முயற்சி செய்வது உன் வேலை! மலையை நகர்த்துவது என் வேலை!


ஒரு எளிய மனிதன். தேவைகளை அதிகம் வளர்த்துக் கொள்ளவில்லை, அதனால் எளிய, நிம்மதியான வாழ்க்கை. ஒரு கிராமத்தின் ஓரத்தில், சின்ன வீட்டில் வசித்து வந்தான்.

ஒரு நாள் இரவு-கனவு என்று தள்ளிவிட முடியாதபடி, அவனது வீடு முழுவதும் ஒளிவெள்ளம். இறைவன் அவனிடத்தில் நேரே பேசுவதற்காகவே வந்தமாதிரி இருந்தது.

"உனக்கு ஒரு வேலை, செய்கிறாயா?" கேட்கிறான் இறைவன்.

"நிச்சயம் செய்கிறேன், பிரபு!"

"உன் வீட்டின் எதிரே ஒரு கல்பாறை தெரிகிறதல்லவா? உன்னுடைய முழு வலிமையைக் கொண்டு, நீ அதை நகர்த்த வேண்டும். எவ்வளவு நாட்கள் ஆனாலும் சரி, பாறை நகர்கிற வரை அதுதான் உன் வேலை. புரிந்ததா?"

மறுநாள் பொழுது விடிந்தது முதல், அந்த மனிதனுக்கு அந்தப்பாறையை நகர்த்துவதே முழுநேர ஊழியமாயிற்று. நாட்கள், வாரங்கள், மாதங்கள் வருடங்கள் என்று கழிந்த பிறகும், பாறை கொஞ்சம் கூட நகர்ந்து கொடுக்கவில்லை.நாட்கள் இப்படியே ஓடிப்போனதில், அந்த மனதில் சிறு சலனம் உண்டாயிற்று.

'நாமும் இத்தனை காலமாக, அந்தப் பாறையை நகர்த்துவதற்காகப் படாத பாடு பட்டுக் கொண்டுதானிருக்கிறோம். அந்தப் பாறையோ, கொஞ்சம் கூட அசைந்து கொடுப்பதாக இல்லை. நம்முடைய உழைப்பு, நேரம் எல்லாம் இப்படியே விரயமாகிக் கொண்டிருக்கிறதோ?'

சலனத்திற்கு இடம் கொடுக்காதிருந்த வரை உள்ளே நுழைய முடியாத எதிர்மறையான எண்ணங்கள், அவனுள் புகுந்து குழப்ப ஆரம்பித்தாயிற்று.

"நீயும் எத்தனை நாள் தான் பாவம் இப்படியே கஷ்டப்பட்டுக் கொண்டே இருப்பாய்? அந்தப் பாறை கொஞ்சம் கூட நகர்வதாயில்லை. அதை நகர்த்த முடியாது."
உள்ளே புகுந்த எதிர்மறையான சக்திகள், அவனுள் அவநம்பிக்கையை வளர்க்க சாமர்த்தியமாகக் காய் நகர்த்தின.

"முடியாத ஒன்றிற்காக, இவ்வளவு பாடு படுவானேன்? ஏதோ, ஒப்புக்கு நகர்த்த முயற்சிப்பது மாதிரி இருந்து விட்டுப் போக வேண்டியது தானே!" நல்லது சொல்கிற மாதிரி, அவனை அவநம்பிக்கைக்குள் தள்ள முயற்சி ஜோராகவே நடந்தது.

அலுப்பும் சலிப்பும் ஆதிகமாகவே, அந்த மனிதனும், கிட்டத்தட்ட அதே முடிவுக்குத்தான் வந்திருந்தான். ஆனால்,ஆசைகளின் அலைக்கழிப்புக்கு உள்ளாகாமலேயே வாழ்ந்து வந்த படியால், இறைவனிடம் பிரார்த்தனை செய்து என்ன செய்வது என்று கேட்டு விடுவது என்ற முடிவுக்கு வந்தான்.

"ஆண்டவனே! நீ எனக்களித்த பணியை இத்தனை நாட்களாக முழு முயற்சியுடன் தான் செய்து வருகிறேன். ஆனாலும், இந்தப் பாறை, கொஞ்சம் கூட அசைந்து கொடுப்பதாய் இல்லை. ஒரு இம்மியளவு கூட என்னால் நகர்த்த முடியவில்லை.

எங்கே தவறாகிப் போனது என்பது தெரியவில்லை. ஏன் இப்படித் தோற்றுப்போனேன் என்பதும் எனக்கு விளங்கவில்லை. என்ன செய்யக் கருதியிருக்கிறாய் என்பதை நான் தெரிந்து கொள்ளலாமா?"

இறைவன், கருணையோடு பதில் சொன்னான்:
"உனக்கு இந்த வேலையை செய்யும்படி சொன்னேன், முழு மனதோடு, முழு பலத்தோடு இந்த வேலையை செய் என்று தானே சொன்னேன்! நீயும், இத்தனை நாள் முழு நம்பிக்கையோடு இந்த வேலையைச் செய்தாய் அல்லவா! உன்னுடைய பலத்தால் இந்தப் பாறையை நகர்த்திவிட முடியும் என்று நான் சொல்லவில்லையே?

உனக்கிடப்பட்ட வேலை, பாறையை முழு முயற்சியோடு தள்ளுவது. நீயும் உன்னுடைய பலத்தை எல்லாம் இத்தனை நாள் செலவழித்து விட்டு, தோற்றுபோனதாக நினைத்து வருத்தப் பட்டுக் கொண்டு, என்னிடம் முறையிட வந்திருக்கிறாய். உண்மையில் நீ தோற்றுப் போனாயா, என்ன?

உனக்கிடப்பட்ட வேலையை முழுமனதோடு செய்து வந்திருக்கிறாய். எதிர்ப்புக்கள், உன்னுடைய சக்தி எல்லாவற்றையும் மீறி, எவ்வளவு வளர்ந்திருக்கிறாய் என்பது உனக்குத் தெரியவில்லை.

முழுநம்பிக்கையுடன், முழு மனதோடு செய்வது மட்டுமே உன்னுடைய வேலை. மலையை நகர்த்துவது என் வேலை."

இப்படித்தான், உள்ளுணர்வாக நம்முள் இறைவன் என்ன செய்ய வேண்டும் என்பதைச் சொல்லுகிற தருணங்கள் வாழ்க்கையில் நிறையவே உண்டு. எதை செய்தாலும் முழு ஈடுபாட்டுடன் செய்வது மட்டுமே நம் வேலை. அவனது சித்தப்படியே ஆகட்டும் என்கிற உறுதியும், நம்பிக்கையும் மட்டுமே அவன் நம்மிடத்தில் எதிர்பார்ப்பது.

மலையை நகர்த்துவது அவன் வேலை.
நாம் அங்கே, சும்மா கருவிகள் மட்டுமே!



ஸ்ரீ அரவிந்த அன்னையின் அமுதமொழியை படித்தபோது, நினைவிற்கு வந்த கதை

“Faith is the movement of the soul whose knowledge is spontaneous and direct. Even if the whole world denies and brings forward a thousand proofs to the contrary, still it knows by an inner knowledge, a direct perception that can stand against everything, a perception by identity. The knowledge of the psychic is something which is concrete and tangible, a solid mass. You can also bring it into your mental, your vital and your physical; and then you have an integral faith - a faith which can really move mountains.”
- The Mother

1 comment:

  1. Krishnamurthy

    How are you Mohan from Yahoo 360.

    I want the English write up on Mother's article on Om Namo Bhagavate.

    if you get it please tell me.

    ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!