இன்றைய செய்திகளில் கொஞ்சம் அரசியல்!

மஹாராஷ்டிரா அரசியலில், அரசு அமைப்பதில் ஆறப்போட்டே சிவசேனாவை ஒருவழி செய்து விடலாமென்று சரத் பவார் முடிவு செய்து விட்டார் போல இருக்கிறது. காங்கிரசுக்கும் வேறுவழி இல்லை. சரத் பவாருடன் ஒட்டிக் கொண்டிருந்தால் மகாராஷ்டிராவில் கொஞ்சநஞ்ச சீட்டாவது கிடைக்கும். சொந்தக்காலில் நிற்கிற தெம்பும் தைரியமும் இந்திரா காலத்திலேயே கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து, இப்போது அடியோடு இல்லாமலேயே போய்விட்டது. மஹாராஷ்டிராவில் என்ன மாதிரி அரசியல் செய்வது என்பதில் காங்கிரஸ் திக்குதிசை தெரியாமல் தடுமாறி நிற்கிறது. அந்த நாட்களில் பர்கா தத் காங்கிரசுக்கு இலவச அரசியல் ஆலோசனை அள்ளித் தந்த  மாதிரி, ஹிந்துஸ்தான் டைம்ஸில் இன்றைக்கு ஒரு பெண்மணி கடவுளாகக் கொடுத்திருக்கிற வாய்ப்பைத் தவறவிட்டால், காங்கிரசை அந்தக் கடவுளாலும் கூடக் காப்பாற்றமுடியாது என்று எழுதியிருக்கிறார்!!


நம்பக்கூடாதவர்களை நம்பி சவுண்டு விட்டதில்  சிவசேனா இருப்பதையும் கோட்டை விடப்போகிறது என்பது பிஜேபியின் தேசியப் பொதுச் செயலாளர் ராம் மாதவ் இனிமேல் சிவசேனா பிஜேபி கூட்டணிக்குத் திரும்புவது சாத்தியமே இல்லை என்று சென்ற வியாழனன்று ஒரு தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் சொன்னபோதே வெட்டவெளிச்சமாகி விட்டது. ஆனால் இன்றைக்கும் கூட சிவசேனா வீம்பைக் கைவிடாமல் பழைய நினைப்பிலேயே பேசி வருவது கேலிக்கிடமாகி வருவது ஒரு பக்கம்! அதன் MLAக்களே உத்தவ் தாக்கரேவை எதிர்த்துப் போர்க்கொடி தூக்கும் நிலைமை இன்னொரு பக்கம்! ஆக ஒரு இயக்கமாக அல்லது அரசியல் சக்தியாக இருப்பதையும் சிவசேனா கோட்டை விடப் போகிறது! ஒரு மாநிலக் கட்சியாக, உதிரியாக இருந்துகொண்டே அகில இந்திய அரசியலையும் ஆட்டிப்படைக்கலாம் என்று கனவு காண்பது, இப்படி அஸ்திவாரமே கலகலத்து போய்விடுவதில் தான் முடியும் என்பதற்கு சந்திரபாபு நாயுடு முதல் ஏகப்பட்ட உதாரணங்கள் இங்கேயே உண்டு!


உள்துறை அமைச்சகத்தின் தீவீர பரிசீலனைக்குப் பிறகு  சோனியா மற்றும் வாரிசுகளுக்கு SPG பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டிருக்கிறது. Z+ பாதுகாப்பை CRPF கமாண்டோக்கள் தொடர்ந்து வழங்கி வருகிறார்கள்.  நாடாளு மன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடர் இந்தவாரம் திங்கள் முதல் தொடங்கியதில், அரசியல் செய்வதற்கு வேறு விஷயங்களே இல்லாத காங்கிரசும் திமுக முதலான கூட்டாளிகளும் இரு அவைகளிலும் ரகளை செய்துவிட்டு வெளி நடப்பு செய்திருக்கின்றன. என்ன வேண்டுமானாலும் செய்துகொள்ளுங்கள், முடிவெடுத்தது எடுத்ததுதான் என்று மத்திய அரசு இந்த விஷயத்தில் நாடாளுமன்றத்தில் எந்தவிதமான வாக்கு வாத அக்கப்போர்களிலும் சிக்கிக் கொள்ளாமல் அமைதியாக இருப்பது இன்றைய செய்தி விசேஷம்.


மேற்கு வங்கத்தில்   சுமார் 90 சட்டமன்றத் தொகுதிகளில் வெற்றிவாய்ப்பைத்  தீர்மானிக்கிற 31% முஸ்லீம் வாக்குவங்கி சிந்தாமல் சிதறாமல் தனக்கே கிடைக்க வேண்டும் என்று மம்தா பானெர்ஜி / திரிணாமுல் காங்கிரஸ் ஏகபோக உரிமை கொண்டாடுவதில் பெரிய ஓட்டை விழுகிற மாதிரி அசாதுதீன் ஒவைசியின் AIMIM கட்சி மேற்கு வங்கத்திலும் களம் இறங்கியிருப்பதில் சிறுபான்மை தீவிரவாதம் பிஜேபியிடம் பணம் பெறுகிறது  என்று மம்தா பானெர்ஜி பேசியிருப்பது கடுமையான சர்ச்சையை கிளப்பியிருக்கிறது. தகப்பன் நேரு கொஞ்சம் பூசி மெழுகினாற்போல செகுலரிஸம் பேசியதை 1980களில் இந்திராவும் அடுத்து ராஜீவ் காண்டியும் அப்பட்டமாக சிறுபான்மையினரைக் குளிர்விப்பது மட்டும் தான் லட்சியம் என்று முஸ்லிம் வாக்குவங்கியைக் குறிவைத்த சீரழிவின் அடுத்த கட்ட நகர்வு இது. #FirstPost தளத்தில் இன்று ஸ்ரீமாய் தாலுக்தார் எழுதியிருக்கிற செய்திக்கட்டுரை மேற்கு வங்க அரசியல் களேபரங்களின் நடப்பு நிலவரத்தைத் தோலுரித்துக் காட்டுகிறது. Without naming him and the AIMIM, Mamata said in Cooch Behar on Monday: "A political party…. like in some Hindus, there is extremism, there are some people who have emerged even among minorities who are extremists. They take money from the BJP, keep in mind. They take money from the BJP, there is such a party, their home is in Hyderabad, not here." என்கிறது டெலிகிராப் நாளிதழ். 

மீண்டும் சந்திப்போம். 

2 comments:

  1. Sir, If you have noticed for several issues BJP at the centre is restraining itself in indulging in counter arguments and silently applies what ever changes they wanted to make.
    it was also good to see the speaker asking swamy , his own partymen to keep up the time and asking him to wrap... i dont see these kind of vdos except in your blog... so not sure whether the speaker Venkiah naidu is controlling swami alone.

    how other parties look at AIMIM ... will they call it as communal party as they slander BJP ?

    ReplyDelete
  2. வாருங்கள் சரவணன்!

    பிஜேபி கொஞ்சமல்ல நிறையவே வித்தியாசமான கட்சிதான் என்பதை அவ்வப்போது நிரூபிப்பதில் இந்த விஷயமும் ஒன்று. இந்தக் கூட்டத்தொடரில் சில முக்கியமான மசோதாக்களை நிறைவேற்றுவதில் பிஜேபி குறியாக இருக்கிறது.

    ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!