ஆசை உடையோர்க்கெல்லாம், ஆரியர்காள் கூறுமென்று...!

மேலே படத்தில்,யூகலிப்டஸ் பூ, அகந்தையை ஒழித்தல்

ஒரு ஊரில் ஒரு பெரும் தனக்காரன்.

பிரமுகர்கள் யார் வந்தாலும், அவனது பண்ணை வீட்டில் தான் தங்குவார்கள். சாமியாரானாலும், பெரிய அதிகாரிகளானாலும் சரி, இப்படிப் பிரமுகர்களை வரவேற்பதிலும், அவர்களை தன்னுடைய பண்ணை வீட்டில் தங்க வைத்து உபசரிப்பதிலும், அந்தப் பெரும் தனக்காரனுக்கு ஆர்வம் அதிகம். இப்படித்தான் ஒரு யோகியும் பெரும் தனக்காரனுடைய பண்ணைவீட்டில் ஒரு சமயம் தங்கி, ஆன்மீக நாட்டம் கொண்ட சிலபேர்களுடைய சந்தேகங்களுக்குப் பொறுமையாக விளக்கம் அளித்துக் கொண்டிருந்தார்.

" நீங்கள் எல்லோரும் உங்களுக்கென்று சில அடையாளங்களை வைத்துக்கொண்டிருக்கிறீர்கள். கொஞ்சம் யோசித்துப் பார்த்தால், இந்த அடையாளங்கள்எல்லாம் உங்கள் மீது திணிக்கப் பட்டிருப்பது புரியும். முதலில், உங்கள்பெயர்-அதை நீங்களா தேர்ந்தெடுத்தீர்கள்? இல்லையே, உங்கள்பெற்றோர்களோ.அல்லது நெருங்கிய உறவினர்களோ தானே உங்களுடையபெயரை வைக்க, நீங்களும் அதை ஏற்றுக் கொண்டிருக்கிறீர்கள்? அதே மாதிரி, உங்களுடைய பெற்றோர்கள், அதையும் நீங்கள் தேர்ந்தெடுக்கவில்லையே! இப்படியே உங்களுக்கு இருக்கிற அடையாளங்கள் ஒவ்வொன்றாகப் பார்த்துக்கொண்டே போனால், உங்களுடைய தேசம், மொழி, மத நம்பிக்கை, எதையுமேநீங்களாகச்சிந்தித்து, சுதந்திரமாகவோ, விழிப்புணர்வுடனோதேர்ந்தெடுக்கவில்லையே!"

"இப்படியே சிந்திக்க ஆரம்பித்தீர்களேயானால், அப்பொழுது நான் யார் என்கிற கேள்வி தானாகவே வரும். கேள்விக்கு ஒவ்வொரு பதிலாகக் கிடைக்க ஆரம்பிக்கும். நான் என்பது என் உடலா, என்னுடைய ஆசைகளா, எண்ணங்களா, பழக்கங்களா இப்படி வரிசையாக இதுவாக இருக்குமோ, இதுவாக இருக்குமோ என்று போய்க்கொண்டே இருக்கும். சலித்துப் போய் நின்று விடாமல், இன்னும் ஆழமாக இந்தக் கேள்விக்குள்ளேயே போய்க் கொண்டிருந்தீர்களென்றால், நிச்சயம் உண்மையான விடை கிடைக்கும். குறைந்தபட்சம், இந்த மாதிரிக் கேள்விக்கெல்லாம் விடை வெளியில் இருந்து இல்லை, உங்களுக்கு உள்ளேயே தான் இருக்கிறது என்பது புரியவாவது ஆரம்பிக்கும்."

கேட்டுக் கொண்டிருந்த சிலபேர், மிகக் கவனத்துடன் யோகி சொன்னதைக் கேட்டுக் கொண்டார்கள். தங்களுக்கு ஏற்பட்ட சந்தேகத்தை, சந்தித்த சில அனுபவங்களைப் பற்றியெல்லாம் அவரிடம் ஆர்வத்துடன் கேட்டுத் தெரிந்து கொண்டார்கள்.

