தமிழ் மணமும், தமிழ் மரபு அறக்கட்டளையின் மரபுப் பெருநாளும்!

 படங்களின் மீது சொடுக்கினால் எளிதாகப் படிக்கலாம்!
இரண்டு முக்கியமான தருணங்களின் ஆண்டுவிழாக் கொண்டாட்டங்கள், இணையத்தில் வெகு ஜோராக நடந்து கொண்டிருக்கின்றன. ஒன்று தமிழின் முதல் வலைப்பதிவுத் திரட்டியான, "தமிழ்மணம்" ஐந்தாண்டுகளை சென்றஇருபத்துமூன்றாம் தேதி நிறைவு செய்து, ஆறாவது ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறது.

திரட்டி வகைகளில், தமிழில் முதல் முயற்சி என்பதோடு, இன்றைக்கும் நீடிக்கும் முயற்சி என்பதால் தமிழ் மணம் குழுவை, இந்தத் திரட்டியோடு எந்த வகையிலும் சம்பந்தப்படாதவன் என்றாலும், அன்புடன் வாழ்த்துகிறேன்!

தமிழ்மணத்தின் இன்றைய நிர்வாகக் குழுவில் எனக்குத் தெரிந்த ஒரே பெயர் முனைவர் நா.கணேசன் அவர்கள், என்னை அவர் அறியார். ஒரு வலைக்குழுமத்தில் தமிழார்வத்தோடு பங்கு கொண்ட நாட்களில் இவரது எழுத்துக்களையும், பகிர்ந்துகொண்ட விஷயங்களையும் படித்திருக்கிறேன். அவ்வளவுதான் நான் அவரை அறிந்தது. தமிழ்மணத்தை அறிந்த, அதன் நிர்வாகிகளுள் ஒருவரான முனைவர் நா. கணேசன் எழுதுகிறார்:

"‘தமிழ்மணம்’ திரு. காசி ஆறுமுகத்தால் உருவாக்கப் பட்டு இன்றுடன்
ஐந்தாண்டுகள் நிறைவாகி்ன்றன. இணைய மென்பொருள் தொழில் நுட்ப ரீதியில் தமிழ்மணம் தமிழுக்கு மட்டுமல்லாமல் வலைப்பதிவுலகிற்கே ஐந்தாண்டுகளுக்கு முன்பு ஒரு முக்கிய பங்களிப்பு. வலைப்பதிவுகளையும், மறுமொழிகளையும் திரட்டி வகைப்படுத்தி வாசகர்களுக்கு அளிப்பதில் தமிழ்மணம் தன்னால் இயன்றவரை முயற்சி செய்கிறது.

வரும் தமிழ் மீடியா இண்டர்நேசனல் குழுவினரும் இதை தன்னார்வத்தொண்டாகக் கருதி நேரத்தையும் பொருளையும் செலவழித்து வருகிறோம். ஏற்கனவே நாங்கள் சொல்லி வந்துள்ளது போல் தமிழ்ச்சமூகத்தின் அனைத்துத் தரப்பு மக்களும் தங்களுக்குள்ளே மாறுபட்ட கொள்கைகளும், நோக்கங்களும், செயல்பாடுகளூம் உடையவர்களாக இருந்தாலும் தங்களுடைய கருத்துக்களை சுதந்திரமாகப் பரிமாறிக்கொள்ளக் கூடிய தளமாக இருக்க வேண்டும் என்று தமிழ்மணம் கருதுகிறது. இந்த நோக்கத்தில் உறுதியாக இருந்து தொடர்ந்து செயல்படுவோம் என்று மீண்டும் உறுதியளிக்கிறோம். தொடர்ந்து புரிந்துணர்வுடன் எங்களுடன் ஒத்துழைத்து தமிழ் வலைப்பதிவுலகினைச் செழுமைப்படுத்தி வரும் லைப்பதிவர்களுக்கும், வாசகர்களுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றி."

