கு கடவுள் என்னும் மாயையை விளக்குவது எனக்கு நானே முட்டாளாக்கி கொள்வதற்கு சமம்," "
வரலாறு என்பதே புனைவால் புனையப்பட்ட புனைவு" "கடவுளை நேரில் பார்த்தகாக சொல்வர்கள் ஒன்று போதையில் இருக்கிறார்கள் அல்லது மனச்சிதைவு நோயில் ஆட்பட்டவர்களாக இருப்பார்கள், சந்தேகமிருந்தால் மனநல மருத்துவர்களை கேட்டுப்பாருங்கள்"

என்ன வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் எழுதலாம் என்ற அளவிலேயே, நிறைய விவாதங்கள் திசை திரும்பி, என்ன பேச ஆரம்பித்தோமோ அதற்கு சம்பந்தமில்லாத ட்ராக்கில் போய் விடுவதையே, மறுபடி இந்தப் பதிவும் நிரூபித்திருக்கிறது என்பதைத் தவிர ஆன்மீகப் பயணத்திற்கு உருப்படியான எதிர்வினையைக் காண முடியவில்லை!
ஆதரவான வினையும் கூட இல்லை!

கடவுளை மறுப்பவர்களும், இல்லையென்று நிரூபிக்கப் பாடுபடுபவர்களுமே கூட ஏதோ ஒரு போதையில், மனப்பிறழ்வு நோய் உள்ளவர்களாக, அது வலிப்பு நோய் மட்டுமல்ல, வக்கிர மனம், எதிலும் தீயதையே பார்க்கிற குணம்,இப்படி ஏராளமான கோளாறுகள் உள்ளவர்களாகத் தான் இருக்கிறார்கள். இதற்கு மன நல மருத்துவர்கள் சொல்வதையெல்லாம் கூட அப்புறமாகக் கேட்டுக் கொள்ளலாம். அவர்கள் பேசுகிறவிதம், உபயோகிக்கும் வார்த்தைகள், தெரிந்தே திரித்துப் பேசுவது இப்படி ஏராளமான குணநலன்களைக் கவனித்தாலே தெரியுமே!

இப்படிச் சொல்வது விதண்டாவாதமாகத் தெரியலாம். இல்லையென்று நிரூபித்துக் காட்டுங்களேன், பார்க்கலாம்! எதையுமே பொதுமைப் படுத்துவதில், மேம்போக்காகப் பேசுவதில், எந்த ஒரு விஷயத்தையுமே, இப்படியும் பார்க்கலாம், அப்படியும் பார்க்கலாம்!

முதலில் நம்மைப் பார்ப்போம்! கடவுளை நம்புகிறவன் நம்பிவிட்டுப் போகட்டுமே! உங்களுக்கு நம்பிக்கை இல்லையென்றால், அதுவும் அப்படியே இருந்து விட்டுப் போகட்டுமே!

டிஸ்கி: ஒன்றைத் தெளிவாக, உரக்கவும் கூவிக்க விரும்புகிறேன்!

இந்தப் பதிவு, வால்பையன் திரு. அருணை விமரிசிப்பதற்காகப் போடப்பட்ட எதிர் வினை அல்ல. உண்மையில், நான் வால்பையனுடைய ரசிகன்! விறுவிறுவென்று அவர் இடுகிற பின்னூட்டச் சர வெடி எனக்கு மிகவும் பிடிக்கும்!


நாத்திகம் பேசுபவரும், ஆத்திகம் பேசுவோரும் ஒரே தவறைத் தான் வெவ்வேறு வழிகளில் செய்துகொண்டிருப்பதைத் தான், சொல்கிற கருத்துக்களில் இருக்கும் ஒட்டையைச் சுட்டிக் காட்டத் தான் இதை எழுத விரும்பினேன். சில விஷயங்களைத் தங்களுடைய அனுபவங்கள் அடிப்படையிலேயே கண்டுகொள்ள முடியும். பொதுமைப் படுத்தவோ, ஆவணப்படுத்தவோ முடியாது.

என்னுடைய வாழ்க்கை அனுபவங்களே என்னுடைய நம்பிக்கைகளைத் தீர்மானிக்கின்றன, விவாதங்களில், பிரசார இயக்கங்களில் அல்ல!

