சத்தியமாக, இதற்கு ஐமு கூட்டணிக் குழப்பம் வெர்ஷன் இரண்டு எந்தவிதத்திலும் பொறுப்பு இல்லை!
இயற்கை வளங்களை அளவுக்கு மீறிச் சுரண்டுகிற நாடுகளின் பட்டியலை World Wildlife Fund என்ற அமைப்பு வெளியிட்டிருப்பதில், அதிகம் சுரண்டுகிற முதல் பத்தில் இந்தியா இல்லை!
இதற்காக சந்தோஷப்படுவதற்கு முன்னால், இது என்ன என்பதைக் கொஞ்சம் பார்த்து விட்டு, அப்புறமாக சந்தோஷப்படுவதா, இல்லை, இப்போதிருக்கிற நிலைமையை விட மோசமான நிலை இனி எப்போதுமே வராது என்ற நிலையில் இந்த ஒப்பீடு,எல்லாம் சும்மா உடான்ஸ் என்று வருத்தப்படுவதா என்று பார்க்கலாம்!
சுற்றுச் சூழல் அளவீடுகளின் படி, உலகில் இயற்கை வளங்களை ஒவ்வொரு தனிமனிதனும் எந்த அளவுக்குப் பயன்படுத்தலாம் என்ற சராசரியை விட அனேகமாக எல்லா நாடுகளிலுமே ஒரு ஐம்பது சதவீதம் அதிகமாகத் தான் விரயம் செய்து கொண்டிருக்கிறார்கள் என்று சொல்லி விட்டு, அப்படி அதிக விரயம் செய்கிற டாப் டென் பட்டியலையும் வெளியிட்டிருக்கிறது அந்த அமைப்பு. அதன்படி,
இயற்கை வளங்களை அளவுக்கு அதிகமாக விரையம் செய்கிற நாடுகளில்
முதலிடத்தில், ஐக்கிய அரேபிய எமிரேட் நாடுகள்........சராசரியை விட ஆறு மடங்கு!
இரண்டாவது இடத்தில், கத்தார்.............................................சராசரியை விட, 5.9 மடங்கு!
மூன்றாவது இடத்தில், டென்மார்க்.......................................சராசரியை விட 4.6 மடங்கு!
நான்காவது இடத்தில் பெல்ஜியம்........................................ சராசரியை விட 4.5 மடங்கு!
ஐந்தாவது இடத்தில், அமெரிக்கா.......................................... சராசரியை விட 4.5 மடங்கு!
ஆறாவது இடத்தில் எஸ்தோனியா ....................................சராசரியை விட 4.4 மடங்கு!
ஏழாவது இடத்தில் கனடா .......................................................சராசரியை விட 3.9 மடங்கு!
ஒன்பதாவது இடத்தில், குவைத் ...........................................சராசரியை விட 3.5 மடங்கு!
பத்தாவது இடத்தில் அயர்லாந்து ...........................................சராசரியை விட 3.5 மடங்கு!
அதற்கடுத்த இடத்தில் வரும் பிரிட்டனில் சராசரி அளவை விட இரண்டே முக்கால் பங்கு அதிகமாக இயற்கைவளங்களைவிரையம் செய்கிறார்கள் என்று சொல்கிற இந்த அமைப்பு, சென்ற ஆண்டை விட பிரிட்டன் இந்தப்பட்டியலில் முதல் வரிசைக்கு வராததற்குக் காரணம், ஏதோ ஆங்கிலேயர்கள் எல்லோரும் இயற்கைச் சூழல் மீது அக்கறை கொண்டு விரையத்தைக் குறைத்துக் கொண்டுவிட்டதாக அர்த்தமில்லை, மற்றநாடுகள் இப்படி இயற்கைவளங்களை விரையம் செய்கிற அளவு அதிகரித்திருக்கிறது அவ்வளவு தான் என்பதையும் சொல்கிறது!
செய்தியின் மூல வடிவம் இங்கே!
மற்றப்பகுதிகளில், இப்படி இயற்கை வளங்களை தனிநபர் சராசரிக்கும் மிக அதிகமாக விரையம் செய்து கொண்டிருக்கும் அதே நேரம், இயற்கை வளங்களை விரையம் செய்கிற அளவு சராசரிக்கும் மிகக் கீழே உள்ள ஒரே பகுதி ஆப்பிரிக்கா தான்!
