"ஜயமுண்டு பயமில்லை மனமே !"கபாலி சாஸ்திரியார், பிறந்தது சென்னையில், 1886 ஆம் வருடம், செப்டம்பர் மாதம் 3 ஆம் தேதி. திருமயிலை கபாலீஸ்வரனுடைய பெயரையே, மகனுக்குச் சூட்டி மகிழ்கிறார் விஸ்வேஸ்வர சாஸ்திரிகள். கன்னிமாரா நூலகத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தவர். ஐந்து வயதிலேயே மகனுக்கு ஸ்ரீ வித்யா மந்திரத்தைச் சொல்லிக் கொடுத்தார். சம்ஸ்க்ருதம்,பூஜை பாராயணம், ஜபம் எல்லாவற்றையும் தந்தையிடமிருந்து கற்றுக் கொண்ட கபாலி சாஸ்திரி, பன்னிரண்டு வயது நிறைவதற்கு உள்ளாகவே, வால்மீகி ராமாயணம் முழுவதையும் பன்னிரண்டு தடவை பாராயணம் செய்து முடித்து விட்டார்.

மயிலாப்பூர் ஹிந்து ஹை ஸ்கூலில் தான் கல்வி. ரைட் ஹானரபில் V S ஸ்ரீனிவாச சாஸ்திரியார் தலைமை ஆசிரியர். அந்த நாட்களில், ஸ்ரீனிவாச சாஸ்திரியாரது ஆங்கில மொழியின் ஆளுமை ரொம்ப பிரசித்தம். அப்படிப்பட்டவரது மாணவர், ஆங்கில வழிக் கல்வியிலும் சிறந்து விளங்கியதில், வியப்பு ஒன்றுமில்லை தான்.

காவ்ய கண்ட கணபதி முனி என்றும், வாசிஷ்ட கணபதி முனி என்றும் "நாயனா" என்று அன்போடு ரமணர் அழைத்த மாதிரியே, அன்பர்களால் அழைக்கப் பட்ட மகா தபஸ்வி, இளம் கபாலி சாஸ்திரிக்கு, வேதம், உபநிஷத்துக்களின் உட்பொருளை விளங்கச் சொல்லிக் கொடுக்கிறார். ரமண மகரிஷியின் தரிசனமும், ஹஸ்த தீக்ஷயும் கிடைக்கிறது. ரமணரின் "நான் யார்" என்கிற விசார மார்கத்திலும் நல்ல பரிச்சயம் ஏற்படுகிறது.

ஆனாலும் கபாலி சாஸ்திரியாரின் தாகம் தீருவதாயில்லை. ரமண வழி முடிவானதாக அவருக்குத் தெரியவில்லை. அந்த நாட்களில் ஸ்ரீ அரவிந்தர் "ஆர்யா" என்ற பத்திரிகையில் The Secret of Veda, Life Divine என்ற தலைப்புகளில் தொடர்ந்து கட்டுரைகள் எழுதிவந்தார். ஆர்யா பத்திரிகையில் ஸ்ரீ அரவிந்தர் எழுதி வந்ததைப் படித்த கபாலி சாஸ்திரியாருக்குப் புதிய தரிசனம் கிடைத்தது என்றே சொல்ல வேண்டும். அது வரை வேதத்தின் உட்பொருளாக, மரபு ரீதியாகக் காலம் காலமாகச் சொல்லப் பட்டதற்கும் அப்பால், புதிய சிந்தனை இழை ஸ்ரீ அரவிந்தரிடமிருந்து தொடங்குவதைத் தன்னை அறியாமலேயே, கபாலி சாஸ்திரியார் உணர்ந்த தருணங்கள் அவை.

ஸ்ரீ அரவிந்தர், பிரெஞ்சு ஆதிக்கத்தில் இருந்த பாண்டிச்சேரியில் இருக்கிறார் என்பது தெரியும். அரசியலை விட்டு ஒதுங்கி ஆன்மீக சாதனையில் தீவீரமாக இருக்கிறார் என்பதும் தெரியும். அவரைச் சந்திக்க வேண்டும் என்கிற ஆர்வம். எப்படி, எப்போது என்பது தான் தெளிவாகத் தெரியவில்லை. அதற்கும் ஒருசரியான தருணத்தை, இறைவன் ஏற்படுத்திக் கொடுக்கிறான்!

