டொயோடா கார் தயாரிப்பு நிறுவனத்தின் உற்பத்தி முறை, உலகப் பிரசித்தமாக இருந்தது ஒரு காலம். கண்ணை மூடிக் கொண்டு ஜப்பானிய மேலாண்மை முறைகளை ஆதரித்தவர்கள் எல்லாம், இன்று கண்ணை மூடிக் கொண்டு கல்லெறிகிற காலமுமாகிப் போனது.
வாடிக்கையாளருடைய முழுத் திருப்தியையே முதன்மையான லட்சியமாகக் கொண்ட தயாரிப்பு முறையில், தர உத்தரவாதமும், நம்பகத் தன்மையும், உற்பத்தி நிலையின் ஒவ்வொரு கட்டத்திலும் முக்கியமாக வலியுறுத்தப்பட்டது. ஊழியர்களுடைய யோசனைகளை, கருத்துக்களை, ஒவ்வொரு நிலையிலும் கேட்டுப் பரிசீலித்து, அதை நடைமுறைக்குக் கொண்டு வந்ததிலும், உற்பத்திக்கான மூலப் பொருட்களை வீணாக்காமல், தேவைக்கு அதிகமாக ஸ்டாக் வைத்துக் கொள்ளாமல், தேவைப் படுகிற நேரத்தில் மட்டுமே வைத்துக் கொள்கிற முறையிலும், உற்பத்தியின் ஏதோ ஒரு நிலையில், குறைபாடு கண்டுபிடிக்கப் பட்டால், உற்பத்தி வரிசையை அப்படியே நிறுத்தி விட்டு, கோளாறைச் சரி செய்வதற்கு முக்கியத்துவமும் கொடுத்து, தயாரிப்பு கலையை, ஒரு சிகரத்துக்கு எடுத்துச் சென்ற மேலாண்மை முறையாக டொயோடா தயாரிப்பு முறை கொண்டாடப் பட்டது.
உற்பத்தி என்பது எண்ணிக்கையின் அடிப்படையில் மட்டுமே தீர்மானிக்கப் படுகிற அமெரிக்க அசெம்ப்ளி லைன் நிர்வாக முறைக்கு, நேர் மாறாக ஜப்பானிய தயாரிப்பு முறை தர நிர்ணயம், வாடிக்கையாளரை முதன்மையாகக் கொண்ட உற்பத்தி முறைக்கும் அடிப்படையில் இருந்தே நிறைய வேறுபாடுகள் இருந்தன.
மேலே உள்ள இரண்டு படங்களும், அமெரிக்கக் கார் தயாரிப்பு நகரமான டெட்ராய்ட்டில் இருந்து வரும் freep.com தளத்தில் வெளியாகி இருக்கும் நக்கல் படங்கள்! தன்னுடையதே மொத்தமாகக் காற்றில் பறந்து கொண்டிருக்கும்போது, அடுத்தவன் துண்டு பறப்பதைக் குத்திக் காட்டிச் சிரிக்கும் நக்கலுக்கும் இதற்கும் அதிகவித்தியாசமில்லை !
கார் தயாரிப்பு நகரமான டெட்ராய்ட் இன்றைக்குக் குழப்பம் நிறைந்த நகரமாக நகரமாக இருக்கிறது. டைம் பத்திரிகையில்,மே18, 1942 இரண்டாம் உலகப் போர்த் தருணங்களில், டெட்ராய்ட் நகரைப் பற்றிய கொஞ்சம் துணுக்குச் செய்திகளைப் படிக்க இங்கே.
(அமெரிக்காவின் முன்னுரிமைகள் எவைகளில் இருந்தது என்பதை இந்த ஒரு துணுக்குச் செய்தியே சொல்லும்!)