எதைவைத்து இந்த விரையத்தை மதிப்பிடுகிறார்களாம்?
கரியமில வாயு வெளியீடு, தண்ணீர் உபயோகம், மற்றும் இதர இயற்கை வளங்களை உபயோகிப்பதில் தனிநபர் சராசரி என்ற அளவை வைத்துக் கொண்டு இந்தப் புள்ளி விவரங்களைத் தொகுத்திருக்கிறார்கள். நம்மூரில் கலப்படப் பெட்ரோல், டீசல் உபயோகிப்பதால் மட்டும் தான் காற்றில் கரியமில வாயுவின் அளவு கூடுகிறது என்ற மாதிரி நினைக்கவேண்டாம்!
அசைவ உணவு உட்கொள்வதும் கூட, கரியமில வாயுவின் அளவைக் கூட்டுகிறது, சுற்றுச் சூழலுக்கு எதிராகச் செயல்படுகிறது என்பதையும் இந்தப் புள்ளிவிவரம் சொல்கிறது! அதற்கப்புறம் பால், தயிர், வெண்ணெய், நெய், பாலாடைக்கட்டி என்று வருகிற பண்ணைப் பொருட்களுமே கூடக் கரியமிலவாயு சுற்றுச்சூழலில் அதிகரிப்பதற்குக் காரணமாக இருக்கிறது என்பதையும் சொல்கிறது.
கொஞ்சம் வினோதமான செய்தி தான்! யோசித்துச் செயல்பட வேண்டிய செய்தியும் கூட! புவிவெப்பமடைவதில், கோளாறைச் சரி செய்ய வேண்டிய பொறுப்பு ஒவ்வொரு தனிநபருக்கும் இருக்கிறதே!
மரக்கன்றுகள் நடுவதோடு நின்று விடாமல், அசைவத்தைத் தவிர்க்கும் ஒவ்வொரு வேளையும், கரியமிலவாயுவின் அளவு அதிகரிக்காமல் செய்கிறோம். பிளாஸ்டிக் பைகளைப் பயன் படுத்தாமல் இருக்கும் ஒவ்வொரு தரமும் சுற்றுச் சூழல் மாசு படுவதைக் கணிசமாகக் குறைக்கிறோம். தண்ணீரை விரையம் செய்யாமல் இருக்கும் ஒவ்வொரு தருணமும், வறண்ட பாலையாகிவிடாமல் நமது மண்ணைப் பாதுகாக்கிறோம்.
குண்டு பல்புகளைத் தவிர்த்துசி எப் எல் விளக்குகளை உபயோகிக்க ஆரம்பிப்பது கூட, புவிவெப்பமடைவதைக் குறைக்க உங்களால் ஆனா சிறு பங்கு என்பதை அறிவீர்களா?
இது இந்தப்பக்கங்களில், 400 வது பதிவு!
வாழ்த்துக்கள்! உங்க பதிவுகளை தொடர்ந்து படித்து வருகிறேன். சமுதாயத்து விழிப்புணர்வு .. அதிகமுள்ள பதிவுகள்ல உங்களதும் ஒன்னு. தொடருங்க தொடருங்க
ReplyDeleteவாவ்வ்வ்வ்வ்
ReplyDeleteநான்கு சதங்களா, கிரேட் சார் நீங்க!
400 வது பதிவுக்குப் பாராட்டுக்கள்.
ReplyDeleteவிரையமா, விரயமா....
சமீபத்தில் பார்த்த செய்தியில் கிழிபட்ட ஓசோன் படலம் பெருமளவு அடை பட்டு வருவதாக...இதே நிலையில் இன்னும் இத்தனை வருடங்களில் முழுவது அடைபட்டு விடும் என்று ஒரு நம்பர் தந்திருந்தார்கள். செல்ஃபோன், ஃபிரிஜ் போன்ற பொருட்களை உபயோகிக்காதார் யார்? இப்போது யார் வீடுகளிலும் குண்டு பல்புகள் இருக்காது என்று நினைக்கிறேன்.
