ஜின்னாவுக்கு வந்த வாழ்வு! மவுசு!


இன்றைக்கு இந்தியன் எக்ஸ்ப்ரெஸ் பத்திரிகையில், சுதீந்த்ர குல்கர்னி என்பவர், ஜஸ்வந்த் சிங் பி ஜெ பி கட்சியில் இருந்து நீக்கப் பட்டிருப்பது, கட்சியை வெகு நாட்களுக்கு பிடித்து ஆட்டப் போகிறது என்ற ரீதியில் [கவிஞர் தாமரை மாதிரி சாபம்?!] எழுதியிருப்பதைப் படித்தேன்.

கதை சொல்வார்களே, வைத்தியனிடம் போய் ஒருத்தன், எனக்கு அது செய்கிறது இது செய்கிறது என்று சொன்னானாம். வைத்தியனும் நாடி பிடித்துப் பார்த்து விட்டு, ஒரு கஷாயத்தைக் கொடுத்தானாம். பத்தியம் என்ன என்று கேட்டதற்கு, வேறொன்றுமில்லை, மருந்து சாப்பிடும்போது குரங்கை நினைக்கக் கூடாது, அது மட்டும்தான் என்றானாம்.

மருந்து சாப்பிட ஆரம்பிக்கும் போதே, எதை நினைக்கக் கூடாது என்று வைத்தியன் சொன்னானோ, அதுவே தான் வந்து முன்னால், பின்னால், அங்கே இங்கே, என்று எங்குபார்த்தாலும் தெரிந்ததாம். வைத்தியனிடம் ஓடிப்போய், மருந்து சாப்பிட நினைக்கும் போதெல்லாம், எனக்கு முன்னால் குரங்கு வந்து ஆட ஆரம்பித்து விடுகிறது, அப்புறம் எப்படி நான் மருந்து சாப்பிடுவது, எப்போது வியாதி குணமாவது என்று அழாத குறையாகக் கேட்டானாம். வைத்தியன் சிரித்துக்கொண்டே சொன்னானாம், "உனக்கு வியாதி உடம்பில் இல்லை, மனதில் தான் இருக்கிறது, மனதை ஒழுங்காக வைத்துக் கொண்டாலே குரங்கு ஓடிப் போய் விடும்"

பி ஜெ பி கட்சியின் நிலைமை கூட அப்படித்தான், குரங்குப்பத்தியம் இருந்தவன் கதை மாதிரி இன்று அல்ல, ஆரம்பத்தில் இருந்தே இருந்து வருகிறது. அவர்களுக்குப் பாடம் சொல்லிகொடுத்த ஆர் எஸ் எஸ் வாத்திமார்களுக்கே அந்தக் கோளாறு இருப்பதால், அவர்களைப் பொறுத்த வரை இந்திய வரலாறு, பாபர், அக்பர் ,ஔரஙக ஸீப், மாலிக் காபுர், அவர்களோடேயே நின்று போய் விடுகிறது. இன்னமும் என்றோ படையெடுத்து வந்த முசல்மான் தான் பகைவனாகத் தெரிகிறான்!

அதற்கப்புறம் உள்ளே நுழைந்த வெள்ளையர்கள் சத்தமே இல்லாமல் இந்ததேசத்தைக் கூறுபோட்டுக் கொன்டிருந்ததை, அதன் மிச்ச சொச்சம் இன்னமும் தொடர்ந்து கொன்டிருப்பதை ஆர் எஸ் எஸ், அதனுடைய கண்ண‌சைவிலேயே ஆட்டுவிக்கப் படும் கட்சியும் இன்னமும் புரிந்து கொள்ள‌வில்லை. இதை ஏற்கெனெவே ஒரு பதிவில் எழுதியிருக்கிறேன்.முசல்மான்கள் இல்லையென்றால் பிரச்சினையும் இல்லை என்று ஆர் எஸ் எஸ் காரர்கள் நினைப்பது மாதிரியே இந்துத்வா இல்லையென்றால் பிரச்சினையே இல்லை என்று மற்றவர்கள் நினைக்கிற மாதிரி ஆகி விட்டது!

