26/11 மும்பை மீது தாக்குதல் நிகழ்ந்த 11 வது ஆண்டு!

போகும் திசை மறந்து போச்சு! இங்கே பொய்யே வேதமுன்னு ஆச்சு! இப்படி  இங்கே எழுதிக்கூட 10 வருஷம் ஆகிப்போச்சே நண்பர்களே!


 


மும்பை நகரத்தில் பாகிஸ்தானியத் தீவீரவாதிகள் நடத்திய தாக்குதல்கள் நடந்து ஓராண்டு நிறைவடைந்திருக்கிறது.

இதைத் தீவீரவாதிகளின் வெற்றி என்று சொல்வதை விட, பலவீனமான அரசியல் தலைவர்கள், எதற்கெடுத்தாலும் அடித்துக் கொள்வது என்பதைத் தவிர வேறு அஜெண்டா இல்லாத அரசியல் கட்சிகள், ஊழல்மயமான அரசு இயந்திரம், செயல் திறனற்றுப்போன உளவுத்துறை, செயல் பட முடியாத காவல்துறை, இப்படி, நம்மிடம் இருக்கும் பலவீனத்தையே மறுபடி மறுபடி வெளிச்சம் போட்டுக் காண்பிக்கிற மாதிரி இருப்பதை எவரும் இங்கு உணர்ந்ததாகத் தெரியவில்லை. ஏற்கெனெவே, இந்தப் பக்கங்களில், தலைமைப் பண்பு, சீனப் பெருமிதம், விமரிசனம் என்ற தலைப்புக்களில், நேரு, சாஸ்திரி இருவரது முடிவெடுக்கும் திறனைப் பற்றிக் கொஞ்சம் பேசியிருக்கிறோம்.


வெளியே எல்லாத் திசைகளிலும், இந்தியாவுடன் பகைமை பாராட்டும் நாடுகள், ஒவ்வொரு நாட்டிடமிருந்தும் தொடர்ந்து வரும் பிரச்சினைகள், அச்சுறுத்தல்கள் என்று ஒருபக்கம், உறுதியான அரசியல் முடிவுகளை எடுக்கத் தைரியமில்லாத, ஆண்மையற்ற அரசியல் தலைவர்கள், ஊழல் மயமாக இருப்பதில் மட்டுமே கவனம் செலுத்தும், முன்னெச்சரிக்கை என்றால் என்ன என்று கேட்கும் அரசு நிர்வாகம், காவல்துறை இத்தியாதிகள் இதெல்லாம் ஒருபுறம் என்றால், ஜனங்களுடைய அலட்சிய மனோபாவம், கையறுநிலை, அல்லது தட்டிக் கேட்க வேண்டிய நேரத்தில் தட்டிக் கேட்பதும், குட்ட வேண்டிய நேரத்தில் குட்டுவதும் நம் கைகளிலேயே இருக்கிறது என்பதை உணராத பொறுப்பற்ற தன்மையும் சேர்ந்து, இந்த மாபெரும் தேசத்தைத் தலை குனிய வைத்துக் கொண்டிருக்கிறது.


ம்முடைய முன்னுரிமைகள், அல்லது பிரதானமான கவனமெல்லாம் எங்கே இருக்கிறது?


இந்த ஒரு கேள்விக்கு, சரியான பதிலைக் கண்டு கொள்ள முடிந்தாலே, பிரச்சினை என்ன என்பதையும், அதற்குத் தீர்வு என்ன என்பதையும் நம்மால் புரிந்து கொள்ள முடியும். ஆனால் இங்கே என்ன நடந்து கொண்டிருக்கிறது?

ஆங்கில ஊடகங்களில் 26/11-மும்பை மீதான போர்! ஓராண்டு நிறைவு என்று கூவிக் கூவிப் பழைய செய்திகளை ஒட்டிக் கொண்டிருக்கிறார்கள். இந்தக் கூத்துக்களைப் பார்த்துத் தொலைய வேண்டியிருக்குமே என்பதற்காக, வழக்கமாகப் பார்க்கும் செய்தி சானல்களைக் கூட இன்றைக்குப் பார்க்க வேண்டாம் என்றே இருந்தேன்.