@இளா என்ற இளமுருகு!
ReplyDeleteபதிவுகளைத் தொடர்கிறீர்கள் என்பதை அறிய மிகவும் மகிழ்ச்சி. நன்றி!
@வால்பையன்!
உங்களுடைய அதிரடிக்கு முன்னால், இந்த நானூறு, நாலாயிரம் எல்லாம் ஒரு பொருட்டா என்ன!
நன்றி! :-))
@ஸ்ரீராம்!
வாழ்த்துக்கு நன்றி!
ஓசோன் படலத்தைப் பற்றிய உண்மையான விவரங்களை விட, திசைதிருப்பும் விவரங்களே அதிகம் உலவுகின்றன. முன்னாள் அமெரிக்கத் துணை அதிபர் அல் கோரே , திடீரென்று சுற்றுச் சூழல் பாதுகாப்பைக் கையில் எடுத்துக் கொண்டு தீவீரமாக பிரச்சாரம் செய்ய ஆரம்பித்தார். ஆசாமி வெறும் ஹம்பக் என்று அமெரிக்கர்களே ஒதுக்கி வைத்தார்கள். இப்போது சத்தத்தைக் காணோம்! அதே மாதிரி ஏசி, பிரிட்ஜ் போன்றவற்றில் இருந்து வெளியேறும் க்ளோரின் வாயுவினால் ஓசோன் படலத்தில் ஓட்டை பெரிதாக விழுகிறது என்றார்கள்; இன்னொரு தரப்போ, இல்லை இது பழைய மாடல்களைத் தூக்கி எறிந்து விட்டு புதியதாக வாங்கச் செய்யப்படும் பயமுறுத்துகிற வியாபார உத்திதான் என்று கூடச் சொன்னார்கள்.
இந்தப் புள்ளி விவரங்களை வைத்து எதையும் முடிவு செய்ய வேண்டாம்! நம் கண்முன்னாலேயே தெரியும் நிதர்சனம், எளிதில் மக்கிப் போகும் தன்மையில்லாத பிளாஸ்டிக் குப்பை கூளங்களால் சுற்றுச் சூழலுக்கு ஏற்படும் ஆபத்து, சாக்கடைகளில் ஏற்படும் பெரும்பாலான அடைப்புக்களில் இந்த பிளாஸ்டிக் குப்பைகள் பந்தாக தூர் எடுக்கப் படுவதிலேயே, கடற்கரையில் மிதக்கும் கழிவுகளிலேயே தெரியும்போது,இவற்றைத் தவிர்க்கவேண்டும் என்ற எச்சரிக்கை தெரிவதை, கவனிக்கிறோமா அல்லது புறக்கணிக்கிறோமா என்ற கேள்வியிலேயே தெரிந்து விடுமே!
அப்புறம் இந்த குண்டு பல்புகள்! இன்னமும் இவை புழக்கத்தில் தான் இருக்கின்றன, அமோகமாக விற்பனையாகிக் கொண்டு தானிருக்கின்றன. அமெரிக்காவிலேயே இந்த குண்டு பல்புகள் 60 % புழக்கத்தில் இருப்பதாக செய்திகள் சொல்கின்றன.
நானூறு பதிவுகள்!
ReplyDeleteவாழ்த்துக்கள். எனக்கு தெரிந்தவரை உள்ளீடு
( consistency ) பெற்றுள்ள சில பக்கக்களில் உங்களதும் ஒன்று.
நம்ம ஊரில் அரசியல் செய்யும் எவருக்கும் இது போன்ற விஷயங்களில் புத்தியே கிடையாது.
நண்பர் திரு கிருஷ்ணமூர்த்தி,
ReplyDeleteநல்ல பதிவு.
