சீத்தலைச் சாத்தனார் யாரென்று தெரியாதவர்களுக்காக ஒரு சிறு குறிப்பு! சங்க இலக்கியங்களில், கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார், ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான மணிமேகலையை இயற்றியவர்.
பனை ஓலைகளில் எழுத்தாணியால் எழுதும்போது ஏதேனும் தவறு நேர்ந்தால் தன் கையில் இருக்கும் எழுத்தாணியை வைத்தே தலையில் குத்திக் கொள்வாராம்! அதனால், எப்போதுமே தலையில் சீழ் வடிந்து கொண்டிருக்குமாம்! சீழ் வடியும் தலை, சீழ்த்தலையாகி அதுவே சாத்தனாருடைய பெயருக்கு அடை மொழியாகவும் ஆகிப் போனதாகவும் சொல்வார்கள்!
சே சே, அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. அவருடைய ஊரின் பெயர் சீர்தண்டலை, அது தான் மருவி சீழ்த்தலையாகி விட்டது என்று சப்பைக் கட்டு கட்டுவாருமுண்டு!
எது எப்படியிருந்தாலும், தப்புக் கண்டுபிடிக்கும் தருணங்களில், எழுத்தாணி மாதிரிக் கூர்மையான ஆயுதத்தால் வார்த்தைகளால் அடுத்தவரைக் குத்தத் தயாராயிருப்பது நம்மில் பலருக்கும் பல நேரங்களில் பழக்கமாகவே இருக்கிறது. புலவரைப் போலத் தன்னைத் தானே குத்திக் கொள்வது போல அல்ல!
அடுத்தவரிடம் ஏதாவது தப்புக் கண்டு பிடிக்க முடிந்தவுடன் போட்டி போட்டுக் கொண்டு தவறைத் திருத்த ஓடி வருகிற இந்த அடிப்படை உளவியலைத் தான், ஒரு படம் போட்டுக் கலாய்க்கலாமே என்று அந்தப் பதிவை எழுதினேன்!
வால்பையன் அருண் கலாய்ப்பதற்கெல்லாம் கூட, மொழிபெயர்ப்புக் கேட்கிறார்!
இவரை மாதிரியே ஒரு பயிற்சி வகுப்பில் பாடம் எடுக்கவந்த நினன் தாமசை கேள்வி கேட்ட கதையை ஸ்தாபனம் என்றால் என்ன என்ற வார்த்தைகளைக் கொண்டு இந்தப் பதிவில் தேடினால் ஒரு பழைய அனுபவம் பதிலாகக் கிடைக்கும்!
ஆகக் கலாய்த்தல் மொழிகளுக்கு அப்பாற்பட்டது, அதற்கு மொழிபெயர்ப்பே தேவையில்லை என்று சால்ஜாப்புக்களுடன் அப்படியே அபீட் ஆகிவிட மனம் வரவில்லை. இந்தப் படத்தைப் பாருங்கள்!
வார்த்தைகளுக்கு நடுவே கொஞ்சம் இடைவெளி ஒரு கமா அல்லது காற்புள்ளி விடாமல் சொல்லும் ஒரு வாக்கியம் எப்படி விபரீதமான அர்த்தத்தைத் தருகிறது! இந்தப் பக்கத்தில் பார்த்ததை, ஒரு நண்பர் அனுப்பியிருந்தார்.
தன்னிடமிருக்கும்போது பெரிதாகத் தோன்றாத அதே தவறு அல்லது பழக்கம், பிறரிடம் பார்க்கும்போது கேலி, கண்டனத்துக்கு உரியதாகி விடுகிற வேடிக்கையைப் பற்றி ஸ்ரீ அரவிந்த அன்னை சொல்கிறார்.
"நம்மிடம் ஒரு பலவீனம் இருக்கிறது, உதாரணமாக கேலிக்குரிய ஒரு பழக்கமோ, ஏதோ ஒன்று தவறாகவோ, அல்லது அரைகுறையாகவோ இருப்பதாக வைத்துக் கொள்வோம், அது நம்முடைய சுபாவத்தின் ஒரு அங்கமாகவே ஆகிவிடுவதால், அது இயல்பானது தான் என்று கருதுகிறோம்! அது எந்தவிதத்திலும் நம்மை அதிர்ச்சிக்கோ, வியப்புக்கோ உள்ளாக்குவதில்லை!
அதே கேலிக்குரிய பழக்கம், தவறு, அல்லது அரைகுறையான விஷயம் மற்றவர்களிடத்தில் பார்க்கும்போது, மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாகிறோம்.
நம்மிடத்திலே அதே குறை இருப்பதைக் கொஞ்சமும் கவனியாமல், அடுத்தவரிடத்தில் அதைப் பார்த்து, "என்ன! இவர் இப்படிப்பட்டவரா?" என்கிறோம்!
ஆக, நம்மிடம் இருக்கும் அழுக்குடன், அதைக் கவனியாமல் இருக்கிற மடத்தனமும் சேர்ந்து கொள்கிறது.
இதில் ஒரு பாடத்தைக் கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது. யாரோ ஒருவருடைய ஏதோ ஒரு செய்கை, பேச்சு உங்களுக்கு முழுவதுமாக ஏற்றுக்கொள்ள முடியாததாகத் தோன்றும்போது, கேலி செய்யத் தோன்றும்போது, "என்ன! அவர் அப்படி இருக்கிறாரா? அப்படி நடந்து கொண்டாரா? அப்படிச் சொன்னாரா? அப்படிச் செய்தாரா?" என்று நினைக்கும்போது, உங்களுக்குள்ளேயே சொல்லிப்பாருங்கள்!
