சண்டேன்னா மூணு! திருவள்ளுவர்! H ராஜா! பார்த்ததும் படித்ததும்!

திருவள்ளுவர் விரும்பினாரோ இல்லையோ அவரையும் நம்மூர் அரசியவாதிகள் ஒரு காவி ஆடை சர்ச்சையில் இழுத்துத் தெருவில் இழுத்து விட்டு விட்டார்கள். ஏதோ ஒரு சர்ச்சை அல்லது வெட்டி அக்கப்போரிலேயே  தமிழ் நாட்டு அரசியல் இயங்கிக் கொண்டிருக்கவேண்டும் என்று தலைவிதியா என்ன?


தந்தி டிவியில் ரங்கராஜ் பாண்டே இருந்தவரை மிகவும் சுவாரசியமான நிகழ்ச்சியாக கேள்விக்கென்ன பதில் இருந்தது. அவருக்குப் பின்னால் அந்த நிகழ்ச்சியைத் திறம்பட நடத்துகிறவர் எவருமில்லாமல் தள்ளாடுவது தெளிவாகவே தெரிகிற மாதிரி இருந்ததால், இப்போது நான் தந்திடிவி நிகழ்ச்சிகளை, செய்திகளைப் பார்க்க விரும்புவதில்லை. இருந்தாலும், தமிழக அரசியலும் சரி ஊடகங்களும் சரி  என்ன மாதிரியான செய்திகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கின்றன என்பதற்கு அவ்வப்போது கொஞ்சம்  சாம்பிள் பார்க்க வேண்டி இருக்கிறதே! வீடியோ 41 நிமிடம்.


அயோத்தி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிற உச்சநீதிமன்றத் தீர்ப்பு,  இந்தியாவுக்குள் 4 கி.மீ, பாகிஸ்தானுக்குள் 5கி.மீ. என்று மிகமிகச் சிறியதுதான் என்றாலும் சீக்கிய மக்களுடைய மத  உணர்வுகளில்,   கர்தார்பூர் வழித்தடம் எவ்வளவு முக்கியமானது இப்படி மிக முக்கியமான செய்திகளைக் கூட ஒதுக்கித் தள்ளிவிட்டு வள்ளுவரை தொடர்ந்து சர்ச்சைக்குள்ளாக்குவது என்னமாதிரியான ஊடக அரசியல்? அயோத்தி விவகாரத்தில் தீர்ப்பு மீது  புதிய தலைமுறை சேனலில் நேர்பட பேசு என்று  ஓரு 93 நிமிட விவாதம், news 7 சேனலில் வியூகம் என்ற நிகழ்ச்சியில் பழ.கருப்பையாவுடன் ஒரு 45 நிமிட நேர்காணல் இருந்ததையும் குறிப்பிட்டுச் சொல்லியாக வேண்டும். முதல் முறையாக தமிழக சேனல்களில் ஒரே விஷயத்தைப் பற்றியே கூவிக் கொண்டிருப்பது சிறிது மாறியிருக்கிறது என்பது ஒருநாள் கூத்து தானா?  

படித்ததில் பிடித்தது: 