20 comments:

 1. //ஒப்புதலுக்கு பின்னர் உங்கள் கருத்துரை காண்பிக்கப்படும்.//

  eppadi ellaam vaiththukku vivaathaththukku alaikkalaamaa sir...

  ReplyDelete
 2. appo naan poittu vaaran appuram vanthu paarkkiren....

  ReplyDelete
 3. மாற்றுக் கருத்துக்களை மதிக்கிறேன், அதே நேரம் விவாதம் திசை திரும்பிவிடாமல் இருக்கவும், கண்ணியமான முறையில் நடக்கவும் மட்டுறுத்தல் அவசியமாகிறது.

  ReplyDelete
 4. //என்னுடைய வாழ்க்கை அனுபவங்களே என்னுடைய நம்பிக்கைகளைத் தீர்மானிக்கின்றன, விவாதங்களில், பிரசார இயக்கங்களில் அல்ல!//

  எல்லோருக்கும் அப்படியா????

  ReplyDelete
 5. எல்லோருக்கும் தான்! இதில் என்ன சந்தேகம்?

  இதை என்னிடம் கேட்பதற்கு பதிலாக உங்களுடைய வாழ்க்கை அனுவவங்கள் என்ன தீர்மானிக்கின்றன என்பதைப் பார்த்தாலே போதுமே! கவியரசர் கண்ணதாசன் மிக அழகாக இந்த உண்மையைச் சொல்லியிருக்கிறாரே!

  http://consenttobenothing.blogspot.com/2009/06/blog-post_24.html

  இங்கே படிக்கலாம்!

  ReplyDelete
 6. //அப்பாவி முரு said...
  August 10, 2009 7:44 AM
  //என்னுடைய வாழ்க்கை அனுபவங்களே என்னுடைய நம்பிக்கைகளைத் தீர்மானிக்கின்றன, விவாதங்களில், பிரசார இயக்கங்களில் அல்ல!//

  எல்லோருக்கும் அப்படியா????

  கிருஷ்ணமூர்த்தி said...
  August 10, 2009 8:22 AM
  எல்லோருக்கும் தான்! இதில் என்ன சந்தேகம்?//

  எல்லாருக்கும் அப்படியா?

  தனக்கென்றால் அனுபத்தில் கற்றுக்கொள்ளலாம், என் பிள்ளைக்கென்றால்?

  நன்மைகளையும், தீமைகளையும் நீயே அனுபத்தில் கற்றுக்கொள் என அனுப்ப முடியுமா?

  அனுப்புவீர்களா?

  ReplyDelete
 7. பிள்ளையானாலும், வேறு எவரானாலும், சொல்லத் தான் செய்யலாம். அது ஒரு புறம். அவனவன் பசிக்கு அவனவனே தான் சாப்பிட்டாக வேண்டும். கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்!

  ReplyDelete
 8. பெரும்பாலான விசயங்கள் அடுத்தவர் சொல்லிக்கொடுத்தவை தான் என் வாழ்க்கையில் பின்னர் அனுபவமாகும்.

  எல்லாவற்றையும் அனுபத்தில் மட்டும் கற்றுக்கொள்ள முடியாது என்பது மட்டும் தான் எனது வாதம்.

  ReplyDelete
 9. அனுபவம் என்பது என்ன?

  உங்களுக்கு ஒருவர் சாப்பாடு போட்டிருக்கலாம். உண்டு செரிப்பது யார் செய்கிறார்கள்?
  அனுபவம் என்பது என்ன என்பதைக் கவியரசர் பாடலில், மேலே கொடுத்திருக்கிற சுட்டியில் படித்து விட்டு அப்புறம் இந்த விவாதத்தைத் தொடரலாம்.

  ReplyDelete
 10. எகிப்து நாகரீகம் கண்முன்னே இருக்கும் ஆதாரம், மற்ற நாகரீகங்களின் வரலாறு நமக்கு அறிவதற்கு போதுமான சான்றுகள் இல்லை!

  கடஉள் என்ற ஒன்று குழுதலைவனை வழிபடுவதன் மூலமே உருவாகியிருக்க முடியும் என்பது என் கருத்து!

