பதினாறு வயதினிலே!


டீன் ஏஜ் என்று சொல்லும் பதின்மூன்றிற்கும் பத்தொன்பதற்கும் இடைப்பட்ட வயசு! இது நிஜமாகவே ஒரு ரெண்டும் கெட்டான் பருவம், இந்தப் பருவத்தில் என்னென்ன நடந்தது, எதை நீங்கள் பகிர்ந்துகொள்வீர்கள் என்கிற மாதிரி ஒரு சங்கிலிப் பதிவில் கோர்த்து விடுகிற ஆட்டம் இங்கே இணையத்தில் நடந்து கொண்டிருக்கிறது. இந்த ஆட்டையில்  தான் கலந்து கொண்ட அதே வேகத்தில், பதிவர் கோவி கண்ணன் என்னையும் கோர்த்து விட்டு அழைப்பு விடுத்திருக்கிறார்.  
ன்னையின் பிறந்தநாள் தியானம், தோழர் வரதராஜனைப் பற்றி வந்து கொண்டே இருந்த சிந்தனைகளுக்கிடையிலுமே கூட, அவர் என்னையும் ஆட்டைக்கு வந்து கலந்து கொள்ளும்படி எழுதியிருந்ததை நினைவில் வைத்துக் கொண்டுதான் இருந்தேன்.
றியாத வயசு! எதையும் புரிந்துகொள்ளாத மனசு!

னால், எல்லாவற்றையும் அறிந்துகொள்ளவேண்டும், புரிந்துகொண்டுவிட வேண்டுமென்கிற தவிப்பு ஒன்று தான் இந்த பதின்மம் என்று தமிழ்ப்படுத்திச் சொல்கிற இந்தப் பருவத்தின் பொதுவான அம்சம். ரெண்டும் கெட்டான் தனம் தான் அதன் அழகு, அவலம், அசிங்கம் எல்லாமே! இப்படியும் இல்லாமல், அப்படியும் அல்லாமல் போன ஒரு பிராயத்தைப் பற்றி, இப்போது நினைத்துப் பார்த்து என்ன சொல்வது? எதைச் சொல்வது? அல்லது எதைச் சொல்லாமல் விடுவது? அதனால் யாருக்கு என்ன பயன்?
தின்ம வயதுகளில் எனக்குப் புத்தகங்களே எல்லாமாகவும் இருந்தன! விளையாட்டுக்களில் அவ்வளவு ஆர்வமிருந்ததில்லை. லியோ தோல்ஸ்தாய் மாதிரியான ஒரு நல்ல எழுத்தாளன், தன்னுடைய இளமைப் பிராயத்தை மட்டும் அல்லாமல், தன்னைச் சுற்றி இயங்கும் உலகத்தில் உள்ளவர்களுடைய இளமைப் பிராயத்தையுமே சேர்த்த ஒரு அனுபவமாக "இளமைப் பிராயத்திலே" (On Childhood) புதினத்தைத் திரும்பத் திரும்பப் படித்த , அதில் கதாநாயகனோடு ஏதோ ஒரு விதத்தில் ஈர்க்கப் பட்டதைச் சொல்லவா?

தாத்தாவும் பேரனும்-இது இன்னொரு உலகத்தில் இருந்து வந்த ஆங்கிலத்தில் இருந்து தமிழில் எனக்குப் படிக்கக் கிடைத்த புதினம். அமெரிக்க எழுத்து. முழுக்க முழுக்க, கதாநாயகன் தன் பாட்டனுடன் பல வகையான வேட்டைக்குப்போய் வரும் அனுபவங்களை ஆர்வத்தோடு சொல்கிற மாதிரியான கதை. வேட்டை, வேட்டையாடி உணவைச் சமைத்துச் சாப்பிடும் அனுபவம் என்று எனக்கு சம்பந்தமே இல்லாத ஒன்றைக் கதைக் களமாகச் சொல்லியிருந்ததையும், ஆர்வத்தோடு படித்த அந்தத் தருணத்தைச் சொல்லவா?

முடிவெட்டிக் கொள்வதற்காக மட்டும் சலூனுக்குப் போவது, அங்கே கடைக்காரர் மிகப் பிரயாசைப்பட்டு பைண்ட் செய்து வைத்திருந்த கன்னித்தீவு கதைகளைப் படிப்பதற்காக, அடிக்கடி போகிற இடமாகவும் ஆக்கிவைத்தது. கன்னித் தீவைப் படித்துக் கொண்டிருந்த சுவாரசியத்தில், அவர் அப்படியே, அண்ணா, திமுக, பெரியார் என்று பேசிப் பேசி, திராவிட இயக்கங்களின் அறிமுகம் கொஞ்சம் அதிகமாகவே ஆகிப்போனதாக, ஹிந்தி ஒழிக என்று கனவில் கூடத் தார் பூசிக் கொண்டு என்  பதின்ம வயது  தார் நிரம்பிய டின்னும், தென்னை மட்டைக் குச்சியுமாக ஆரம்பித்ததைச் சொல்லவா?

