2001 மார்ச் மாதம்! ஆப்கானிஸ்தானில் பாமியன் பள்ளத்தாக்கில் இருந்த மிகப் பழமையான புத்தர் சிலைகளை தாலிபான் தீவீரவாதிகள் வெடிவைத்துத் தகர்த்தபோது, உலகமே கொஞ்சம் அதிர்ச்சி அடைந்தது. தாலிபான் தலைமை, சர்வதேசக் கண்டனங்கள், வருத்தங்களை கொஞ்சம் கூட சட்டை செய்யவே இல்லை!
" நாங்கள் தகர்த்தது வெறும் பாறைகளைத் தான்!"
பழமைவாதத்தில் ஊறிய தாலிபான்களை விட மோசமானவர்களாக நாம் இந்தியாவில்,குறிப்பாகத் தமிழ்நாட்டில் இருக்கிறோம் என்று சொன்னால் என்ன செய்வீர்கள், என்ன நினைப்பீர்கள்?
ஆம்! அது தான் உண்மை!
கடப்பாரை, ஜெலட்டின், டைனமைட் வைத்துக் கரசேவை செய்வது மட்டும் தான் தீவீரவாதம், நாச வேலை என்று நினைக்க வேண்டாம்! நம்மைச் சுற்றி நடக்கும் அக்கிரமங்களை, அத்துமீறலுக்கெதிராகக் குரல் எழுப்பாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிற அசமந்தத் தனமும் கூட இந்த மாதிரி அவலங்களை வளர்க்கிற தாய் மாதிரித் தான்!
விழிப்பாக இருக்கவேண்டிய நேரத்தில், எங்கேயோ மழை பெய்கிறது என்று அலட்சியமாக இருந்து விட்டு, கடைசியில் அது நம்மையும் கடிக்க வரும்போது குய்யோமுய்யோவெனக் கூக்குரலிடுவதால் ஏதாவது பலன் கிடைத்து விடுமா?
நம்மைச் சுற்றி இருக்கும் புராதான சின்னங்களை, சரித்திரம் சொல்லும் இடங்களை, சிற்பங்களைப் பாதுகாப்பதில் அக்கறை எதுவுமே இல்லாமல் இருந்தால் குவாரி நடத்துபவர்கள் தாலிபான்களைப் போலக் கூலாக, "நாங்கள் தகர்த்தது வெறும் பாறைகளைத் தான்!" என்று ஏன் சொல்ல மாட்டார்கள்?
தாலிபான்களுக்காவது, பழமைவாதம், மதத் தீவீரவாதம், கண்ணுக்குக் கண் பல்லுக்குப் பல் என்றெல்லாம் "தத்துவார்த்த நியாயங்கள்" "கற்பிதங்கள்" இருந்திருக்கலாம்!
இங்கே புராதானச் சின்னங்கள், வரலாற்றுத் தடையங்களை, வெறும் காசுக்காக வெடிவைத்துத் தகர்த்துக் கொண்டிருக்கும் குவாரி உரிமையாளர்களை எந்தப் பட்டியலில் சேர்ப்பது?
புதுக்கோட்டை புராதனங்கள் அபாய நிலையில்!!!