உலகிலேயே நம்பர் ஒன் கார் தயாரிப்பு நிறுவனமாக இருந்த ஜெனரல் மோட்டார்ஸ் 2008 இல் அந்த முதன்மை அந்தஸ்தை இழந்தது. அதற்கு நெடுங்காலத்துக்கு முன்னாலேயே, ஜப்பானியத் தரத்தோடு போட்டி போட முடியாமல் அமெரிக்கக் கார் தயாரிப்பு நிறுவனங்கள், தொடர்ந்து பலவீனப் பட்டுக் கொண்டே வந்தன. அமெரிக்கக் கனவுகள் எப்போதுமே யதார்த்தத்தை விட்டு விலகி ரொம்ப உயரத்தில் தான் இருக்கும்.அதே நேரம் நடைமுறையில் கழுகு எப்போதுமே கீழே செத்துக் கிடக்கும் எலி முதற்கொண்டு லாபம் ஒன்ற ஒரு இரையை மட்டுமே தேடுவதாகக் கீழே அதலபாதாளத்தில் கொண்டுவந்து தான் சேர்க்கும் என்பதில், அமெரிக்கக் கார் தயாரிப்பு நிறுவனங்கள், அமெரிக்க வங்கித்துறை, நிதித்துறை இவைகளுக்கு எந்த விதத்திலும் குறைந்ததில்லை.
முந்தைய பதிவுகளில், டொயோடா நிறுவனம் தற்சமயம் சந்தித்து வரும் பிரச்சினைகளைப் பேசியிருக்கிறோம். டொயோடா சந்தித்து வரும் பிரச்சினைகள் அமெரிக்கர்களுக்கு இப்போது கேலிக்குரியதாகப் போய் விட்டது! தங்களுடைய நிறுவன முறைகளில் காணப் படும் பேராசையே, தங்களுடைய பொருளாதாரச் சரிவுக்குப் பெருங்காரணமாக இருக்கிறது என்பதை அமெரிக்கர்களுடைய நாந்தேன் மதுரை ஹீரோ மனோபாவம் ஒப்புக் கொள்ள மறுக்கிறது.
பிரச்சினை என்று வந்தவுடன், அதுவரை போற்றிக் கொண்டாடிக் கொண்டிருந்த ஒரு கோட்பாட்டை அப்படியே மறுதலிக்கிற மனோபாவம், பிரச்சினைக்கு உண்மையான தீர்வை எப்போதுமே சொல்லப் போவது இல்லை. ஆனால், டொயோடாவின் தற்போதைய பிரச்சினைகள், இந்திய நிறுவனங்களுக்கும், மேலாண்மை, நிர்வாகவியல், சந்தை உத்திகள், தர நிர்ணயம், சந்தைப் பொருளாதாரம் போன்ற துறையில் இருப்பவர்களுக்கு, மிக அருமையான பாடத்தைச் சொல்லிக் கொடுப்பவையாக இருப்பதனால், கூர்ந்து கவனிக்கப் பட வேண்டிய ஒன்றாகவே தொடர்ந்து இந்தப் பக்கங்களில், சொல்லிக் கொண்டிருக்கிறேன். கொஞ்சம் ஆர்வமுள்ளவர்களுக்காக ஒரு செய்தி இங்கே.
டொயோடா தயாரிப்பு முறையின் முக்கியமான அம்சங்களை முந்தைய பதிவுகளில் படங்களாகப் பார்த்திருக்கிறோம். நினைவு படுத்திக் கொள்வதற்காக மீண்டும் கீழே!
ஒரு தயாரிப்பு, அதற்குத் தேவைப்படும் பொருட்களைத் தேவையான நேரத்தில் மட்டும் எடுத்துக் கொள்கிற இன்வெண்டரி மேனேஜ்மேண்டில் இருந்து ஆரம்பித்து, ஊழியர்களுடைய மனப்பூர்வமான ஒத்துழைப்பையும், உழைப்பையும் பெறுவது என்பது உற்பத்தியின் மிக முக்கியமான பங்காக இருக்கிறது; தயாரிப்பு முறைகள் சோதித்து உத்தரவாதப் படுத்தப்பட்டவைகளாக, தவறு, குறைகள் கண்டுபிடிக்கப் படுவதிலும் ஒரு தீர்மானமான அளவீடுகளைக் கொண்ட முறைகளாக, தவறுகள் கண்டுபிடிக்கப் படுகிற நிலையில், உற்பத்தி நிறுத்தப் பட்டு அங்கே தவற்றை சரி செய்வதில் முழுக் கவனம், தவறு மறுபடி நிகழாது என்ற உறுதியான நிலையில் மட்டுமே தயாரிப்பைத் தொடர்வது, வாடிக்கையாளருக்கு, தயாரிப்பின் மீதான நம்பிக்கைக்கு முழு உத்தரவாதம் இவைகளெல்லாம் தான் டொயோடா தயாரிப்பு முறையின் அடிப்படைத் தூண்கள்!