தின்மூன்று வயதில், எட்டாம் வகுப்பு! பொதுத் தேர்தலில், திமுகவிற்காக வாக்குக் கேட்டு ஓட்டுச் சாவடியில் பிரச்சாரம், கட்சி, அல்லது எவரது தூண்டுதலும் இல்லாமலேயே! ஆக, பதின்மவயதைப் புத்தகங்களும், அதற்கு அப்புறம் அரசியல் ஈடுபாடுமே பெரும்பகுதி ஆக்கிரமித்திருந்த காலம்!அதைச் சொல்லவா?
யில் வராத தண்டவாளத்தில் தலைவைத்துப் படுப்பது, பாம்புகள், பல்லிகள்  நடுவில் பாளையங்கோட்டை,  அது கூட வேண்டாம்! பக்கத்தில் உள்ள வாடிப்பட்டிக்குக் கூடப் போக முடியாமல் போனதால், மிகப் பெரிய அரசியல்வாதியாகவோ, அல்லது அப்படிப் பட்ட பெரிய அரசியல் வாதிக்குச் சரியான போட்டியாகவோ வர முடியவில்லை, அதனால் என்ன! ஒன்றும் குறைந்துபோய் விடவில்லை என்பதைச் சொல்லவா?.

தினைந்து, பதினாறு தாண்டினால் எல்லாப் பசங்களுக்கும் வருகிற வியாதி எனக்கும் வந்தது.ஒருதலைக் காதல்! ஒருதலையாகவே போய்க் கொண்டிருந்ததால், ஏதோ ஒரு இடத்தில் அது தானாகவே காணாமல் போனது கூட எனக்கு அப்போது தெரியவில்லை. அந்தத் தெரியாத் தனத்தைச் சொல்லவா?
மிழ் சினிமாப் படங்கள், வேறு எதைச் சொல்லிக் கொடுத்தனவோ இல்லையோ, இந்த மாதிரி அறியாத வயசுப் பசங்களின் மனதில், காதல் என்றால் என்ன என்பதைத் தப்புத் தப்பாகவே சொல்லிக் கெடுத்துக் கொண்டிருக்கின்றன என்பது மட்டும் நிஜம்!
புதிய பறவையில் சிவாஜி கடைசி சீனில் பேசுகிற வசனம்..காதலே நீ வாழ்க! பெண்மையே நீ வாழ்க! அன்றைக்குப் பார்க்கும்போது, உணர்ச்சிகரமாக இருந்தது, இப்போது திரும்பிப் பார்க்கும்போது மிகவும் கேலிக்குரியதாக இருக்கிறது!