இயற்கை வளங்கள் மற்றும் இதர வாழ்வாதாரங்கள் மனித மிகுதியால் நாசமாகி கொண்டிருக்கிறது என்பது உண்மைதான். புவி வெட்பம் மற்றும் climate changes போன்றவை உண்மைதான். உலக மக்களின் ஜனத்தொகை பெருக்கத்தினால் வரும் நெருக்கடிகளும் மற்றும் தண்ணீர் பற்றாக்குறையும் உண்மைதான். இவைகள் நம் கண்முன்னே நடந்து கொண்டிருக்கிறது. ஆனாலும் silver lining அல்லது light at the end of the tunnel என்பது போல சில நல்ல விடயங்களும் வளர்கிறது. ஒன்று, கண்டபடி எகிறும் ஜனத்தொகை, இன்னும் நாற்பது வருடங்களுக்கு பின்னர், அதாவது சுமார் ஒன்பது பில்லியன் (இப்பொழுது சுமார் ஆறரை பில்லியன்) தொட்ட பின்னர் கீழிறங்கும் என்று திட்டவட்டமாக தெரிகிறது. அதாவது இன்னும் நூற்றி ஐம்பது வருடங்களில், நிலைமை மிக மிக வேறாக இருக்கும். ஜனத்தொகை மிக கீழே விழிந்திருக்கும். Back to the past என்று சொல்லலாம். இது யாரும் எதிர்ப்பார்க்காதது. இப்பொழுதே வளர்ந்த தேசங்களில்
ஜனத்தொகை வளர்ச்சி என்பது இல்லை. இருக்கும் ஜனத்தொகையை எப்படி இறங்காமல் வைத்துக்கொள்வது என்று மிகவும் யோசிக்கிறார்கள். மற்ற எல்லா நாடுகளும் இந்த நிலைமைக்கு வருவதற்கு சிறுது காலம் ஆனாலும், அந்த நிலைமை வரும். Replacement level population growth எனப்படுவதர்க்கு கீழ் போகும் காலங்களில், ஜனத்தொகை மிக விரைவாக விழும். அதன் காரணமாக மக்களில் இயற்க்கை நாசமும் மிகக்குரையும்.
அடுத்தது improvement in technology and radical changes in energy conservation and utilisation. இதுவும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. மெதுவாக வந்தாலும் மிகுதியான பயன் கொடுக்கும் வழிமுறைகள் வரும். Super conductivity at room temperatures, intelligent lighting and heating systems, power from deep sea, home power generation போன்ற பல பல புதிய முறைகள் மெதுவாக வரும். இதன் last frontier ஆன Power generation by controlled nuclear fusion தான் இன்றைய விஞ்ஞானிகளின் மிகப்பெரிய சவால். இந்த முறை வருவதற்கு இன்னும் ஐம்பது ஆண்டு காலம் ஆகலாம் என்று கூறப்படுகிறது. இது நடந்து விட்டால், மனித இனம் கண்டிப்பாக பிழைத்துவிடும் என்று திட்டவட்டமாக சொல்லலாம். என்னை தேவை இல்லை, கரி தேவை இல்லை, எதையும் வெட்டி கொளுத்தவும் வேண்டாம். Nuclear Fusion reactorரிலிருந்து வரும் மின்சாரம் மட்டுமே எல்லாவற்றிற்கும் போத்மானதாக இருக்கும். அதுவும் உலக அளவில் ஒரு ஐந்து Reactor கள் இருந்தால் போதும். இதற்க்கு கச்சா பொருள் தண்ணீர் மட்டுமே.
மூன்றாவது மிகப்பெரிய breakhrough is genetic engineering . இது மிக ஜரூராக வளர்ந்து கொண்டிருக்கிறது. இதன் பலன்கள் மிக மிக ஆச்சிரியமானவை.
நீங்கள் சொல்லுவதைப்போல இயற்க்கை வள நாசங்கள் மற்றும் energy consumption and depletion இப்பொழுது நடந்து கொண்டிருந்தாலும், still there is a reason to be very optimistic about the future of Humanity ன்பது என் அபிப்பிராயம். பிழைத்துக்கிடந்தால் பார்ப்போம்.
நன்றி
super
ReplyDeleteவாருங்கள் மாணிக்கம்!
ReplyDeleteவயதும் அனுபவமும் சிந்தனை எப்படிப்பட்டதாக இருக்கவேண்டும் என்று பாடம் சொல்லிக் கொடுக்கும்போதே Consistency in purpose தானாகவே வந்து சேர்ந்து விடுகிறது போல!
