"ரொம்ப போரடிக்கிறது!"--என்ன செய்யலாம்?


வாழ்வின் பலதருணங்களில், ஒரு விதமான வெறுமையை, செயலேதும் இல்லாத அலட்சியமான, எதைப்பற்றியும் அக்கறை கொள்ளாத வெற்றுத் தருணங்களை, சில நிமிடங்களோ சிலநேரங்களில் கூடுதலாகவோ அனுவவத்தில் பார்த்திருப்போம்.

சிம்பிளாகச் சொல்வதென்றால், "ரொம்ப போரடிக்கிறது!" அப்போது என்ன செய்கிறோம்?

உடனே, அதிலிருந்து விடுபடுவதற்காக, வேறுபக்கம் கவனம் செலுத்த, நேரத்தைக் கடத்துவதற்காக வேறு ஏதோ ஒரு முட்டாள்தனத்தைக் கண்டுபிடிப்போம். இது ஒரு பொதுவான உண்மை. நாம் எல்லோருமே, இளைஞரிலிருந்து முதியவர் வரை, பெரும்பாலான நேரத்தை சுவாரசியத்தை இழந்துவிடக்கூடாதே என்பதிலேயே செலவழிக்கிறோம். வெறுமையில், எதிலும் ஈடுபாடே இல்லாமல், அலட்சியமாக இருப்பது நமக்குப் பிடிப்பதே இல்லை, உடனே என்ன செய்கிறோம்?

கவனித்துப் பார்த்தால், நமக்கே சிரிப்பு வரும், இன்னும் கூர்ந்து பார்த்தால் அழுகையே வரும்!

வெறுமையிலிருந்து, போரடிப்பதில் இருந்துதப்பிப்பதற்காக, முட்டாள்தனமாக நடக்க ஆரம்பிக்கிறோம். பொழுதைப் பயனுள்ளதாக ஆக்க வேறு வழியே இல்லையா என்றால், இருக்கிறது, மிகச் சிறந்த வழி இருக்கிறது--நினைவுபடுத்திக் கொள்வது!

இப்படிப் பட்ட சூழ்நிலையை எப்படி எதிர்கொள்வது என்பதைப் பற்றி ஸ்ரீ அரவிந்த அன்னை சொல்கிறார்:

"இப்படிக் கொஞ்சம் நேரம் கிடைக்கும் போது, அது சிலநிமிடங்களோ, சில மணி நேரமோ,உனக்குள்ளேயே சொல்லிக் கொள்: " ஒருமுகப்படுத்திக் கொள்ளவும், ஒன்று சேர்த்துக் கொள்ளவும், என்னுடைய வாழ்க்கையின் பொருளை வாழ்ந்து பார்ப்பதிலும், உண்மையும் பரம சத்தியமாகவும் இருக்கும் ஒன்றிடம் என்னை சமர்ப்பிப்பதற்கும், ஒரு வழியாக எனக்குக் கொஞ்சம் நேரம் கிடைத்திருக்கிறது."

இந்தப்படிக்கே ஒவ்வொரு தரமும் கவனமாகச்செய்து கொண்டு போனால், வெளிச் சூழ்நிலைகளினால் துன்புறுத்தப் படாமல் இருப்பதையும், ஆன்மீகப் பயணத்தில் வெகு சீக்கிரமாக முன்னேறிக் கொண்டிருப்பதையும் காண்பாய்.

அர்த்தமற்ற அரட்டையில் நேரத்தை வீணடிக்காமலும், பயனற்றவைகளை செய்து கொண்டிருக்காமலும், உணர்வின் விழிப்பைத் தாழ்த்துகிற எதையும் படிக்காமலும், ஒவ்வொரு சமயத்திலும் சிறந்ததையே தேர்ந்தெடு. இதைவிட, இன்னமும் மோசமான முட்டாள்தனங்களைப் பற்றி நான் இப்போது பேசவில்லை. வீணனாகப் போவதற்கு முயற்சிக்காமல், நேரத்தைச் சம்பாதிக்கப் பழகு. ஏற்கெனெவே அது குறைவாகத் தான் இருக்கிறது, அதிலும் முக்கால் பங்கைக் கிடைத்த வாய்ப்புக்களை தவற விட்டு விட்டோமே என்று கடைசி நேரத்தில் உணர்ந்து, விட்டதையும் சேர்த்துப் பிடிக்கிறேன் என்று பதறாதே. அதனால் ஒரு பயனுமில்லை. அது அப்படி நடப்பதில்லை.