--தமிழ்மணம் நிர்வாகம் தொடர்ந்து எழுதியது தான், வெள்ளத்தில் பிள்ளையார் செய்து, அதன் வயிற்றைக் கிள்ளியே நிவேதனம் செய்த கதையாக, கொஞ்சம் விசித்திரமாகவும் இருக்கிறது.
"இந்த திரட்டிச் சிட்டத்தை அமைத்த‌ பொள்ளாச்சி காசி ஆறுமுகம் இந்த வார விண்மீன்!"
தமிழ்மணம் திரட்டியைத் தனியொரு நபராக, நிரலெழுதி, முதல் இரண்டாண்டுகள் நிர்வகித்தவரை கௌரவிக்கிற முறை இன்னமும் கௌரவமாக இருந்திருக்கலாம்! இப்படி, தமிழ்நாடு அரசு வழங்குகிற விருது மாதிரி, எல்லோருமே "கலை மாமணி" தான் என்றமாதிரி இருந்திருக்க வேண்டாமே என்ற எண்ணம் எழுந்தது.
இணையத்தில் தமிழ்மணம் அளவுக்கு ஆரவாரம், தொடர்பதிவுகள் என்று இல்லாவிட்டாலும் , தமிழ் நாட்டில், சென்னையில் இன்று இருபத்தேழாம் தேதி தொடங்கி, வருகிற ஞாயிறு வரை தமிழ் மரபுப் பெருநாளாகக் கொண்டாடும் நிகழ்வுகள் நடந்துகொண்டிருக்கின்றன.

அவ்வை துரைசாமிப் பிள்ளையவர்களது பெயரன், முனைவர் அவ்வை கண்ணன் நடராசன், சத்தமே இல்லாமல், தமிழ்ப்பணியாற்றிவரும் தமிழ் மரபு அறக்கட்டளையின் எட்டாவது ஆண்டு நிறைந்து ஒன்பதாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தருணத்தைத் தமிழ் மரபுப் பெருநாளாகக் கொண்டாடலாமே என்ற தன் ஆசையை, மின்தமிழ் குழுமத்தில் சில நாட்களுக்கு முன்னாள் வெளியிட்டிருந்தார். 

கிட்டத்தட்ட எண்ணூறு உறுப்பினர்களைக் கொண்ட மின்தமிழ் வலைக் குழுமம், ஒருமித்த குரலோடு ஆசைகளுக்குச் செயல் வடிவம் கொடுக்கும் வேலையில் மும்முரமாக இயங்கி, இன்று தொடங்கி வருகிற ஞாயிறு வரையில் பல்வேறு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறது.

தமிழ் மரபு அறக்கட்டளையின் ஆண்டுவிழா குறித்த செய்திகளை


இங்கேமற்றும் இங்கே விரிவாகப் படிக்கலாம்!

தமிழ் மரபுக்கட்டளையின் நிறுவனர்களில் ஒருவரும், வலைத்தள நிர்வாகியுமான திருமதி சுபாஷினி தமிழ்மரபு அறக்கட்டளையைப் பற்றிச் சொல்வதை இங்கே சொடுக்கிக் கேட்கலாம். 


தமிழ் மணம் என்று ஒன்று உருவானதற்கு முன்னமேயே தமிழ் வலைக் குழுமங்கள், தமிழ் நெஞ்சங்களை ஒன்றிணைக்கும் பணியில், திரட்டுகிற உந்துசக்தியாக இன்றைக்கும் வலைக் குழுமங்கள் பங்காற்றிவருகின்றன.  