1917 ஆம் ஆண்டில் சங்கர ஜெயந்தியை ஒட்டிப் பாண்டிச்சேரிக்கு வருகிற வாய்ப்பு, கபாலி சாஸ்திரியாருக்குக் கிடைக்கிறது. மகாகவி சுப்ரமணிய பாரதியும் அந்த நேரத்தில் பாண்டிச்சேரியில் தான் இருந்தார். ஏற்கெனெவே, திருவல்லிக்கேணியிலும், நண்பர்கள் மூலமாகவும் நன்கு அறிமுகமானவரான, பாரதியைச் சந்திக்க முடியுமோ? பாரதிக்கும், ஸ்ரீ அரவிந்தருக்கும் நெருங்கிய பழக்கம் இருக்கிறதென்று சொல்லக் கேள்வி. பாரதியார், ஸ்ரீ அரவிந்தரைச் சந்திக்க உதவக் கூடுமோ?

பாரதியார் புதுவையில் தங்கியிருந்த வீட்டைத் தேடி வருகிறார் கபாலி சாஸ்திரி. மாடிப் படிகளேறி வரும் போதே மகாகவி பெரும் குரலில் பாடிக் கொண்டிருந்தார்:

"ஜயமுண்டு பயமில்லை மனமே! - இந்த

ஜன்மத்திலே விடுதலையுண்டு நிலையுண்டு"

பரஸ்பர குசலம் விசாரித்துக் கொண்ட பிறகு, பாரதி சென்னை நண்பர்கள் சிலரைப் பற்றி விசாரித்து விட்டு மறுபடி பாட ஆரம்பித்தார்:

"குருவே! பரமன் மகனே

குஹையில் வளரும் கனலே!"

கபாலி சாஸ்திரிக்கு பெரிய ஆச்சரியம், குகன் என்ற சொல், தகராகாசமாகிய ஹ்ருதயமென்னும் குகையில் வளரும் கனல், குமரனான முருகனையும் குறிப்பது, வேதத்தின் மிக ஆழ்ந்த கருத்தாக இருப்பது, இதை எப்படிக் கண்டீர்கள் என்று பாரதியிடம் கேட்கிறார்.

"ஸ்ரீமான் அரவிந்த கோஷுடன் ரிக் வேத ஆராய்ச்சி சிலகாலம் பண்ணிக் கொண்டிருந்த போது கண்டது இது" என்கிறார் பாரதி.

ஸ்ரீ அரவிந்தரைப் பற்றிய பிரஸ்தாபம் எழுந்தவுடனேயே, கபாலி சாஸ்திரியார், தான் அவரைச் சந்திக்கும் ஆர்வத்திலேயே பாண்டிச்சேரிக்கு வந்திருப்பதையும் சொல்லி, பாரதி அதற்கு உதவ முடியுமா என்று கேட்கிறார். அந்த கால கட்டங்களில், ஸ்ரீ அரவிந்தர், சாதாரணமாக எவரையும் சந்திப்பதில்லை; என்றாலும், ஸ்ரீ அரவிந்தருடன் தங்கியிருக்கும் ஒரு அன்பருக்குச் சீட்டுக் கொடுக்கிறார் பாரதி, இன்னார், ஸ்ரீ அரவிந்தரைச் சந்திக்க ஏற்பாடு செய்யுங்கள் என்கிற மாதிரி.

அன்று மாலையே, ஆறு மணிக்கு ஸ்ரீ அரவிந்தரைச் சந்திக்க, அனுமதியும் அழைப்பும் கிடைக்கிறது!

கவிதையோடு படமும் இணையத்தில் கிடைத்தது நன்றி


இன்றைய த்யானத்திற்கான ஸ்ரீ அரவிந்தரின் அமுத மொழி:
"Not to impose one's mind and vital will on the Divine but to receive the Divine's will and follow it, is the true attitude of sadhana. Not to say, "This is my right, want, claim, need, requirement, why do I not get it?" but to give oneself, to surrender and to receive with joy whatever the Divine gives, not grieving or revolting, is the better way. Then what you receive will be the right thing for you."

- Sri Aurobindo [SABCL, 23:597]

அவுட்லுக் வார இதழில் காங்கிரஸ் கட்சி மஹாத்மா காந்திக்கும், சுதந்திரப் போராட்டத்திற்கும் தாங்களே மொத்தக் குத்தகைதாரர் என்கிற மாதிரி, ஸ்ரீ அரவிந்தர் முதலான தலைவர்களை மறந்து போன அவலத்தைப் பற்றி ஒரு சிறு கட்டுரை வெளியாகியிருக்கிறது.

இங்கே படிக்கலாம்

1 comment:

  1. அரவிந்தர் அமுத மொழியும் கபாலி சாஸ்திரியரின் அனுபவமும் அருமை.

    அவுட்லுக் பத்திரிகயில் Francois Gautier கட்டுரை படித்தேன்.
    சரித்திரத்தைத் திரிப்பதாக பிறரைத் தூற்றும் ஆட்சியில் சரித்திரம் மறைக்கப்படுவதை யாரும் கண்டு கொள்வதில்லை :((

    ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!