ப்ளாக்கரில் இது எனது நூறாவது பதிவு.
இந்த மாதிரிச் சின்னச் சின்ன செண்டிமெண்ட் எல்லாம் எனக்குக் கிடையாது. என்றாலும், படிக்க வருபவர்களுக்குக் கொஞ்சமாவது உபயோகமாக இருக்க வேண்டும் என்ற ஆசை உண்டு!
எழுத்து என்பது யாருக்காகவோ எழுதப்படுவது அல்ல. தன நெஞ்சோடு கிளத்தல் என்ற ரீதியில், தனக்காகவே ஆத்ம சுத்தியோடு எழுதப் படும்போது, எழுத்து அங்கே வலிமையான சாதனமாக ஆகிறது.சாதனம் என்ற வார்த்தை, ஒரு கருவியாக இருப்பதை, ஒரு வழியாக இருப்பதைச் சொல்வது.
இதை மறுபடி மீள்பதிவாகவும், விரிவு படுத்தியும் போட வேண்டிய அவசியத்தை போன பதிவின் தலைப்பாகவே வைத்திருந்தேன். கொங்குத் தமிழில், 'மொடக்கடி பிடிச்ச நாய்' என்று சொல்வதுண்டு. சும்மா படுத்திருக்கிற நாய், பொழுது போகவில்லையென்றால், தன்னைத் தானே கடித்துக் கொள்கிற மாதிரி ஒரு பாவனை செய்யுமே, அதைத் தொட்டுச் சொல்வது.
உண்மையில் ஈ மொய்த்துக் கடிக்கும்போது, அதை விரட்டுவதற்காக அந்த அப்பாவி ஜீவன் செய்வதை, மனிதர்கள் தாங்கள் செய்யும் உத்தமமான விவகாரங்களுக்கு எல்லாம் ஒப்பிடுவார்கள் என்பது தெரிந்தால், எந்த நாயுமே 'மொடக்கடிக்காது'!
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் அழகான வரிகளில்,
"கடவுள் இல்லையென்பதும், இருப்பதென்பதும்
கவைக்கு உதவாத வெறும் பேச்சு" இந்தப் பாடலைக் கேட்டிருக்கிறீர்களா?
பாடலின் ஆரம்பமே, இந்தப் பேச்சைப் பேசித் திரிபவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதையும் சொல்லி விடுகிறது.
"இந்தத் திண்ணைப் பேச்சு வீரர்களிடம்
ஒரு கண்ணாயிருக்கணும் அண்ணாச்சி
நாம ஒண்ணாயிருக்கணும் அண்ணாச்சி!"
Organisation ஸ்தாபனம் என்பதைப் பற்றி திரு நினன் தாமஸ் வகுப்பெடுத்துக் கொண்டிருந்தார் . மனிதன் சுற்றி வளைத்து , ஸ்லைடெல்லாம் போட்டு கிட்டத் தட்ட ஒரு மணி நேரம் மூச்சு வாங்காமல் எதை எதையோ சொல்லி முடித்து விட்டு சந்தேகம் இருந்தால் கேட்கலாம் என்று சொல்லி விட்டு அமர்ந்தார் .
கடைசி வரை ஒரு ஸ்தாபனம் என்றால் என்ன , அதை எப்படி define பண்ணுவது என்பது பற்றிக் கொஞ்சம் கூடச் சொல்லவில்லை . ஐம்பது நிமிடங்களுக்கு மேல் இப்படியே ராவி விட்டு , சந்தேகம் இருந்தால் கேள் என்று அமர்ந்து விட்டார் . எனக்கோ தாங்கவில்லை . எழுந்தேன் , " ஐயா , ஏதேதோ சொன்னீர்கள் , நிறைய மேற்கோள்கள் , ஸ்லைடெல்லாம் போட்டுக் காண்பித்தீர்கள் . கடைசி வரை ஸ்தாபனம் என்றால் என்ன ,அது எப்படி உருவாகிறது , எப்படிக் கட்டமைக்கப் படுகிறது என்பதைச் சொல்லவே இல்லையே ?