ஒரு நம்பிக்கையுள்ள ஹிந்துவாக இருப்பது வேறு! ஆர் எஸ் எஸ் பேசுகிற இந்துத்வா வேறு என்பது கூடப் புரியாமல், மதச்சார்பின்மை என்றால் ஹிந்துக்களை மட்டம் தட்டுவது, சிறுபான்மையினர் நலம் பேணுவது என்றால் பெரும்பான்மையினரைப் புற‌க்கணிப்பது, முற்போக்குச் சிந்தனை என்றால், வரலாற்றைத் திரித்துப் பேசுவது இப்படி எதிர் மறையான சிந்தனைகளையே வளர்க்கும் ஒரு சமூகம் எப்படி இருக்கும்?

ஜஸ்வந்த் சிங் எழுதியிருக்கும் புத்தகம் குஜராத் மாநிலத்தில் தடை செய்யப் பட்டிருக்கிற‌து. குஜராத்மாநிலத்தில் பிற‌ந்த வல்லபாய் படேல் புகழுக்குக் களங்கம் க‌ற்பிப்பது போல இரூக்கிறதாம்!

காங்கிரஸ் கட்சி பேச்சு சுதந்திரம் இதனால் தடைப் பட்டது போல‌ நீலிக் க‌ண்ணீர் வடித்திருக்கிறது! ஏதோ அவர்கள் கட்சியில் பேச்சு சுதந்திரம் இருப்பது போல, காமெடி செய்திருக்கிறார்கள்! சிறுபான்மையினர் மனம் புண்படுமே என்று இவர்களாகவே ஊகம்செய்து, சில புத்தகஙகளைத் தடை செய்த முட்டாள்தனம் சௌகரியமாக இப்போது மறந்து போய் விட்டது!

பி ஜெ பி கட்சியில், சிந்தன் பைடக் என்று, தேர்தலில் ஏன் தோற்றோம் என்று ஆராயப் போனவர்கள் கார‌ணங்களைக் க‌ண்டுபிடித்து விட்டார்கள்! மோடி, ஜெட்லி, வருண் காந்தி இவர்கள் மூவரும் பொறுப்பற்ற முறையில் பேசினது தானாம்! அங்கே, நடவடிக்கை இல்லை, இன்னமும் எவரும் படித்தே பார்க்காத புத்தகத்தை எழுதியதற்காக, கட்சியிலிருந்து நீக்கம்! ரொம்ப வினோதமான கட்சிகள்தான்!

குஜராத் மாநில காங்கிரஸ் தலைமை, தடை செய்ததை எதிர்ப்பதா, ஆதரிப்பதா என்று சுயமாக முடிவு செய்ய முடியாமலும், மேலிடத்தில் இருந்து சிக்னல் வராததால் என்ன செய்வது என்பதிலும் குழம்பிப்போயிருக்கிறது. ஜின்னாவுக்கு வந்த இந்த திடீர் மவுசு,வாழ்வில், இணையத்தில் சாரு-ஜெமோ சண்டையைப் பற்றிப் பதிவு போட்டால் ஹிட்ஸ் கூடும் என்று செண்டிமெண்ட் இருப்பது போல, ஜின்னாவைப் பற்றி 1961 இல எழுதிய கட்டுரையைத் தூசு தட்டி, ஹிந்து நாளிதழ் நேற்றைக்கு வெளியிட்டிருக்கிறது.. சரிந்துவரும் சர்குலேஷனை ஜின்னாவைப் பற்றி எழுதினாலாவது தூக்கி நிறுத்த முடியுமா என்று பார்ப்பது போல இருக்கிறது.

