ஒரு மாபெரும் தருணம் நிகழ்ந்த நூறாவது ஆண்டு இன்று பிறக்கிறது.
இறைவனது ஆணையென, உள்ளுணர்வு வழி நடத்த, ஸ்ரீ அரவிந்தர், மார்ச் 31 ஆம் தேதி, கல்கத்தாவிலிருந்து புறப்பட்டு, SS டூப்ளே கப்பல் ஏறிப் பயணம் மேற்கொண்டு, பாண்டிச்சேரி வந்தடைந்த நாள், ஏப்ரல் 4, 1910.
ஸ்ரீ அரவிந்தர் தன்னுடைய இந்தப் பயணத்தைப் பற்றி இப்படிக் குறிப்பிடுகிறார்:
“I had accepted the rule of following the inner guidance implicitly and moving only as I was moved by the Divine.”
பெப்ரவரி மாதம், உள்ளேயிருந்து ஆணை பிறக்கிறது, 'சந்தர்நாகூருக்குப் போ' அதன்படி சந்தர் நாகூர் வந்தவருக்கு, மறுபடி பாண்டிச்சேரிக்குச் செல்லும்படி வழிகாட்டுதல் கிடைக்கிறது. பிஜாய் நாக் எனும் அந்தரங்கமான சீடர் மட்டுமே உடன் வர, ஏப்ரல் 4 ஆம் தேதி பின்மாலைப் பொழுதில், பாண்டிச்சேரி மண்ணில் காலடி எடுத்து வைக்கிறார் ஸ்ரீ அரவிந்தர். சுரேஷ் சக்கரவர்த்தி என்ற அன்பர் முன்னதாகவே புகைவண்டியில் வந்து சேர்ந்து, ஸ்ரீ அரவிந்தர் தங்குவதற்காக ஒரு வீட்டையும் ஏற்பாடு செய்து காத்திருக்கிறார்.
சங்கர செட்டி என்பவர், உள்ளூரில் பெரிய பிரமுகர், ஸ்ரீ அரவிந்தர் தங்குவதற்கு வீடு அளித்ததும் இவரே.
கோமுட்டி செட்டி தெரு என்றழைக்கப்பட்ட இடத்தில், திரு சங்கர செட்டி வீடு
ஆரம்ப காலத்தில் உடனிருந்தவர்கள், நாக் பினாய், சுரேஷ் சக்கரவர்த்தி, நளினி காந்த குப்தா மற்ற இருவர் விவரம் இல்லை
ஸ்ரீ அரவிந்தர், 1911-1920 கால கட்டத்தில் எடுத்த படம்
ஸ்ரீ அரவிந்த அன்னை, [அன்று திருமதி மிரா ரிச்சர்ட்] வலது கோடியில் பால் ரிச்சர்ட், ரவீந்தரநாத் தாகூருடன், ஜப்பானில் 1916 இல் எடுத்த படம்
பிரெஞ்சு இந்தியாவிற்கு வருகை தரும் சுதந்திரப்போராட்ட வீரர், காங்கிரஸ் கட்சியின் தலைவர்களில் ஒருவர், ஸ்ரீ அரவிந்தருக்குப் பெரிய அளவில் வரவேற்பளிக்க, அபிமானிகள் விரும்பிய போதிலும், சுரேஷ் சக்கரவர்த்தி, ஸ்ரீ அரவிந்தர் வருகை, இன்னமும் கொஞ்ச காலத்திற்கு, வெளியே பரவலாகத் தெரிய வேண்டாம், பிரிட்டிஷ் அரசு மும்முரமாகத் தேடிக் கொண்டிருக்கும்போது, இந்தமாதிரியான வரவேற்பெல்லாம், எதிர்மறையான விளைவுகளைத் தோற்றுவிக்கக் கூடும் என்று தடுத்து விட்டார்.
இதே நேரத்தில், பிரிட்டிஷ் அரசு, கல்கத்தாவில், ஸ்ரீ அரவிந்தரை சல்லடை போட்டுத் தேடிக் கொண்டிருந்தார்கள். ஸ்ரீ அரவிந்தர் ஆசிரியராக இருந்து நடத்திய கர்மயோகி இதழ், பிரிவினையைத் தூண்டுவதாகவும், ராஜ துரோகமாகவும் அறிவித்து அவரை சிறையிலே தள்ள, கல்கத்தாவிலும், அவரது ஆதரவாளர்கள் வீடுகளையும் வேட்டையாடிக் கொண்டிருந்த நேரம்.
