எப்போது விழித்துக் கொள்ளப் போகிறோம்?

அலாவுதீனின் அற்புத விளக்குப் போல எதைத் தேடினாலும் எடுத்துத் த்ரும் கூகிள் கூட கவியோகி சுத்தானந்த பாரதியாரது படத்தைத் தேடியபோது, திணறியது. கவியோகியாரது பாடல்களைப் பாடிப் புகழ் பெற்றவர்களது ஆல்பங்களின் முகப்பு அட்டையையும், ஒன்றிரண்டு சினிமாக்காரர்கள் போனால் போகிறது என்று அவரது பேரைச் சொன்ன போதிலும், அவர்களுடைய படத்தையும் தான் காண்பித்தது.

இது தமிழுக்கு வந்த சோதனை, தலை குனிய வைக்கும் வேதனை.


காதொளிரும் குண்டலமும்,கைக்குவளை

-யாபதியும்,கருணை மார்பின்

மீதொளிர்சிந் தாமணியும், மெல்லிடையில்

மேகலையும், சிலம்பார் இன்பப்

போதொளிர்பூந் தாமரையும், பொன்முடிசூ

ளாமணியும் பொலியச் சூடி,

நீதியொளிர் செங்கோலாய்த் திருக்குறளைத்

தாங்கு தமிழ் நீடு வாழ்க !
நால்வரிசை அமுதிருக்க, நம்மாழ்வார்

மொழியிருக்கச் சேக்கி ழாரின்

பால்வடிசெந் தமிழிருக்கக் கம்பச்சித்

திரமிருக்கப் பகலே போன்றுஞாலத்தி லறம்விளங்கும் நாயனார்

குறளிருக்க, நமது நற்றாய்,

காலத்தை வென்றோங்கும் கற்பகம்போற்

கனிபெருகக் கண்டி லோமோ !


அது 1980 ஆம் ஆண்டு.

உலகத் தமிழ் மாநாடு நடக்கிறது.

எம்.ஜி..ஆர் 1980 ஆண்டு நடந்த உலகத் தமிழ் மாநாட்டில் கவியோகி கலந்து கொள்வதற்காக, நட்சத்திர ஹோட்டலில் அறை ஏற்பாடு செய்து, அழைப்பிதழும் அனுப்பியிருந்தார். ஆனால், அரசியல் சாணக்கியர்கள், "அட சாமியார் எங்கே வரப்போறாரு!" என்று, அறை ஏற்பாட்டையோ, இல்லை அழைப்பிதழ் அனுப்பியது பற்றியோ, கவியோகிக்கு செய்தி அனுப்பாமல், அவர்களே அந்த அறையில் கும்மாளமடித்துள்ளனர்!

ஆனால், சுத்தானந்தரோ, " என் தாய் தமிழுக்கு விழா! நான் போகவேண்டும்!! என்று சொல்லி விழாவுக்குச் சென்றுவிட்டார்! பழ.நெடுமாறன் கவியோகி மேடையை நோக்கி வருவதைப் பார்த்ததும், ஓடோடிச் சென்று மேடைக்கு அழைத்து வந்தார். மேலே அமர்ந்திருந்த எம்.ஜி.ஆர் அவர்களுக்கு என்ன நடந்திருக்கும் என்று தெரிந்துவிட்டது!

அவர் தாமே, கவியோகியை அருகில் அழைத்து, முதல் நாள் விழாவைத் தொடங்கி வைக்குமாறு கேட்டுக்கொண்டார்! கவியோகி கணீர் குரலில் தான் எழுதிய தமிழ் தாய் வாழ்த்தான, " காதொளிரும் குண்டலமும் கைக்கு வளையாபதியும்.." எனும் பாட்டை பாடி வணங்கிவிட்டு, வணங்கி, கீழே இறங்கிச் சென்றுவிட்டார்!! பதைத்துப் போன எம்.ஜி.ஆர், திரு.பில்லப்பனை அழைத்து, "சுத்தானந்த பாரதியாரை எப்படியேனும் 5ஆம் நாள் விழாவில் பங்கு பெறச்செய்யுங்கள்." என்று கூறினார். மாநாட்டின் கடைசி நாளான 5ஆம் நாள் அப்போதைய பாரதப் பிரதமர் இந்திரா காந்தி அவர்களால், 5 தமிழ் அறிஞர்களுக்கு சிறப்பு மரியாதை செய்யப்பட இருந்தது! தான் தந்த பெயர் இல்லாததைக் கண்ட எம்.ஜி.ஆர், தனது கையாலேயே ஒரு பெயரை நீக்கிவிட்டு, கவியோகியின் பெயரை எழுதினார்! அவர் செய்ததை அடித்தெழுத யாருக்குத் தைரியம் வரும்? கடைசியில், எங்கோ திருச்சி வானொலி நிலையத்தில், தமிழ் கவிதை வாசிக்கச் சென்றிருந்த கவியோகியை, தனிக் காரில் அழைத்து வந்து அன்னை இந்திரா காந்தியால் கெளரவித்தார்கள், உலகத்தமிழ் மாநாட்டினர்!”