ஸ்தாபனம் என்றால் என்ன ஐயா ?"
கேள்வியைக் கேட்டு விட்டு அமர்ந்து விட்டேன் .
எர்ணாகுளத்தில் பணி நிமித்தமாக நடந்த பயிற்சிக் களத்தில் நடந்தது இது . கூடப் பயிற்சிக்கு வந்திருந்தவர்களுக்கு ஒரே சிரிப்பு . நினன் தாமஸ் தலையில் கையை வைத்துக் கொண்டு ஒரு புன்சிரிப்பை உதிர்த்ததோடு சரி , பதில் இல்லை . நடத்தின லட்சணத்தில், பதில் சொல்ல ஏதுமில்லை என்பது மட்டுமல்ல, பதில் சொன்னால் இன்னும் நிறையக் கேள்விகள் வரும் என்பது அவருக்கும் புரிந்திருந்தது.
ஒரு அமைப்பு அல்லது நிறுவனம் அல்லது ஸ்தாபனம் தொடங்கும் போது , நிச்சயமாக சில குறைந்த பட்சக் குறிக்கோள்களுடன் தான் துவங்கும் . தொடங்கி சில காலம் கழித்துப் பார்த்தோமேயானால் , ஸ்தாபனத்திற்கும் அது எந்தக் குறிக்கோள்களுடன் தொடங்கப் பட்டதோ அந்தக் குறிக்கோள்களுக்கும் கொஞ்சம் கூட சம்பந்தமே இல்லாதிருப்பதையும் , பெரும்பாலான சமயங்களில் , என்ன நோக்கத்திற்காகத் தொடங்கப்பட்டதோ , அதற்கு எதிராகவே ஸ்தாபனத்தின் பல அங்கங்கள் அல்லது முழுமையும் செயல் பட்டுக் கொண்டிருப்பதையும் பார்க்க முடியும் .
வேண்டுமானால் , உங்களுக்கு அறிமுகமான எந்தவொரு அமைப்பையும் கூர்ந்து கவனித்துப் பாருங்கள் , ஆரம்பத்தில் ரொம்ப இறுக்கமாக இருந்து பின்னால் தொள தொளவென்று ஆகிப் போகும் எலாஸ்டிக் நாடா போல அந்த அமைப்பு , எதற்காக நிறுவப் பட்டதோ அதற்கு எதிராகவே இருப்பதை காண முடியும் .
எதனால் இப்படி எல்லாம் தலை கீழாக மாறிப் போகிறது ?
எதனால் இப்படி முரண்பாடுகள் தோன்றுகின்றன ?
இந்த பிரபஞ்ச வெளியில் ஒரு பொதுவான விதி உண்டு . பௌதீகத்தில் புவியீர்ப்பு விசை என்று சொல்வது போலவே , உயிர்கள் ஒரு மாற்றத்திற்குத் தயாராகும் போது பழைய பழக்கங்களின் பிடிமானம் கீழ் நோக்கி இழுப்பது இயல்பே . பழக்கங்களின் பிடியிலிருந்து விடுபடுவதற்கு , கீழ்நிலைக்கு இழுக்கும் சக்தியிலிருந்து விடுபடுவதற்கு , அதனிலும் வலிமையான ஒன்றின் துணை வேண்டும் .
Escape Velocity போல ஒன்று வேண்டும். நமது முன்னோர்கள் அதற்குச் சரியானது ஆன்மிகம் தான் என்பதில் தெளிவாக இருந்தார்கள். பலவிதமான வழிபாட்டு முறைகள், பல்லாயிரம் தெய்வங்கள் என்று கேலி பேசப்பட்டாலும், அதெல்லாம் வெறும் ஆரம்பப் படிகள் தான் என்பதை, தெரிந்து கொள்ள விரும்புகிறவர்களுக்கு மறைத்ததே இல்லை. ஏதோ ஒன்றிலிருந்து ஆரம்பித்தாக வேண்டும் அல்லவா?