வெட்கம் கெட்ட மும்பை அரசும், அரசியல்வாதிகளும், மும்பை மீதான தாக்குதலில் உயிர்த் தியாகம் செய்தவர்களுக்கு அஞ்சலி செய்வதாக, வீதிகளில் அணிவகுப்பை நடத்தி, தங்களைப் புனிதர்களாக ஆக்கிக் கொள்ள முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள். அரசியல் ஆதாயம் ரொம்ப என்றால் ரத யாத்திரையும், கம்மி என்றால் அறிக்கைப் போரும், கேள்விகள் எழுப்புவது மட்டுமே என்று வழக்கமாக வைத்துக் கொண்டிருக்கும் அத்வானி பாராளுமன்றத்தில் மும்பைத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடும், நிவாரணமும் வழங்குவதில் அரசு மெத்தனமாக இருப்பதாகக் கவலை தெரிவித்திருக்கிறார்.

பழைய ஞாபகத்தில் ரத யாத்திரை என்றெல்லாம் கிளம்பிவிடாமல் ஏதோ கேள்வியோடு கவலையை முடித்துக் கொண்டாரே என்பதைப் பாராட்டக் கூட நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜிக்கு மனசு வரவில்லை. பதிலுக்குக் கோபத்தில் கடித்துக் குதறியிருக்கிறார்!

மும்பைத் தாக்குதல்களில் உயிரிழந்த, காயமடைந்தவர்களுக்கு அரசு அறிவித்திருக்கும் நிவாரணம் மரணம் என்றால் மூன்றுலட்சம், வெறும் காயமென்றால் ஐம்பதாயிரம் தான்! இந்த அற்பத் தொகையுமே கூடப் பெரும்பாலானவர்களுக்கு, தாக்குதல்கள் நடந்து ஓராண்டாகியுமே கூட  வழங்கப் படவில்லை என்பது எப்போதும் போல் நடக்கிற கூத்துத் தான்! அதே நேரம், தாஜ் ஹோட்டலுக்கு ஏற்பட்ட சேதங்களுக்காக, இன்ஷ்யூரன்ஸ் தொகை ரூ.167 கோடி வழங்கப்பட்டு விட்டது என்ற செய்தியோடு சேர்த்துப் பார்த்தால் தான், பிரச்சினையைக் கொஞ்சமாவது புரிந்து கொள்ள முடியும்.இந்தியன் எக்ஸ்ப்ரெஸ் பத்திரிகையில் வந்திருக்கும் செய்தியில் உள்ள நிவாரணம் வேண்டி வந்த மனுக்கள் எண்ணிக்கைக்கும், எகனாமிக் டைம்ஸ் பத்திரிகையில் அதே செய்தியை வெளியிட்டதில் வந்திருக்கும் எண்ணிக்கைக்குமே நிறைய வித்தியாசம் இருக்கிறது.

பாராளுமன்றத்திற்கு வெளியே பிஜேபி கட்சியைச் சேர்ந்த அலுவாலியா, ஐந்து நட்சத்திர ஹோட்டல் தாக்கப் பட்டதினாலேயே, இந்தத் தீவீர வாதிகளுடைய தாக்குதல் பற்றிய செய்தி, மீடியாக்களினால் பரபரப்புச் செய்தியாக்கப் பட்டதாக வருத்தப் பட்டிருக்கிறார்.

பத்திரிகையாளர்களிடம் பேசும்போது, "காஷ்மீர், சாட்டிஸ்கார், ஆந்திரா, ஒரிசா என்று நிறைய இடங்களில் இந்த மாதிரித் தாக்குதல்கள் நடந்துகொண்டே இருக்கின்றன.ஆனால், மும்பையில் நடந்ததை மட்டும் நீங்கள் பெரிதுபடுத்திப் போடுகிறீர்கள்! காரணம் அது ஐந்துநட்சத்திர ஹோட்டல் தாஜ் மீது நடந்தது என்பதால் தானே?"

அலுவாலியா உண்மையைத் தான் பேசியிருக்கிறார்! தாஜ் ஹோட்டல் மீது அல்லாமல், அன்றைக்கு சத்ரபதி சிவாஜி டெர்மினலில் (ரயில் நிலையம்) மட்டுமே தாக்குதல் நடந்திருந்தால், பத்திரிகையாளர்களும், தொலைக் காட்சி ஊடகங்களும் இவ்வளவு பெரிதாக, கோரசாக, ஊது ஊதென்று ஊதியிருப்பார்களா என்பது சந்தேகம் தான்! மும்பையில், ஐபிஎன் அலுவலகம் தாக்கப் பட்டதற்கு ஹிந்து என் ராம் கொதித்தெழுந்தார்!  உள்ளூரில், வேறு பத்திரிக்கை நிறுவனங்கள் தாக்கப்பட்ட போதோ அல்லது வேறு அராஜகங்கள் நடந்தபோதோ இதே  கனவான் எல்லாவற்றையும் பொத்திக் கொண்டு  வேறு வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தார்!