ஆக, டீன் ஏஜ் அல்லது பதின்மம் என்று குறிப்பிட்டுச் சொல்லும் இந்த ஏழு வருடங்கள், என்னைப் பொறுத்தவரை வேகமாகக் கடந்துபோன ஒரு நிழல் மாதிரித் தான் இப்போது தோன்றுகிறது. இந்தப் பருவத்தில், நல்ல நண்பர்கள், பெற்றோருடைய அரவணைப்பு, நல்ல புத்தக வாசிப்பு என்று இருந்ததைத் தனியாகக் குறிப்பிட்டுச் சொல்லத் தான் வேண்டும். இந்தப் பருவத்தில், வேறு விஷயங்களில் கவனத்தைச் சிதற விடாமல் பாதுகாத்துக் கொள்ளக் கூடிய திறமை இருக்கும் இளைஞன் வாழ்க்கையில் காலூன்றிக் கொள்கிறான். கவனத்தை வேறு எங்கெங்கோ சிதறவிடுகிறவன், நிறையக் கசப்பான அனுபவங்களை எதிர்கொள்கிறான் என்பதைத் தவிர, என்னுடைய டீன் ஏஜ் பற்றிய மிகப் பிரமாதமான பிரமிப்பு அல்லது அபிப்பிராயம் எதுவுமில்லை  என்பது மட்டுமே உண்மை. கருவிலே திருவுடையான் என்று சொல்கிற அளவுக்கு, டீன் ஏஜ் சம்பவங்களை வைத்து, இன்றைக்குப் பெரிய ஆளாக இருக்கும் நான் அன்றைக்கே அதற்கான அஸ்திவாரத்தைப் போட்டு வைத்து விட்டேன் என்று சொல்லிக் கொள்கிற அளவுக்கு ஒன்றுமே இருந்ததில்லை.
புத்தகங்களைத் தேடிப் படிக்கும் பழக்கம், அண்ணன்மார்களிடமிருந்து மிகச் சிறு பருவத்தில் இருந்தே தொற்றிக் கொண்டது. அண்ணன்மார்கள் புத்தகத்தைப் படிப்பதில் தற்சமயம் ஆர்வம் காட்டுவதில்லை. ஆனால், எனக்கோ குறைந்தது, இரண்டு, மூன்று செய்தித் தாட்கள், அப்புறம் என்ன தலைப்பில் இருந்தாலும் சரி, தினசரி முன்னூறு நானூறு பக்கங்களுக்குக் குறையாமல் படிக்கும் பழக்கம், இன்னமும் நீடிக்கிறது.
டுத்து, சிறுவயதில் தொற்றிக் கொண்ட அரசியல் ஈடுபாடு, நேரடி அரசியலில் இன்றைக்கு இல்லை என்றாலுமே கூட, இன்னமும் இருக்கத் தான் செய்கிறது. நாம் விட்டாலும், பாழாய்ப்போன அரசியல் நம்மைச் சும்மா இருக்க விடுவதில்லையே! இந்த வரிகளை  எழுதிக் கொண்டிருக்கிற தருணத்தில் கூட, பட்ஜெட் அறிவிப்புக்கள், அதன் பின்னால் உள்ள ஒட்டு அரசியல் பற்றிய சிந்தனை ஓடிக் கொண்டுதான் இருக்கிறது!
னக்கு ஒரு ஆச்சரியம்!


ன்ன எதிர்பார்த்து, கோவி கண்ணன் என்னை இந்த ஆட்டத்திற்கு அழைத்தார் ? என்னை  மாதிரி சுவாரசியமே இல்லாத டீன் ஏஜை  கடந்துவந்தவர்களும் கொஞ்சம் பேர் இருக்கிறோமே!

னால், இந்த டீன் ஏஜ் பருவத்தில் என் ஆர்வத்தைத் தூண்டிய, ஆதர்சமாக வளர்ந்த, நம்பிக்கையை விதைத்த, என்னுடைய திறமையில் எனக்கே நம்பிக்கையில்லாமல் துவண்டுபோய்க் கிடந்த தருணங்களில் என்னை எழுந்து நின்று போராடக் கற்றுக் கொடுத்தவர்கள் என்று நிறைய சுவாரசியமான மனிதர்களைச் சந்தித்திருக்கிறேன். அவர்களால் தான் இன்றைக்கு, ஒரு ஆளாகவும் நிற்கிறேன்! 
 

5 comments:

 1. //என்ன எதிர்பார்த்து, கோவி கண்ணன் என்னை இந்த ஆட்டத்திற்கு அழைத்தார் ? என்னை மாதிரி சுவாரசியமே இல்லாத டீன் ஏஜை கடந்துவந்தவர்களும் கொஞ்சம் பேர் இருக்கிறோமே!//

  //சலூனுக்குப் போவது,கன்னித் தீவைப் படித்துக் கொண்டிருந்த சுவாரசியத்தில், அவர் அப்படியே, அண்ணா, திமுக, பெரியார் என்று பேசிப் பேசி//

  உங்களது அரசியல் அனுபவத்தின் மூலகாரணம் எங்கிருந்து பிறந்தது என்பதை அறிந்து கொண்டது சுவாரசியானதுதானே :)))

  ReplyDelete
 2. இதை விட சுவாரஸ்யமாக எழுத முடியுமா என்ன?
  எல்லோருக்கும் பல பொதுவாக இருந்தாலும், தனித்துத் தெரியும் சில என்ன என்று பார்ப்பதில் ஒரு சுவாரஸ்யம்...
  நானும் கூட இந்தத் தொடர்பதிவுக்கு ஹேமாவால் அழைக்கப் பட்டிருக்கிறேன்..என்ன எழுத என்றுதான் தெரியவில்லை..!
  என் மகன்கள் புத்தகம் படிக்கும் பழக்கமே இல்லாதிருப்பது எனக்கு வருத்தத்தைத் தந்தாலும் எனக்கிருக்கும் அந்தப் பழக்கத்தை அவர்கள் கேலி செய்வதற்குக் குறைவில்லை...
  உங்கள் பதின்மப் பருவம் மதுரையில்தானா?

