தடுப்புச் சுவர்கள்! இடிக்கப்பட்டாலும் பிளவும் பிரிவும் நீடிக்கிறதா?

நவம்பர் 9  இரண்டாவது உலகப் போரின் முடிவில் கிழக்கும் மேற்குமாக ஜெர்மனி இரண்டாகப் பிளக்கப்பட்டதன் கொடூரமான அடையாளமாக இருந்த பெர்லின் தடுப்புச் சுவர் தகர்க்கப் பட்டதன் 30வது ஆண்டுக் கொண்டாட்டமும் நினைவு தினமும் இன்று! கிழக்குப் பகுதி ஜெர்மனி ரஷ்யர்களுடைய ஆதிக்கத்தில்! மேற்குப் பகுதி ஜெர்மனி அமெரிக்க அரவணைப்பில்! பிரிவு பட்டிருந்த ஜெர்மனி மறுபடி ஒன்றான நாள் நவம்பர் 9, 1989
சில நேரங்களில், நல்ல எழுத்து, கவிதை மாதிரி ஒரு ஆறுதலான உற்ற துணை எதுவுமே இருக்க முடியாது! சோர்ந்து போன மனதுக்கு ஆறுதலாகவும், வாழ்க்கையின் நிதர்சனங்களைப் படம் பிடித்துக் காட்டுவதாகவும் நல்ல எழுத்து, கவிதைஅமைந்துவிடுவதுண்டு.

பரபரப்பான, அல்லது பதட்டமான மனநிலையில் இருந்து விடுபட்டுக் கொஞ்சம் ஆற அமர யோசித்து, வாழ்க்கையை உள்ளது உள்ளபடிக்கே புரிந்து கொள்ளவும், அனுபவிக்கவுமான தருணம் இது என்று நினைத்துக் கொண்டிருக்கும் போது, ஒரு
தோழரின் காணாமல் போய், மரணமான  செய்தி,  அத்தனையையும் புரட்டிப் போட்டு விட்டது. மறந்து விட்டதாக அல்லது விலகி வந்து விட்டதாக நினைத்துக் கொண்டிருந்தவை எல்லாம் நெஞ்சின் அலைகளாய், கடந்த ஒரு வாரமாகவே என்னை அலைக்கழித்துக் கொண்டிருந்தது உண்மை. அலைக்கழிப்பில் இருந்து விடுபட, ஒரு நல்ல கவிதை, சில சிந்தனைகளையும் விதைத்துவிட்டுப் போனதாகவும் ஆனது.

ராபர்ட்  ஃப்ராஸ்ட்  ஒரு அமெரிக்கக் கவிஞன்! அவர் எழுதிய  Mending Wall  என்றொரு கவிதை!   ஃப்ராஸ்ட் இங்கிலாந்துக்குப் போயிருந்தபோது, க்ரஹாம் கிரீன் என்ற எழுத்தாளர் அவரிடம் கேட்டாராம்! "சமீபகாலத்திய இலக்கியங்களில், நீங்கள் எழுதிய இந்தக் கவிதையில் " நல்ல வேலிகள் நல்ல அண்டைவீட்டுக்காரனை உருவாக்குகின்றன"  என்று சொல்லியிருப்பதை மாதிரிப் புரிந்து கொள்ளக் கடினமான வேறு ஒன்று இல்லையே!"

ஃப்ராஸ்ட் சொன்ன பதில், " என்னுடைய உதவி இல்லாமலேயே அதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்  என்று 
தான் விரும்புகிறேன்."

கவிஞரும், எழுத்தாளரும் சிரித்தபடியே அந்த விவாதத்தை அப்படியே விட்டு விடுகிறார்கள். அமெரிக்க இலக்கியத்தில்  ஃப்ராஸ்டின் இந்தக் கவிதை மாதிரி அக்குவேறு ஆணிவேராக அலசப்பட்ட கவிதை எதுவும் கிடையாது என்று விமரிசகர்கள் சொல்கிறார்கள். 
நிறையவே தப்பாகப் புரிந்து கொள்ளப்பட்ட கவிதையும் இதுவாகத் தான் இருக்கும். தப்பாகப் புரிந்து கொள்ளப் பட்ட நிலையிலும் கூட, ஒரு அழகான கேள்வியை, இந்தக் கவிதை இன்னமும் தொடர்ந்து எழுப்பிக் கொண்டு தான்  இருக்கிறது!