மிதமாக , சம நிலையுடன் கூடி, பொறுமையாக , அமைதியாக, உனக்குக் கொடுக்கப் பட்டிருக்கிற வாய்ப்பு எதையும் தவற விடாமல் இருப்பதற்கு, உனக்குக் கிடைக்கும் "வெற்று தருணங்களை" பயன்படுத்திக் கொள்வது மிகவும் நல்லது.

வேறெதுவும் செய்வதற்கு இல்லாத வெறுமையான தருணங்களில், உன்னுடைய அமைதியை இழக்கிறாய், அங்குமிங்கும் சுற்றி அலைகிறாய், நண்பர்களைத் தேடுகிறாய், நடைபழகுகிறாய். நல்ல விஷயங்களை மட்டுமே பேசுவது என்பதால், என்னென்ன செய்யக் கூடாது என்பதை நான் இங்கே குறிப்பிடவில்லை. அதற்குப் பதிலாக, வானமோ, கடலோ, மர நிழலோ எதுவானாலும், அமைதியாக உட்கார்....ஏன் வாழ்கிறேன் என்பதைப் புரிந்து கொள்ளுதல், எப்படி வாழ வேண்டும் என்பதைக் கற்றுக் கொள்ளுதல், என்ன செய்ய வேண்டும் என்று ஆசை இருக்கிறது, அதற்கு என்னென்ன செய்ய வேண்டும், அறியாமை, பொய்மை, துயரங்களின் நடுவே வாழ்வதில் இருந்து விடுபடுவது எப்படி....இந்த மாதிரி பயனுள்ள ஏதாவது ஒன்றை அறிய முயற்சி செய்!"

ஸ்ரீ அரவிந்த அன்னை, அன்னையின் நூற்றாண்டுத் திரட்டு, தொகுதி 3, பக்கம் 250-251 இல உள்ளதைத் தழுவியது.

முழுமையான மொழிபெயர்ப்பு அல்ல, எனக்குத் தெரிந்த வரை, புரிந்தவரை தமிழில் சொல்லப் பட்டது.

2 comments:

 1. //உண்மையும் பரம சத்தியமாகவும் இருக்கும் ஒன்றிடம் என்னை சமர்ப்பிப்பதற்கும், ஒரு வழியாக எனக்குக் கொஞ்சம் நேரம் கிடைத்திருக்கிறது //

  மிகவும் பொருள் பொதிந்த சத்தியம். அதை உணர்வதற்கான விவேகம் அவனருளாலேதான் கிடைக்கும்.

  சிந்திக்க வேண்டிய அன்னையின் கருத்துகளை எடுத்துக் காட்டியதற்கு நன்றி

  ReplyDelete
 2. ஒரு சராசரி மனிதனாக இருந்து, இதைஉணர்வதும் , கடைப்பிடிப்பதும் எவ்வளவு கடினமான காரியம் என்பதை சொந்த அனுபவத்திலேயே, அதுவும் கடந்த சில நாட்களிலேயே கண்டுகொண்டேன்.

  "அப்போதைக்கிப்போதே சொல்லி வைத்தேன்" என்று ஆழ்வார்கள் சொன்னது ஏன் என்றும் தெரிய வர ஆரம்பித்திருக்கிறது!

  வருகைக்கும், என்னுடைய இப்போதைய மனநிலையை எனக்கே காட்டி அருளியதற்கும் மிகவும் நன்றி!

  ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!