  ReplyDelete
 3. சிறப்பாக எழுதி இருக்கிறீர்கள், யாரும் சொல்லாத தாத்தா பேரன் உறவு, புத்தக வாசிப்பு என சுவையார்வம் கூடிய பழைய பக்கங்கள் இயல்பான நடை. கலக்கல் சார்.

  ReplyDelete
 4. வாருங்கள் சிவா!

  இந்தப் பதிவில் நான் சொல்ல நினைத்த, ஆனால் சொல்லாமல் விட்ட ஒரே விஷயம், டீன் ஏஜ் என்பது ஒருவன் என்னவாகப் போகிறான் என்பதைத் தீர்மானிக்கும் பருவம். இந்தப் பருவத்தில் ஏற்படும் தழும்புகள் மாறுவதில்லை. சொல்லப் போனால் இன்னமும் விகாரமாகிவிடக் கூடிய வாய்ப்புக்களே அதிகம் என்பது தான்.

  என்னுடைய அரசியல் ஈடுபாடு சலூனில் கிடைத்த பிரசாரத்தில் தொடங்கியிருக்கலாம்! ஆனால் மந்திரித்துவிட்ட கோழி போல எப்போதும் இருந்ததில்லை!

  அண்ணாமலைப் பல்கலைக் கழகம் ஆரம்பித்து வைத்த சுய லாபங்களுக்காக பாராட்டு விழா எடுத்து டாக்டர் பட்டம் வழங்கியது, மாணவர்கள் எதிர்த்த பொது உதயகுமார் மரணம் அப்புறம் திருச்சி கிளைவ் ஹாஸ்டல் மாணவனை அடித்துக் கொன்று தெப்பக்குளத்தில் மிதக்கவிட்டது என்று வரிசையாக திமுகவின் சுயரூபம், அந்தக் காலத்திலேயே கழுதைக்கு வெள்ளி மூக்கு முளைத்த கதையாகவும் ஆகிப் போனது. பதின்ம வயதின் முடிவில் மாணவனாகவும் திமுக எதிர்ப்பாளனாகவும், ஸ்தாபன காங்கிரஸ் கட்சியில் இருந்தேன்.

  ஒவ்வொன்றாகச் சொல்லிக் கொண்டே போனால், பதிவு சுயசரிதையாகிவிடும்!

  ReplyDelete
 5. ஸ்ரீராம்!

  டீன் ஏஜ் பருவத்தில், எனக்குத் தான் சொல்லிக் கொள்கிற மாதிரி அல்லது சுவாரசியமான அனுபவங்கள் இல்லையே தவிர, நிறைய சுவாரசியமான மனிதர்களை சந்தித்ததும், அவர்களுடைய அனுபவங்களை உள்வாங்கிக் கொண்டதும் இந்தப் பிராயத்தில் இருந்து தான் ஆரம்பித்தது!

  கோவி கண்ணன்,

  நீங்கள் பாட்டுக்குத் தொடர் பதிவு, சங்கிலிப் பதிவு என்று எதிலாவது இழுத்து விடுகிறீர்கள்!

  இளமைப் பிராயத்திலே தோல்ஸ்தாய் எழுதிய இந்தக் கதையைத் திரு நடராஜன் மொழிபெயர்ப்பில் என்று நினைவு, சிறுவனாக இருந்து பதின்ம வயதுக்குள் நுழையும் ஒருவன் தன்னுடைய அனுபவங்களைச் சொல்கிற கதை. தமிழில் ஆரம்ப காலத்து வாசிப்பில் இன்றைக்கும் நினைவில் நிற்கும் கதை!

  தாத்தாவும் பேரனும், இது ரஷ்ய நூல்கள் இந்திய மொழிகளில் வெளிவந்துகொண்டிருந்ததற்குப் போட்டியாக அமெரிக்க நூல்களும் கொஞ்சம் மொழிபெயர்ப்பாக வந்து கொண்டிருந்தன.

  பெ. நா. அப்புசாமி அவர்கள் மொழிபெயர்த்த அறிவியல் வரலாறு நான் படித்த புத்தகங்களில் இன்றைக்கும் ஒரு உன்னதமான இடத்தில் இருக்கிறது.

  பதின்ம வயதில் புத்தகங்களே என்னைப் பெருமளவு ஆளுமை செய்து கொண்டிருந்தன! இன்றைக்கும் கூட!

  ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!