பெரும் தனக்காரனுடைய மனைவி, கதவருகே நின்று யோகியார் அளித்த விளக்கங்களை கேட்டுக் கொண்டிருந்தாள். வந்தவர்கள் எல்லாம் போன பிறகு, யோகியிடம் வந்தாள்." ஐயா, நாளைக்கு என் சினேகிதிகள் சில பேரை அழைத்திருக்கிறேன். எல்லோரும் பெரிய, வசதி படைத்த வீட்டுப் பெண்கள். அவர்களுக்கும் இந்த தத்துவ முத்துக்களை அளிக்க வேண்டும்." என்றாள்.

"அவர்களுக்கு இதையெல்லாம் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம், ஆர்வம் இருக்கிறதா என்ன என்பதை நான் தெரிந்து கொள்ளலாமா?" என்று கேட்டார் யோகி.

"அவசியம் என்றெல்லாம் கிடையாது. சும்மா, செக்கு மாடு மாதிரி ஒரே மாதிரி வாழ்க்கை வாழ்வதிலிருந்து, ஒரு இடைவேளை, ஒரு மாற்றம் அவ்வளவு தான். ஒருத்தி ஒரு நீதிபதியின் மனைவி, ஒருத்தி இந்த ஊர்த் தலைவரின் மனைவி..இவர்கள் எல்லோருக்குமே சமூகத்தில் பெரிய அந்தஸ்து, மரியாதை இருக்கிறது. எப்பொழுது பார்த்தாலும் அது இது என்று எதையாவது இழுத்துப் போட்டுக் கொண்டு அலைவதால், இப்படிப்பட்ட விஷயங்களுக்கெல்லாம் நேரமே கிடைப்பதில்லை, அது தான்."

மறுநாளைக்கு, அந்த சினேகிதிகள் எல்லோரும் வந்து விட்டார்கள். அவர்களுக்காக, வேறு யாரையும் யோகியைச் சந்திக்க விடவில்லை. வந்தவர்களும், யோகியை வணங்கி விட்டு, வரிசையாக அமர்ந்து கொண்டார்கள், கேள்வி கேட்க ஆரம்பித்தார்கள்.

"சாமி, கடவுள் ஏன் இந்த உலகத்தை படைத்தார்?" இது நீதிபதியின் மனைவி.

"சாமி, மரணத்துக்குப் பின்னாலும், ஆத்மா வாழ்கிறது என்கிறார்களே, உண்மையா?" இது ஊர்த்தலைவரின் மனைவியின் கேள்வி.

"மிக அருமையான கேள்விகளைக் கேட்டிருக்கிறீர்கள்." என்றார் யோகி. கேட்ட பெண்களின் முகத்தில் பூரிப்பு, அத்தனை சந்தோஷம்.

"இன்றைக்குக் கொஞ்சம் வெய்யில் அதிகமாக இருக்கிறது இல்லையா?"

என்று யோகி பொதுவாக வந்தவர்களிடம் ஒரே கேள்வியைத் தான் கேட்டார். அவ்வளவுதான், ஒவ்வொருவரும் போட்டி போட்டுக் கொண்டு, வெய்யில் நிலவரம், காடுகள் அழிந்து வருவது, ஓசோன் படலத்தில் ஓட்டை விழுந்திருப்பது என்று ஆரம்பித்து, கொசு, எலித் தொல்லை, வீட்டில் பிள்ளைகள் அட்டகாசம் இப்படி நிறைய தகவல்களை ஆர்வத்தோடு சொன்னார்கள். சாப்பாட்டு நேரமும் வந்தது. வந்தவர்கள் எல்லாம், விருந்து சாப்பிட்டு விட்டு, கிளம்பும் நேரமும் வந்தது. ஒருத்திக்கு மட்டும், கேட்ட கேள்விக்கு, யோகி நேரடியான பதில் சொல்லவில்லையே என்கிற நினைப்பு வர, "நாங்க சில கேள்விகள் கேட்டோமே...." என்று ஆரம்பித்தாள்.

"பதில் தானே! கேள்வியைத் தொடர்ந்து உங்களுக்குள்ளேயே இடைவிடாது கேட்டுக் கொண்டிருங்கள். விடை நிச்சயமாகக் கிடைக்கும்." என்று சொன்னார் யோகி.

"எப்போது கிடைக்கும்?" என்றாள் ஒருத்தி.

"இன்றைக்கே கூடக் கிடைக்கலாம். அல்லது நாளைக்கு. கேள்வியை நீங்கள் விடாமல் கேட்டுக் கொண்டிருப்பது முக்கியம்." யோகியின் இந்த பதிலைக் கேட்டு, எல்லோரும் அவரவர் வீட்டுக்குக் கிளம்பிப் போய் விட்டார்கள்.

