வால் பையன் என்கிற பதிவர் அருண் ராஜ்!

இந்தப் பக்கங்களில் வால் பையன் என்று கொஞ்சம் தேடினீர்களானால் ஏகப்பட்ட பதிவுகள், அவரைத் தொட்டு அல்லது அவருடைய பதிவுகளுக்கு பதில் சொல்கிற மாதிரியானவை அல்லது அவருடைய சரவெடி மாதிரி அடுத்தடுத்த பின்னூட்டங்கள் என்றிருந்த  பழைய நாட்களின்   நினைவுகள் இருக்கும். அந்தநாட்களில் மதுரை வலைப்பதிவர்கள் சந்திப்பு நடந்த போது வால் பையனைச் சந்திப்பதற்காகவே ஒரு கூட்டத்துக்குப் போனேன் என்று சொல்வதில்  இந்த இளைஞன் எப்படியோ என்னுடைய அபிமானத்துக்கு உரியவராக மாறிப்போன அதிசயம் இருக்கிறது. இத்தனைக்கும் அவருடைய வாழ்க்கைமுறை, அனுபவம், கருத்துக்கள் இப்படி எல்லாவற்றிலும் என்னிலிருந்து முற்றிலும் மாறுபட்டவர். ஒரு பத்து வருடங்களுக்கு முன்னால், தமிழ்ப் பதிவுலகத்தின் செல்லப் பிள்ளையாகவும் இருந்தவர்!


நேற்றிரவு காலமானார் என்பதை முகநூலில் இன்று காலை பார்த்தபோது என்ன சொல்வது என்று தெரியாமல் அப்படி ஒரு தவிப்பு! பதிவர் உண்மைத் தமிழன் முகநூலில் இப்படி உருகி அஞ்சலிப்பதிவு எழுதி இருக்கிறார்.

ன்புத் தம்பி.. வால் பையன் என்னும் வாலு..
இந்தப் பூலோகத்தில் சூரியனுக்கு கீழே இருக்கும் அனைத்தும் விமர்சனத்துக்குட்பட்டதுதான் என்று சொல்லி அத்தனை சப்ஜெக்ட்டுகளையும் பேசுவான்.
நாத்திகம், ஆத்திகத்தில் இருந்து கேலக்ஸிவரையிலும் தம்பி தொடாத விஷயமே கிடையாது. அனைத்தும் மேம்போக்காக இல்லை.. முழுவதும் படித்துவிட்டுத்தான் எடுத்து இயம்பியிருக்கிறான்.
நான் வலைத்தளம் புகுந்த சமயத்தில் அசுரனின் வலைப்பூ பக்கத்தில் நாத்திகம், ஆத்திகம், திராவிடம், ஈழம் பற்றி விலாவாரியாக கமெண்ட்டுகள் மூலம் பரிமாறிக் கொண்ட விஷயமெல்லாம் இன்றைக்கு எத்தனை நூலகங்களுக்கு படையெடுத்து புத்தகங்களைத் தேடியெடுத்து படித்தால்கூட கிடைக்காது. அப்படியொரு அறிவுத் தேடலைக் கொடுத்தது..
அத்தனையையும் பேசிவிட்டு தன்னுடைய உடல் நலனில் அக்கறையில்லாமல் வழக்கம்போல மது என்னும் அரக்கனின் துணை கொண்டு போதையுலகத்தில் வாழ்ந்த தம்பி..
அந்தச் சனியனையும் விட்ட தருணத்தில் குடும்பப் பிரச்சினை தலை தூக்கி தம்பியை முடக்கிப் போட.. அதையும் எதிர் நீச்சல் அடித்து எழுந்து வந்து "அண்ணே வந்துட்டண்ணே,,," என்ற குரலைக் கேட்டபோது மனதுக்கு அப்படியொரு சந்தோஷத்தைக் கொடுத்தது.
அவனது குழந்தைகள் பற்றி தினமும் அவன் போடும் அப்டேட்டுகள் அவனது சந்தோஷ வாழ்க்கையைச் சொல்லிக் கொண்டேயிருந்தது. அதுவும் பொறுக்கவில்லை அவன் நம்பிய இயற்கைக்கு..
இரண்டு நாட்களுக்கு முன்பாக "மீண்டும் பேச்சு வந்துவிட்டது.. இன்னும் ஒரு மாதத்தில் முழுமையாக வந்துவிடும்" என்றவனை இன்றைக்கு மாரடைப்பு என்ற எமன் வந்து அழைத்துச் சென்றுவிட்டானாம்..
இதற்குத்தான் அதிசயமாக இன்று காலை சீக்கிரமாக எழ வேண்டிய கட்டாயமா எனக்கு.. முகநூலைத் திறந்தவுடன் முதல் செய்தியே இந்தக் கொடுமைதான்..!
"இறந்தவர்களெல்லாம் பாக்கியவான்கள்" என்று பல முறை சொல்லியிருக்கிறேன். ஆனால் அது நடக்கும்போது மனம் கேட்க மறுக்கிறது. அவனது பிள்ளைகளை நினைக்கும்போது இயற்கையை ஏசத்தான் நினைக்கிறது மனம்.
தமிழ் வலையுலகம் மிகச் சிறப்பான ஒரு வலைப் பதிவரை இன்று இழந்திருக்கிறது. நாத்திக உலகம் மிகச் சிறப்பான ஒரு பரப்புரையாளரை இழந்துவிட்டது.. அறிவுத் தேடலில் ஒரு விரிவான விரிவுரையாளரை என் போன்ற மக்குகளும் இழந்துவிட்டோம்.
போய் வாடா தம்பி.. மீண்டும் உன் வீட்டில் நீயே வந்து பிறப்பாய்.. இப்போதைக்கு இளைப்பாறு..!
#ArunRaj #VaalPaiyan #Vaalu

என் செல்லப்பிள்ளையாகவும்  இருந்த இந்த இளைஞனுக்கு என்ன சொல்லி வழியனுப்புவது?
...................................... 
      

4 comments:

  1. நானும் காலை பார்த்து அதிர்ந்துதான் போனேன்.  மிகவும் வருத்தமான செய்தி.

    ReplyDelete
    Replies
    1. நாலைந்து வருடங்களுக்கு முன்வரை தொலைபேசியிலாவது பேசிக் கொண்டிருந்ததும் விடுபட்டுப் போய் யாரிடம் எப்படி என்ன விசாரிப்பது என்று தெரியாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறேன் ஸ்ரீராம்.

      Delete
  2. மிகவும் வருந்தத் தக்க நிகழ்வு. அவரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். கூடவே வந்து கொண்டிருந்தவர் திடீர் என்று விலகியது போல இருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. கொஞ்ச நாட்களே நேரடித் தொடர்பில் இருந்தாலும், தமிழில் வலைப்பதிவுகள் எழுதிக் கொண்டிருந்த அத்தனைபேரிடமும் ஒரு இணக்கமான உறவைக் கொண்டிருந்த ஒரு நல்ல மனிதர், பந்து! என்ன சொல்வது?

      Delete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!