"நாடா? காடா? தீர்ப்பு உங்கள் கையில்"
ஶ்ரீஅருண்குமார்*
புல் புல் புயல் உருவாகியுள்ளதைப் பற்றி உங்கள் கருத்தென்ன? இன்று காலையில் மழை பெய்தது. அதை நீங்கள் வரவேற்கிறீர்களா?
இப்படித்தான் இருக்கிறது அயோத்யா விவகாரத்தில் உச்சநீதிமன்றத் தீர்ப்பை நாங்கள் வரவேற்கிறோம் என்பதும்.
ரஜினி கட்சி தொடங்கினால் வரவேற்கிறோம் என்று கூறலாம். ஆனால் நீதிமன்றத் தீர்ப்புக்கு எவ்வாறு இது பொருந்தும்?
அனைவரும் அமைதி காக்க வேண்டும். மதநல்லிணக்கம் பேண வேண்டிய நேரமிது. இத்தகைய அறிக்கைகள், பொதுவாக குண்டுவெடிப்பு அல்லது மதக்கலவரம் நிகழ்ந்த சூழலில் வெளியிடப்படும்.
இப்போது இத்தகைய அறிக்கைகளை வெளியிடுவது, ஏதோ இந்தத் தீர்ப்பால் அமைதி குலையும் என்ற தோற்றத்தை உருவாக்கவில்லையா?
நம்பிக்கைகளா? சட்டமா?
ஆச்சரியம் என்னவென்றால் அயோத்தி தீர்ப்பில் சட்டத்தைவிட நம்பிக்கையே மேலோங்கியுள்ளது என்று குறை கூறுவோர், முத்தலாக் விஷயத்தில் சட்டத்தைவிட நம்பிக்கையே பெரிது என்று வாதிட்டனர்.
மக்களின் விருப்பத்துக்கு ஏற்ப தீர்ப்புகள் அமைய வேண்டும் என்று எதிர்பார்ப்பது, சமீப காலங்களில் அதிகரித்துள்ளது. இல்லையென்றால் சட்டத்தையே திருத்தலாம் என்ற கோரிக்கையும் எழுகிறது. இது நீதிமன்றங்களின் தீர்ப்பை நீர்த்துப் போகச் செய்யும். தீர்ப்பு மக்களைக் கட்டுப்படுத்தாது என்ற நிலையை உருவாக்கும். இதன் விளைவு? முல்லைப் பெரியாறு மற்றும் காவேரி விவகாரத்தில் கேரள, கர்நாடக அரசுகள், நீதிமன்றத் தீர்ப்பை ஏற்க மறுக்கின்றன.
மக்கள் விருப்பமே தீர்ப்பாக வேண்டுமென்றால், ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி மீண்டும் தேர்தலில் வெற்றி பெற்ற அரசியல்வாதிகளுக்கு தண்டனையே கூடாதே?
மேலும், மக்கள் விருப்பம் என்பதை யார் தீர்மானிப்பது? சமூக ஊடகங்களா? செய்தி ஊடகங்களா? அரசியல் கட்சிகளா? இவையெல்லாம் எந்த அளவுக்கு நம்பகத்தன்மை உடையவை அல்லது சட்ட வழிமுறைகளுக்குட்பட்டவை?
அல்லது ஒவ்வொரு விஷயத்திலும் மக்களிடையே பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டுமா? அப்படியே பொது வாக்கெடுப்பு நடத்துவதாகவே வைத்துக் கொள்வோம். புதியதாக ஒரு மெட்ரோ ரயில் சேவை தொடங்க வேண்டும். தேசிய அளவில் வாக்கெடுப்பென்றால் உ பி தான் வெல்லும். மாநில அளவிலென்றால் சென்னைதான். காரணம் மக்கள்தொகை.
இப்போது சொல்லுங்கள் மக்கள் கருத்தை எப்படி அறிவது?
நீதிமன்றத் தீர்ப்பு என்பது சட்ட நுணுக்கங்கள், ஆதாரங்கள், வாதங்கள், முன்னுதாரணங்கள் என்பவற்றின் அடிப்படையில் வழங்கப்படுபவை. இதனை எதிர்த்து மேல் முறையீடு மறுசீராய்வு என்றெல்லாம் சட்டவழிமுறைகள் உள்ளன. ஆனால் இதன் முதல் படி — தீர்ப்பை ஏற்கிறோம். ஆனால் தீர்ப்பில் உடன்பாடில்லையென்பதால் முறையீடு செய்கிறோம் என்பதுதானே தவிர welcome என்பதற்கோ GoBack என்பதற்கோ இடமில்லை.
சட்டம் நம் எல்லோரையும் விட மேலானது. தீர்ப்பில் உடன்பாடில்லாமல் போகலாம். ஆனால் தீர்ப்பை அவமதிப்பதோ அல்லது மறுதலிப்பதோ சட்ட விரோதம் மட்டுமன்று, சட்டத்தின் மாட்சிமையைக் குலைக்கும் செயலும் கூட. சட்டத்தின் மாட்சிமை குலைந்தால் அது நாடல்ல — காடு.  

