ஆக்ஷன்! அடிதடி! காமெடி சென்ட்ரல்! அரசியல் தான்!


இது வரை வந்த திரைப்படங்களிலேயே, மிகச் சிறந்த ஆக்ஷன் பீஸ் என்று சிரஞ்சீவி நடித்து 1995 ஆம் ஆண்டு வெளிவந்த அல்லுட மஜக என்ற தெலுங்குப் படத்தில் இருந்து ஐந்து நிமிடம் ஓடக் கூடிய இந்தக் காட்சியை யூட்யூபில்  இன்றைக்குப் பார்த்தேன்!

ஐந்தே நிமிடங்களில், சிரஞ்சீவி சூப்பர்மேன், ஸ்பைடர் மேன், ஹீ மேன் லாரா கிராப்ட், இந்தியானா ஜோன்ஸ் எல்லோரும் சேர்ந்த கதம்பக் கலவையாக அப்படி ஒரு ஸ்டன்ட் சீன் தான்!  சந்தேகமே இல்லை! தெலுங்கு பேசும் அடுத்த வீட்டு மக்களுக்கு இப்படி எல்லாமே எக்ஸ்ட்ரா பிட்டிங் ஆக இருந்தால் தான் பிடிக்கும் என்பதும் தெரிந்தது தான்!


ஆனால் சிரஞ்சீவி அடித்த ஸ்டன்ட்களிலேயே, சூப்பர் ஸ்டன்ட், சூப்பர் காமெடி எல்லாமே, தனித் தெலங்கானாவை முதலில்  ஆதரித்து  விட்டு அப்புறம் அப்படியே சோமர்சால்ட்  அடித்து, எதிர்ப்பும் தெரிவித்தாரே அது தான் என்று தோன்றுகிறது!

சால்வை அழகர் பானா சீனா, தெலங்கானா கோரிக்கையை  ஏற்பதாக நள்ளிரவில் அறிவித்த வேகமென்ன, எதிர்ப்புக்கள் கிளம்பின வேகத்தில் அப்படியே பதுங்கிக் கொண்ட லாவகமென்ன, உள்துறை அமைச்சகத்தின் வேலை அதிகமாகி விட்டது, அதனால் அதையும் இரண்டாகப் பிரித்தால் என்ன என்று மறுகியது என்ன இப்படி கண்டனூர் பானா சீனா அடித்த ஸ்டன்ட் இருக்கிறதே, அதற்கு முன்னால் சிரஞ்சீவி பிச்சை வாங்க வேண்டும்!

தானைத் தலைவியின் பிறந்த நாள் அறிவிப்பாகதெலங்கானா தனிமாநிலமாக ஆக்குவதான அரசின் முடிவை  வெளியிடலாம் என்ற யோசனையை, கொஞ்சமும் ஆராய்ந்து பார்க்காமல் வெளியிட்டு விட்டு, குத்துதே குடையுதே என்று பானா சீனா கண்ணைக் கசக்கியதும்,  மலையாளத்து மாமேதை எம் கே நாராயணன் காவு கொடுக்கப் பட்டு, மேற்கு வங்காள கவர்னராக ஆக்கப் பட்ட ஸ்டன்ட்  சும்மா லேசுப்பட்டதா என்ன!

இப்போது நீதிபதி ஆர் எஸ் கிருஷ்ணா தலைமையில் தெலங்கானா விஷயமாக விசாரணைக் கமிஷன்! இன்னும் எவ்வளவு சூப்பர் ஸ்டன்ட் எல்லாம் வரப் போகிறதோ!?

இவர்கள் அடித்து நொறுக்குகிற ஸ்டன்ட்களில், மாட்டிக் கொண்டு விழிக்கும் மக்களுக்கு எப்போது விடிவுகாலம்? 

எப்போது விழித்துக் கொள்ளப் போகிறோம்?





 

8 comments:

  1. காமெடி காட்சி...ச்சே..ஆக்ஷன் காட்சி ரசித்துப் பார்த்தேன்.

