நாயனா, சின்ன நாயனாவை சந்தித்த கதை!


"நாயனா"வும் ஸ்ரீ ரமணரும்


"நாயனா"

"சின்ன நாயனா"


அது 1906 ஆம் ஆண்டு.

இருபதே வயதான இளைஞன் அவர். கபாலி சாஸ்திரி என்று பெயர். அப்பா கன்னிமாரா நூலகத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தவர். மகனுக்கு, திருமயிலை இறைவனது பெயரை வைத்ததுடன், ஐந்து வயதிலேயே ஸ்ரீ வித்யா மந்திரமும் சொல்லிக் கொடுத்தாயிற்று. எட்டு வயதிலேயே வால்மீகி ராமாயண மூல பாராயணம் ஆரம்பித்தாயிற்று. தினசரி, திருவொற்றியூரில் அம்பிகை சன்னதியில் ஸ்ரீ வித்யா மந்திர ஜபம் செய்கிற பழக்கம். அப்படி, அம்பாள் முன் மந்திர ஜபம் செய்து கொண்டிருந்த நேரம், இரண்டு, மூன்று பேர்கள் வருகிறார்கள். அவர்களில் ஒருவர், மெலிந்த தேகம், ஆனால் அவருடைய தோற்றப் பொலிவு இவர் சாதாரண ஆள் இல்லை,என்பதைச் சொல்லாமல் சொல்லுகிறது.

அம்பிகை சன்னதி முன் வந்து வணங்கி, கடகடவென வடமொழியில்துதிக்க ஆரம்பிக்கிறார். இதற்கு முன்னாள் கேட்ட ஸ்லோகம், ஸ்தோத்ரங்கள் மாதிரி இல்லை, அப்போது தான் அம்பாள் பெயரில் இயற்றி அவள் முன்னாலேயே அரங்கேற்றம் செய்தது மாதிரி இருக்கிறது. அவரும், கூட வந்தவர்களும், போய் விட்டார்கள். இளைஞராக இருந்த கபாலி சாஸ்திரியை, இந்த நிகழ்வு மிகவும் கவர்கிறது.

மறுநாள், அதே நேரம், திருவொற்றியூர் கோவிலில், கபாலி சாஸ்திரி, மந்திர ஜபம் செய்து கொண்டிருக்கிறார். முந்தைய நாள் போலவே, அந்த மனிதர் மறுபடி வருகிறார். ஆர்வத்தோடு பார்த்துக் கொண்டிருந்த கபாலி சாஸ்திரியைக் கூப்பிட்டு, யார் எவர் என விசாரித்துத் தெரிந்து கொள்கிறார். தன்னை வாசிஷ்ட கணபதி முனி எனவும் அறிமுகம் செய்து கொள்கிறார். யார், எவர் என கணபதி முனி கேட்கும் போதே, முந்தைய நாள் தான் கேட்ட துதிகளை, ஒரு இழை பிசகாமல் திரும்பச் சொன்ன கபாலி சாஸ்திரியை அவருக்கு மிகவும் பிடித்துப் போகிறது.

திருவண்ணாமலையில், அதுவரை பிராம்மண சாமி என்று மட்டுமே அறியப் பட்டிருந்த ஸ்ரீ ரமணரை, ஸ்ரீ ரமண மஹரிஷி எனவும், பகவான் ஸ்ரீ ரமணர் என்றும் உலகுக்கு அறிவித்த, காவ்ய கண்டர் என்றும் வாசிஷ்ட கணபதி முனி என்றறியப்பட்ட மஹான் அவர். மகா தபஸ்வி.

ரமணராலே, "நாயனா" என்று அன்புடன் அழைக்கப் பட்டவர்.

சாத்திரம் கற்றவர், கவிஞர், ஸ்ரீ வித்யா உபாசகர், அஷ்டாவதானி, ஜோதிடமும், மந்திர சித்தியும் பெற்றவர். அப்படிப் பட்டவரோடு, கபாலி சாஸ்திரிக்குத் திருவொற்றியூர் கோவிலில் ஏற்பட்ட உறவு, குரு-சிஷ்யன் உறவாக அப்போதிலிருந்தே ஆரம்பித்து விட்டது. அடுத்த நான்கு வருடங்களுக்குள், குரு, தானறிந்த வேதத்தின் நுட்பங்கள், உபநிஷத்துக்கள் சொல்கிற நுட்பங்கள், தந்திர சாஸ்திரத்தில் சொல்லப் பட்டவை இப்படி எல்லாவற்றையும், கபாலி சாஸ்திரிக்கு, வாத்சல்யத்துடன் சொல்லிக் கொடுத்தாயிற்று.