மூலப் பொருட்கள், உழைப்பை வீணாக்குவது, காலதாமதத்தால் வரும் அனர்த்தங்கள் எல்லாம் இந்த முறையில் அனேகமாக முழுமையாகத் தவிர்க்கப் படுவதே இதன் மிகச் சிறந்த அம்சம்! போட்டியாளரை விட விலை குறைவாக, நுகர்வோருக்கு வாங்கும் மதிப்பை அதிகம் தருவதாக, தரத்தில் சிறந்ததாக ஜப்பானியத் தயாரிப்புக்கள் சர்வதேசச் சந்தையில் கடந்த ஐம்பதாண்டுகளில் முதலிடம் பிடித்ததில், டொயோடா தயாரிப்பு முறை ஒரு தர அளவீடாகவே இருந்தது. இப்பொழுதும் இருக்கிறது!
கைஜென் என்று சொல்லப் படும் தொடர்ந்து நிகழும் முன்னேற்றம் என்பதே அதன் ஜீவனாக இருக்கிறது. அமெரிக்க முறைகளைப் போல, விளம்பரங்கள், தம்பட்டங்கள், விரையங்கள், கொழுத்த லாபம் என்ற அம்சங்களை மட்டுமே பிரதானமாகக் கொண்டது அல்ல. அமெரிக்க கார்தயாரிப்பு நிறுவனமான போர்ட் கம்பனி கூட, டொயோடா தயாரிப்பு முறையில் உள்ள நல்ல அம்சங்களைத் தன்னுடைய தொழிற்சாலைகளில் நடைமுறைப்படுத்த முன்வந்ததே,டொயோடா முறையில் உள்ள நிறைவைக் காட்டும்.
அப்புறம் பிரச்சினை எதனால் வந்தது? தான் உருவாக்கிய நடைமுறைகளைத் தானே பின்பற்ற டொயோடா நிறுவனம் தவறி விட்டது என்பது தான்!
ஐரோப்பாவில் ஒன்றரை வருடங்களுக்கு முன்னாலேயே கண்டறியப் பட்ட இந்தக் குறைபாடுகளைக் களைய, நிர்வாக மட்டத்தில் தவறியதே பிரச்சினை முற்றுவதற்குக் காரணமாக இருந்திருக்கிறது. தொடர்ந்த விரிவாக்கம், உற்பத்தியைக் கூட்டித் தரவேண்டிய சந்தை நிர்பந்தம் இவற்றில் கவனம் செலுத்தியபோது, தவிர்க்கமுடியாத பக்கவிளைவுகளாகத் தரக் குறைவும்சேர்ந்துவிட்டதாக, தற்சமயம், இந்தத் துறையில் உள்ளவர்களால் கண்டு சொல்ல முடிகிற காரணங்கள். டொயோடா தயாரிப்பு முறையை விட மேலான உற்பத்தி முறை வேறெதுவும் இல்லை. பிரச்சினைக்குத் தீர்வு, அதை பின்பற்றுவதில் தான் இருக்கிறது என்கிறார்கள் வல்லுனர்கள்.
இங்கே டொயோடா பிரச்சினையைப் பேசும்போது, இந்தியாவில் கார்தயாரிப்பு நிறுவனங்களின் யோக்கியதை என்னவாக, எப்படிப்பட்டதாக இருந்தது என்பதையும் கொஞ்சம் வரலாற்றுக் குறிப்புக்களோடு தொடர்ந்து பேசுவோம்!
good one, your blog is impressive
ReplyDeleteYou are right.
ReplyDeleteAmerican Cars have been lagging behind japanese cars for more than 10 years. Till 2008 GM held on to the title mainly due to their trucks, SUV etc., Eventually, they lost the race to Toyota.
It is Honda next to Toyota in the cars segment for the last 10+ years. In quality, the american cars cannot compete with Japanese.
I strongly believe that the competitors are making a mountain of the mole hill. These recalls are not unheard of from american car makers. For Toyota, it is new and now that the American Car Companies think that they found a vulnerability in Toyotoa's armour.