ராம்சே மக்டோனால்ட், லேபர் கட்சியைச் சேர்ந்தவர், அன்றைக்கு எதிர் கட்சியாக இருந்து, பின்னாளில் இவர் பிரிட்டிஷ் பிரதமராகவும் ஆனார், பிரிட்டிஷ் மக்கள் அவையிலே, ஸ்ரீ அரவிந்தரது பத்திரிகையிலிருந்து, முழு கட்டுரையையும் வாசித்து காட்டி, இதில் எங்கே இருக்கிறது பிரிவினை வாதம் என்றெல்லாம் எடுத்துச் சொல்லிய பிறகு, அலிப்பூர் சதி வழக்கு எப்படிப் பிசுபிசுத்ததோ, அதே மாதிரி அரசின் முயற்சியும் தோல்வி அடைந்தது.
ஆனாலும், பிரிட்டிஷ் இந்திய அரசு ஸ்ரீ அரவிந்தரைத் தொடர்ந்து கண்காணிக்கவும், பாண்டிச்சேரி எல்லையிலிருந்து நகர்த்தி, பிரிட்டிஷ் இந்தியப்பகுதிக்குக் கொண்டு வந்து கைது செய்யத் தொடர்ந்து உளவாளிகளை அனுப்பிக் கொண்டே இருந்தது. அலிப்பூர் சதி வழக்கில் இருந்து விடுவிக்கப் பட்ட பின், உத்தர்பாரா என்ற இடத்தில், 1909 ஆம் ஆண்டில்,ஸ்ரீ அரவிந்தர் தனக்கு அளிக்கப் பட்ட வரவேற்பில் உரை நிகழ்த்தும் போது, இறைவனது திருவுள்ளக் குறிப்பு தனக்களிக்கப்பட்டத்தை மிக விரிவாகவே சொல்கிறார்.
உத்தர்பாராவில் ஸ்ரீ அரவிந்தர் நிகழ்த்திய உரையை, இங்கே முழுதுமாகப் படிக்கலாம்.
ஆக, பாண்டிச்சேரி வந்த பிறகு, ஸ்ரீ அரவிந்தரது வாழ்வின் இரண்டாவது பகுதி தொடங்க ஆரம்பித்தது. ஆன்மீக சாதனையைத் தங்கு தடையில்லாமல் தொடர்வதற்கு ஒரு அற்புதமான தருணமாக ஏப்ரல் 4 ஆரம்பமானது. முதல் பகுதியில், அடிமைப்பட்டுக் கிடந்த தேசத்தின் விடுதலைக்கான போராட்டம். இரண்டாவது பகுதியிலோ, மனிதகுலத்தை ஆன்மீக விழிப்பிற்கு இட்டுச் செல்லும் யோக சாதனைக் களம்.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பாதி, இருபதாம் நூற்றாண்டின் முற்பாதி [1850-1950] இந்த இரண்டு நூற்றாண்டுகளின் சந்தியில், ஆன்மீக வெளிச்சத்தைப் பரப்பிய மகான்களின் வருகைக் காலம் என்றே சொல்ல வேண்டும். இந்தப் புண்ணிய பூமியில், ஸ்ரீ ராம கிருஷ்ண பரமஹம்சர், சுவாமி விவேகானந்தர், ஸ்ரீ அரவிந்தர், வடலூர் திருவருட் பிரககாச வள்ளலார், ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள், ஸ்ரீ ரமண மஹரிஷி, இப்படி எண்ணற்ற பேரருளாளர்கள் அவதரித்து, ஒரு உன்னதம்மான ஆன்மீக எழுச்சிக்கு, இந்த தேசத்தைத் துயிலெழச் செய்த தருணமும் கூட.
" Oh, East is East and West is West, and never the twain shall meet"
என்று ருட்யார்ட் கிப்ளிங் என்ற ஆங்கிலக் கவிஞன் பாடினான். கிழக்கு கிழக்குத் தான், மேற்கு மேற்கு தான், இரண்டும் சந்திப்பதென்பது ஒருநாளும் நடவாது என்று தொடங்கும் இந்தக் கவிதை வரி ரொம்ப பிரசித்தமானது.
இந்த இரண்டும் சந்தித்து விடக்கூடாது என்பதில் இரண்டு பக்கத்திலுமே நிறைய அக்கறை இருந்ததையும் மீறி, கிழக்கும் மேற்கும் சந்திக்கும், ஆன்மீகப் பார்வையில் ஒன்றாகும் என்பதை உலகோர் அறியச் செய்த தருணங்கள் இந்த 1850-1950 கால கட்டத்தில் தான் நடந்தது. இங்கேயிருந்து ஒரு ஞான சிம்ஹம், சுவாமி விவேகானந்தர் சிகாகோ நகரத்திலே உலக சமயப் பாராளுமன்றத்தில் நிகழ்த்திய உரை, மேற்கில் இருந்தவர்களது கவனத்தைக் கிழக்கின் பால் ஈர்த்தது.