Something there is that doesn't love a wall,
That sends the frozen-ground-swell under it,
And spills the upper boulders in the sun,
And makes gaps even two can pass abreast

என்று ஆரம்பிக்கிற இந்தக் கவிதை, இரண்டு பேர் ஒரு குறுக்குச் சுவரைப் பற்றி பேசுவதாக உருவகத்தை எடுத்துக் கொண்டு நாற்பத்தாறு வரிகளில் கொஞ்சம் யோசிக்க வைக்கிறது. வேலியை ஒட்டி  அனுபவத்தைச் சொல்பவனும், அண்டைவீட்டுக்காரனும் பேசிக் கொண்டே நடக்கிறார்கள். வேலி எதற்கு, என்னுடைய பக்கத்தில் இருப்பது, உன்பக்கம் வந்து என்ன செய்து விடும் என்று கேட்பதற்கு, அண்டைவீட்டுக் காரன் சொல்கிறான், நல்லவேலிகள் நல்ல அண்டைவீட்டுக்காரனை உருவாக்கும்!  


Before I built a wall I'd ask to know
What I was walling in or walling out,
And to whom I was like to give offense.
Something there is that doesn't love a wall,
That wants it down.'

கவிஞருடைய  வாதம் எல்லாம் இது தான்! ஏதோ ஒன்று, குறுக்குச் சுவர் ஒன்று இருப்பதை விரும்புவதில்லை. வேலியைக் கீழே தள்ளவே அது விரும்புகிறது! கவிஞருடைய வாதங்களை எல்லாம் அண்டைவீட்டுக்காரன் கேட்டுக் கொண்டே இருக்கிறான். ஆனால், கடைசியாக மறுபடியும்,
'Good fences make good neighbors' என்று சொல்வதோடு கவிதை முடிகிறது. 

கவிதையில் என்னதான் சொல்ல வருகிறார் என்பதை அவரவர் தங்களுடைய  அனுபவங்களுக்குத் தகுந்த மாதிரி அர்த்தம் செய்து கொள்ளவேண்டியது தான்! 

சுவர் எழுப்பினால் பக்கத்து வீட்டுக்காரன் நல்லவனாக அமைந்து விடுவானா? சீனாவின் மிகப் பெரிய நெடுஞ்சுவர், அதற்கு பக்கத்து நாடுகளைத் தேடித் தந்ததா? சுவரைத் தாண்டியும் ஆக்கிரமிக்கிற சீனர்களுடைய குணத்தை அது மாற்றி விட்டதா?

"சுவரைக் கட்டுகிறபோது, எதை அதற்குள்ளாக, எதை அதற்கு வெளியே கட்டுகிறேன் யாரை வெறுத்து  செய்வதற்காக என்று கேட்டுக் கொள்வேன். அதற்குள், சுவர் எழும்புவதை விரும்பாத ஏதோ ஒன்று இருக்கிறது. சுவர் விழுந்துவிடுவதையே அது விரும்புகிறது." என்று கவிஞர் சொல்லும்போதே, அண்டைவீட்டுக்காரர்  சொல்கிறார், "நல்ல வேலிகள் நல்ல அண்டைவீட்டுக் காரர்களை உருவாக்குகின்றன."

மேற்கு, கிழக்கு என்று இரண்டாக பெர்லின் துண்டிக்கப் பட்டிருந்த நிலையில் அமெரிக்க அதிபர் கென்னெடி, மேற்கு பெர்லின் நகரில் இந்தக் கவிதை வரிகளைக் குறிப்பிட்டுச் சொன்னபோது, மேற்கு ஜெர்மனி ஆரவாரித்தது. பெர்லின் தடுப்புச் சுவர் இருப்பதை அவர்கள் விரும்பவில்லை, அது விழுந்துவிட வேண்டும் என்று விரும்பியதைக் காட்டிய அதே நேரம், கிழக்குப் பகுதியிலும் கூட இந்தக் கவிதை, Something there is that doesn't love a wall  என்று ஆரம்பிக்கும் முதல் வரியை மட்டும் நீக்கப்பட்டு  பிரசுரமாகிப் பிரபலமுமானது. அங்கே Good fences make good neighbors  என்ற வரி அன்றைய மனோநிலைக்குப் பொருத்தமாக இருப்பதாகக் கொண்டாடப்பட்டது.

இரண்டு எதிரெதிரான  மன நிலைகள் இங்கே உருவகிக்கப் படுவதைப் பார்க்கலாம்! அதைக் குறித்து என்ன செய்யப் போகிறோம் என்ற கேள்வி இந்த உருவகத்தில் தொக்கி நிற்கிறது.

என் மகன் சிறு பையனாக இருந்த நேரம், அனேகமாக யூகேஜி அல்லது முதல் வகுப்பில் படித்துக் கொண்டிருந்த தருணம் ஒன்று  நினைவுக்கு வருகிறது.

என்னுடைய மகனும், அவனுடைய பள்ளித் தோழனும் பேசிக் கொண்டிருக்கிறார்கள் ட்ரெயினைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கையில், என் மகன் கொஞ்சம் உரக்கவே குரல் கொடுக்கிறான், "அது இல்லடா ட்ரெயினு..! எங்க மாமா ஜீவவாடா போனாங்களே அதாண்டா ட்ரெயினு!"

