மலர் போல மலர்கின்ற மனம் வேண்டும் தாயே.....!

பிப்ரவரி மாதம் பிறந்தாலே, ஒரு இனம்புரியாத பரவசம் வந்து சேர்ந்து விடுகிறது!



வெளியே எத்தனையோ விஷயங்களில் மனம் அலை பாய்ந்தாலுமே கூட, மனம் ஸ்ரீ அன்னையின் பிறந்தநாள் பிப்ரவரி 21 ஆம் தேதி வருவதை ஒட்டி, தரிசன நாள் செய்திக்காகக் காத்துக் கிடக்கிற தவம் கூடவே தொடங்கி விடுகிறது. பல்வேறு காரணங்களால், புதுச்சேரி ஆசிரமத்திற்குச் சென்று நேரில் தரிசன நாள் சிறப்புப் பிரார்த்தனையில் கலந்து கொள்ள நேரம் கைகூடாமல் இருந்தபோதிலுமே கூட, மனம் அங்கே தான் மையம் கொள்ள விரும்புகிறது. அவளே எல்லாம் என்று இருந்துவிடத் தவிப்பு  இப்போதுதான் பற்றிக் கொள்ள ஆரம்பித்திருக்கிறது.

 
பிரபலமாக இருப்பது எப்படி இருக்கும் என்பதையும் பார்த்தாயிற்று! போலித்தனமான தலைவரே என்ற அழைப்பில், கூடியிருந்த கூட்டங்கள் எதிலுமே மயக்கம் அதிகமிருந்ததில்லை என்றாலும் அதிலேயே உழன்ற வாழ்க்கையில் இருந்து வெளியே வந்தாயிற்று! நண்பர்களே பகையாகி, உடல்நலமும் கெட்டு, மன நிலையும் ஒத்துழைக்காமல் இருந்த நரகம் ஒரு வழியாக முடிவுக்கு வந்தது.

 
அனுபவங்கள் ஒவ்வொன்றும், ஒரு காரணத்திற்காகவே நமக்கு அருளப்படுகின்றன. ஒவ்வொரு அனுபவமும் நம்மை உயர்த்துவதற்காகவே! நம்மைப் பக்குவப்படுத்துவதற்காகவே! 
அவரவர்க்கு வேண்டிய விதத்தில், வேண்டுகிற நேரத்தில் கிடைப்பதை என்னுடைய அனுபவத்தில் உணர்ந்து வியந்திருக்கிறேன். வெற்றிகளாக நான் எண்ணிய எதுவும் நிலைக்கவில்லை என்பதோடு வெற்றிகளே என்னுடைய சுமையாகவும் ஆகிப்போனதாய் அறியவும் ஒரு நேரம் வந்தது. உலக அளவீடுகளின்படி நான் வெற்றி பெற்ற மனிதனில்லை! புத்திசாலியுமில்லை!

தோல்விகள், அவமானங்கள் என்னைச் சுருட்டி முடக்கி வைத்துவிடவில்லை! ஒவ்வொரு தோல்விக்குப் பின்னாலும், நான் எங்கே தவறு செய்தேன் என்பதைத் தெளிவாகக் காட்டி, நான் போக வேண்டிய பாதை எது என்பதை வழிநடத்தும் வெளிச்சமாக இருப்பதையும்  அறிகிற நேரமும் வந்தது.  பூஜ்யத்தைச் சின்னதாக வரைந்தால் என்ன, பெரிதாக வரைந்தால் என்ன? வட்டம் மா'வட்டமாகி விடுமா? அப்போதும் அது பூஜ்யம் தானே!

Consent to be nothing and none என்று  ஸ்ரீ  அரவிந்தர் சாவித்திரி மகாகாவியத்தில் சொல்கிற நிலையை வேண்டிக் காத்திருக்கிறேன் தாயே!
நாளை, 21 ஆம் தேதி புதுவை ஆசிரமத்திற்கு நேரில் செல்ல முடிகிறவர்களுக்கு வழங்கப்படும் தரிசன நாள் செய்தி! இதனுடன்,  பூக்களும் பிரசாதமாகக் கிடைக்கும்! சமாதியைச் சுற்றி அமர்ந்து கூட்டுத் தியானம் செய்கிற நல்ல வரமும், அன்னையின் அறைக்குச் சென்று, அன்னையின் அருளே இன்றைக்கும் சூக்குமமாகச் செயல்படுவதைப் புரிந்துகொள்கிற உன்னதமான அனுபவமும் கிடைக்கும்.

 
ஸ்ரீ அரவிந்த அன்னையே! உன் திருவடிகளைச் சரண் அடைகிறேன்.

எனது கரணங்கள், மனம் ஜீவன் அனைத்தையும் உன்னிடம் சமர்ப்பிக்கிறேன்.

ஒவ்வொரு அணுவிலும், அசைவிலும் உனது ஒளியையே வேண்டி நிற்கிறேன்.