இப்படிப் புறக்கணிக்கப் பட்ட, தமிழ் கூறும் 'நல்லுலகம்' அனேகமாக மறந்தே போன கவியோகி சுத்தானந்த பாரதியைப் பற்றி தனது வலைப் பதிவில் குமுறியிருந்தார் மரபூர் J சந்திர சேகரன்.

காதல் மன்னனுக்குத் தபால் தலை! தமிழறிந்த கவிஞனுக்கு மரியாதை இல்லை என்று தன்னுடைய ஆதங்கத்தைக் கொட்டித் தீர்த்தவரை, கவியோகியாரது அண்ணன் மகள் வயிற்றுப் பேரன் என அறிந்து தொடர்பு கொண்டேன்.

“1987 ஆம் ஆண்டு சோழபுரத்தில் கவியோகியாரைச் சந்தித்தது இன்னமும் பசுமையாக நினைவில் உள்ளது. பாரத சக்தி காவியத்தை மறுபடி வெளியிட வேண்டும் என்ற அவரது வார்த்தைகள் இன்னமும் எனக்குள் எதிரொலித்துக் கொண்டிருக்கின்றன. சிறுவயதில் கவியோகியாரின் ஆத்மசோதனையையும், ஸ்ரீ ரமண சரிதத்தையும் படித்து மகிழ்ந்தவர்களில் அடியேனும் ஒருவன்.

ஸ்ரீ அரவிந்த ஆசிரமத்தில் ஸ்ரீ அன்னை சாதகர்களுக்குத் தன் கையாலேயே சூப் வழங்குவது, ஒரு பெரிய ஆன்மீக அனுபவமாகவே பேசப்பட்டதைப் படித்திருக்கிறேன். கவியோகியார் ஆசிரமத்தில் இருந்த அந்த நாட்களில், தினமொரு பாமாலையை அன்னைக்குச் சமர்ப்பணம் செய்வார் என்று கேள்விப் பட்டிருக்கிறேன். ஸ்ரீ அரவிந்த ஆசிரமத்தில், இந்த செய்திகளை, பாடல்களைத் தெரிந்துகொள்ளவும் ஆசைப் பட்டிருக்கிறேன்.

இப்போது, மின்தமிழில் திரு. சுகுமாரன் சொல்கிறபடி, புதுச்சேரி நண்பரைச் சந்தித்தால், ஆசிரம நிர்வாகிகளுடனும், குறிப்பாக திரு சீதாராமன் ஆசிரம காலாண்டு வெளியீடாக வரும் வைகறை என்ற தமிழ் இதழின் ஆசிரியராக இன்னமும் அவர் தான் இருக்கிறார் என்று நினைக்கிறேன், இவர்களிடமிருந்து கோர்வையாக ஒரு இருபத்து மூன்றாண்டு காலப் பொக்கிஷங்கள் கிடைக்கக் கூடும் என்று தோன்றுகிறது.

இப்படி என் ஆதங்கத்தை இந்தப் பக்கங்களிலும் பதிந்திருக்கிறேன்

//
வேறு பல மொழிகளில் காட்டிய ஆர்வத்தை, தமிழில் ஆசிரம நிர்வாகிகளோ, ஸ்ரீ அரவிந்த யோகத்தைப் பயிலும் தமிழறிந்த அன்பர்களோ காட்டவில்லை என்ற மனக் குறை எனக்கு நீண்ட நாட்களாகவே இருக்கிறது.