அதே நேரம்,கர்நாடக மாநிலத்தில் இந்தப் புத்தகத்தைத் தடை செய்யும் எண்ணம் இல்லை என்று முதலமைச்சர் எடியூரப்பா தெரிவித்திருக்கிறார். பாரதீய ஜனதாக் கட்சி, சிறிது காலம் ஆட்சியில் இருந்ததில் காங்கிரசைப் போலவே, இடத்துக்கு இடம், ஆளுக்கு ஆள் முடிவு சொல்கிற கலையைக் கற்றுக் கொண்டிருப்பது இதில் இருந்து நன்றாகப் புலனாகிறது. இதைக் கூடப் பொறுக்க முடியாத ஹிந்து நாளிதழ், சசி தரூர் பத்து வருடங்களுக்கு முன்னால் நேரு குடும்பத்தை விமரிசித்து எழுதிய் புத்தகத்தை, காங்கிரஸ் எவ்வளவு பெருந்தன்மையாக எடுத்துக் கொண்டிருக்கிறது, அவருக்கு மந்திரி பதவியும் கொடுத்திருக்கிறது என்பதைப் பெருமையோடு ஒப்பிட்டுப் பார்த்திருக்கிறது!

எல்லாம், ஈயத்தைப் பார்த்து பித்தளை இளிக்கிற‌ கதைதான்!

தினமணி ஆசிரியர் திரு. ஏ.என். சிவராமன் அவர்கள், எமெர்ஜென்சி காலத்தை ஒட்டி, கணக்கன் என்ற‌ புனைபெயரில் தேர்தல் சீர்திருத்தங்களைப் பற்றி, ஜனநாயக முறையில் வெவ்வேறு நாடுகளில் கடைப்பிடிக்கப் படும் தேர்தல் முறைகள், அதில் உள்ள‌ சாதக,பாதக‌ங்களைப் பற்றி, தொடர் கட்டுரைகளாக எழுதிவந்தது, பின்னால் தினமணி கதிர்வெளீயீடாகப் புத்தக வடிவிலும் வந்தது, இன்றைய சூழ்நிலையில் மிகவும் பொருத்தமாகவும், அவசியமாகவும் இருப்பதை நினைத்துப் பார்க்கிறேன்.

வெஸ்ட்மின்ஸ்டெர் மெதட் எனப்படும் பிரிடிஷ் பாராளுமன்ற தேர்தல்அமைப்பில் இருக்கும் மிகப் பெரிய குறையே, ஜெயித்தவன் தோற்றவனுடையதையும் சேர்த்து எடுத்துக் கொள்கிறான் என்பதுதான்.

இந்த முறையை மாற்றி, கட்சிகள் தனித் தனியாக வாங்குகிற வாக்குகளின் அடிப்படையில் தான் தேர்ந்தெடுக்கப் படுபவர்கள் எண்ணிக்கையை முடிவு செய்வது என்று வந்தாலொழிய, தேர்ந்தெடுக்கப் படுபவர்களுக்கு வயது உச்சவரம்பு, அறுபது அல்லது அறுபத்தைந்து தான் அதிகபட்சம் என்று வைத்துக் கொள்ளலாமே, ஒரே நபர் இரண்டு தடவைக்குமேல், மந்திரியாகவோ, அதற்கு உயர்ந்த பதவியிலோ இருக்க முடியாது என்று மாற்றிப் பார்த்தாலே, அரசியல் வியாதிகளை முழுவதுமாகத் தடுக்க முடியாது தான், தொற்றுநோயாகப் பெருகுவதையாவது தவிர்க்க முடியும்!

கல்லறைக்குள் போவது வரை இந்திய அரசியல்வாதிகள் ஒய்வு பெறுவதில்லைதான்!

அவர்களாக ஒதுங்கவில்லைஎன்றால்,கட்டாய ஒய்வு கொடுத்துப் பார்க்கிற ஒரு முயற்சியைச் செய்து தான் பார்ப்போமே!

என்ன சொல்கிறீர்கள்!

No comments:

Post a Comment

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!