  இந்திய வரலாறு என நாம் நம்பிகொண்டிபது பெரும்பாலும் புனைவுகளாகத்தான் இருக்கின்றது.
  அந்நிய படையெடுப்புக்கு பின்னரே கொஞ்ச நஞ்ச வரலாறும் நாம் அறிகிறோம்!

  ஆக இந்து மதத்தின் பிறப்பிடம் எது என்பதற்கும் சரியான ஆதாரங்கள் இல்லை! கடவுள் என்பது குழுக்கலாக வாழ்ந்த மக்கள் தனக்கு தேவையான வடிவில் சட்ட திட்டங்களும் உருவாக்கப்பட்டதற்ககு ஆதாரமே உலகம் முழுவது பரவி கிடக்கும் பல்வேறு மதங்கள்!

  சாமியாடுதல் ஒருவகையான மன அழுத்தத்தால் ஏற்ப்படுவது என நம்பாதவர்களுக்கு நாத்திகர்கள் மனநோயாளிகள் தான்!
  வேறென்ன நான் சொல்ல!

  ReplyDelete
 11. கருத்துக்கு நன்றி திரு அருண்,
  போதுமான சான்றுகள் என்றால், "எவ்வளவு போதுமானது?"---மும்பை தாக்குதலுக்கு இந்திய அரசு அடுத்தடுத்து அளித்து வரும் சான்றுகள் போதாது, போதாது என்றே அடம் பிடிக்கும் பாகிஸ்தான் அரசு அளவுக்கா?

  கிடைத்திருக்கிற தடையங்களை வைத்து, ரேகோன்ச்ற்றுச்ட் பண்ணப் படுபவை தான் வரலாறு. இந்திய வரலாற்றை ஏற்கெனெவே நிறையப்பேர் ஒரு வழி பண்ணி வைத்திருக்கிறார்கள் என்பது, இன்னொரு சுவாரசியமான விஷயம்! ஆனாலும், இந்த அரைகுறைத் தடையாங்களும் கூட, சில அடிப்படையான விஷயங்களைச் சொல்கின்றன.இந்திய வரலாறு, பண்பாடு, கலாசாரம் என்பவை பற்றிப் பேசும் போது இவை மறுக்க முடியாதவையாகவும் இருக்கின்றன.

  அடுத்து, குழுத்தலைவனையே கடவுளாக்கி இருப்பதாக நீங்கள் சொல்வது, வெறும் ஊகம். இங்கே சிறுதெய்வ வழிபாடு, நாட்டார் வரலாறு, கிராம தேவதை வழிபாடு என்ற வடிவில் தனியாக இருக்கின்றன.

  அன்னியப் படையெடுப்புக்குப் பிறகுதான் நம்முடைய வரலாற்றை கொஞ்சநஞ்சம் அறிகிறோம் என்று நீங்கள் சொல்வதும் தவறானது. அவர்கள் அழித்தும், திரித்தும் வைத்த வரலாறு கூட, நீங்கள் சொல்வதற்கு ஒத்துவரவில்லையே!

  இந்து மதம் என்று நீங்கள் ஒட்டுமொத்தமாக ஒரே வார்த்தையில் குறிப்பிடுவது, இந்தியத் தத்துவ ஞான மரபின் பல்வேறு கூறுகள், பலகுரல்கள், பலவிதமான கருத்துக்களை உள்ளடக்கியது.

  சாமியாடுவதை நரம்புக்கோளாறு என்பதை விட செட் அப் சமாசாரம் என்றே நான் சொல்லுவேன். எல் ஆர் ஈஸ்வரி மேடைக் கச்சேரிகளில் அந்தம்மா 'அம்மனோ சாமியோ அத்தையோ மாமியோ' என்று பாடும்போது சாமியாடுவதற்கென்றே சில பெண்மணிகள் இருப்பதையும் பார்த்திருக்கிறேன். அதைவிடக் கொடுமை, அந்தம்மாவே சாமி வந்த மாதிரி, ஆடிக்கொண்டே பாடுவது தான்!

  இப்படிச் சிலபேர் இருப்பதினாலேயே ஒட்டுமொத்தமாக ஒரு முடிவு செய்வதைத் தான் நான் மறுக்கிறேன். போலிகள் ஆயிரம் இருக்கலாம். ஒரிஜினலும் உண்டு என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத் தான் இத்தனை நீளமான பதில்.