    ReplyDelete
  2. பந்தால பத்துநாள் லீவு கிடைச்சதும்( என் குழந்தை ரொம்ப ஜாலியா இருந்தான் ),அரசு பஸ்கள் ,மற்றும் சொத்துக்கள் தாக்கப்பட்டதும் இதுதான் சாக்கென்று பஸ் சார்ஜ் ஏற்றப்பட்டதும் தான் பலன்.
    இதுல பெரிய காமெடி பஸ் சார்ஜ் ஏத்துனது போக்குவரத்து அமைச்சருக்கோ சி.எம். கோ கூட தெரியாது என்பதுதான்.

    ReplyDelete
  3. அங்கே ரோசையா வெறும் டம்மி பீஸ் தான்! அவரை முதலமைச்சராக எவருமே ஏற்றுக் கொள்ளவில்லை என்பதோடு, அமைச்சரவை என்று ஒன்று கூட்டுப் பொறுப்பில் அரசை நிர்வகிக்கும் நிலை ஆந்திராவில் இல்லை என்பதும் தெரிந்தது தான்.

    இயங்காத அரசு, சட்டசபை, ராஜினாமா செய்து அதை கவர்னருக்கே அனுப்பிய சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்கள் என்று பல கூறுகளிலும் அரசியல் சட்ட 356 ஆவது பிரிவின் கீழ் கலைக்கப்பட வேண்டிய அரசு இந்த அறுபதாண்டுகளில் இது ஒன்றாகத் தான் இருக்க முடியும்.

    காங்கிரஸ் செய்து வரும் தில்லுமுல்லுகளில் இதுவும் ஒன்று!

    உச்ச நீதி மன்றம், இது தொடர்பாகத் தொடரப்பட்ட PIL மனுவைத் தள்ளுபடி செய்து, அவர்களது ராஜினாமாக்கள் ஏற்கப்படவேண்டும் என்று கோருவதற்கு நீங்கள் யார் என்று கேட்டிருப்பது, நிர்வாகம், நீதித்துறை, சட்டமன்ற அமைப்பு மூன்றுமே செயலிழந்துபோன அவலத்தைத் தான் வெளிப்படுத்துகிறது.

    அழிப்பது சுலபம்! காங்கிரஸ் காரர்களுக்கு அது இயல்பாகவே இருக்கிறது என்பது இந்த தேசத்தின் மிகப் பெரிய சோகம்!

    ReplyDelete
  4. அரசியலிலும் கலைத்துறையிலும் காம்ப்ரமைஸ் செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் எல்லாருக்கும் வரும். லட்சிய அரசியல்வாதி என்று ஒருவர் இருக்கிறாரா, இருந்திருக்கிறாரா? கடவுளுக்கே வெளிச்சம். ஆனால் இன்றைய சூழ் நிலையில் லட்சியம் எங்குமே விலை போகவில்லை. " பாகிஸ்தான் பிரிந்தே தீரும் ஆனால் இந்த காந்திக் கிழவர் உண்ணாவிரதம் இருந்து செத்துத் தொலைந்தால் என்ன செய்வது " என்று யோசிக்காமலா அந்தக் காலத்து பெருந்தலைகள் இருந்திருப்பார்கள்? அப்பவே அப்படி என்றால் இப்போ எப்படி? இப்படித் தான்.

    ReplyDelete
  5. ஆஹா! இந்த காம்பரமைஸ் என்ற வார்த்தையைத் தமிழில் அப்படியே உண்மையான அர்த்தத்தோடு சொல்ல முடிவதில்லையே!

    இந்த காம்ப்ரமைஸ் என்பது,ஒரு தனி நபரின், அல்லது தலைவரின் தாக்குப் பிடிக்கும் சக்தியைப் பொறுத்தது.