சத்தமே இல்லாமல், ஒரு அற்புதப் பேரொளி, மேற்கிலிருந்து கிழக்கு வந்து, இங்கேயே நிலைகொண்டு "அன்னை என்னும் அற்புதப் பேரொளியாக" ஆனதும், ஸ்ரீ அரவிந்தர் பாண்டிச்சேரிக்கு வந்த நான்காண்டுகள் கழித்து நடந்தது. 1914 மார்ச் 29 அன்று, ஸ்ரீ அரவிந்த அன்னை, பாரிசில் இருந்து புறப்பட்டு வந்து, ஸ்ரீ அரவிந்தரைச் சந்தித்து, தனது த்யானத்தில் கண்ட ஸ்ரீ கிருஷ்ணன் அவரே என்பதை அறிந்து கொண்டதும், நடந்தது.
கிழக்கும் மேற்கும் சந்திக்க ஆயத்தமாகிக் கொண்டிருந்த அதே வேளையில், வடக்கு தெற்கு என்கிற பேதம் இல்லாமல், ஸ்ரீ அரவிந்தரைச் சுற்றி, ஞானத்தைத் தேடும் அடியவர்களும் குழும ஆரம்பித்தனர். சுதந்திரப் போராட்டத்தில், ஒன்றாய் இருந்த அறிமுகத்தில் ஆரம்பமாகி, ஆன்மீகத் தேடலில் ஒன்றுகூடியவர்களில், மகாகவி சுப்ரமணிய பாரதிக்குத் தான் முதல் இடம். இருவரும் ரிக் வேத ஆராய்ச்சி செய்த தருணமும் இந்த 1910 கள்தான்!
வள்ளல் பெருமான், ஸ்ரீ அரவிந்தரது காலத்திற்கு முந்தியவர் என்றாலும் கூட, அவருடைய திருவருட்பாவில் விளிக்கப் படுகிற அருட்பெருஞ்சோதி, அரவிந்தர் கண்ட அதிமானச ஒளி தான் என்பதை அன்றைக்கும், ஏன் இன்றைக்கும் கூட நிறையப் பேருக்குத் தெரியாத செய்தி. பின்னாட்களில், ஒரு சாதகர், வள்ளலாரது திருவருட்பா குறித்து ஸ்ரீ அரவிந்த அன்னையிடம் கேட்கும் போது, ஸ்ரீ அன்னையும் வள்ளலார் குறிப்பிடும் அருட்பெருஞ்சோதியும், ஸ்ரீ அரவிந்தர் சொல்கிற Supramental Light அதிமானச ஒளியும் ஒன்றாகத் தான் இருக்க வேண்டும் என்கிற அபிப்பிராயத்தைச் சொன்னதாகப் படித்திருக்கிறேன்.
[T R துளசிராம் என்கிற அடியவர் இரண்டு தொகுதிகளில், ஸ்ரீ அரவிந்தர்-வள்ளலார் இருவரது தத்துவங்களையும் ஒப்பீடு செய்து, பல்கலைக் கழக வெளியீடாக, வெளி வந்திருக்கிறது.]
இதே தருணத்தில், இங்கே திருவண்ணாமலையில் ஸ்ரீ ரமண மஹரிஷி, ஆன்மீக நாட்டம் கொண்ட பலரை ஈர்த்துக் கொண்டிருந்தது, அனைவரும் அறிந்த ஒன்று தான். வாசிஷ்ட கணபதி முனி என்கிற தபஸ்வி, இவர் தான் ரமணரை பகவான் என்றும், ரமண மஹரிஷி என்றும் உலகறியச் செய்தவர். அது வரைக்கும், ரமணர், சேஷாத்ரி சுவாமிகளால் அடையாளம் காட்டப்பட்ட பிராமண சாமியாகத் தான் இருந்தார். ரமணர், கணபதி முனிவரை, அன்புடன் 'நாயனா' என்று தான் அழைப்பாராம்.