(அப்போது, அவனுடைய தாய் மாமன் விஜயவாடாவில், அமெரிக்கன் ரெமடீஸ் மருந்துக் கம்பனியில் வேலை செய்து கொண்டிருந்த தருணம், அவனை வழியனுப்ப மருமகன் ரயில்வே ஸ்டேஷனுக்குப்போய்ப் பார்த்த ட்ரெயின் மட்டும் தான் அய்யாவைப் பொறுத்தவரை ட்ரெய்ன்! மத்ததெல்லாம் இல்லை!) அறியாத வயசு, சின்னப் பசங்க தான் இப்படி என்று இல்லை!

இதே மாதிரித் தான் புதிய ஏற்பாட்டில், பிலாத்து மன்னனிடம், உண்மையைப் பற்றிப் பேசப் போக, அவன் பரிசேயர்களிடம் ஏளனமாகவே கேட்ட கேள்வி! "உண்மை! யாருடைய உண்மை? என்னுடையதா அல்லது உன்னுடையதா?"

இப்படித் தான் ஒவ்வொரு விஷயத்திலுமே ஒரு குறுக்குச் சுவர் அல்லது திரையைக் கட்டிக் கொண்டு பார்த்துக் கொண்டிருக்கிறோம்! இருள் மூடிக் கிடக்கும் மனம் வெளுப்பதெப்போது ? குறுக்கும் சுவர்கள் விழுந்து பட்டு, உலகம் உயர்வதும் எப்போது?
Mending Wallஇந்த லிங்கில் முழுக் கவிதையையும் படிக்கலாம்!
 இப்படி எழுதியது 2010 பிப்ரவரியில்.  கவிதையை வாசித்ததும் யோசிக்க வைத்ததுமாக  2009 நவம்பர் 9 அன்று எழுதிய இந்தப் பதிவும் ஒரு காரணமாக இருந்தது.

பெர்லின் சுவர் கற்றுக் கொடுக்கும் பாடம்!

9 நவம்பர்!  1989 வரலாற்றின் கடந்த பக்கங்கள்!



பெர்லின் நகரை இரண்டாகப் பிரித்திருந்த சுவர் இடிக்கப்பட்ட இருபதாவது ஆண்டுக் கொண்டாட்டங்கள் ஜெர்மனியில் இன்றைக்குக் கோலாகலமாகக் கொண்டாடப் பட்டு வருகின்றன. இந்தத் தருணத்தில் பங்கெடுத்துக் கொள்வதற்காக பிரிட்டிஷ் பிரதமர் கார்டன் பிரவுன், ஃபிரெஞ்சு  ஜனாதிபதி சார்கொசி, ரஷ்ய ஜனாதிபதி டிமிட்ரி மெட்வெடேவ், அமெரிக்க வெளியுறவு செயலாளர் ஹிலாரி க்ளின்டன் ஆகிய நால்வரும், உலகப்போர் முடிவில் ஜெர்மனியை ஆக்கிரமித்திருந்த நேசநாடுகளின் சார்பாகவும்,  முன்னாள் சோவியத் ஒன்றியத்தின் தலைவராக இருந்த மிகைல் கோர்பசேவ், போலந்து நாட்டில் தொழிற்சங்கங்களை ஒருங்கிணைத்து கம்யூனிஸ்டுகளுக்கு எதிராகப் போராடிய லேக் வாலேசா இருவரும் கூட இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

1989 இல் இரண்டு கூறுகளாகப் பிரிக்கப்பட்டிருந்த ஜெர்மனியை ஒருங்கிணைப்பது என்ற முடிவுக்கு முன்னோட்டமாக, பெர்லின் தடுப்புச் சுவர் இடித்துத் தரை மட்டமாக்கப் பட்டது. ரஷ்யாவின் இரும்புத்திரையும், திறமையற்ற ஒரு ஆட்சி முறையுமே கூட ஒரு முடிவுக்கு வருவதன் முன்னோட்டமாகவும்  இந்த நிகழ்வு இருந்தது.


இரண்டாவது உலகப் போர் முடிந்தகையோடு, ஜெர்மனியை சோவியத் ரஷ்யாவும், அமெரிக்காவும் இரண்டாகக் கூறு போட்டுக் கொண்டன. கிழக்குப்பகுதி கம்யூனிஸ்டுகள் (ரஷ்யக் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரான்ச்) கையிலும், மேற்குப் பகுதி அமெரிக்காவின் கண்ணசைவிற்கு ஏற்றபடி ஆடுகிறவர்கள் கையிலுமாக ஆட்சிப் பொறுப்பு பலவந்தமாக எடுத்துக் கொள்ளப்பட்டது, அதாவது கொடுக்கப்பட்டது.