    மொரார்ஜி தேசாய் என்று ஒருத்தர், கொஞ்ச நாள் துணைப் பிரதமராகவு, அப்புறம் ஜனதாக் கூட்டணியின் பிரதமராகவும் இருந்தார்! கோகோ கோலா கம்பனி இந்தியாவில் வியாபாரக் கொடி நாட்ட வந்த போது, அதன் தயாரிப்பின் அடிப்படை என்ன என்பதைத் தெரிவிக்க வேண்டும் என்று பிடிவாதமாக இருந்தார். உலகத்தைக் கொள்ளையடிக்கப் புறப்பட்ட நவீன ராட்சதர்களாக இருந்த அந்த கோலா கம்பனி, அது ரகசியம், எங்களுக்கு வியாபாரமே வேண்டாம் என்று தானே தன்னுடைய வாலைச் சுருட்டிக் கொண்ட கதை மறந்து போய் விட்டது இல்லையா?

    இந்த மனிதன், சமரசங்கள் என்று நீங்கள் சாதாரணமாகச் சொல்லப் படும் எதையும் தன்னுடைய அரசியல் வாழ்க்கையில் செய்து கொண்டது இல்லை. அதனாலேயே, ஜெயப்ரகாஷ் நாராயணன், கஷ்டப்பட்டு உருவாக்கிய காங்கிரசுக்கு மாற்றான கூட்டணியை, சரண் சிங் போன்றவர்கள் உடைக்க முடிந்தது.

    இப்போதும் கூட காங்கிரசுக்கு மாற்று எதுவும் இல்லை என்பதாலேயே ஆட்சியைப் பிடிக்க முடிகிற கட்சி அது! ஆட்சியைப் பிடிக்க முடிந்தாலும், அதைத் தக்க வைத்துக் கொள்வதற்காக, கருணாநிதி கூடவும் கூட்டணி வைத்துக் கொள்கிற அளவுக்குக் கீழே தாழ்ந்து விட்ட கட்சியாகவும் தான் அன்னை சோனியாவால் தூக்கி நிறுத்த முடிந்தது. அது 2004 நிலவரம்! 2009 இல் காங்கிரசுக்கு, அந்தக் கீழ்நிலையில் இருந்து விடுபட ஒரு வாய்ப்பும் இருந்தது. தவற விட்டார்கள்!

    இப்போதோ,மகன் ராகுல் கொஞ்சம் வித்தியாசமானவராகத் தான் செயல் படுகிறார்!

    ReplyDelete
  6. ராமன் சார்,

    பிரிவினைக்கு ஒப்புக் கொண்டு அவசர அவசரமாக மகுடம் சூட்டிக் கொள்ள நேரு போன்றவர்கள் தான் ஆசைப்பட்டார்கள். காந்தி, நேருவின் ஆசைக்குக் குறுக்கே வரவில்லை.

    ஆனால், பிரிவினைக்குத் தன எதிர்ப்பைத் தெரிவித்து காந்தி உண்ணாவிரதம் இருந்ததும், பிரிவினைக் கொந்தளிப்பில் ஆயிரக்கணக்கான படுகொலைகள், லட்சக்கணக்கான மக்கள் உயிருக்காக அஞ்சி இடம் பெயர்ந்த அந்த சோகமான தருணங்களில் காந்தி ஒருவர் மட்டுமே, கலவரப்பகுதிகளுக்குக் கண்ணீருடன் தன்னந்தனியே சென்றார்!

    காந்தியின் உண்ணாவிரதத்தைக் கண்டு பிரிட்டிஷ் காரர்கள் தான் அஞ்சினார்கள்! நேரு காலத்தில் இருந்தே, அதற்கு எந்த மரியாதையும் இல்லாமல் போனது!

    கழகங்கள் இங்கே தின்று கொழுக்க ஆரம்பித்த காலங்களில், எவரேனும் தங்களுடைய கோரிக்கைகள்,கவலைகளை முன்வைத்து உண்ணாவிரதம் இருக்க முயற்சித்தால் நேரெதிரே பந்தல் போட்டு 'உண்ணும் விரதம்' நடத்திய கூத்தும் நடக்க ஆரம்பித்து, இப்போது உண்ணாவிரதம் என்பதற்குக் கழகங்கள் புதுப் புது அர்த்தங்களையே கண்டுபிடித்துக் காட்டிக் கொண்டிருக்கிறார்கள்!

