சண்டேன்னா மூணு! ஒண்ணு பாம்பு! ரெண்டு பென்சில் மேலே! மூணு குழி!

பரபரப்பான செய்தி என்றால் பிள்ளையார் பால் குடிக்கிறார், சாமி படத்தில் விபூதி குங்குமம் வருகிறது, ஏசு என்னோடு வாக்கிங் வருகிறார், ஏசு என்னோடு சேர்ந்து ஏப்பம் விட்டார், ஏசுவை அழைத்து வியாதி சொஸ்தம் ஆகிறது இப்படித் தான் புருடா விட வேண்டும் என்பது இல்லை! ஆனாலும் இந்த மாதிரிப்  புருடாக்கள், கல்லாக் கட்டுவதற்கு மிகவும் வசதியாக இருக்கின்றன என்பதை மறுக்கவும் முடியாது!

புருடாக்கள், இங்கே
அரசியல் தலைகளாகவும்,  மோசமான ப்ராண்டாகவும் ஆகிக் கொண்டிருக்கின்றன!

இந்தப் படத்தைப் பாருங்கள்! இது பரபரப்புச் செய்தியா, கல்லாக் கட்ட விடப்பட்ட புருடாவா என்பதை, அப்புறம் பார்க்கலாம்! இங்கே, தைவான் நாட்டில் தைப்பே நகரில் ஒரு பாம்பு புகை பிடிக்கிறதாம்! ஷோ லா என்பவர் தினசரி புகை பிடித்துவிட்டுத் தூக்கி எறிந்த துண்டுகளைக் கவ்வி, இந்தப் பாம்பு புகை பிடிக்கக் கற்றுக் கொண்டதாம். காலையில் ஒன்று இரவில் ஒன்று என்று குறைந்தது இரண்டு சிகரெட் குடித்தால் தான், இந்த விஷமில்லாத பாம்பு அமைதியாக இருக்கிறதாம்! செய்தியை இங்கே பார்க்கலாம்!

கிழக்கத்திய மக்கள் நம்மைவிடப் புருடா மன்னர்கள் என்பதை மனதில் வைத்துக் கொண்டு, இதை நம்புவதா வேண்டாமா என்று நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்! சீனப் பூச்சாண்டியைப் பற்றி ஏற்கெனெவே பல முறை பேசியிருக்கிறோம் இல்லையா!

பூ! இவ்வளவுதானா, இதைவிடப் பெரிய புருடாவை எல்லாம் நாங்கள் ராம நாராயணன் படங்களிலேயே பார்த்திருக்கிறோமே என்கிறீர்களா, அதுவும் சரிதான்!


*******

இது நிஜம்! புருடா இல்லை!

 
நேஷனல் ஜியாகிரபிக் தினமொரு புதுவகை உயிரினத்தைப் பற்றிய அறிமுகம் செய்ததில் பார்த்து வியந்த இந்த சிறிய பிராணியின் பெயர் ஜெகோ! பென்சில் எரேசர் மீது எவ்வளவு சௌகரியமாக உட்கார்ந்து  கொண்டு போஸ் கொடுக்கிறது பாருங்கள்! 

ஈக்வடார் நாட்டின் கானகப் பிரதேசங்களில் சென்ற ஜனவரியில் கண்டறியப்பட்ட புது உயிரினங்களில்,  பல்லி வகையைச் சேர்ந்த இந்த சின்னஞ்சிறிய பிராணியும் ஒன்று! செய்தியும், அதிக விவரங்களும் படிக்க இங்கே


*******

மதத்தின் பெயரால், கலாசாரம் நற்குடிப் பண்பு இவைகளைக் காப்பதாகச் சொல்லிக் கொண்டு மதவாதிகள் பெண்கள் மீது நடத்தும் தாக்குதல், வன்முறைகளைப் பற்றி ஏற்கெனெவே பேசியிருக்கிறோம்! மௌல்விகள் கையில் சிக்கிச் சீரழிவது, பெரும்பாலும் சிறுவயதுப் பெண்களாகவே இருப்பதும், கல்வியறிவு பெறுவதில் தொடர்ந்து தடைகளை இந்த மத குருமார்கள், தாலிபான்கள் விதிப்பதையும் முந்தைய பதிவு ஒன்றில் வீடியோவாகப் பார்த்திருக்கிறோம்.

சென்ற டிசம்பரில், துருக்கியில், பசங்களுடன் பேசுகிறாள் என்று, கௌரவத்தைப் பாதுகாப்பதற்காகக் குடும்பமே கூடி முடிவெடுத்து, பதினாறு வயதுச் சிறுமியை, உயிரோடு குழிதோண்டிப் புதைத்த கொடூரம் வெளியாகி இருக்கிறது. மதீனா, முசல்மான்களின் புனித நகர்களில் இரண்டில் ஒன்று அதன் நினைவாக மதீனே என்று பெயரும் வைப்பார்களாம். ஆண்களுடன் பேசியதற்காகக்  குழி தோண்டியும் புதைப்பார்களாம்!

செய்திகளை விரிவாகப் படிக்க ஒன்றுக்கு மூன்றாகச் சுட்டிகள்.