பெரும் தனக்காரனுடைய மனைவி, அவர்கள் போன பிறகு, யோகியிடம் மெதுவாக,"ஐயா, தவறாக நினைக்கவில்லை என்றால், எனக்கு ஒரு சந்தேகம் கேட்கட்டுமா? எனக்கென்னமோ, நீங்கள் அவர்களுக்கு பதில் சொல்ல இஷ்டப்படாதது மாதிரி இருந்தது."

யோகி அமைதியாகச் சிரித்து விட்டு, அமைதியாக இருந்து விட்டார். அவளும், அந்த இடத்தை விட்டு அகன்றாள்.

மாலைப் பொழுதாயிற்று. யோகியைப் பார்க்க வருபவர்களை வரவேற்க, வேண்டிய ஏற்பாடுகளைச் செய்ய, பெரும் தனக்காரனின் மனைவி, பண்ணைவீட்டில் நின்று கொண்டிருந்தாள். ஊரிலேயே, மிகப் பெரிய பொய்யன், சூதாடி என்று பெயரெடுத்திருந்த ஒருவன் அவளிடம் வந்தான். கையெடுத்துக் கும்பிட்டான்.

"அம்மா, உன் கையில் அணிந்திருக்கிற சிவப்புக் கல் மோதிரத்தை, இன்றைக்கு ஒரு ராத்திரிக்கு மட்டும் இரவல் கொடு. நாளைப் பொழுது விடிந்தவுடன், பத்திரமாக உன்னிடம் திருப்பிக் கொடுத்து விடுகிறேன்." மிகவும் பணிவாக வேண்டினான்.

அவளுக்குக் கோபம் வந்தது, "என்ன தைரியம்? இங்கேயிருந்து ஓடிப்போய் விடு..உனக்காவது.... மோதிரம் இரவல் கொடுப்பதாவது..." அவள் போட்ட சத்தத்தில், கேட்டவன் பயந்து ஓடிப்போய் விட்டான்.

அவன் ஓடிப்போன பிறகு, யோகி அவளிடத்தில் வந்தார்."அம்மா, உன் கழுத்தில் அணிந்திருக்கிறாயே, அந்த காசுமாலையை, இன்று ஒரு இரவு மட்டும் எனக்கு இரவல் கொடு " என்று கேட்டார்.

அவளும் கொஞ்சம் கூடத் தயங்காமல், கழுத்தில் அணிந்திருந்த காசுமாலையைக் கழற்றி, யோகியிடம் நீட்டினாள். "இது மட்டும் போதுமா, இல்லை இன்னும் நகைகள் வேண்டுமா?"

யோகி சிரித்துக் கொண்டே சொன்னார்: "நல்லது அம்மா! கேட்டதும் கழற்றிக் கொடுத்து விட்டாயே! எனக்கு நகைகள் வேண்டாம். ஆமாம், அப்போது வந்தவன், ஒரு சிறு மோதிரம் தானே கேட்டான், ஏனம்மா, கொடுக்க மறுத்தாய்?"

"அவனுக்கா? அந்த பித்தலாட்டகாரனுக்குக் கொடுப்பதும், பாழும் கிணற்றில் வீசி எறிவதுமொன்று தான்! அவன் பெரும் பொய்யன்!"

"இப்போது புரிகிறதா அம்மா, உன் சிநேகிதிகளுக்கு ஏன் நேரடியான பதில் சொல்லாமல் தவிர்த்தேனென்று? அவர்களுக்குச் சொல்லியிருந்தால், அது அவர்கள் காதுகளில் ஏறாது அம்மா. நீ சொன்னாயே, அது போல அக்கறை இல்லாதவர்களுக்குச் சொல்வது கூட, மதிப்புள்ள பொருளைப் பாழும் கிணற்றுக்குள் வீசி எறிவது போலத்தான். புரிகிறதா, அம்மா? உன்னிடத்தில் மோதிரம் கேட்டு வந்தானே, அவனை அப்படி கேட்கும்படி தூண்டியவன் நான் தான். உனக்குப் புரிய வைப்பதற்காகவே, இதைச் செய்தேன்."