அப்படிப்பட்ட ஒன்றாக, ஆன்மிகம் மட்டுமே ஒரு உள்ளார்ந்த மாற்றத்தை , சக்தியை , கீழ்நிலை உணர்வுகளை எதிர்த்து வெல்லும் வலிமையை மனிதனுக்கு அளிக்கிறது என்பதையும், கண்டு சொன்னார்கள்.
மதங்களை பரப்புகிறவர்களுக்கு , இந்த உள்ளார்ந்த பார்வை , மாற்றம் , முயற்சி எதுவும் தேவை இல்லை . அவர்களுக்குத் தேவை , ஒரு செம்மறி ஆட்டுக் கூட்டம், தன்னுடைய சொந்த முயற்சி எதுவும் இன்றி யாரோ ஒரு மீட்பர் வந்து ரட்சிப்பார் என்று சொன்னால் , அதை அப்படியே கிளிப்பிள்ளை போலச் சொல்லிக்கொண்டிருக்கும் ஒருகூட்டம் . "வருத்தப்பட்டுப் பாரம் சுமக்கிறவர்களே! என்னிடம் வாருங்கள், நானே இளைப்பாறுதலைக் கொடுப்பேன்!" இப்படிச் சுவர்களில் பெரிதாக எழுதி வைத்திருப்பதைப் படித்திருப்பீர்கள் இல்லையா?
மாற்றம் என்பது கொஞ்சம் பயமுறுத்துகிற விஷயம் . இது சாக்கடை தான் , ஆனாலும் இதை சுத்தம் செய்வது என்னால் ஆகாது , அதனால் இப்படியே இருந்து விட்டுப் போகிறேன், நாற்றம் தாங்கமுடியவில்லைதான், ஆனாலும் எனக்குப் பழகிப்போய்விட்டது, இருந்துவிட்டுப்போகட்டுமே, மாற்றம் என்பது எப்படியிருக்குமோ, நமக்கேன் வம்பு என்றிருக்கும் மனிதர்களை மதமான பேய் பிடித்து ஆட்டுவதில் வியப்பொன்றுமில்லை.
மாறுவதைவிட, அடுத்தவன் சொல்லுக்குத் தலையாட்டிக் கொண்டிருப்பது சுலபம் இல்லையா? பரலோக சாம்ராஜ்ஜியம் கிடைத்தால் நல்லது தான், ஆனால் அதற்காக நான் ஏன் சிரமப்படவேண்டும்? ஊழியக்காரரிடம் , தசமபாகம் [டென்பெர் சென்ட் ] கொடுத்து விட்டால், அவர் நமக்காக ஜெபம் செய்வார், மீட்பரிடம் நம்மை ரட்சிக்கும்படி மன்றாடுவார், சிபாரிசு செய்வார்! சங்கீதம் பாடுவார், மேடையில் ஆடுவார்! அது போதாதா? நான் வேறு எதற்காக, கஷ்டப்பட வேண்டும்?
மதங்கள் வணிக நிறுவனங்களாகிப்போனதற்கு ஊழியம் என்றபெயரில்காணிக்கையாகப் பெறுகிற டென் பெர் சென்ட் எப்படி ஒரு காரணமோ, அதைவிடப் பெரிய காரணம் வழிபாடு என்ற பெயரில், நான் ஒன்றுமே செய்ய வேண்டாம், முயற்சி செய்ய வேண்டாம், கஷ்டப்பட்டு என்னிடம் இருக்கும் மிருகத்தன்மையை மாற்றிக் கொள்ள வேண்டாம் என்றிருக்கிற சோம்பல், மாறுவதற்குத் தயாராக இல்லாத தன்மை, மாறவேண்டுமே என்ற நினைப்பே பயம் -இதுதான்!