மதீனே மிமி என்ற இந்தப்பதினாறு வயதுச் சிறுமி செய்த குற்றம் தான் என்ன?  

அவள் தகப்பன் சொன்னது. "அவள் ஆண்களுடன் சிநேகிதமாக இருக்கிறாள்."  
ஆண்களுடன் பேசுவதே அவமானமாகவும், பெரும் பாவமாகவும் ஆகிவிட்டது! தகப்புனும் பாட்டனுமாக அந்தப் பெண்ணை அடித்தார்கள். அவஸ்தை தாங்க முடியாமல், அந்தச் சிறுமி காவல்  நிலையத்தில் தஞ்சம் புகுந்த மூன்று சந்தர்ப்பங்களிலும், காவல்துறை அலட்சியப்படுத்திவிட்டு, அவளை அவளது வீட்டுக்கே அனுப்பி விட்டது. இதைச் சொல்வது அந்தப் பெண்ணின் தாய்!

தோட்டத்தில் குழி தோண்டி உயிரோடு புதைத்திருக்கிறார்கள்! நாற்பது நாட்களாக அந்தப் பெண்ணை வெளியில் காணவில்லை என்றவுடன், அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் காவல் துறைக்குத் தகவல் சொல்ல, அவர்களும் வந்து  தோண்டி    எடுத்திருக்கிறார்கள். பிரேத பரிசோதனையில், அந்தப்பெண்ணின் நுரையீரல், வயிற்றுப் பகுதிகளில் மண் இருந்தது, அவள் புதைக்கப் படும்போது உயிரோடு தான் இருந்திருக்கிறாள் என்பதை நிரூபித்திருக்கிறது. வேறு காயங்களோ, மயக்க மருந்தோ இல்லை என்றும் தெரிய வந்திருக்கிறது. 

பெண்களை இழிவு படுத்துகிற எந்த ஒரு சமுதாயமும் நாகரீகமானதாக இருக்க முடியாது. 

பெண்களைத் துன்புறுத்துகிற எந்த ஒரு செயலுமே ஆதரிக்க முடியாதது. 

இங்கே பர்தா, நற்குடி, அதற்கு வக்காலத்து வாங்கி எழுதியவர்கள் என்ன சொல்லப் போகிறார்கள் என்பதை அறியக் காத்திருக்கிறேன்.

ஒரு பின்குறிப்பு:
பராரி என்ற பெயரில் தன்னை அடையாளம் காட்டிக் கொள்ளாமல், தன்னுடைய உணர்வைப் பதிவு செய்திருப்பது இங்கே தமிழில் -


"யாரோ ஒரு மூடன்  செய்ததை வைத்து அனைத்து சமுதாயத்தையும் குற்றம் சொல்ல வந்த முழு மூடன் தான்  நீ ".
பதிவில் சொல்லப்பட்ட செயல்  மூடத்தனமானது என்பதை ஒப்புக் கொண்டதற்காக நன்றி. நான் மூடனா அல்லவா என்பது பிரச்சினையே அல்ல!

பதிவை  படிக்கத் தெரிந்தவர்களுக்கு அல்லது தமிழ் புரிந்தவர்களுக்கு, மேலே சொல்லப்பட்ட வரிகளில், ஒரு தனி நபரின் செயலை ஒரு சமுதாயத்தின் மீது ஒட்டு மொத்தமாகச் சுமத்தப் படுகிறவிதத்தில் எதுவுமே இல்லை என்பது தனியாகச் சொல்ல வேண்டியது இல்லை. 
அதனால் இந்தப் பின் குறிப்பு புரிந்துகொள்ள முடிந்தவர்களுக்காக இல்லை! பராரி மாதிரி, ஐயோ நம்மை, நம்முடைய மதத்தைக் குறை சொல்கிறார்களே என்று பதறிக் கொண்டு வருகிற இன, மதக் காவலர்களுக்காக!

"The defenders of the truth are often worse than the enemies of the truth."

பதிவின் முதல் நான்கு வரிகளைப் படிக்கத் தெரிந்தாலே, மூடத்தனம் அது எந்த மதத்தில் இருந்தாலுமே, கண்டிக்கப் படவேண்டியவைதான் என்பதைத் தனியாக இன்னொரு தரம் சொல்லவேண்டியிருக்காது. சொன்னதில் தவறு இருந்தால், சுட்டிக் காட்ட முடிந்தால், திறந்த மனதோடு ஏற்றுக் கொள்வதற்கு நான் தயங்கப்போவது இல்லை. வெறுப்பை உமிழும் வார்த்தைகளை வீசுபவர்களைக் கண்டு எனக்கு பரிதாபம் தான் வருகிறது. அதற்காக, அபத்தமான பின்னூட்டங்களைப் படித்து அனுமதிக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை!
 
அடுத்து தாலிபான் மயமாகி  வரும் சூழ்நிலை, உலகத்துக்கு மட்டுமே அல்ல, அந்த மதத்துக் காரர்களுக்கே எப்படி பெரும் தீங்காக வளர்ந்து கொண்டிருக்கிறது என்பது தான் நம்பத் தகுந்த செய்தி ஆதாரங்களுடன், இந்தப் பதிவு தொட்டுச் சொல்கிறது. அவ்வளவுதான்!