யோகியின் வார்த்தைகள், அவள் மனதில் ஏதோ வெளிச்சக் கீற்றுக்களைக் காண்பிப்பது போல இருந்தது.

அவள் யோசிக்க ஆரம்பித்தாள்.

ஒரு விவாதத்தில் இன்று எனக்கேற்பட்ட ஒரு அனுபவத்தைத் தொடர்ந்து எழுந்த சிந்தனையில், இந்தக் கதை பொருந்திப் போகவே, மொழிபெயர்த்து வெளியிட்டிருக்கிறேன். கதையின் முடிவில் ஆங்கிலத்தில் கதையின் கருத்தாகச் சொன்னது அப்படியே வெளியிடப்பட்டிருக்கிறது. ஆனால் எனக்கு, இதில் உடன்பாடு இல்லை.

விவாதக்களத்தை நிர்வகிப்பவர் வருத்தப்பட்டு, கைபேசியில் தொடர்புகொண்டு பேசியதைத் தொடர்ந்து, குறியீட்டுச் சொல்லும் [tag], இன்னும் ஒரு சொல்லும் 28/03/2009 இரவு 8.14 க்கு நீக்கப்பட்டது.

(One must have the adhikara, or right, not only to speak on spiritual matters, but also to seek answers to profound questions. In the second case, the right is earned by a sustained thirst for knowledge. Short of that, no knowledge, even when received, has any effect).

உடன்பாடு ஏன் இல்லை என்றால்,

"ஓராண் வழியாய் உபதேசித்தார் முன்னோர் *
ஏரார் எதிராசர் இன்னருளால் * - பாருலகில்
ஆசையுடையோர்க்கெல்லாம் ஆரியர்காள் ! கூறும் என்று*
பேசி வரம்பு அறுத்தார் பின்."

உபதேச ரத்தின மாலையில், ஸ்ரீ மணவாள மாமுனிகள் அருளியது.


காரேய் பெரும் கருணைஇராமானுசன், ஒளித்து வைப்பதற்கு ஏதுமில்லை.வேண்டும் என்று ஆசை கொண்டவர்க்கெல்லாம் மறைக்காமல், நுண் பொருளைச் சொல்லுங்கள் என்று வாரி வாரி, வந்தவர்க்கெல்லாம் ஆன்மீக ரகசியங்களைத் தந்தார்

எனும் மணவாள மாமுனிகள் வாக்கில் தெரிகிற சத்தியத்தினாலே!

மறைத்து வைக்கப் பட்டிருந்த ஆன்மீகப் பொக்கிஷங்களை, மிலேச்சரும் கூடத் தெரிந்து கொள்வது போல வெளிப்படையாகச் சொன்னார், ஞான சிம்மம் சுவாமி விவேகானந்தர்,அவருடைய வாக்கைப் படித்ததனாலே!

நன்றி.

Next Future, an e-zine published by Sri Aurobindo Society, Pondicherry India, March 2009 issue
http://nextfuture.sriaurobindosociety.org.in/mar09/nf_home.htm

ஸ்ரீ அரவிந்தர் சொசைடி வெளியீடு மார்ச் 2009 இதழில் திரு மனோஜ் தாஸ் எழுதிய சிறுகதையின் தமிழாக்கம், சின்ன சின்ன மாறுதல்களோடு.

3 comments:

 1. நன்றாகப் புரியச்செய்தார் யோகி....:-)

  கிருஷ்ணமூர்த்தி சார், Word verification இதை எடுத்துடுங்களேன் ப்ளிஸ்....:)

  ReplyDelete
 2. //ஆசையுடையோர்க்கெல்லாம் ஆரியர்காள் ! கூறும் என்று ...//

  இங்கே ஆசையுடையோர் என்பதை ”...sustained thirst for knowledge ” என்பதாகக் கொண்டால் முரண் ஏதும் இல்லை என்றே தோன்றுகிறது.

  கதையில் வரும் யோகி கேட்பவர்களின் தரத்தை அறிந்து சொன்ன அறிவுரையும் சரியே.

  ”பாத்திரம் அறிந்து பிச்சையிடு” என்பதும் அதையே குறிக்கிறது.

  ReplyDelete
 3. I agree with what Mr Krishnamurthi says. Had the Yogi enlightened the visitors , may be, they might have been given a chance one day or the other to start searching for the answers within themselves and thereby would have been put to the right path of SEEKING KNOWLEDGE!

  ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!