I believe that it is just a matter of time that Toyota comes back with a bang
Another good blog article from you
திரு.குழலி,
ReplyDeleteநன்றி!
வாருங்கள் ரவி! இந்தப் பதிவை எழுதியது, டொயோடா என்ற ஒரு தனி நிறுவனத்தைப் பற்றிப் பேசுவதற்காக மட்டும் இல்லை.
இரண்டாவது உலகப் போர் முடிந்த பிறகு தரைமட்டமாகிப்போய்க் கிடந்த ஒரு பொருளாதாரம், ஆங்கில மொழியறிவு, நவீன தொழில் நுட்பம், ஆராய்ச்சியில் கோடி கோடியாகக் கொட்ட முடியாத தன்மை, சந்தையைப் பற்றிய ஞானம் முழுமையாக இல்லாத நிலை இப்படி எதிலுமே கைசோர்ந்து போய்க் கிடந்த ஒரு சமூகம், எப்படித் தன்னை ஒரு தெளிவான Work Culture உடன் பிரச்சனைகளை எதிர்கொள்ளவும், பிரச்சினைகளில் இருந்த வாய்ப்பை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ளவும் தயார் செய்து கொண்டது என்பது தான் டொயோடா முதலான ஜப்பானிய நிறுவனங்களின் வளர்ச்சியில் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய மிக முக்கியமான விஷயம். கடந்த அறுபதாண்டுகளில் தரத்துக்கு முதலிடம் கொடுத்து, வாடிக்கையாளர்களுடைய முழு நம்பிக்கைக்கும் பாத்திரமாவதே நல்ல நிறுவனங்களின் தாரக மந்திரமாக இருந்து வருகிறது.
ஆக, உலகத்தின் மிகப் பெரிய பொருளாதார சக்தியாக ஜப்பான் இரண்டாம் இடத்தில் இன்று வரை இருப்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.
அதே நேரம், சென்ற ஆண்டில் இந்த 'பெரிய தலைகள்' பட்டியலில் ஏழாமிடத்தில் இருந்த சீனா, கிடுகிடுவென முன்னேறி, மூன்றாமிடத்தைப் பிடித்திருப்பதும்,நடப்பு ஆண்டில் ஜப்பானைப் பின்னுக்குத் தள்ளி விட்டு இரண்டாமிடத்திற்குச் சீனா முன்னேறி வந்து விடும் என்ற ஹேஷ்யங்கள் வேறு விதமான போக்கு ஒன்று வளர்ந்து வருவதையே காட்டுகிறது.
தொழில் முறைகளில் எந்த விதமான தரமோ, நாணயமோ இல்லாமல் தயாரித்து அடுத்தவர் தலையில் கொட்டுவது என்ற சீனப் பூச்சாண்டி அதன் ராணுவ மிரட்டல்களை விடப் படு மோசமான, நிஜமான மிரட்டலாக வளர்ந்து வருவதையும் பார்க்க முடிகிறது.
இப்படி எதிரும் புதிருமான இரண்டு நிலைகளில் இருந்து நாம் கற்றுக் கொள்ளக் கூடியவைகலுமே அதிகமாக இருக்கிறது என்றே எனக்குப் படுகிறது.
1. all american company work and contiue if morethan 100% profit will come. for that they purchase small wellgoing companies. if small loss come - they will immediately sell the companies.\
ReplyDelete2. but practically most of people buying china products knowingly because of low price. what we do for that?
வாருங்கள் திரு.பாலு!
ReplyDeleteலாபம் என்பது தொழில், வாணிகத்தின் அடிப்படைக் கூறு! அதை முழுக்க முழுக்கத் தவறு சொல்ல முடியாது!
காசுக்குத் தகுந்த பணியாரம் என்பது இங்கே வழக்குச் சொல்லாக இருப்பதும் கூட அந்த அடிப்படையைச் சொல்வது தான்!
இந்தப் பதிவில் விலை குறைவாக இருப்பதில் இரண்டுவிதமான போக்குகள் சொல்லப் பட்டிருக்கின்றன.