ஸ்ரீ அரவிந்தர் புதுவைக்கு வந்த புதிதில், குள்ளச்சாமியோடு பழகிய அனுபவங்கள் [பாரதியின் கவிதைகளில், குள்ளச்சாமியைப் பற்றிப் படிக்கலாம்], பாரதியோடு ரிக் வேத ஆராய்ச்சி செய்தது இப்படிப் பல விஷயங்கள், கவியோகி சுத்தானந்த பாரதியார், ஸ்ரீ அரவிந்த ஆசிரமத்தில் இருந்த போது, ஒவ்வொரு நாளும் ஒரு பாமாலையைத் தொடுத்து, ஸ்ரீ அன்னையிடத்தில் சமர்ப்பித்தது, இப்படிப் பல தேடல்கள் இன்னமும் இவனுக்குள் இருந்து கொண்டே இருக்கிறது. ஸ்ரீ அரவிந்த அன்னையின் அருளால், இவனது தேடல்களுக்கு உதவியாக இந்த வலைத்தளம் வளர வேண்டும் என்பது வெறும் ஆசை மட்டும் அல்ல, ஸ்ரீ அன்னையிடம் சமர்ப்பிக்கப் படும் இன்றைய பிரார்த்தனையும் கூட.//

கிடைத்திருக்கிற புத்தகங்களை scan செய்து வலைத்தளங்களில் தேடுவோற்குக் கிடைக்க உதவ முடியுமே.”

திரு சந்திர சேகரன் உடனடியாகப் பதிலும் அனுப்பி வைத்தார்:


"
தங்கள் மடல் கண்டு மிக்க மகிழ்ச்சி. அரவிந்த விஜயம் முதலில் தமிழ், ஆங்கிலம் தெலுங்கு ஆகியவற்றில் அரவிந்த விஜயம் எழுதியது சுத்தானந்தர். அங்கே வங்காளர்கள், வங்காளர்கள் அல்லாதவர் என்ற மவுன யுத்தத்தில், எங்கே அன்னையும் அரவிந்தரும், அன்பிற்கருளான சுத்தானந்தன் பிரதான சீடம் ஆகிவிடுவானோ என்று விஷம் வைத்ததையும், ஆலகாலனை தியானித்து விஷத்தை கழுத்தௌவரை நிற்கச் செய்ததையும், சுத்தானந்தர் தமதி, pilgrim's soulல் நகைச்சுவையாக எழுதியுள்ளார். அதோடு புதுச்சேரியை விட்டுவந்தவர்தான், மீண்டும் அங்கே போகவில்லை.

பாரத சக்தி மகாகாவியம் மறு பிரசுரம் ஆகிவிட்டது. சுத்தானந்தர் நூலகம் நடத்தும் நண்பர் நாகராஜன் மூலமாக. அவரது கீர்த்தனாஞ்சலியை சந்தங்களோடு புத்தகமாகவும், பெரும்பாலான பாடல்களை ஒலிப்பேழைகளாகவும் வெளிக்கொணர ஆசை. பார்க்கலாம். எல்லாம் அவன் சித்தம்.

//கிடைத்திருக்கிற புத்தகங்களை scan செய்து வலைத்தளங்களில் தேடுவோற்குக் கிடைக்க உதவ முடியுமே.//
இவை காப்புரிமை பெற்றவை: சுத்தானந்த யோக சமாஜம், சிவகங்கை.
வெளியிட விரும்புவோர், மூல நூலை பெற்றுக் கொண்டு, பதிப்புரிமை பெற்றுக் கொண்டு, சமாஜ சட்ட திட்டங்களுக்குட்பட்டு, அச்சிடலாம்.”

மின்தமிழ் வலைக் குழுமத்தில் இந்த பரிமாற்றம் வெளியானது. எனது பதிலையும் மறுபடி அனுப்பி வைத்தேன்:

"தங்களுடைய பதிலைப் படித்துப் பார்த்தேன். வங்காளிகள்-மற்றவர்கள் எனும்
பேதம் நிலவியதைக் குறிப்பிட்டிருந்தீர்கள். இப்படிப்பட்ட குறுகிய
மனப்பான்மை, அனேகமாக ஆன்மீக நாட்டத்தோடு வருகிற எல்லா நம்பிக்கைகளிலும்,
இருப்பதைக் காண முடியும். அரவிந்தர் ஆசிரமம் ஆனாலும், காஞ்சி சங்கர மடம்
ஆனாலும் சரி, இத்தகைய குறுகிய பார்வை தான் ஆன்மீக ஒளியை மறைத்துக்
கொண்டிருக்கிறது என்பது கசப்பான, ஆனால் நாம் காணும் நிதரிசனம்.