இதுதான் மிகப்பெரிய கோளாறு!
மதங்களைச் சாடுகிற எல்லோருமே, இந்த ஒரு விஷயத்தைக் கவனிக்கத் தவறி விடுகிறார்கள்! மாற்றத்தை கண்டு தயங்குகிற, மாற்றமே வேண்டாம்-நான் இப்படியே இருந்து விட்டுப் போகிறேனே என்ற பழக்கங்களின் அடிமையாகவே இருந்து விடும் மனிதனின் இயல்பான பலவீனமே, இந்த மாதிரிப் பூசாரிகள், ஊழியக்காரர்களை வளர்த்து விடுகிற அடி உரமாக இருப்பது ஏனோ அவர்களுக்குப் புரிவதே இல்லை!
மதத்தை தோற்றுவித்தவர்கள் எல்லோருமே நல்ல எண்ணத்தோடு,அன்பைப் பற்றித்தான் சொன்னார்கள் . ஒருவருக்கொருவர் இணக்கமாக , ஒற்றுமையாக , விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையோடு இருங்கள் என்று சொல்லிவிட்டுத்தான் போனார்கள் . சொன்னதைக் கடைப் பிடிக்க உதவியாகத்தான் மதம் என்கிற ஸ்தாபனத்தை அவர்களோ , அவர்களை பின்பற்றுகிறவர்களோ உருவாக்கினார்கள் . நான் எனது என்கிற தன்முனைப்பை விடச் சொன்னார்கள். நமக்குத்தான் விட மனமுமில்லை, தெரியவுமில்லை! தெரிந்தால் தானே, அடுத்த படிக்கு ஏறுவது?
அப்படி உருவாகிய ஸ்தாபனங்களின் இன்றைய நிலை என்ன ?
சகிப்புத்தன்மை என்பதே இல்லாமல் , மனிதனை மதம் ஒரு மிருகத்திலும் கீழாக மாற்றி வருவதை மதத்தின் பேரால் நடக்கும் வன்முறைகள் , அது சிறியதாக இருந்தாலும் சரி , அல்லது சிலுவைப் போர்கள் , தொடர்ந்து ஜிஹாத் , உன்னுடைய முப்பாட்டன் எங்கள் கோயிலை இடித்தானா , பதிலுக்கு நாங்கள் ஒரு பாழடைந்த மசூதியை இடிக்கிறோம் என்று கிளம்பும் கூட்டமானாலும் சரி , இவை அத்தனையும் சொல்லும் செய்தி ஒன்றே ஒன்றுதான்! அது..........
" மதங்களுடைய உபயோகம் முடிந்து விட்டது!" என்பது தான்!
மதங்களினால் , மனிதனை உன்னதமான அடுத்த கட்டத்திற்கு இட்டுச் செல்ல முடியாது.ஆன்மிகம் ஒன்றே மனிதனை , அவனது கீழ் நிலை உணர்வுகளில் இருந்து விடுதலை செய்யும் , அவனது பிறப்பின் உண்மையான நோக்கத்தை அவனுக்குச் சொல்லும் , கடவுளுக்கும் மிருகத்திற்கும் இடைப்பட்ட மனித நிலையில் இருந்து பரிணாமத்தின் அடுத்த கட்டமான ஒரு உன்னதமான உயர்ந்த திருவுரு மாற்றத்திற்கு இட்டுச் செல்லும் "
நம்பிக்கையற்றிருப்பதே நமது எல்லைகளை உருவாக்குகிறது என்று ஸ்ரீ அரவிந்த அன்னை சொல்கிறார்.
ஆரம்பத்தில் பார்த்தோமே , " ஸ்தாபனம் " அதை விட்டு வேறு விஷயத்திற்குப் போய் விட்டோமே என்று நினைக்கிறீர்களா ?
இல்லை . இதுவும் அதனுடன் தொடர்புடையது தான் .
ஒரு குறிப்பிட்ட அல்லது பொதுவான நோக்கங்களை நிறைவேற்றுவதற்காக ஏற்படுத்தப் படுவதே ஒரு ஸ்தாபனம் . அதில் பங்கு கொள்கிறவர்களுடைய விசுவாசமும் , அவர்களை வழி நடத்தும் தலைமையும் எந்த அளவுக்கு இருக்கிறதோ , எவ்வளவு காலம் இருக்கிறதோ அது வரை அந்த ஸ்தாபனம் , அது எதற்காக ஆரம்பிக்கப் பட்டதோ அந்த நோக்கத்திற்காகச் செயல் படும் .
அப்படிப் பட்ட உந்துசக்தி தீர்ந்து விட்டாலோ , இல்லாமல் போனாலோ ?
விஸ்வாமித்திரர் கதையில் சொல்வார்களே, மனித உடலோடு சொர்கத்துக்குப் போன திரிசங்கு ராஜாவை, இந்திரன் எட்டி உதைத்தது போல, மாறுவதற்குத் தயங்கிக் கொண்டே இருந்தோமேயானால் ..........
புராணக் கதையில் வரும் திரிசங்கு மாதிரித் தலை கீழாக விழ வேண்டியது தான் !
அப்பவுமே கூட, பதிவுலகம் சூடாகத் தான் இருக்கும்!
\\மதங்களினால் , மனிதனை உன்னதமான அடுத்த கட்டத்திற்கு இட்டுச் செல்ல முடியாது . ஆன்மிகம் ஒன்றே மனிதனை , அவனது கீழ் நிலை உணர்வுகளில் இருந்து விடுதலை செய்யும் , அவனது பிறப்பின் உண்மையான நோக்கத்தை அவனுக்குச் சொல்லும் , கடவுளுக்கும் மிருகத்திற்கும் இடைப்பட்ட மனித நிலையில் இருந்து பரிணாமத்தின் அடுத்த கட்டமான ஒரு உன்னதமான உயர்ந்த திருவுரு மாற்றத்திற்கு இட்டுச் செல்லும் "\\
ReplyDeleteஇதை மக்கள் புரிந்து கொண்டாலே வாழ்வில் உயர்வு கிட்டும்.
வாழ்த்துக்கள்
//ஒரு குறிப்பிட்ட அல்லது பொதுவான நோக்கங்களை நிறைவேற்றுவதற்காக ஏற்படுத்தப் படுவதே ஒரு ஸ்தாபனம் . அதில் பங்கு கொள்கிறவர்களுடைய விசுவாசமும் , அவர்களை வழி நடத்தும் தலைமையும் எந்த அளவுக்கு இருக்கிறதோ , எவ்வளவு காலம் இருக்கிறதோ அது வரை அந்த ஸ்தாபனம் , அது எதற்காக ஆரம்பிக்கப் பட்டதோ அந்த நோக்கத்திற்காகச் செயல் படும் .//
ReplyDeleteஅருமை. தங்களது நூறாவது பதிவுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்...
தங்களின் நூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் பணி வாழ்த்துக்கள்...
ReplyDelete//கிருஷ்ணமூர்த்தி சொன்னது…
ReplyDeleteவால்பையனுக்குப் பதில் சொல்லும்போது, அவர் அப்படி எங்கே சொன்னார் என்ற சுட்டியையும் கொடுத்திருந்தால், நன்றாக இருந்திருக்கும்//
சுட்டி இதுதான்... http://shanthru.blogspot.com/2009/08/blog-post_11.html உங்கள் கருத்துக்களும் எதிர்பார்க்கப்படுகின்றன...
//எழுத்து என்பது யாருக்காகவோ எழுதப்படுவது அல்ல. தன நெஞ்சோடு கிளத்தல் என்ற ரீதியில், தனக்காகவே ஆத்ம சுத்தியோடு எழுதப் படும்போது, எழுத்து அங்கே வலிமையான சாதனமாக ஆகிறது.சாதனம் என்ற வார்த்தை, ஒரு கருவியாக இருப்பதை, ஒரு வழியாக இருப்பதைச் சொல்வது. //
ReplyDeleteமிகவும் உணர்ந்து சொல்லியிருக்கிறீர்கள்.. சிந்தனையும் அது தன்னைத் தானே வெளிப்படுத்திக் கொள்ளும் முயற்சியான வார்த்தைக் கோர்வைகளும் ஒரு மோனதவத்தில் ஒன்றெனக் கலக்கும் பொழுது எழுத்து ஒரு யக்ஞனமாகிறது.. அந்தப் பிரசவம், கலாபூர்வமானது. அந்த 'நெஞ்சோடு கிளத்தல்' என்கிற சொற்றொடரை அனுபவித்து சொல்லி இருக்கிறீர்கள்.. உணர்ந்தோரால் அதை உணரமுடியும். வாழ்த்துக்கள்..
இந்த பதிவை எப்போது தவறவிட்டேன் என்று தெரியவில்லை.
ReplyDeleteமதமும் அரசியலும் வேறு வேறு என்று சொன்னாலும் ஒன்றை ஒன்று பின்னிப் பிணைந்திருக்கும்.
மதத்திற்கும் ஆன்மிகத்திற்கும் கூட இந்த பிணைப்பு இருக்கும்னு நினைக்கிறேன். விளக்குவது கடினம்
ஏனெனில் மதவாதிகளிடம் தானே ஆன்மிகம் பற்றி எடுத்துச் சொல்ல முடியும் ?
:)
திரு.கோவி.கண்ணன்,
ReplyDeleteஒரு எல்லைக்குட்பட்டவரை, நீங்கள் சொல்வது சரி தான்!"மதம்" பிடித்தவர்கள், மதக் கோட்பாடுகளில் நம்பிக்கை உள்ளவர்கள் என்று பகுத்துக் கொண்டு பார்க்க முடிந்தால் மட்டுமே, சரியான விடையைக் காண முடியும். இரண்டையும் போட்டுக் குழப்பிக் கொண்டால், விடையுமே குழப்பமாகத் தான் இருக்கும்!
மதங்கள், ஆரம்ப நிலையில், ஒரு அனுபவத்தைப் பெற்றவர், தன்னைச் சுற்றியிருந்தவரோடு தன் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்பவையாகவே தான் இருந்தன. அப்படிப் பகிர்ந்து கொண்டவர்களில், சிலர், அதை மேலும் விரிவாகச் சிந்திக்கும் நிலையில், ஆன்மிகம் தொடங்குகிறது, அவரவர் அனுபவத்தில் உணரும் போது ஆன்மிகம் முழுமையாகிறது.
இது கூட ஒரு பிரமிட் மாதிரித்தான்! அடித்தளம் பெரிதாக இருக்கும், மேலே போகப் போகக் குறுகிக் கொண்டே ஒரு முக்கோணமாக வருவது மாதிரி,
ஆன்மிகம் பழுத்த அனுபவமாக வருவதற்குக் கூட இத்தனை ப்ராசஸ் தேவைப்படுகிறதோ என்று கூட சமயங்களில் தோன்றுவதுண்டு!
" மதங்களுடைய உபயோகம் முடிந்து விட்டது!"
ReplyDeleteமிகச் சரியாக சொல்லியிருக்கிறீர்கள் சகோதரரே! ஒவ்வொரு தனிமனிதனும் தனக்கான மதத்தையும் கடவுளையும் புனித புத்தகத்தையும் தனது சொந்தத் தேடலின் வழியே தானே உருவாக்கிக் கொள்ள வேண்டுமென்பதே எனது அவா.