ஒன்று, உற்பத்திச் செலவு, விரையம் இவற்றைக் குறைப்பதில் ஏற்படும் மிச்சம், போட்டியாளரை விட விலை கம்மியாகத் தர முடிகிற அம்சம். இங்கே தரம் எந்த விதத்திலும் குறைவதில்லை.
அதற்கு நேர்மாறாக, விலை நம்ப முடியாத அளவுக்குக் குறைச்சல் என்று நம்பவைத்து, தரம் குறைந்த பொருட்களை தலையில் கட்டி விடுவதான சீனப் போக்கு!
இந்த இரண்டு போக்குகளிலுமே லாபநோக்கு இருக்கத் தான் செய்கின்றன. அதனால், இந்த விஷயத்தில், அமேரிக்கா, சீனா, இந்தியா என்று பிரித்துப் பார்க்க வேண்டியதில்லை.
http://consenttobenothing.blogspot.com/2009/12/blog-post_31.html
இந்தப்பதிவின் கடைசிப் பகுதியில் ஜப்பான் எழுந்து நின்ற விதத்தைப் பற்றிக் கொஞ்சம் சொல்லியிருக்கிறேன், நேரமிருந்தால் படித்துப் பாருங்கள்.
காரா ? மண ஊர்வலக் காரா ?
ReplyDeleteமேலாண்மையின் சிகரம், தரத்தின் சிகரம் என்றெல்லாம் சொல்லப்பட்ட டொயோடா, காரில் மிகவும் அடிப்படையான பிரேக்குகளிலும், ஆக்ஸிலரேட்டரிலும் கோட்டை விட்டத்து நம்பமுடியாத ஒரு விஷயம் தான்
இதையே ஒரு இந்தியன் கம்பேனி செய்திருந்தால் ??
மேலும் :
http://manakkan.blogspot.com/2010/02/blog-post.html
சுப்பு,
ReplyDeleteஉங்களுடைய மனக் கண்ணையும் படித்துப் பார்த்தேன்.கண்ணை இருக்க மூடி வைத்துக் கொண்டு, இருட்டாக இருக்கிறதே என்ற மாதிரி இருக்கிறது.
நிர்வாகத்தின் எந்த மட்டத்தில், தவறுகள் தெரிய வந்தபிறகும் அனுமதிக்கப்பட்டன என்பதையே டொயோடா முறையில் தான் கண்டுபிடிக்கவே முடிந்தது. அந்த முறையில் தான் அதை சரி செய்யவும் முடியும் என்று வல்லுனர்கள் கருத்தை, இந்தப் பதிவிலேயே ஒரு ஹைபர்லின்க்கில் போய்ப் படிக்கலாம்.
இங்கே இந்திய நிறுவனங்கள் செய்திருந்தால் என்று கற்பனையைத் தட்டி விட்டிருக்கிறீர்கள்! உண்மை உங்கள் கற்பனையை விடக் கொஞ்சம் விவகாரமானது.
மேலாண்மை, தரம் பற்றி நீங்கள் புரிந்து கொண்டவிதத்தைப் பற்றியோ, அல்லது நீங்கள் என்ன இதன் மூலம் சொல்ல வருகிறீர்கள் என்பது தெளிவாக இல்லாத நிலையில், விடையை நீங்களே தான் பொறுமையாகத் தேடிக் கண்டுபிடித்தாக வேண்டும்.
இப்போது வருகிற செய்திகள், கோளாறுகளுக்கு முக்கியமான காரணம், இயந்த்ரியப் பகுதிகளில் இல்லை, தற்சமயம் எல்லாவற்றிலும் பரவி வரும் கணினி மென்பொருள் கோளாறு சம்பந்தப்பட்டது என்று சொல்கின்றன.
ReplyDeleteநெரிசல் மிகுந்த சாலைகளில், வண்டி ஓட்டுவது மிகவும் சிக்கலாகி வருகிற சூழ்நிலையில், ஓட்டுனருக்கு உதவியாக கணினி கார்களில் உதவி செய்கிறது. விமானங்களைப் போலவே, தற்சமயம் கார்களும், கணினி உதவியோடு இயங்குகிற விதமாகவே வடிவமைக்கப் படுகின்றன என்பதையும் மனதில் வைத்துக் கொள்ளவேண்டும்.