  ReplyDelete
 12. /கிடைத்திருக்கிற தடையங்களை வைத்து, reconstruct பண்ணப் படுபவை தான் வரலாறு./

  இரண்டாவது பத்தியில் ஒரு வார்த்தை தவறாக இருப்பதை இப்படித் திருத்திப் படிக்கவும்.

  ReplyDelete
 13. கடவுள் இருந்தால் சந்தோஷமே ..... என் நண்பர்களின் நம்பிக்கை வெற்றி பெறுமே.


  கடவுள் இல்லாவிட்டால் கஷ்டமே ..... நண்பர்களின் நம்பிக்கை பொய் என்று ஆகி விடுமே.....

  ReplyDelete
 14. பட்டி மன்றம் என்றால் இரண்டு சிறந்த கருத்துகளில் எது சிறந்தது என்று ஆராய்வது...... அப்படி ஆராய்ந்து எது வாழ்க்கைக்கு மிகவும் தேவையானது என்று பார்ப்பது தான் பட்டிமன்றம் .......


  ஒரு கருத்தை மறுத்து பேசுவது என்பது பட்டி மன்றம் அல்ல .... அது விவாதம்...


  இங்கே நடப்பது பட்டிமன்றமா ??? விவாதமா ????

  சொன்னால் நல்ல இருக்கும் பாஸ்

  ReplyDelete
 15. இப்போது நடக்கும் பட்டிமன்றங்களில், எத்தனை சிறந்த கருத்துக்களைச் சொல்லி, அதில் எது உயர்ந்தது முடிவுசெய்ததைப் பார்த்திருக்கிறீர்கள்?

  இப்போது நடப்பவற்றைவிட சாரு-ஜெமோ நடத்தும் இலக்கியத்தரமான சண்டையே தேவலை என்ற கருத்தையும் ஏற்கெனெவே சொல்லியிருக்கிறேனே:-)

  அப்புறம் அது என்ன கமல் ஹாசன் மாதிரி,
  "நா எங்க இல்லேன்னு சொன்னேன்? இருந்தா நல்லாயிருக்குமேன்னுதான்...."
  இப்படியும் இல்லாத அப்படியும் அல்லாத மாதிரி வழ வழா..கொழ கொழா!

  சொல்லிட்டேன் பாஸ்! அது என்ன 1970 களில் வந்த திரைப்படங்களில் வருகிறமாதிரி, பாஸ்னு!
  வில்லனை அழைக்கிற மாதிரியே இல்லை?

  ReplyDelete
 16. அது நான் பிறர் கருத்தை மதிக்கிறேன் சகா ....

  நான் எப்பவுமே கடவுள் இல்லை என்ற கோஷ்டி தான்

  ReplyDelete
 17. அதானே எதிர் கருது உடைய ஒருவன் உங்களின் கருத்துக்கு மதிப்பு தந்தால் புரிந்து கொள்ள மாட்டிங்க போல் இருக்கே

  ReplyDelete
 18. அப்படி நேரடியாகச் சொல்லியிருந்தால், இன்னும் அழகாக இருந்திருக்குமே!

  பட்டுக்கோட்டையார் பாட்டு ஒன்றில் 'கடவுள் இருப்பதென்பதும் இல்லையென்பதும் கவைக்கு உதவாத வெறும் பேச்சு" என்று சொல்வார்.

  "இந்தத் திண்ணைப் பேச்சு வீரர்களிடம் ஒரு கண்ணாயிருக்கணும் அண்ணாச்சி--நாம ஒண்ணா இருக்கணும் அண்ணாச்சி!" என்று ஆரம்பமாகும் இந்த வரிகளோடு பொருத்திப் பார்த்தால், எது உடனடி கவனத்திற்கு அவசியமானது என்பது தெரியும்!

  ReplyDelete
 19. "இந்தத் திண்ணைப் பேச்சு வீரர்களிடம் ஒரு கண்ணாயிருக்கணும் அண்ணாச்சி--நாம ஒண்ணா இருக்கணும் அண்ணாச்சி!" என்று ஆரம்பமாகும் இந்த வரிகளோடு பொருத்திப் பார்த்தால், எது உடனடி கவனத்திற்கு அவசியமானது என்பது தெரியும்!"


  o.... neenga appadi varingala!!!

  ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!