"நாயனா"வால் ரமண மகரிஷியிடம் அடையாளம் காட்டப் பட்டவர், சென்னை, மயிலாப்பூரைச் சேர்ந்த கபாலி சாஸ்திரியார், ரமணராலேயே "சின்ன நாயனா" என்று அழைக்கப்பட்டவரும் கூட. நாயனாவுடனும், ரமணருடனும் நெருக்கமாக இருந்தாலும், சின்ன நாயனாவுக்குத் தேடல் கொஞ்சம் அதிகமாகவே இருந்தது, ஸ்ரீ அரவிந்தருடைய Life Divine அப்போது "ஆர்யா"பத்திரிகையில் வெளிவந்து கொண்டிருந்த நேரம். மயிலையில் பாரதியைச் சந்தித்த போது "குஹையில் வளரும் கனலே பரமன் மகனே" என்று சொல்லக் கேட்கவும் ஆர்வம் தாங்கமாட்டாமல் சின்ன நாயனா, அதை விவரிக்கக் கேட்க, பாண்டிச்சேரியில் ஸ்ரீ அரவிந்தருடன் நடத்திய ரிக் வேத ஆராய்ச்சிகளைத் தெரிந்து கொள்கிறார்.
கபாலி சாஸ்திரியார் 1931 இல் சென்னை முத்தியால்பேட்டைப் பள்ளியில் பார்த்துக் கொண்டிருந்த ஆசிரியர் உத்தியோகத்தை விட்டு விட்டு ஸ்ரீ அரவிந்த ஆசிரமத்திலேயே தங்கி, ஸ்ரீ அரவிந்தரின் பூரண யோகத்தில் பங்கு பெறுகிறார். இதே மாதிரி, ரமண ஆஸ்ரமத்தில் சிறிது காலம் இருந்து கவியோகி சுத்தானந்த பாரதியாரும், பாண்டிச்சேரிக்கு வந்து ஸ்ரீ அரவிந்தருடன், அவரது யோகத்தில் பங்கேற்கிறார்.
வடக்கு-தெற்கு, கிழக்கு-மேற்கு இதையெலாம் கடந்து ஸ்ரீ அரவிந்த யோகம் பூரண யோகமாகத் தொடங்கிய நாள் ஏப்ரல் 4, 1910. ஒரு நூறு வருடம், ஆன பின்னும், அன்னை என்னும் அற்புதப் பேரொளியாக, தேடுகின்ற கண்களுக்குத் தெரிவதாகவும், கேட்பவர்க்குக் கேட்டபடி தருவதாகவும், ஆரம்பமான நாள் இது.
விட்ட குறை தொட்ட குறை என்று சொல்வதே அறியாமையின் வெளிப்பாடு தான். தேவைப்படுகிற தருணங்களில் எல்லாம், குருவருள்திருவருட் துணையாகப் பல வடிவங்களில், பல பேர்களில், பல வழிகளிலும் வந்ததை இப்போது உணர்கிறேன்.
என்றும் விட்டு விலகாத அருளே, என்னை ஸ்ரீ ரமண வழியைத் தெரிந்து கொள்ள வைத்தது.
சத்குரு சாதுராம் சுவாமிகளுடைய அருட்பார்வைக்கு ஆளான போதே, அவரை வைஷ்ணவியின் அணுக்கத் தொண்டராக்கிக் கொண்ட சாது ஸ்ரீ பார்த்தசாரதியும், பழநியில் சிறு வயது சேதுராமன் நாவில் ஆறெழுத்தை எழுதி, அருட்கவியாக ஆக்கி அடியார்க்கு சாதுராம் சுவாமிகளாக தந்த வள்ளிமலை திருப்புகழ் சச்சிதானந்த சுவாமிகளும், இவர்க்கும் குருவாகிக் கருணை செய்த அருணாச்சல ரமணனும், சத்குரு ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகளும், இவனை ஆட்கொண்ட அற்புதமும், கண்ணுக்குத் தெரியாத, ஆனால் இடைவிடாது பிணைக்கப் பட்டிருக்கிற ஆன்மீகத் தொடர்பாகவும் அடிநீரோட்டமாகவும் இருப்பதை உணரும் போது, தக்க சமயத்தில் தக்க துணையாகவும், வழிகாட்டியாகவும், ஸ்ரீ அரவிந்த அன்னையிடம் மறுபடி கொண்டு வந்து சேர்த்த அருட் திறத்தை வியந்து போற்றுவதையன்றி என்ன செய்ய முடியும்?
ஒரு உன்னதமான நிகழ்வு நடந்து நூறாண்டு காணும் இந்தத் தருணத்தில், அன்னை என்னும் அற்புதப் பேரொளியை வணங்குகிறேன். ஸ்ரீ அரவிந்தர் அருளிய அமுத மொழிகள் இவனுள் என்றைக்கும் நிலைத்திருக்க வேண்டுகிறேன்.
ஓம் நமோ பகவதே ஸ்ரீ அரவிந்தாய!
ஸ்ரீ அரவிந்தர், 1950 இல் எடுத்த படம்
I consider this as BLESSINGS FROM MOTHER to have come across this Blog. My thanks to MOTHER and also to the owner of this blog!
ReplyDelete