என் ராமைக் குறை சொல்லிக் கொண்டு, ஹிந்துவை வாங்காதே, தினமலரை வாங்காதே என்று பானர் தயாரித்துப் போட்டுக்  கொண்டு பதிவுகளில் கிழி கிழி என்று கிழித்துக் கொண்டிருக்கும் தமிழ் வலைப் பதிவர்களாவது .......ம்ம்ஹூம்!

தாஜ் ஹோட்டல் மாதிரி ஐந்து நட்சத்திரம் கூட வேண்டாம்! நட்சத்திரம் என்று வெறுமே சொன்னால் போதும்! அவர் ரேட் என்ன என்று புவனேஸ்வரி- பெயர் சொல்லி ரேட் நிலவரம் சொல்கிறார்  என்று தலைப்பும்,சும்மா  ஒரு படமும் போட்டால் போதுமே, மொய்த்துவிட மாட்டார்களா!

அவர்கள் வரிசையாக வருவார்கள்! தாக்குதல் நடத்துவார்கள், நாம் இங்கே ஆண்டு விழா மட்டும் கொண்டாடிக் கொண்டிருப்போம். அப்படித்தானே! 

சிவசேனாக்காரர்கள் சீரியஸாக ஜோக்கடித்துக் கொண்டிருக்கிறார்கள்! மும்பைத் தாக்குதலின் ஓராண்டு நிறைவை ஒட்டி, அஜ்மல் அமீர் கசாபைத் தூக்கில் போட வேண்டுமென்று  ஆர்ப்பாட்டமும் நடத்தியிருக்கிறார்கள்! ஏற்கெனவே கசாப் என்ற அந்த பிடிபட்ட தீவீரவாதி, நம்முடைய நீதித் துறையில் உள்ள ஓட்டைகளை வைத்து செம காமெடி பண்ணிக் கொண்டிருந்தது போதாதென்று,இப்போது இந்தக் கோமாளிகளும்....!

சாமீ! புண்ணியவான்களே! எங்கே போய்க் கொண்டிருக்கிறோம்! உங்களுக்காவது ஏதாவது திக்கு திசை புரிகிறதா?


மீள்பதிவுதான்! இன்றைக்கு மஹாராஷ்டிரா அரசியலில் நடந்து கொண்டிருக்கும் கூத்தை எல்லாம் பார்க்கும்போது, இங்கே எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு இன்னமும் நேர்மையான பதில் கிடைக்கவில்லையே!  தாவூத் இப்ராஹிமோடு கூட்டாளியாக இருந்து அவனைத் தப்ப விட்ட சரத் பவார், அகமது படேல் இவர்களையெல்லாம்  கூண்டில் நிறுத்த முடிந்ததா? மராத்தா பெருமிதம் பேச சரத் பவாருக்குத் தகுதி இருக்கிறதா? 

 மீண்டும் சந்திப்போம். 

2 comments:

  1. >>> தாவூத் இப்ராஹிமோடு கூட்டாளியாக இருந்து அவனைத் தப்ப விட்ட சரத் பவார், அகமது படேல் இவர்களையெல்லாம் கூண்டில் நிறுத்த முடிந்ததா? மராத்தா பெருமிதம் பேச சரத் பவாருக்குத் தகுதி இருக்கிறதா? …<<<

    !?!?!?...

    ReplyDelete
    Replies
    1. https://youtu.be/r8Uqm1VxvQ0
      இந்த 36 நிமிட வீடியோவில் முன்னாள் RAW அதிகாரி என் கே சூட் தாவூத் இப்ராஹிமுடன் சரத் பவார், அஹமது படேல் நெருக்கமாக இருந்தது, தப்பிக்க உதவியது பற்றிப்பேசுகிறார். காங்கிரசின் ஹமீத் அன்சாரி பற்றியும் கொஞ்சம் பேசுகிறார்.

      Delete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!