கேள்வி பிறந்தது அன்று! நல்ல பதிலும் கிடைத்தது இன்று!
கவியரசர் கண்ணதாசனின் இந்தத் திரைப்படப் பாடல் வரிகள் நினைவில் இழையோட, இது தொடர்பாக முந்தி எழுதிய பதிவொன்றைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டிருந்தேன்.
கேள்வி என்னவாக வேண்டுமானாலும் இருந்து விட்டுப் போகட்டும்,
"இங்கேயே, இப்போதே கூட விடை கிடைத்து விடலாம்! அது நாம் எவ்வளவு நம்பிக்கையோடும், ஆர்வத்தோடும் தேடுகிறோம் என்பதைப் பொறுத்தது மட்டுமே."
இறைவனது அருள், நாம் அறியாமலேயே, நம்மை ஒரு பேரருள் திட்டத்தின் படி நடத்திக் கொண்டே இருக்கிறது. நம்முடைய சம்மதம், அல்லது மறுப்பு எதுவானாலும் சரி, சூத்திரதாரியாக இருந்து நம்மை வழிநடத்திச் செல்லும் நாயகன் ஒருவன், நமக்கு உள்ளேயும், வெளியேயும் இருந்து நடத்திக் கொண்டே இருக்கிறான்.
"எங்கேயடா இருக்கிறான் உன் ஹரி?" என்று உறுமுகிறான் இரணியன்.
"எங்கே இல்லை ஹரி? அவன் தூணிலும் இருப்பான், துரும்பிலும் இருப்பான், இல்லை, இல்லை என்று நீங்கள் மறுத்துச் சொல்லிக் கொண்டே இருக்கிறீர்களே, அந்தச் சொல்லிலும் இருப்பான்" என்கிறது குழந்தை பிரகலாதன்.
கதை சொல்லிகள், சுவாரசியத்திற்காக இப்படிச் சொல்கிறார்கள். பிரகலாதன், தூணில் இருக்கிறான் என்று சொல்லிவிட்டானே, எந்தத் தூண் என்று கூடச் சொல்லத் தெரியவில்லையே, அதனால் அங்கிருந்த எல்லாத் தூண்களிலும் எம்பெருமான் நிறைந்திருந்தானாம். அதில் ஒரு தூணை இரணியன் எட்டி உதைக்க, தூண் பிளந்து அங்கே சிங்கப் பிரானாய் எழுந்து அவனை முடித்தான். அங்கே எம்பிரான் எல்லாத் தூண்களிலும் எழுந்தருளினான் என்றது, கதை கேட்பவர்களுக்கு சுவாரசியமாக இருக்க வேண்டும் என்பதற்காக மட்டுமே. எல்லாத் தூண்களிலும், துரும்பிலும், அவனை இல்லை, இல்லை, என்று மறுத்துச் சொன்ன நாத்திக வார்த்தைகளிலும் அவன் அப்போது மட்டுமல்ல, எப்போதுமே இருக்கிறான்.
கதை சொல்லி, அதற்குள் ஒரு கருத்தையும் வைத்துச் சிந்திக்க வைக்கலாம் என்று தான் நம்முடைய முன்னவர்கள், நிறையச் சொல்லிப் போயிருக்கிறார்கள். கதையை உல்டா அடிக்கக் கற்றுக் கொண்ட அளவுக்கு, உள்ளேயிருக்கும் கருத்தைத்தெரிந்து கொள்ள சோம்பல் கொள்ளும் ஒரு தலைமுறை பின்னால் உருவாகும் என்று அவர்கள் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்!!
கேள்வி பிறந்தது அன்று! நல்ல பதிலும் கிடைத்தது இன்று!
நீங்கள் ஒரு குறிப்பிட்ட சூழலில், இருக்கிறீர்கள்; சில சம்பவங்கள் நிகழ்கின்றன. பெரும்பாலும் நீங்கள் ஆசைப்பட்டதற்கு நேர்மாறாக, அல்லது இப்படி நடந்தால் நன்றாக இருக்கும் என்று நீங்கள் நினைப்பதற்கு மாறாகத் தான் நடக்கும்.அப்படி நடக்கும்போது நினைத்தபடி நடக்கவில்லையே என்று ரொம்ப ஃபீல் பண்ணி, "இது மட்டும் இப்படி நடந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும், இது மட்டும் அல்லது அது மட்டும் இப்படி இருந்திருந்தால்......." என்று வருத்தப் படுவோமா, இல்லையா?
நாட்கள்,வருடங்கள் ஓடும். நிகழ்வுகளில் மறைத்து வைத்திருந்ததது, மலர்ந்து வெளிப்பட ஆரம்பிக்கும். அனுபவம் உங்களைக் கொஞ்சம் முன்னேறச் செய்திருக்கும், இன்னும் அதிகமான விழிப்புணர்வுடன் இருப்பீர்கள், புரிந்து கொள்வதென்பது எளிதாக இருக்கும். திரும்பிப் பார்க்கிற போது, கவனித்துப் பார்த்தீர்களேயானால், முதலில் ஆச்சரியமாக இருக்கும், அப்புறம் சிரிப்புக் கூட வரும்! ஆரம்பத்தில்,எவையெல்லாம் மிக மோசமான அனுவவம் என்றும், சாதகமற்றதாகவும் தோன்றியதோ, அவைகளே பின்னால் திரும்பிப் பார்க்கையில், உண்மையில் நீங்கள் முன்னேறுவதற்குத் தேவைப்பட்டதாகவும், சிறந்ததாகவும் தெரிய வரும்போது சிரிப்பு வராமல் என்ன செய்யும்?