" நல்லது!நான் கூட எனக்குத் தெரியாமலேயே, அப்படித் தான் செய்கிறேனோ என்னவோ? அவரை விமரிசிப்பதற்கு முன்னால், என்னையே முதலில் நன்றாகப் பார்த்துக் கொள்ள வேண்டும். அதே மாதிரி நானும் வேறெந்த வகையிலும் செய்யாமல் இருக்கிறேனா என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும்! "
அடுத்தவருடைய நடத்தையைக் கண்டு "அதிர்ச்சியடையும் " ஒவ்வொரு தடவையும், இதே மாதிரி நல்ல விதமாகவும், புத்தியுடனும் இருக்கப் பழகினால்,வாழ்க்கையில் மற்றவர்களுடனான உறவு ஒரு கண்ணாடியில் பிரதிபலிப்பதைப் போல இருப்பதைக் காணமுடியும்! நமக்குள் இருக்கும் அழுக்கு, பலவீனங்களை எளிதில் அடையாளம் கண்டுகொள்ள முடியும்.
பொதுவாகப் பார்க்கப் போனால், அடுத்தவரிடம் நாம் அதிர்ச்சியடைகிற அளவுக்குப் பார்க்கிற குறை, பெரும்பாலும் நாம் சுமந்து கொண்டிருப்பதுதான்,என்ன கொஞ்சம் வித்தியாசமாக, மறைவாக, அல்லது வேறு விதமாக நம்மை நாமே ஏமாற்றிக் கொள்கிற அளவுக்கு இருப்பது தான். நம்மிடம் இருக்கும் குறை பெரிதாக, தீமை இல்லாததாகத் தெரிவது, அடுத்தவரிடம் பார்க்கும் போது பூதாகாரமாகத் தெரிகிறது!"
1958 ஆம் ஆண்டு நவம்பர் ஏழாம் தேதி, ஸ்ரீ அரவிந்த அன்னை, "எண்ணங்களும் சிந்தனை மின்னல்களும்" என்ற ஸ்ரீ அரவிந்தருடைய நூலில் இருந்து, ஒரு சிந்தனையை விளக்கிச் சொன்னதன் ஒரு பகுதி. அன்னை நூல் தொகுப்பு நூற்றாண்டுப்பதிப்பு, தொகுதி 10 பக்கம் 20-21
"சுட்டும் விரலால் எதிரியைக் காட்டி
ReplyDeleteகுற்றம் கூறுகையில்..
மற்றும் மூன்று விரல்கள் உந்தன்
மார்பினைக் காட்டுதடா..
'மனிதர்களே' உங்கள் குற்றத்தை மறைக்க
முதுகைப் பாருங்கள்...
முதுகினில் இருக்கு ஆயிரம் அழுக்கு
அதனைக் கழுவுங்கள்..."
உங்கள் பதிவு படித்ததும் எனக்கு நினைவு வந்த பாடல். பதிவு சொல்லும் கருத்தும் இதுதான்.
வாருங்கள் ஸ்ரீராம்!
ReplyDeleteசரி தான், ஆனால் அன்னை சொல்வது அதையும் தாண்டி யோசிக்க வைக்கிற விஷயம்!
//வால்பையன் அருண் கலாய்ப்பதற்கெல்லாம் கூட, மொழிபெயர்ப்புக் கேட்கிறார்! //
ReplyDeleteநான் தவறான அர்த்தத்தில் புரிந்து கொள்ளக்கூடும்!
மேலும் உங்களது தலத்தில் படங்கள் முழுதாக தெரிவதில்லை! பாதி வலதுபக்கம் மறைந்து விடுகிறது!
எக்ஸ்ட்ரா லார்ஜ் செலக்ட் செய்வீர்கள் என நினைக்கிறேன்!
பட அளவு வெளியேற்றப் படும் அளவை வைத்து அல்ல உங்களுடைய திரையின் ரிசொல்யூஷன் அளவு என்னவாக இருக்கிறது என்பதைப் பொறுத்தே பார்க்க முடிகிற விதமும் இருக்கிறது.
ReplyDeleteநீங்கள் சொல்வதைப் பார்க்கும்போது, தினத்தந்தி படிக்கிற மாதிரி 800x600 அளவையே பயன்படுத்துகிறீர்கள் போலத் தோன்றுகிறதே வால்ஸ் !
//நீங்கள் சொல்வதைப் பார்க்கும்போது, தினத்தந்தி படிக்கிற மாதிரி 800x600 அளவையே பயன்படுத்துகிறீர்கள் போலத் தோன்றுகிறதே வால்ஸ் ! //
ReplyDeleteஇந்த மாதிரி டெக்னிக்கல் விசயங்களெல்லாம் எனக்கு தெரியாது என்பது உங்களுக்கு தெரியாதா!?
எனக்கும் தான் தெரியாது!
ReplyDeleteவல்லுனர்கள் உதவி கிடைக்கவில்லை என்றால், இரண்டு அல்லது மூன்று வருடங்கள் பொறுங்கள்! மகளே கற்றுக் கொடுப்பாள்.
என் மகனிடம் இருந்து...ம்ம்ஹூம்!
இங்கே நானே முட்டி, மோதி, ஒவ்வொன்றாகக் கற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது!