ஆண்டுக்கு ஆண்டு, பிப்ரவரி வந்தால்....அவஸ்தையும் கூட வருமோ?

 
இப்படியெல்லாம் நம்மூர் அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் முன்னுரிமை கொடுத்து, திட்டமிட்டு வேலை செய்வார்கள் என்று இன்னமுமா நம்பிக் கொண்டிருக்கிறீர்கள்?


என்ன எழுதுகிறோம், எத்தனை பேருக்குப் பயன்படும் வகையில் எழுதுகிறோம், குறைந்தபட்சமாக, எழுதுகிற நமக்கே ஒரு தெளிவைத் தருவதாக எத்தனை பதிவுகளைச் சொல்ல முடியும் என்பதை அளவிட்டுப்  பார்த்தால், எழுதும்போது ஆரம்பிக்கிற உற்சாகம் எல்லாம் வைகையில் வெள்ளம் வந்த கதையாக உடனேயே வடிந்தும் போய்  விடும்.
"மலை மேலே மழை விழுந்து வைகையிலே வெள்ளம் வந்து
வயலேறிப் பாயும் முன்னே வந்த வெள்ளம் போனது ராஜா!"

என்று  சிறுகூடற்பட்டியில் பிறந்த எங்கள் கவிஞன் கண்ணதாசன்  அழகாகச் சொன்னாரே!
அந்த மாதிரி!

"
சேத்த பணத்தை சிக்கனமா,செலவு செய்ய பக்குவமா
அம்மா கையிலே கொடுத்துப்போடு செல்லக்கண்ணு
அவங்க..ஆறை..நூறு..ஆக்குவாங்க ..சின்னக்கண்ணு
"

மருதகாசியின் இந்தப்பாடலை
ஒரு பதிவில் எடுத்துச் சொன்னது கூட, வால்பையன் நினைக்கிற மாதிரி இடைச்செருகல் இல்லை, பொருளாதாரத்தின் ஒரு அடிப்படை அம்சத்தைச் சொல்வதற்காகத் தான்!

ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியை, உற்பத்தியும், சேமிப்புமே தீர்மானிப்பவைகளாக இருந்த ஆரம்பகாலப் பொருளாதாரம், எப்படிக் கடன், கடனை அடைக்க இன்னொரு  கடன், அதற்கு வட்டி கட்ட இன்னொரு கடன், இப்படியே போய்க் கடைசியில் தவணை கேட்பது, நாணயம் தவறுவது, திவாலாகி விட்டது என்பதைக் கூட ஒப்புக் கொள்ள முடியாமல், "துபாய் உலகத்தின் கடனுக்கு அரசு எந்தவிதத்திலும் பொறுப்பேற்றுக் கொள்ளாது, அது கடன் கொடுத்தவர்கள் பொறுப்பு!" என்று பொறுப்பைத் தட்டிக் கழிக்கிற அளவுக்கு மட்டுமே துபாய் கடன் நெருக்கடி இருக்கிறது!

இதைச் சொல்லும் போதே, இதைவிட விபரீதமான பயங்கரம் அமெரிக்கப் பொருளாதாரத்தில்  இருக்கிறது, எப்படி இதில் நாமும் விரும்பியோ விரும்பாமலோ சிக்கிக் கொண்டிருக்கிறோம் என்பதைக் கொஞ்சம் கொஞ்சமாகப் பதிவுகளில் சொல்லலாம் என்று இந்த முயற்சியை ஆரம்பித்தாயிற்று! புலி வாலைப் பிடித்த நாயர் கதைதான்!

வால்பையன் என்னதான் வந்து
, பின்னூட்டங்களில் தாளித்தாலும், புலி விடாது! அல்லது நான் விடப்போவதில்லை!

சற்றேறக் குறைய நூறே ஆண்டுகள்!

இந்த நூறே ஆண்டுகளில்
, பொருளாதாரம் என்பது வெறும் கருவியாக இருந்தது, கொஞ்சம் கவனக் குறைவாக இருந்தாலும் பேரழிவைத்தரும் ஆயுதமாகவும் மாறிப்போனது! வரலாறு முக்கியம்! கற்றுக்கொள்ளத் தயாராக இருப்பவர்களுக்கு வரலாறு மாதிரி, சிறந்த ஆசிரியன் எவருமில்லை! ஆனால் வரலாறு என்றாலே வால்பையன்கள் முதல் புத்தக விமரிசனம் எழுதுகிற சில வாசகர்கள் வரைக்கும் கசக்கிறது. மானுடம் வெல்லும் கதையை சிலாகித்து  எழுத ஆரம்பித்த ஒருவர்  சாண்டில்யன் கதைகளில் சரித்திரம் இல்லை என்பதைக் கண்டு பிடிக்கிற அளவுக்கு இந்தக் கசப்பு பரவியிருக்கிறது.இது பொருளாதாரம், வங்கித்துறை, நிதித்துறைகளில் உலகம் முழுவதும் பரவி வருகிற பொருளாதார விஷக் காய்ச்சலைப் பற்றி எழுத ஆரம்பித்த பதிவு ஒன்றின் ஒரு பகுதி, மீள்பதிவாக! இது பட்ஜெட் ஜுரம் வருகிற நேரம் அல்லவா? 
 
சால்வை அழகர் பானா சீனா இல்லை!பிரணாப் முகர்ஜி  கொஞ்சம் அனுபவசாலி! சொதப்புவதிலுமே கூட!
காங்கிரஸ்காரர்களால் வேறு என்ன பெரிதாக சாதித்து விட முடியும் என்று இன்னமும் நம்புகிறீர்கள்?


பட்ஜெட் அறிவிக்கிற அன்றைக்கும், அடுத்த ஒரு நாள் மட்டும் இந்தியாவின் நிதியமைச்சர் ஒரு பெட்டிக்குள் என்னத்தையோ கொண்டுவந்து, பாராளுமன்றத்தில் என்னத்தையோ சாதிக்கப் போவதாக அல்லது சோதிக்கப் போவதாகப் பேசிக் கொண்டு இருப்போம் இல்லையா? 


அதன் முன்னோட்டமாக, கொஞ்சம் ஹோம்வொர்க் செய்யவும்  வேண்டும் இல்லையா?துபாய்! டுபாக்கூர்! பொருளாதாரம்!வட கொரியா!

உலகம் போகும் போக்கை முடிவு செய்யும் காரணங்கள்!

வாலு போயிக் கத்தி வந்தது...டும்..டும்..டும்!

ஆசைக்கு அளவேதடா அறிவு கெட்ட அப்பா!

புள்ளிராசா வங்கிக்குப் புள்ளி வருமா ?ஒரு புத்தக விமரிசனம்!


இந்தப் பதிவுகளில் கொஞ்சம் அடிப்படைகள் சொல்லப் பட்டிருக்கின்றன! ஒரு எட்டு, படித்து விட்டு வந்தீர்கள் என்றால், நடுவில் வேறு பக்கம் கவனம் திரும்பிப் போனதில் இருந்து, மறுபடி கொஞ்சம் பயனுள்ள தகவல்களைப் பகிர்ந்து கொள்ளலாம்.

அப்புறம் ஒரு சிந்தனை, சின்னக் கேள்வியாக!

இது பட்ஜெட் நேரம்! தேவையே இல்லாத ஒரு சாங்கியம்! ஐந்து வருடத்திற்கு ஒரு முறைதான் தேர்தல் என்ற மாதிரி, இந்த சாங்கியத்தைக் கூட ஐந்து வருடத்திற்கு ஒரு முறைதான் என்று ஆக்கிவிட்டால், பட்ஜெட்டைக் காரணம் காட்டி விலையை ஏற்றுகிற கொடுமையில் இருந்து கொஞ்சமாவது தப்பிக்கலாமே?

பட்ஜெட்! ஆண்டுக்கொரு தரம் என்ற இந்த சாங்கியத்தால், இது வரை நாம் சாதித்தது என்ன?

கொஞ்சம் என்ன நினைக்கிறீர்கள், எப்படிப் புரிந்து கொண்டிருக்கிறீர்கள்  என்பதைப் பின்னூட்டமாக எழுதுங்களேன்!

நானும் தெரிந்துகொள்கிறேனே!current update பிற்பகல் 12.40 நிலவரம்

வருமான வரியில் கொஞ்சம் சலுகைகளை அறிவித்து, மிக ஜனரஞ்சகமான பட்ஜெட் வேஷம் களை கட்டியிருக்கிறது. .அடுத்து வரும் தேர்தல்கள், பெருகி வரும் அதிருப்தியை இந்த மாதிரிச் சின்ன  சின்னக் காரட் கொடுத்து சமாளித்து விடலாம் என்ற போக்கு அப்படியே இருக்கிறது. அறிவிக்கப் பட்ட சலுகைகளால், இருபத்தாறாயிரம் கோடி ரூபாய்  வருவாய் குறையுமாம்!

ஊழலை ஒரு சரிபாதி குறைத்தாலே, வரி ஏய்ப்பைத் தடுத்தாலேயே  எந்தவிதமான புதிய வரிவிதிப்புக்குமே அவசியம் இருக்காதே!

வழக்கம் போல, பங்குவர்த்தகச் சந்தைச் சூதாட்டத்தில், நிதியமைச்சரின் தாராளமான பட்ஜெட்டுக்கு ஆதரவாக 350 புள்ளிகள் உயர்ந்து பெரிய  O போடப்பட்டிருக்கிறது.

பூஜ்யத்திற்குத் தான் எத்தனை மரியாதை!3 comments:

 1. சுவாரஸ்யமான பதிவு. தொடர்ந்து எழுதி மேலும் பல சாதனைகள் புரிய என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

  ReplyDelete
 2. /*ஊழலை ஒரு சரிபாதி குறைத்தாலே, வரி ஏய்ப்பைத் தடுத்தாலேயே எந்தவிதமான புதிய வரிவிதிப்புக்குமே அவசியம் இருக்காதே! */

  காங்கிரஸ் இந்தியாவில் இருக்கும் வரை ஊழலும், வரி ஏய்ப்பும் வெகு ஜோராக வளரும்.
  இவர்கள் இத்தனை வருடம் இருந்து ஆட்சி செய்து இந்தியர்களுக்கு கொடுத்த பரிசல்லவா ஊழலும், வரி ஏய்ப்பும்?

  ReplyDelete
 3. வாருங்கள் திரு சசி குமார்!

  பதிவுகள் எழுதுவதில் சாதனை எதுவுமில்லை! இங்கே எழுதிக் குவிக்கப் படுபவைகளைப் படிப்பதே மிகப் பெரிய சாதனையாக இருக்கும்!

  jokes apart, உங்களுடைய வந்தே மாதரம் பதிவைப் பார்த்தேன். நல்ல தலைப்பு!

  அவ்வப்போது தலைப்புக்குத் தகுந்த மாதிரிப் பதிவுகளையும் எழுதுங்கள்!

  அன்புடன் அமர்!

  நம்முடைய ஜனங்களுடைய மனோபாவத்தில் சரியான மாற்றமும் உறுதியும் ஏற்படுகிறவரை, காங்கிரஸ் என்று அல்ல வேறு எவர் வந்தாலுமே நிலைமை இதைவிட மோசமாகத் தான் இருக்கும்.

  அரசின் அடிப்படை இங்கே திறமையின்மை, ஊழலின் மீது தான் கட்டப்பட்டிருக்கிறது.

  ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!