 

12 comments:

  1. yaaro oru moodan seithathai vaiththu anaiththu samuthayathaiyum ktram solla vantha muzu moodan thaan nee.

    ReplyDelete
  2. அடுத்து பாம்பு தண்ணி அடிப்பது பற்றியும் செய்தி வரலாம்!
    சுவாரஸ்யமான இரண்டு தகவல்கள்.
    மூன்றாவது...கொடுமை.

    ReplyDelete
  3. பராரி!

    யாரோ ஒரு மூடன் மட்டுமில்லை, மதத்தின் பெயரால் மத குருமார்கள் செய்து வரும் தொடர் நிகழ்வுகள் இவை! இந்த ஒடுக்குமுறை உண்மையா இல்லையா என்பதை உங்கள் நெஞ்சைத் தொட்டுச் சொல்ல முடியுமானால், நல்லது!

    நான் மூடனா அல்லவா என்பது இங்கே பிரச்சினையே இல்லையே!
    அதனால் எவருமே சிறுமைப் படுத்தப்படவோ, கொடுமைக்குள்ளாவதோ இல்லையே!

    கண்ணைத் திறந்து பாருங்கள்! இன்றைய நவீன உலகில் செய்திகளை மூடி மறைத்து விட முடியாது, தவறுகளை, கலீபாக்கள் காலம் போல நியாயப் படுத்தி விடவும் முடியாது.

    தன்னுடைய தரப்பில் இருக்கும் குற்றம் குறைகளை ஒத்துக் கொள்ளவும், திருத்திக் கொள்ளவும் கூட தைரியம் வேண்டும்! நாணயம் வேண்டும்!

    ReplyDelete
  4. ஸ்ரீராம்!

    நீங்கள் சொன்னதற்குப் பின்னால் தான் எனக்கு ஒரு சந்தேகமே வருகிறது!

    தண்ணீரிலேயே கிடக்கும் பாம்பு தண்ணியடிக்குமா, அல்லது தண்ணீர் குடிக்குமா?

    :-))

    ReplyDelete
  5. "தண்ணீரிலேயே கிடக்கும் பாம்பு தண்ணியடிக்குமா, அல்லது தண்ணீர் குடிக்குமா?"

    குடத்துல (சின்ன சைஸ்தான்)தன் வீட்டுக்கு தண்ணீர் எடுத்துப் போகாம இருந்தா சரி..!

    ReplyDelete
  6. ம்ம்ம் நடக்கட்டும்...

    ReplyDelete
  7. அண்ணாமலையாருக்கு ஹரோஹரா!

    உங்கள் பின்னூட்டத்திற்கு என்ன அர்த்தம் என்பதை நீங்களே புரியும்படி சொல்ல முடிந்தால் நன்றாக இருக்கும், இல்லையா:-))

    ReplyDelete
  8. முதல் செய்தி :அறிவியல் வளர்ந்தும் பல மனிதர்களுக்கு அறிவு வளரவில்லை.
    இரண்டாம் செய்தி : இயற்கையின் மேலும் ஒரு அதிசயம்.
    மூன்றாம் செய்தி : மனித தன்மையற்ற செயல். படிக்கவே கஷ்டமாக இருக்கிறது.
    இல்லாத ஆண்டவா ! இருக்கிற இந்த 'மதம் ' பிடித்த மிருகங்களிடமிருந்து
    மக்களை காப்பாற்றுப்பா !

    ReplyDelete
  9. கிருஷ்ணமூர்த்தி அண்ணே.... நீங்க ஒரு நடமாடும் நியூஸ் மேன்...

    ReplyDelete
  10. //இந்தப் பாம்பு புகை பிடிக்கக் கற்றுக் கொண்டதாம். காலையில் ஒன்று இரவில் ஒன்று என்று குறைந்தது இரண்டு சிகரெட் குடித்தால் தான், இந்த விஷமில்லாத பாம்பு அமைதியாக இருக்கிறதாம்!//

    நம்மூரு பாம்புகள் மரத்தின் மீது ஏறு வில்வ இலை பறித்து சிவனுக்கு அர்சனை செய்யும் நல்ல பாம்புகள். சிகரெட் குடிப்பது கெட்ட பாம்பு.
    :)

    ReplyDelete
  11. என்னைக் கேட்டால், கடிக்காமல் ஒதுங்கிப் போகும் பாம்புகள் மட்டுமே ரொம்ப நல்ல பாம்புகள் என்று சொல்வேன்

    :-))

    ReplyDelete
  12. //இங்கே பர்தா, நற்குடி, அதற்கு வக்காலத்து வாங்கி எழுதியவர்கள் என்ன சொல்லப் போகிறார்கள் என்பதை அறியக் காத்திருக்கிறேன்.//

    நானும்!

    அப்படியே அந்த கபோதியை என்ன செய்தார்கள் என்ற தகவலும் வேண்டும்!

    ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!