அடுத்தடுத்த இரண்டு உலகப்போர்களில், ஜெர்மனியின் தொழில்களும், ஆதிக்கக் கனவுகளும் அடிபட்டுப் போனதை விட, ஒரேநாடு  இரண்டாகப் பிளக்கப் பட்டதை ஜெர்மானியர்களால் தாங்கிக் கொள்ள முடியாததாக இருந்தது.
ரஷ்யாவின் பிடியில் இருந்த கிழக்கு ஜெர்மனியில் இருந்து, சுதந்திரக் காற்றை சுவாசிக்க மேற்குப் பகுதிக்குள் தப்பி போகும் சம்பவங்கள் தொடர்ந்து பெருகிக் கொண்டே போகவும் பெர்லின் நகருக்குக் குறுக்கே 1961 ஆம் ஆண்டு ஒரு பிரிவினைச் சுவர் எழுப்பப்பட்டது. ஃபாஸிஸத்துக்கு எதிரான தடுப்புச் சுவர் என்ற தம்பட்டத்தோடு ஆகஸ்ட் 13, 1961 அதிகாலை வேளையில் எழுப்பப்பட்டது. 
.................. முழுப்பதிவையும் மேலே படிக்க 

சுவர் இடிக்கப்பட்டதன் 30வது நினைவுதினத்தைக்  கொண்டாடி கூகிள் டூடில் ஒன்றை வெளியிட்டு, தலைவர்கள் கூடிப் பேசினால் மட்டும் போதுமா? பெர்லின் சுவர் வீழ்ந்தது கம்யூனிசத்தின் வீழ்ச்சியாகவே பார்க்கப் பட்டாலும் சோவியத் ஒன்றியம் தான் வீழ்ந்ததே தவிர கம்யூனிச சித்தாந்தம் ஏற்படுத்தி விட்டுப்போன கோளாறுகள் இன்னமும் நீடிக்கத் தான் செய்கிறது போல.

மீண்டும் சந்திப்போம்.     

4 comments:

  1. // நல்ல வேலிகள் நல்ல அண்டைவீட்டுக்காரனை உருவாக்குகின்றன// - உண்மை. விலை உயர்ந்த பொருட்களை பத்திரமாக வைத்திருப்பது, பணத்தை மறைவான இடத்தில் வைப்பது இதெல்லாம் நல்ல வேலைக்காரி/காரன்களை உருவாக்குகின்றன.

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் நெ.த. சார்!

      அப்படியே திறமையான திருடர்களையு-ம் உருவாக்குகின்றன என்பதையும் சேர்த்தே சொல்லியிருக்கலாமோ?
      : -))))

      பெர்லின் சுவர்கள் இடிக்கப்பட்டு முப்பதாண்டுகள் ஆனபின்னாலும் கூட ஒரு நாற்பத்தைந்து ஆண்டுகால கம்யூனிசச் சீரழிவு இன்னமும் ஜெர்மனியில் ஒரு பூரண ஒற்றுமையை ஏற்படவிடாமல், தடையாக இருப்பதாக பத்து வருடங்களுக்கு முன்னால் சொன்னார்கள். இன்றும் சொல்கிறார்கள்! இன்றைய நிலவரத்தை செய்திகளில் பார்த்தபிறகு இந்தக் கவிதையும் அதைத்தொட்டு எழுதிய பதிவும் நினைவுக்கு வந்தன.

      Delete
  2. சோவியத்தின் கம்யூனிச கலாச்சாரம், கிட்டத்தட்ட ரோபோக்களை உருவாக்கியது. ஓரளவு எல்லோருக்கும் உயிர் வாழ உணவு என்பது மட்டும் உறுதி செய்யப்பட்டிருந்தாலும், அந்த கம்யூனிச மாடலே, உயிர்ப்பில்லாதது. அது 'கோள் சொல்பவர்களையும்', 'சோம்பேறிகளையும்' தகுதி இல்லாதவர்களை பார்ட்டி தலைவர்களாக ஒவ்வொரு பகுதியிலும் உருவாக்கியது.

    ஜெர்மன் ஒன்றிணைந்தது, தற்போது ஓரளவு ஸ்மூத்தாக இருப்பது இவை வரலாற்றில் பொறிக்கப்படவேண்டிய தருணங்கள்.

    இன்றைய இடுகை ரொம்ப நீளமாக இருக்கு.

    ReplyDelete
    Replies
    1. ஜெர்மனி ஸ்மூத்தாக இருக்கிறதா? இல்லையென்று தான் சொல்கிறார்கள்!

      பதிவுகளில் சொல்ல வேண்டிய விஷயத்துக்கு மட்டுமே அதிக கவனம் எடுத்துக் கொள்வதால் நீளமாக இருப்பதைப் பற்றி அதிகம் அலட்டிக் கொண்டதில்லை நெ.த. சார்!

      Delete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!