சுனந்தாவின் டைரி!

“இந்த டைரியை படிப்பவர்கள் ஆயிரம் வருஷம் நரகத்தில் தலை கீழாக தொங்குவார்கள்” என்று ஆரம்பிக்கிறது.
இப்படிச் சொன்ன பிறகு யார்தான் அடுத்தவர் டைரியைப் படிக்காமல் இருக்க முடியும்?
சுனந்தா என்ற இளம்பெண், தன்னுடைய காதல் அனுபவங்களைச் சிறிது சிறிதாகப் பகிர்ந்து கொள்கிற மாதிரி, அவளுடைய டைரியில் இருந்து கொஞ்சம்.
கிருஷ்ணன் கொலை செய்யப் பட்டுக் கிடக்கிறான். சொந்தப் பகை காரணமாக இன்னார் தான் கொலை செய்திருக்க வேண்டும் என்று அவசர அவசரமாகப் போலீஸ் தேவ் என்பவனைக் கைது செய்கிறது. தேவ், அவன் சகோதரி ஹரிணி இவர்களோடு, கொலை செய்யப்பட கிருஷ்ணனுக்குக் கொஞ்சம் பகைமை ஏற்படுகிற அளவுக்குக் காரணங்கள் இருக்கிறது குற்றம் சாட்டப் பட்ட தேவ் தரப்பில் ஆஜராகும் வக்கீல், பிராசிகியூஷன் தரப்பில் உள்ள ஓட்டைகளை வைத்து, தேவ் அந்தக் கொலையைச் செய்திருக்க முடியாது என்று நிரூபித்து, குற்றம் சாட்டப் பட்டவனை விடுவித்து விடுகிறார்.
ராமநாதன், இன்னும் பதினைந்தே நாட்களில் ஒய்வு பெறப்போகும் போலீஸ் அதிகாரி. இந்தக் கொலை வழக்கில் உண்மையான குற்றவாளி யார் என்பதைக் கண்டுபிடித்தே தீருவது என்று களத்தில் இறங்குகிறார். கண்டு பிடித்தும் விடுகிறார். அப்போது,தான் சுனந்தாவின் கதை வருகிறது! கிருஷ்ணன் எப்படிப் பட்ட பெண்பித்தன், சுனந்தா அவனிடம் தன்னை இழப்பதும், கருக்கலைப்பு, இப்படி அந்தக் கொலையின் அனாடமி வெளி வருகிறது. ராமநாதன் அடுத்து என்ன முடிவு செய்கிறார் என்பது இன்னொரு ட்விஸ்ட்!
பதினான்கு வாரங்கள், குமுதம் வார இதழில் தொடராக வெளி வந்த போது, யார் இந்த எழுத்தாளர் என்று படித்த அத்தனை பேருடைய புருவங்களையும் வியப்பில் உயர்த்த வைத்த அந்தக் கதை நைலான் கயிறு! சுஜாதா எழுதிய முதல் புதினம்! ஸ்ரீரங்கம் எஸ் ஆர் என்றும் எஸ் ரங்க ராஜன் என்றும் அவ்வப்போது எழுதிக் கொண்டிருந்தவர் நாவலாசிரியராக, ஏற்கெனெவே நிறைய ரங்கராஜன்கள் இருப்பதால், வேறு ஒரு புனைபெயரைத் தேடிக் கொள்ளும்படி ரா கி ரங்கராஜன் சிபாரிசு செய்ய, சுஜாதா என்று தமிழ் எழுத்துலகுக்கு ஒரு புது ஞாயிறாகவே எழுந்த ஆரம்பத் தருணம் அது. 1968 ஆம் ஆண்டு! அதற்கடுத்த நாற்பதாண்டுகள், தமிழ் எழுத்தின் பிரமிக்க வைத்த ஆண்டுகளாகவே ஆக்கி வைத்தது என்று சொன்னால் மிகையோ, பொய்யோ இல்லை. அவருடைய சம காலத்திலோ, அல்லது அப்புறமோ எழுத வந்தவர்கள் அவர் எட்டிப் பிடித்த உயரங்களை, இன்னமும் அண்ணாந்து பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில் தான் இருந்தார்கள் என்பதிலும் எந்த சந்தேகமும் இல்லை. வெறும் புதினங்கள் என்று குறுகிவிடாமல், விஞ்ஞானக் கதைகள், அறிவியல் கட்டுரைகள், சரித்திரக் கதைகள், திரைப்படத் துறை, இப்படிப் பலமுகங்களிலும் பட்டை தீட்டப் பட்ட வைரமாக ஒளிர் விடுகிற எழுத்தாளராக இருந்ததாலேயோ என்னவோ, இங்கே வழக்கம் போல நிறையப் பேருடைய வெறுப்பு, அவதூறுக்கும் ஆளானதும் நடந்தது.
சுஜாதா என்ற ஸ்ரீரங்கம் எஸ் ரங்கராஜன், தனது உடலை நீத்து இன்றுடன் இரண்டாண்டுகள் நிறைகிற தருணத்தில், அவருடைய எழுத்துக்களில் மிளிரும் குறும்பும் நகைச்சுவையும் மரணத்தையும் வென்று நிற்பதாகவே, அவரது எழுத்துக்களை மீஎண்டும் மீண்டும் வாசித்துக் கொண்டிருப்பவன் என்ற முறையில் எனக்குத் தோன்றுகிறது.