திரட்டிகளின் பணியை விட, மரபைப் பேணுகிற, பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கும் எடுத்துச் செல்கிற பணியை, ஆரவாரமேதும் இல்லாமலேயே, மூன்று தனி நபர்கள் முன்கையெடுத்து நடத்திக் கொண்டிருக்கிறார்கள். திருமதி சுபாஷினி, முனைவர் நா.கண்ணன், முனைவர் கல்யாணசுந்தரம் மூவரும் தங்களது நேரத்தையும், பொருளையும் செலவிட்டுக் கொண்டு அரும்பணி செய்து கொண்டிருக்கிறார்கள். அதிக விவரங்களை இங்கே பெறலாம்.
மூவருடன் வேறு பல நல்ல உள்ளங்களும் இணைந்தன.. 
நூறு ஆயிரம் என்று நினைத்து விடாதீர்கள்! இன்னமும் பத்துப் பன்னிரண்டு பேர்களைத் தாண்டவில்லை!  
அதனால் என்ன? ஆர்வம் இருந்தால் தனி நபர்களே இங்கே சரித்திரம் படைத்து விட முடியுமே!
தமிழில் கிடைக்கும் பழைய அறிவுச் செல்வங்களை, டிஜிடைசெஷன் என்ற கணினிமயமாக்கிச் சேமித்து வைக்கும் பணியை எந்த பாராட்டு, புகழ், எதையுமே எதிர்பாராமல், செய்துகொண்டிருக்கும் நல்ல உள்ளங்கள் எண்ணிக்கை, இன்னமும் கூடவேண்டும், மற்றைய குழுமங்களில் இருந்து கொஞ்சம் வித்தியாசமாக, இந்த மண் பயனுறவேண்டும் மரபுகள் பேணிக் காக்கப் படவேண்டும் என்ற ஒரே சிந்தையோடு செயல்படும் தமிழ் மரபு அறக்கட்டளைக்கு ஆண்டுவிழா!
30/08/2009, வருகிற ஞாயிறன்று, ஆண்டுவிழாவில், தமிழுக்குத் தொண்டாற்றி வரும் மூவருக்கு "மரபுச் செல்வர்" என்ற பட்டத்தை வழங்கிச் சிறப்பிக்க இருக்கிறார்கள்.

முதலாவதாக, எழுத்தாளர் கே ஆர் நரசையா 
 
அடுத்து, முனைவர் நா.கணேசன், அவர்கள் 
 
அடுத்து எழுத்தாளர் வி.திவாகர் அவர்கள் 
 
மரபுக்குப்பெருமை சேர்க்கும் விழாவை நடத்துகின்ற நல்ல உள்ளங்களை, வணங்குகிறேன்! மரபுச் செல்வர்களாக ஏற்கெனெவே இருந்தபோதிலும் கூட,விழா எடுத்து அடையாளம் காட்டப்படும் மூவருக்குமே மனமுவந்த வாழ்த்துக்களையும், வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
மரபை மதிக்கும் ஒவ்வொரு தமிழனும், தமிழை நேசிப்பவருமே செய்ய வேண்டியது மரபைப் பேணுவதுதான், இல்லையா!
தமிழ் வாழ்க! தமிழ் மரபு வாழ்க!  
அறக்கட்டளையின் முன்னோடிகள் வாழ்க!
மரபுச் செல்வர்களாக மகுடம் சூடும் நல்ல இதயங்கள் வாழ்க! வாழ்க!!

2 comments:

 1. அருமையான பதிவு

  ReplyDelete
 2. //30/08/2009, வருகிற ஞாயிறன்று, ஆண்டுவிழாவில், தமிழுக்குத் தொண்டாற்றி வரும் மூவருக்கு "மரபுச் செல்வர்" என்ற பட்டத்தை வழங்கிச் சிறப்பிக்க இருக்கிறார்கள்.
  முதலாவதாக, எழுத்தாளர் கே ஆர் நரசையா

  அடுத்து, முனைவர் நா.கணேசன், அவர்கள்

  அடுத்து எழுத்தாளர் வி.திவாகர் அவர்கள் //

  அனைவருக்கும் பாராட்டுகள்.

  எடுத்தி இயம்பிய உங்களுக்கு நன்றி !

  ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!