தன்னுடைய குருவான ரமண மகரிஷியிடம் கபாலி சாஸ்திரியை நாயனா அறிமுகம் செய்து வைக்கிறார். ஸ்ரீரமணருடனான சந்திப்பு, கபாலி சாஸ்திரிக்குக் கிடைத்த பெரிய பொக்கிஷம், அவருடைய ஆன்மீக சாதனையில், அனாயாசமாக ஒரு பெரிய மலையைக் கடந்தது போல! சாதாரணமாக, எவரையும் தொட்டுப் பேசாத ஸ்ரீ ரமணர் கபாலி சாஸ்திரியின் நெஞ்சில் தன் அருட் கரத்தை வைத்து, யோகத்தில் சொல்லப் படுகிற ஹ்ருதய கமலம் இருக்கிற இடத்தைக் காட்டிக் கொடுக்கிறார். ரமணருடைய ஹஸ்த தீக்ஷை கிடைத்ததை சொன்ன போதிலும், அது அவருடைய ஆன்மீக வாழ்க்கையில் என்ன பங்கு வகித்தது என்பதை கபாலி சாஸ்திரி வெளிப்படையாகச் சொல்லவில்லை.

வாசிஷ்ட கணபதி முனிவரை "நாயனா" என்று அன்போடு அழைத்த மாதிரியே, அவருடைய சீடப் பிள்ளை கபாலி சாஸ்திரியை "சின்ன நாயனா" என்று ஸ்ரீ ரமணர் தன் வாயாலேயே அழைத்தது ஒன்றே, ஸ்ரீ ரமணர் அவரிடத்தில் எவ்வளவு கருணையும், அன்பும் கொண்டிருந்தார் என்பதை சொல்லும். ஸ்ரீ .ரமணருடைய "நான் யார்" என்ற விசார மார்க்கத்தை, நன்றாக அறிந்து கொண்டு ரமண கீதை பிரகாசம், சத் தர்சன பாஷ்யம் என்ற நூல்களைப் பின்னால், படைக்கிறார்.

இன்றைக்குப் பங்குனி ஹஸ்தம். நாயனாவும் சின்ன நாயனாவும் சந்தித்ததை பற்றி எழுத வேண்டும் என்று நினைத்திருந்தது, இன்றைக்குக் கை கூடியது.

"சின்ன நாயனா" கபாலி சாஸ்திரி, மகாகவி பாரதி யைச் சந்தித்ததை அடுத்துப் பார்க்கலாம்!

********

சாலமன் நீதிக் கதைகளைப் பற்றி கேள்விப் பட்டிருப்போமே, அதில் ஒன்று.

முடிச்சுக்கு மேல் படு முடிச்சாக ஆயிரமாயிரம் முடிச்சுக்களோடு கூடின கயிற்றால் ஒரு வழி மறிக்கப் பட்டிருந்தது. முடிச்சை அவிழ்க்கத் தெரிந்தவர்கள் மட்டுமே மேலே முன்னேறிச் செல்லலாம் என்ற எச்சரிக்கை வேறு. எவருக்கும் அந்த முடிச்சுக்களை எப்படி அவிழ்ப்பது என்று புரியவில்லை. அங்கேயே தயங்கி நின்று விட்டார்கள்.

அரசன் சாலொமோனுக்குத் தகவல் தெரிந்தது. வ்ந்து பார்த்தான். முடிச்சுக்களை அவிழ்த்துக் கொண்டிருப்பது வெட்டி வேலை என்பது புரிந்தது, தன்னுடைய வாளை எடுத்தான், வெட்டினான், முடிச்சுக்களால் மறிக்கப் பட்டிருந்தது இரண்டாகப் பிளக்கப் பட்டு, வழியும் தெரிந்ததாம்.

அது மாதிரித் தான், மாற்றம் என்பதும். ஸ்ரீ அரவிந்த அன்னை அருளிய இந்த வார்த்தைகளை, இன்றைய த்யானத்திற்கு எடுத்துக் கொள்வோமா?


"In the old Chaldean tradition, very often the young novices were given an image when they were invested with the white robe; they were told:

"Do not try to remove the stains one by one, the whole robe must be purified."

Do not try to correct your faults one by one, to overcome your weaknesses one by one, it does not take you very far. The entire consciousness must be changed, a reversal of consciousness must be achieved, a springing up out of the state in which one is towards a higher state from which one dominates all the weaknesses one wants to heal, and from which one has a full vision of the work to be accomplished.

I believe Sri Aurobindo has said this: things are such that it may be said that nothing is done until everything is done. One step ahead is not enough, a total conversion is necessary."

- The Mother
[CWMCE, 8:402]

No comments:

Post a Comment

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!