கும்மி அடிக்க வாரீகளா.....!

எங்கெங்கோ விழா, பாராட்டு என்று படித்துக் கொண்டிருக்கும் நேரத்தில், ஒரு விளையாட்டு, மிக நல்லவிஷயங்களைச் சின்னஞ்சிறு பருவத்திலேயே விதைத்தவிளையாட்டு  ஒன்றை உருவாக்கிய நூற்றைம்பதாவது ஆண்டு விழாவைப் பதிவில் கொண்டாடினால் என்ன?

1860 ஆம் ஆண்டில், மில்டன் பிராட்லி என்பவர் உருவாக்கிய விளையாட்டு இது.

வாழ்க்கையென்னும் விளையாட்டு(The Game of Life) என்று பெயரிடப் பட்ட இது, செக்கர் போர்ட் விளையாட்டு மாதிரி, தாயம் மாதிரி ஒன்றைப்  போட்டு விளையாடுகிற மாதிரித் தான் இதுவும். போர்டில் இருக்கும்  கட்டங்களில் நல்ல இடங்களுக்கு வந்து சேர வேண்டும் அவ்வளவு தான் !

கீழே குழந்தை என்ற கட்டத்தில் ஆரம்பித்து, மகிழ்ச்சியான முதுமை என்று மேல் கட்டத்தில் முடியும் இந்த விளையாட்டு, என்னென்ன நல்ல பழக்கங்களை கைக் கொள்ள வேண்டும், எது உதவியாக ஏணியாக இருக்கும் என்பதை விளையாட்டாகவே சிறுவர்களிடம் விதைத்த விளையாட்டு இது. இந்த நூற்றைம்பது ஆண்டுகளில், இதன் வடிவம் நிறையத் தரம் மாற்றப்பட்டிருக்கிறது, புதுப்பிக்கப் பட்டிருக்கிறது. இன்னும் அதிக விவரங்களுக்கு

நல்லவிஷயங்களைப் பாராட்டுவதில் ஆண்டுக் கணக்கு அவசியமில்லை தான்!  இப்போது இதற்கென்ன என்கிறீர்களா?

இந்த விளையாட்டு, அமெரிக்கர்களின் வேலை செய்யும் மனோபாவத்தில் தேவையான மாற்றங்களை உருவாக்கும் பயிற்சியாக இப்போது புதிய வடிவத்தில் வளர்ந்துகொண்டிருக்கிறது. சரிவை ஈடு கட்ட வேண்டுமானால், இழந்த வேலைகளைத் திரும்பப் பெற வேண்டுமானால், சில அடிப்படைப் பண்புகளை வளர்த்துக் கொள்ளவேண்டும் என்பதை ஒரு விளையாட்டு மூலமாகவே சொல்லிக் கொடுக்கும் முயற்சியாக வளர்ந்து கொண்டிருப்பதைப் பார்க்க இங்கே!

அப்படி ஒரு பரிசீலனை, முயற்சி நடந்துகொண்டிருக்கும் நேரத்தில் இங்கே நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம்?  

சில நல்ல தகவல்கள், உருப்படியான சிந்தனையைத் தோற்றுவிக்கிற விவாதங்களில், பின்னூட்டமிடுகிறவர்கள் விஷயத்தை விட்டு விலகித் தங்களுடைய சொந்தக் காழ்ப்புணர்வு அல்லது அதிமேதாவித்தனத்தைக் காட்டிக் கொள்ளும் தருணங்களில், என்ன நோக்கத்தோடு அந்தப் பதிவு அல்லது விவாதம் தொடங்கியதோ அந்த நோக்கமே அடிபட்டுப்போய் விடுவதை நிறையத் தருணங்களில் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன்! நிறையப் பின்னூட்டங்கள் என்பது பெரும்பாலான தருணங்களில், விஷயத்தை அவரவர் மனம் போன போக்கில் திருப்புகிற ஒன்றாகத் தான் பார்க்க முடிகிறது.

டோண்டு ராகவன் தன்னுடைய பதிவுகளில் அவுட்சோர்சிங் பற்றிய தனது எண்ணங்களை இரண்டு பதிவுகளாக எழுதினார். கொஞ்சம், இன்றைய யதார்த்தத்தைத் தொட்டுச் சொல்ல முனைந்த பதிவாகவும் இருந்தது.

பகுதி ஒன்று! பகுதி இரண்டு!

இங்கே பின்னூட்டங்கள், எடுத்துக்  கொண்ட விஷயத்துக்குப் பொருத்தமாக இருந்ததா, படிக்க வருபவர்களுக்கு எந்த விதத்திலாவது உபயோகமாக இருந்ததா அல்லது தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களில் முற்றுப்பெறாமலேயே, பத்தோடு பதினொன்றாகப் போய்விட்டதா என்பதை நீங்களே தான் முடிவுசொல்ல வேண்டும்.
அப்படியே எனக்கும் சொல்வீர்களேயானால், மிக நல்லது!