    இதில் அவர்களைக் குற்றம் சொல்லிப் பயனில்லை! ஏமாந்த ஜனங்கள் தான் முடிவு செய்ய வேண்டும்!

    ReplyDelete
  7. காந்தி சமரசம் செய்யாத கொள்கைப் பிடிப்பாளர் என்று ஒரு பிம்பம் பலமாக இருக்கிறது. ஆனால் உண்மை அப்படி இல்லை. காந்தி பிடிவாதம் காட்டி இருந்தால் பாகிஸ்தான் உண்டாகி இராது ஆனால் ரத்த ஆறு ஓடி இருக்கும். அவ்வளவு எதற்கு? பாலே குடிக்க மாட்டேன் என்று பிடிவாதமாக கொள்கை எடுத்துக் கொண்ட காந்தி பின் காம்ப்ரமைஸ் செய்துதான் ஆட்டுப் பால் குடிக்க முடிவு செய்தார்.

    அடுத்து, நீங்கள் கோபித்துக் கொள்ளா விட்டால் ஒன்று சொல்கிறேன். மொரார்ஜி மகன் காந்தி தேசாய் எல் ஐ. சி எஜன்ட் ஆக கோடிக்கணக்கில் கமிஷன் சம்பாதித்தார். அப்பாவின் செல்வாக்கை வைத்துக் கொண்டு நிறைய பிசினஸ் பிடிக்கிறார் என்ற புகார் எழுந்தது. அப்போது மொரார்ஜி என்ன செய்தார் தெரியுமோ? எதோ சில நிறுவனங்களுக்கு " நீங்கள் என் மகன் என்பதால் முன்னுரிமை காட்டினீர்களா " என்று ஒரு கேள்வியைப் போட்டார். " ச்சே, ச்சே, அதெல்லாம் இல்லை நாங்கள் சாதாரண பிசினெஸ் முறையில் தான் கொடுத்தோம் :" என்று பதில் வந்தது. அதில் திருப்தி அடைந்து பாராளுமன்றத்திலும் அதைச் சொல்லி விவாதத்தை முடித்து வைத்தார். இதைச் சொல்வதால் நான் மொரர்ஜிக்கு எதிரி என்று எண்ணிவிடாதீர்கள். அரசியலில் இன்று வரை அளவிட்டுப் பார்க்கும் போது நேர்மை என்பதற்கு எடுத்துக் காட்டாக இருந்தவர்கள் வெகு சிலர். அதில் மொரார்ஜி, ராஜாஜி, ஓமந்தூரார் அடக்கம். ஆனால், தற்கால அரசியலில் நேர்மையாவது கடமை உணர்வாவது? எரிகிற கொள்ளியில் இந்தக் கொள்ளி பரவாயில்லை என்பதுதான் உண்மை.

    ReplyDelete
  8. அருமையான க்ளிப்பிங்க் :)

    நல்ல நகைச்சுவை

    //சால்வை அழகர் பானா சீனா, தெலங்கானா கோரிக்கையை ஏற்பதாக நள்ளிரவில் அறிவித்த வேகமென்ன, எதிர்ப்புக்கள் கிளம்பின வேகத்தில் அப்படியே பதுங்கிக் கொண்ட லாவகமென்ன, உள்துறை அமைச்சகத்தின் வேலை அதிகமாகி விட்டது, அதனால் அதையும் இரண்டாகப் பிரித்தால் என்ன என்று மறுகியது என்ன இப்படி கண்டனூர் பானா சீனா அடித்த ஸ்டன்ட் இருக்கிறதே, அதற்கு முன்னால் சிரஞ்சீவி பிச்சை வாங்க வேண்டும்!//

    பேசாமல் ஆந்திராவை தெலுங்கானா என்று பெயர் மாற்றிவிட்டால் பிரச்சனை அடங்கிடும்னு நினைக்கிறேன். வெறும் பெயர் சண்டைகள் மதமாக மாறி இருக்கின்றன, பெயரில் உடன்பாடு ஏற்பட்டால் பிரச்சனைகளே எழாது.
    :)

    ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!