இதே விஷயத்தின் மீது இன்னொரு பார்வை 

பாபர் மசூதி இடிக்கப்பட்ட காலத்தில் இளைஞனாக இருந்து வன்முறை, கலவரம் எல்லாம் செய்து கொண்டிருந்த ஒருத்தனின் மனநிலை, இன்றையத் தீர்ப்பை என்ன மாதிரி பார்த்திருக்கும்?? அன்று தான் செய்தது தவறு என உணர்ந்திருக்குமா? இந்தத் தீர்ப்பை ஏற்காமல் எனக்கே நிலம் சொந்தம் என்றோ, அவனுக்கு எதற்கு அதிக நிலம் என்றோ கேட்டிருக்குமா?? நிஜமான ஆன்மீகம், கடவுளை ஒரு சிறிய இடத்தில் அடைக்காது என்கிற பக்குவத்தை அடைந்திருக்குமா? இனி அந்த இடத்தில் வெறும் கட்டிடம் மட்டுமே இருக்கும், 'போங்கடா நீங்களும் உங்க மதமும்' எனக் கடவுள் கிளம்பிப் போயிருப்பாரோ என்கிற ஐயம் கொண்டிருக்குமா??? அல்லது அன்றைய அதே வெறியில் இன்றும் இருக்குமோ??? ரத்தம் சுண்டிப் போனதால் மனதுக்குள் வெறும் வஞ்சத்துடன் ஒன்றும் செய்ய முடியாமல் தவித்துக் கொண்டிருக்குமோ?? எவர் கண்டார்..
ஆனால் ஒவ்வொரு டிசம்பர் 6ம் தேதியும், ஏதோ அசம்பாவிதம் நடைபெற்று விடப் போவதைப் போன்ற பிம்பத்தையே பார்த்து வளர்ந்த எங்களைப் போன்ற 90s கிட்ஸ் இனி அந்தப் பீதி இல்லாமல் இருப்போம். அன்றைய இளைஞர்கள் செய்தத் தவறைத் தாங்கள் எந்நாளும் செய்யவே மாட்டோம் என்பதை இன்றையத் தீர்ப்புக்குப் பின் மிகத் தெளிவாகவே உணர்த்தி விட்டார்கள் இன்றைய இளைஞர்கள்.
இனி டிசம்பர் 6ம் தேதிகளில் சுவரை மொய்க்கும் துக்க நாள், ராமர் கோவில் போன்ற போஸ்டர்கள் இருக்காது. கொஞ்சம் கொஞ்சமாக இந்தச் சம்பவத்தை மக்கள் மறந்துவிடுவார்கள்.. இப்போதுமே கூட பலரும் அதை மறந்து விட்டதால் மட்டுமே இந்தத் தீர்ப்பு இத்தனைச் சாதாரணமாகக் கடக்கப் பட்டிருக்கிறது.. தேர்தலுக்குத் தேர்தல் ஒலிக்கப்பட்ட பாபர் மசூதி, ராமர் கோவில் போன்ற வாக்குறுதிகள் இனி இல்லாமல் போகப்போவதை நினைத்தும் மனது லேசாக ஆசுவாசப் படுகிறது..
ரொம்ப சிம்பிளாகச் சொல்வதாக இருந்தால், 90களின் தொடக்கத்தில் வேலைவாய்ப்பின்மையால் ராமர், பாபர் எனப் பொங்கிக் கொண்டிருந்த கும்பல் எல்லாம், LPG என்னும் பொருளாதாரத் தாராளமயமாக்கலுக்குப் பின், ஒழுங்காகப் படித்து, முன்னேறி, தங்களைப் போல் தங்கள் வாரிசுகளும் காட்டு மிராண்டிகளாய் இருக்கக் கூடாது என உணர்ந்து, ஒரு ஒழுக்கமான சமுதாயத்தை உருவாக்கியிருக்கிறது.. மதவெறியை விட, படிப்பும் பொருளாதார முன்னேற்றமும் மட்டுமே ஒரு சமுதாயத்தை உருப்பட வைக்கும் என்பதற்கு இந்தச் சம்பவம் நடந்த காலமும், தீர்ப்பு வந்த காலமும் மிக அருமையான உதாரணம்..
நிலப்பரப்பில் உலகின் 7வது மிகப்பெரிய நாடு, வெறும் ரெண்டரை ஏக்கர் நிலப்பரப்பிற்காக 27ஆண்டுகளாக அடித்துக் கொண்டிருந்தது என்கிற களங்கம் இன்றோடு துடைக்கப்பட்டது.. வாழ்த்துகள் இந்தியா..
மீண்டும் சந்திப்போம்.        

No comments:

Post a Comment

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!