வலைப்  பதிவுகளில் உருப்படியாக எந்த ஒரு விவாதத்தையும், தொடர்ச்சியாக எடுத்துச் செல்ல முடிவதில்லை என்ற ஒரு விஷயமே திரும்பத் திரும்ப எனக்குப் பட்டறிவாகக் கிடைத்துக் கொண்டிருக்கிறது. இது மாதிரி ஒரு விவாத இழையாக நடத்தவேண்டுமானால் அதற்கு வலை குழுமங்கள்தான் சரியான இடம் என்று பார்த்தால், அங்கேயும் கூட இதே மாதிரிப் பிரச்சினைகள் வேறு வடிவங்களில் வருவதைப் பார்க்க முடிகிறது. ஒரு நல்ல விஷயம் ரொம்ப சுவாரசியமாகப் போய்க்கொண்டிருக்கிறது என்று நினைத்துக் கொண்டிருப்போம், ஒரு பதில் அத்தனை பேர் மூடையும் கெடுக்கிற மாதிரியோ, திசை திருப்பி விடுகிற மாதிரியோ தொண்டைக்குள் சிக்கிக் கொண்ட முள்ளாகப் படுத்தும்.

அல்லது, நன்றாகப்போய்க் கொண்டிருக்கிற ஒரு விவாதம், முற்றுப்பெறாமலேயே அப்படியே அந்தரத்தில் நிற்கும். இங்கே கொஞ்சம் கும்மியடிக்க வருகிறவர்கள், வேறு பக்கம் மேளச் சத்தமோ, உறுமி முழங்குவது போலவோ கேட்டால் உடனே அங்கே போய்க் கும்மியடிக்கப் போய்விடுவார்கள்! அந்த இடத்திலாவது, கொஞ்சம் நின்று கும்மியடிப்பார்களா என்று பார்த்தால், இன்னொரு மேளச் சத்தம் அல்லது உறுமி முழங்க ஆரம்பிக்கிற வரைதான்!  


இப்படித்தான்! மின்தமிழ் கூகிள் வலைக் குழுமத்தில் அரசை உருப்படியாக வேலை செய்ய வைக்க என்ற தலைப்பில் ஒரு நல்ல விவாத இழை தொடங்கினார்களே என்று சந்தோஷப்பட்டு இங்கேயும் எனது கருத்தாக ஒரு பதிவையும் எழுதினேன். அவுட்சோர்சிங் பிரச்சினை மாதிரியே அரசை வேலை செய்ய வைப்பதென்பதும் கொஞ்சம் விவாதிக்கப் படவேண்டிய விஷயம் தான்!

என்னத்தை எழுதி என்ன பண்ண....!


கொஞ்சம் சுயமாகச் சிந்திப்பது என்றாலே இங்கே நிறையப்பேருக்குக் கசக்கிறது. வெளிப்படையாகத் தமது எண்ணங்களை எடுத்து வைக்கக் கூடத் தயங்குவதைப்  பார்க்க முடிகிறது. அப்படியே ஒரு கருத்தைச் சொல்ல முன்வந்தாலும்,  ஒரு நிலையை எடுத்து விட்டு அதையே பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கும் வேடிக்கை மனிதர்களையுமே நிறையப் பார்க்க முடிகிறது.

சரி, சீரியஸ் தனமில்லாத செய்திகளாகப் பார்த்துப் பதிவெழுதலாமே என்று எழுதினால்,கௌதமன் சார் வந்து, நடத்துங்க! நாராயண! நாராயண! என்று மட்டும் சொல்லிவிட்டுப் போய்விடுகிறார்!

எங்கே போய்க் கொண்டிருக்கிறோம்?






2 comments:

  1. போற்றுவோர் போற்றட்டும். தூற்றுவோர் தூற்றட்டும். போகட்டும் கண்ணனுக்கே. பின்னூட்ட மட்டுறுத்தல் மூலம் வேற்று பின்னூட்டங்களை தவிர்த்தால் கொஞ்சம் இந்த dilution-ஐ கட்டுப்படுத்தலாம். உங்கள் இயல்பான serious பதிவுகளை விட்டுவிடாதீர்கள்.

    ReplyDelete
  2. நல்லது, ஆதரவுக்கு நன்றி!

    ப்ரோபைல் அடையாளம் தெரியாமல் இருப்பது கூட சமயங்களில் அனானி பின்னூட்டங்களுக்குச் சமமாகிவிடுமே. அறிந்திருக்கிறீர்களா ரவி!

    ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!