சித்திரமும் கைப்பழக்கம் என்றபடி எழுத எழுத மெருகேறிக் கொண்டே போன அவரது எழுத்து வன்மைக்கு, எழுத்தாளர் சாரு நிவேதிதா, சுஜாதா 1976 இல் எழுதியதில் ஒரே ஒரு பாராவை வைத்து ஒரு பதம் காட்டியிருக்கிறார்.
“ ஆர்.ஜி.பதி கம்பெனி பதிப்பித்துள்ள ரூ. 3.50 விலையுள்ள மாயாஜால மர்மங்கள் என்கிற நான்கு பாகங்கள் அடங்கிய புத்தகத்தில் யாவரும் பிரமிக்கத்தக்க பல ஜாலங்கள் , பல சித்துக்கள் , விளையாடும் மை வகைகள் , சிங்கி வித்தை , சொக்குப் பொடி சூக்ஷி அஷ்ட கர்ம கருமை , முனிவர்கள் , வாராகி , ஜாலாக்காள் , குட்டிச்சாத்தான் , யக்ஷணி , அனுமான் , மாடன் , பகவதி , இருளி , காட்டேரி வசியங்களும் கோகர்ண கஜகர்ண இந்திர மகேந்திர ஜாலங்களும் , குழந்தைகளின் சகல தோஷங்களுக்கும் விபூதி பிடித்தல் , வேப்பிலை அடித்தல் , பேய் பிசாசுகளை ஓட்டுதல் , பில்லி சூனியங்களை அகற்றல் , சதிபதிகள் பிரியாதிருத்தல் , ஈடு மருந்தை முறித்தல் , பாம்பு , தேள் , நாய் , பூனை , எலிக்கடி விஷங்களை ஒழித்தல் , ஜாலாக்களின் ஜெகஜ்ஜால வித்தைகள் , முள் மீது படுத்தல் , நெருப்பைக் கையில் அள்ளுதல் , மிதித்தல் , சட்டி ஏந்துதல் , மடியில் கட்டுதல் , ஜலத்தின் மீது படுத்தல் , உட்காருதல் , வயிற்றில் ஈட்டி பாய்ச்சுதல் போன்ற எண்ணற்றவைகளுடன் எல்லாவற்றிற்கும் சிகரமாக ஆட்டு மந்தையை மாட்டு மந்தையாக்குதல் வரை விவரங்கள் இதில் அடங்கியுள்ளது.
விலாசம் 4 வெங்கட்ராமய்யர் தெரு சென்னை- 1. 1976 ல் எல்லாரும் வைத்திருக்க வேண்டிய புஸ்தகம். ”
இன்னும் நிறையச் சொல்லிக் கொண்டே போக ஆசைதான்! கொஞ்சம் பொறுங்கள் !
சுஜாதா எழுதிய நிர்வாண நகரம் புதினத்தில் கதாநாயகன் சிவராஜ், கணேஷிடம் தன தரப்பு வாதமாகச் சொல்வதைப் படித்துக் கொண்டிருக்கிறேன்.
"மிஸ்டர் கணேஷ்! நான் இந்த நகரத்தை நிர்வாணமாக்க முயன்றேன்! நிர்வாணம்னா எக்ஸ்போஷர்! எங்கோ ஒரு மூலையில் ஒரு பூச்சியா ஏறும்ப இருந்தவனை....ஒரு அனாமதேயத்தை இந்த நகரம் பேச, ஏன் கொண்டாடக் கூட ஆரம்பிச்சிடுச்சு பாருங்க. அவங்களுக்கு வேண்டியது சென்சேஷன். என்னைப் பத்தி அசெம்பிளியில் பேசினாங்க ..லாவணி பாடினாங்க, பெண்கள் டீ ஷர்டுல ஏத்துக்கறாங்க...பஸ் ஸ்டாண்டு , ரயில், செய்தித் தாள்கள் எங்கும் எங்கும் என்னைப் பத்தித் தான் சென்ற மூணு மாசமா பேசிக் கிட்டிருந்தாங்க, என்ன ஒரு கல்சுரல் அபெர்ரேஷன் பாருங்க! நகரத்தை நான் என்னுடைய முறையிலே பழி வாங்கறது, கேலி செய்யறது, திருப்பித் தர்றது குற்றமா சொல்லுங்க!"
தமிழ் எழுத்துலகில் எத்தனையோ வாத்தியார்கள் இருந்திருக்கிறார்கள்! சுஜாதா, கொஞ்சம் வித்தியாசமான தமிழ் வாத்தியார்!
"மிஸ் தமிழ்த் தாயே! நமஸ்காரம்!"
தைரியமும் நகைச்சுவையும், நல்ல ரசனையும் மிகுந்த நவீனத் தமிழ் வாத்தியார்!
வாத்தியார் சுஜாதாவுக்கு வணக்கங்கள், ஒரு வாசகனிடமிருந்து !