இங்கே அரசியல் மிகவும் கீழ்த்தரமான லெவலில் நடப்பதால், அதைவிட்டு வெளியே வந்து என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதே அரசியல்வாதிகளுக்குப் புரிவதில்லை.நல்லதை நினைத்தே நரகத்துக்கும் போகலாம் என்பதை நிரூபிக்கும் வகையில் இங்கே ஒரு பெருந்தலைவர் தெரிந்து செய்யவில்லை, விவசாயம் செய்ய முடியாத நிலையில் விறகு வெட்டவாவது பயன்படுகிறதே என்று, சீமைக் கருவிளை மரத்தை நடச் சொல்லி ஆதரித்தது பழைய கதை. சீமைக்கருவிளை போன்ற மரங்கள் நிலத்தடி நீரையும் உறிஞ்சி வறட்சியை அதிகப்படுத்தும் என்பது உண்மையிலேயே அவருக்குத் தெரியாது! தெரிந்த பிறகும் கூட என்ன செய்தோம் என்பது அதைவிடப் பெரும் சோகமான கதை.
ஆனால், யூனியன் கார்பைடு, ஸ்டெர்லைட் போன்ற சுற்றுச் சூழலுக்கு ஆபத்தாக இருக்கும் தொழிற்சாலைகளை அனுமதித்தபோது, அங்கே ஏற்பட்ட சீரழிவுகளுக்குப் பிறகும் கூட திருத்திக் கொள்ள முடியாத அவலத்தை மேற்சொன்ன ரகத்தில் சேர்க்க முடியாது!
திரு.நோ!
ReplyDeleteகொஞ்சம் விரிவாகவே சிந்தித்திருக்கிறீர்கள்!
தொழிற்புரட்சியின் நல்ல விளைவு ஒன்று என வைத்துக் கொண்டால், அது ஏற்படுத்திய தீய பக்க விளைவுகள் மிகப்பல. அதில் முக்கியமானது, கிராமங்களை அழித்து, அங்கிருந்த ஜனங்களைப் பிழைப்புக்காகக் கூலிகளாக நகர்ப்புறங்களில் சேரிகளில் தள்ளியது, அதற்கப்புறம் சுற்றுச் சூழலுக்கு, ஈடு செய்ய முடியாத விதத்தில் கேடு விளைவித்தது.
இப்போது தான் வரைமுறையில்லாமல் தொழில் மயமாவதன் பக்கவிளைவுகளைப் பற்றிச் சிந்திக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.அடுத்து அணு உலைகளில் தேவையான சக்தியைப் பெறுவது குறித்து, அதற்கு மாற்றே இல்லை என்ற மாதிரிப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். இன்றைய சூழ்நிலையில் அது வெறும் wishful thinking என்ற அளவில் மட்டுமே தேங்கி நிற்கிறது.
ஆனால், எல்லாவற்றையும் விட, நம்பிக்கை ஒன்று தான் மனித குலத்தை ஆரம்பகாலத்தில் இருந்தே வழிநடத்திக் கொண்டிருக்கிறது. நல்லெண்ணமும் புரிந்து கொள்வதும் மனித குலத்தை நல்ல வழியில் நடத்திச் செல்லும் என்ற நம்பிக்கை நிச்சயமாக இருக்கிறது.
தானே எல்லாம் மாறும் என்பது பழைய பொய்யடா என்று பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் பாடல் வரிகளில் சொன்னது போல, நல்லது நடக்கும் என்ற நம்பிக்கையோடு, அதை நடத்துவதில் நம் ஒவ்வொருவருடைய பங்கும் அது எவ்வளவு சிறு அளவில் இருந்தாலும் கூடவே நிச்சயம் வேண்டும். உதாரணமாக, மெல்லிய பிளாஸ்டிக் பைகளைக் கடைகளில் பொருட்களைப் போட்டுக் கொடுக்கும் போது உறுதியாக மறுக்க ஆரம்பிப்பது, பிளாஸ்டிக் குப்பைகளைச் சேர்க்காமல் இருப்பது என்று நம்மிடமிருந்தே ஆரம்பமாக முடியும்!
@தியாவின் பேனா!
ReplyDeleteநன்றி!