"உண்மையிலேயே, இறைவனது கருணை எல்லையற்றது" என்பதையறிந்து நன்றிசொல்லவும் தயங்க மாட்டீர்கள்!
கண்ணை நம்பாதே! உன்னை ஏமாற்றும்!
அறிந்ததென நினைப்பதையும் நம்பாதே, அதுவும் ஏமாற்றும்!
இப்படி வாழ்க்கையில் பல முறை நடந்து அதைத் திரும்பிப்பார்க்கவும் செய்கிற தருணங்களில் தான், மனிதன் கண்மூடித்தனமாகவே இருந்த போதிலும், அறிவோடு செய்வது கூடக் கண்ணைக் கட்டுகிறமாதிரி இருக்கும்போதிலும் கூட, இறைவனது கருணை தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டே இருக்கிறது.
எது எந்த நேரத்தில் எப்படி நடக்க வேண்டுமோ, அது உலகத்தில் அந்தந்தச் சூழலுக்கேற்றபடி நடந்துகொண்டுதான் இருக்கிறது. இதைத் தான், "ஒவ்வொரு உண்மையும், அது வெளிப்படுவதற்கான தருணத்தை எதிர்நோக்கியிருக்கிறது" என்று சொல்கிறோம். உண்மை எப்போதும் இருந்துகொண்டுதான் இருக்கிறது, அதை நாம்கண்டு கொள்வதற்கு எடுத்துக் கொள்ளும் நேரத்தைத் தான் உண்மை வெளிப்படுவதற்கான நேரம் என்று சொல்கிறோம்.
ஏனென்றால், நம்முடைய பார்வை மிகக் குறுகியதாய் இருந்தது. நம்முடைய ஆசைகள், விருப்பு-வெறுப்புக்கள் பார்வையை மறைத்து விடும் போது, உண்மையை, உள்ளது உள்ளபடிக்கே பகுத்து அறிய முடியாது.
ஆப்பிள் பழுத்துக் காலங்காலமாகக் கீழே உதிர்ந்து கொண்டு தான் இருந்தன. ஏன் அப்படி கீழேயே விழ வேண்டும், இந்தப் பக்கமாகவோ, அந்தப் பக்கமாகவோ, இல்லை மேல்நோக்கியோ போகவில்லை என்பதில் எவரும் அக்கறை எடுத்துக் கொள்ளவில்லை, ஐசக் நியூடன் வந்து அதைக் கவனித்துச் சொல்கிற வரை! ஆப்பிள் கீழே விழுவதற்கு புவியீர்ப்பு விசை தான் காரணம் என்கிற உண்மை வெளிப்படவும், ஒரு கால நேரம் வரவேண்டியிருந்தது.
ஒரு அதிசய நிலைக்குள் நுழைகிறோம் !
இப்படிக் கவனிக்கத் தொடங்கும்போதே, விவரிக்க ஒண்ணாத ஒரு அதிசய நிலைக்குள் நுழைகிறோம். வெளியே தெரிகிற தோற்றங்களுக்குப் பின்னால், இறைவனது கருணையை அறிந்துகொள்ளத் தலைப்படும்போது, முடிவில்லாததாய், எல்லா வல்லமையும் படைத்ததாய், எல்லாம் அறிந்ததாய், அனைத்தையும் திட்டமிட்டு, ஒழுங்குபடுத்தி, நம்மை வழி நடத்த்துவதாய் உணர்கிறோம்!
நாம் விரும்பினாலும் சரி, விரும்பாவிட்டாலும் சரி, நமக்குத் தெரிந்திருந்தாலும், இல்லையென்றாலும், ஒரு உன்னதமான லட்சியத்தை நோக்கி, இறைவனது கருணை நம்மை வழிநடத்திக் கொண்டே இருக்கிறது. இறை அருள் திறத்தையும், இறைவனோடு சேர்வதையும் அறியும் திறமே அது! இறைவனை அடைவதென்பதே அது!
அதற்கடுத்த நிலையில், ஒவ்வொரு செயலிலும் அசைவிலும் இறைவனது கருணையை உணர்வதாய், அற்புதமான வலிமையுடன், அதே நேரம் முழுமையானதும், அமைதியானதுமான எதனாலும் அசைக்க முடியாத நம்பிக்கையுடன் கூடிய ஒரு ஆனந்த மயமான வாழ்க்கையைத் தொடருகிறோம்.
எந்த அளவுக்கு முழுமையான ஏற்புத் திறனுடன், முழுமையான ஈடுபாட்டுடன் ஒருவர் இருக்கிறாரோ, அந்த அளவுக்கு தெய்வீகச் செயலுக்கு எதிரான பூமியின் எதிர்ப்புத் தன்மை மறைந்து விடுகிறது. இதுவே தெய்வ சித்தத்தோடு நாம் ஏற்படுத்திக் கொள்ள முடிகிற கூட்டு.
அப்படிப்பட்ட நிலையில், இறைவன் என்ன செய்யக் கருதியிருக்கிறான் என்பதை அறிய முடியும்! அப்படிப்பட்ட விழிப்புணர்வில், அவனது சித்தத்தோடு இசைந்து செயல்படவும் முடியும்!
-ஸ்ரீ அரவிந்த அன்னையின் அமுத மொழிகள், அன்னை நூற்றாண்டு விழாத் திரட்டு, தொகுதி 8 பக்கம் 257-258 இலிருந்து -அடிப்படையாகக் கொண்டு எழுதியது. ஆங்கில மூலத்தைப் படிக்க இங்கே
“The Divine does not want a partial and passing victory. His victory must be total and everlasting - that is why we have to endure and wait for the proper time to come. However, with faith and confidence, even the endurance becomes easy.”
The Mother
White Roses, 6th Edition, 1999, page 141
No comments:
Post a Comment
ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!