திருப்பராய்த்துறை ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவனத்தை நிறுவிய சுவாமி
சித்பவானந்தர் கூட இதே மாதிரி வங்காளிகளுடைய பிரபுத்வ மனப்பான்மையைத் தாங்கிக் கொள்ள முடியாமல் தான், ராமகிருஷ்ணா மிஷனில் இருந்து வெளியேறி, தனியொரு அமைப்பை நிறுவினார் என்பதைக் கேள்விப்பட்டிருக்கிறேன். இப்படி, நமக்குத் தெரிந்த நிறுவனப்படுத்தப் பட்ட எந்த ஒரு அமைப்பிலும் கூட, இதே மாதிரி அல்லது இதையும் விடக் கொடுமையான நிகழ்வுகளைப் பார்க்க முடியும்.

என்னுடைய சகோதரன் [பெரியம்மா மகன்] திரு தேவராஜன் சிவகங்கையில் தான் வசிக்கிறார். கவியோகியாரிடம் ஆழ்ந்த ஈடுபாடுகொண்டவர். நெருங்கிப் பழகும் வாய்ப்பையும் பெற்றவர்.ஆனால், இவரிடமிருந்து சின்ன சின்ன விஷயங்களைக் கூடப் பெற முடியவில்லை. பள்ளிப் பருவத்தில், என் வீட்டில் இருந்த ஆத்மசோதனை புத்தகத்தின் வழியாகத்தான், கவியோகியைப் பற்றி அறிந்துகொண்டேன். நேரில் தரிசிக்கிற வாய்ப்பு 1987 இல் தான் கிடைத்தது. அதற்குப் பின் 1992 ஆம் ஆண்டு, சோழபுரம் சென்று சமாதியை வணங்கும் வாய்ப்பு மட்டுமே கிடைத்தது. அப்போதும் கூட, அங்கிருந்தவர்களிடம் சரியான விவரங்களைப் பெற முடியவில்லை.விற்பனைக்காகக் கைவசம் இருக்கும் புத்தகங்களைக் கூட அப்போது தெரிந்து கொள்ள முடியவில்லை.

பதிப்புரிமை பற்றி நான் சொல்வதற்கு ஒன்றுமில்லை. ஆனால், இந்த ஒரு
வார்த்தையின் கீழ், குன்றின் மேல் இட்ட விளக்காகப் பிரகாசிக்க வேண்டியவரை, குடத்திற்குள் இட்ட விளக்காகக் குறுக்கி விடுகிறோம் இல்லையா?ஸ்ரீ ரமண ஆசிரமம் கூட, பதிப்புரிமை பெற்ற தங்களுடைய வெளியீடுகளை, இணையத்தில் வேண்டுவோர்க்கு pdf கோப்புக்களாக, இலவசமாக தரவிறக்கம் செய்துகொள்ளும் வசதியைத் தந்திருக்கிறது என்பதை அறிந்திருப்பீர்கள் தானே?

அது தவிர, நீங்கள் அறிந்த செய்திகளை, கேள்விப்பட்ட அனுபவங்களை
வலைப்பதிவில் பகிர்ந்துகொள்ள என்ன தடை?

ஏதோ தெய்வ சங்கல்பத்தின்படியே, சுத்தானந்த பாரதியாரைப் பற்றிப் பேச,
இப்படி ஒரு தனி இழை தொடங்கியிருப்பதாகவே கருதுகிறேன்.

புதுவை A.சுகுமாரனும், நீங்களும், இந்த இழையைப் படிக்கிற ஒவ்வொருவரும் [என்னையும் உள்ளிட்டு], கவியோகியாரைப் பற்றித் தங்களுக்குத் தெரிந்ததைப் பகிர்ந்து கொள்ளவும், தகவல்களைத் தேடிக் கொடுக்கவும், ஆரம்பித்தோமேயானால், இங்கேயே ஒரு தகவல் களஞ்சியமாக மட்டும் அல்ல, கவியோகியாரின் ஆன்மீகக் கருவூலமாகவும், ஆக்க முடியும்.