ஒவ்வாத எண்ணங்களோடும் செயல்களோடும் இருக்க நேரிடும் போது கூட
அன்னை என்னோடு இருக்கிறாள்! அவள் என்னைப்பார்த்துக் கொள்வாள் !
இந்த ஒரு நம்பிக்கையே என்னைச் சரிந்து விடாமல் காப்பாற்றி வருகிறது.
எண்ணமும் எழுத்தும் உன்னதே என்று இருக்கும் பரம சுகநிலை அருள்வாய்!
புதுவையிலோ, உனது இருப்பிடத்திற்கு அருகிலோ இருக்கும் வாய்ப்பு இல்லை.
ஆனாலும் உனது அருளும்  ஒளியும்  இங்கேயும்  நிறைந்திருப்பதைஅறிகிறேன் அம்மா!
அருளுக்கும் ஒளிக்கும் தூரம் ஏது? உனக்கும் எனக்கும் தடைச் சுவர்கள் தானேது?
நாளைக் காலையில் உன்னுடைய தரிசனம் வேண்டி வரிசையில்  நிற்கும் அடியவர்
பலருடன், என்னுடைய இந்தப் பிரார்த்தனை மலர்களும் சேர்ந்து நிற்கும்!

என்னையும் உனது அன்பிற்குத் தகுதியான குழந்தையாக ஏற்றுக்கொள்வாய் அம்மா!
 

இதுவே இன்றைக்கும் நாளைக்கும், அப்புறம் என்றைக்கும் நான் வேண்டும் வரம்!

ஓம் ஆனந்தமயி,
சைதன்ய மயி , சத்யமயி பரமே !

     Get this widget |     Track details  |         eSnips Social DNA   



 

4 comments:

  1. அவரவர்க்கு வேண்டிய விதத்தில், வேண்டுகிற நேரத்தில் கிடைப்பதை என்னுடைய அனுபவத்தில் உணர்ந்து வியந்திருக்கிறேன். வெற்றிகளாக நான் எண்ணிய எதுவும் நிலைக்கவில்லை என்பதோடு வெற்றிகளே என்னுடைய சுமையாகவும் ஆகிப்போனதாய் அறியவும் ஒரு நேரம் வந்தது.

    - true words. i experienecd also.

    - you can exchange or share with us your merging efforts with annai

    ReplyDelete
  2. பாலு சார்!

    வழி நடத்துதல்களாகிற அனுபவங்கள், அவரவர் விதி, வினை வசப்படியே கிடைக்கின்றன. இதைப் பொதுமைப் படுத்துவதோ, எனக்கானதே உங்களுக்குமானது என்று பொருத்திப் பார்க்கவோ முடியாது.

    நன்றே வருகினும் தீதே விளைகினும் நானறிவது ஒன்றேயுமில்லை என்ற அபிராமி பட்டார் வாக்கின் படி, நல்லது, கெட்டது எதுவாகினும் நடப்பது எல்லாம் அவளுடைய சித்தத்தின் படியே நடப்பதுதான்! இதில் என்னுடைய ஸ்வாதந்தர்யம் ஏதுமில்லை! இதை ஞான நிலையில் அறிந்து சொன்னதாக நினைக்கவேண்டாம்! நிறைய சாஸ்த்ரங்களை மேற்கோள் காட்டி, இது தான் என்று நிரூபிக்கிற அளவுக்கு ஞானம் இல்லை!

    கேட்டறி! பட்டறி அல்லது கெட்டறி! என்பதில் கடைசியாகச் சொன்ன, கெட்டு அறிந்தது தான்!

    அதுவாகி நிற்றல், அல்லது அவள்மயமாவது என்பது இன்னமும் ஒரு ஆசை, பிரார்த்தனை தான்!

    கைகூடியிருந்தால், இவ்வளவு வார்த்தை அலம்பல்களுக்கு அவசியமே இருந்திருக்காதே!

    கெட்ட பிள்ளையாய் இருந்தாலும் நான் அம்மா பிள்ளை! அவ்வளவுதான்

    ReplyDelete
  3. அன்னையின் அருள் வேண்டி 'எங்கள்' பிரார்த்தனையும்...

    ReplyDelete
  4. \\அதுவாகி நிற்றல், அல்லது அவள்மயமாவது என்பது இன்னமும் ஒரு ஆசை, பிரார்த்தனை தான்!

    கைகூடியிருந்தால், இவ்வளவு வார்த்தை அலம்பல்களுக்கு அவசியமே இருந்திருக்காதே!\\

    ஆம். ஆனாலும் அன்னையின் முன் நாம் குழந்தைகள்தானே.,

    நம் அலம்பல்கள் அவர்களுக்குத் தெரியாததா என்ன

    இவ்விசயத்தின் நமக்கு நன்றே வாய்ப்பதாக.

    வாழ்த்துகள்

    ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!