நம்பிக்கையோடு தொடங்குவோமா? “

"இங்கே நாம் எடுத்துக் கொண்ட விஷயம், கவியோகியாரைப் பற்றியது.

ஏறத்தாழ 250 புத்தகங்களுக்கு மேலாக எழுதியிருக்கிறார். அதில் 173 தமிழில்.”

தெரிந்தோ தெரியாமலோ, தமிழ் நாடு அரசு, அவருடைய படைப்புக்களை நாட்டுடைமையாக்கப் போவதாக அறிவித்திருக்கிறது. கவியோகியாரின் உறவினர்களின் நிர்வாகத்தில் இருக்கும் அறக்கட்டளை, என்ன முடிவெடுத்திருக்கிறது என்பது தெரியவில்லை.

அழகுதமிழில் கவியோகியார் தொடுத்த பாமாலைகளையும், அவருடைய யோக விளக்கங்களையும் தமிழ் மரபில் மறந்துவிடாமல் பாதுகாத்து வைக்க என்ன செய்யப் போகிறோம்?

தமிழக அரசின் நாட்டுடைமை வேண்டுகோளைஅறக்கட்டளை நிராகரித்துவிட்டதாக திரு சந்திரசேகரன் தெரிவித்திருக்கிறார். சோழபுரத்தில் சுத்தானந்தர் நிறுவிய ஒரு உயர் நிலைப் பள்ளி, இன்றும் அவரது உறவினர்களால், பராமரிக்கப்பட்டு வருகிறது.

கூகிள் தேடலில் சுத்தானந்தரைத் தேடினால், அவர் இயற்றிய கீர்த்தனங்களைப் பாடிப் புகழ் பெற்றவர்கள் விவரம், படம் கிடைக்கிறது. சினிமாக் காரர்களைப் பற்றி விவரம் கிடைக்கிறது. நிறைய தகவல்கள் மறக்கடிக்கப் பட்டு வருகின்றன என்ற நிலையில், அவருடைய படைப்புக்களைப் பகிர்ந்து கொள்வதில் இருக்கும் தடைகளை நீக்க அவரது உறவினர்களும் முன்வர வேண்டும்.

இசை இன்பம் என்ற வலைப்பதிவில், கவியோகியாரது பாடல்கள் D K பட்டம்மாள், நித்யஸ்ரீ பாடக் கேட்க முடிகிறது. அங்கேயும் இங்கேயுமாக இணையத்தில் கவியோகியாரது பேரைப் பார்க்க முடிகிறது. ஆனால், அவரைப் பற்றிய ஒரு முழுமையான வடிவம், அவரது பன்முகத்திறமை, பல மொழித்தேர்ச்சி, ஆன்மீக சாதனை, சுதந்திரப் போராட்டத்தில் பங்கு, மகாகவி பாரதி, ஸ்ரீ அரவிந்தர், ஸ்ரீ ரமணர், சுவாமி சிவானந்தர் இப்படிப் பல பெரியோர்களுடனான நெருக்கம், இவைகளை விரிவாகவும், தெளிவாகவும் அறிந்து கொள்ள முடியவில்லை என்பது பெரும் மனக்குறையாக இன்னமும் இருக்கிறது.

பன்முகத் திறமை கொண்ட கவியோகியாரது இலக்கியப் பணியின் ஒரு சிறு துளியை இங்கே சொடுக்கிக் காணலாம்!

மிக அருமையான விஷயங்களை, நம்முடைய கவனமின்மை, அலட்சியம், பிறகு பார்த்துக் கொள்ளலாம் எனும் சோம்பேறித்தனம் இவற்றால் இழந்திருக்கிறோம். நிறையவே இழந்திருக்கிறோம்.

இப்படிப்பட்ட மக்களுக்குத் தான் சுவாமி விவேகானந்தர் ஒரு தாரக மந்திரத்தை அளித்தார்:

"எழுமின்! விழிமின்! இலக்கை அடையும் வரை ஓயுதலின்றி உழைமின்!"

எப்போது விழித்துக் கொள்ளப் போகிறோம்?

No comments:

Post a Comment

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!