Posted by fourthpress on October 13, 2010
"புதுக்கோட்டை மாவட்டமே, தொன்மையானது என்றால் அது மிகையாகாது. ஏனெனில், கற்கால மனிதர்கள் வாழும் குகைகள், புதை பொருள் தாளிகள், cane circle எனப்படும் கல் வளைவுகள், நடுகற்கள் ஆரம்பித்து, ஜைன குகைகள், புடைப்பு சிற்பங்கள், மூலிகை ஓவியங்கள், முதல் தமிழ் மூல எழுத்துக்களாம் பிராம்மி எழுத்துக்கள், முதல் காலச் சோழர்களின் கோயில் ஆகியவை நிரம்பிய, சித்தன்னவாசல், குடுமியான் மலை, நார்த்தாமலை, கடம்பர்மலை, ஆளுருட்டிமலை ஆகியவை நிரம்பிய பகுதி புதுக்கோட்டை. அந்தப் பெயர் இனி நிலைக்குமா என்பது சந்தேகமே. கடந்த சில மாதங்களாக மிக அதிகமாக கல் குவாரி காண்டிராக்டர்களால், அடி முடி காணாமல், தொல்லியல் துறையின் சட்டங்கள், தடுப்பு சட்டங்கள், (ban) ஆகியவை மதிக்கப் படாமல், இந்த காலத்தால் அழியாத புராதனச் சின்னங்கள் பெயர்ந்து விழும் நிலை ஏற்பட்டுள்ளது. எந்நேரமும் அதிரும் குண்டுகளால், குகைகளும், நிற்கும் இடங்களும் மக்கள் நடமாடுகையிலேயே ஆட்டம் கொண்ட வண்ணம் உள்ளது. இப்படியே தொடர்ந்தால், மத்தியத் தொல்லியல் துறையால் காக்கப்படும் இச்சின்னங்களும் குவாரிக் கற்களாக இரையாகும் நாள் வெகுதூரமில்லை. மத்திய தொல்லியல் துறை அதிகாரிகளையும், அங்குள்ள காவலர்களையும் தொடர்பு கொண்ட போது, யாரிடம் முறையிட்டாலும், அரசியல் பலமிக்க கல் குவாரிக் காரர்களை தடுக்க முடியவில்லை என்று வருத்தமே தெரிவிக்கின்றனர். இனியும் தாமதியாமல், தமிழ் நாடு அரசு தொல்லியல் சின்னங்கள் உள்ள மலைகள் முழுவதையுமே காப்பதற்கான சட்டம் இயற்றி,(இல்லை இருக்கும் சட்டத்தை தூசி தட்டி எடுத்து) உடனேயே இந்த காலவரையற்ற குண்டுவெடிப்புகளை தடுக்காவிட்டால், தமிழகத்தின் தொன்மைக்குப் பெருமையாக விளங்கும் இச்சின்னங்கள் இனி புகைப்படங்களாக மட்டும் காணும் நிலை உருவாகிவிடும்.
அரசு உடனடியாக கவனிக்குமா?
அரசு உடனடியாக கவனிக்குமா?
படங்கள்: எஸ்.ஜெயக்குமார்.
இப்போது வெளியாகியுள்ள ஜூனியர் விகடன், மதுரை அருகேயுள்ள கீழவளவு மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் இதே போல் கல் குவாரிகள் புராதனச் சின்னங்களை அழித்துவிட்டதை சுட்டிக் காட்டி வெளியிட்டுள்ள செய்தி படம் காண்க, கீழே:
நன்றி; ஜூனியர் விகடன் இதழ் தேதி: 17.10.10
இப்படியே ஒவ்வொரு மலையையும் தகர்த்து, புராதனங்களையும் அழித்து, நவீன ரோடு போட்டு, எங்கே போக? மயானத்துக்கா?
இன்றைய தினமலரில் (14.10.10) வந்த செய்தி
உடனடியாக செய்தி வெளியிட்ட தினமலர் ஆசிரியருக்கு மனமார்ந்த நன்றிகள்."
அப்டேட்! இன்றைக்கு டைம்ஸ் ஆப் இந்தியாவில் வெளியாகி இருக்கும் செய்தி இங்கே
மின்தமிழ் கூகிள் வலைக்குழுமத்தில் திரு ஆரூரன் விஸ்வநாதனும், தண்டோரா மணிஜி தன வலைப்பதிவிழும் இந்தப் பதிவை வெளியிட்டு, பரவலாக செய்தியைக் கொண்டு சேர்க்கவேண்டும் என்ற வேண்டுகோளை நிறைவேற்றியிருக்கிறார்கள். அப்போது கூட, தங்களுடைய செய்தி வலைப்பதிவர்களால் முன்னெடுத்துச் செல்லப் பட்டதை விட, போர்த் பில்லர் அமைப்புக்கு நன்றி சொல்லி விட்டு அல்லவா இதை எடுத்தாண்டிருக்கவேண்டும் என்று ரீச் சந்திரா தண்டோரா மணிஜியின் வலைப்பதிவில் ஒரு 'ஆதங்கத்தை' வெளிப் படுத்தி இருக்கிறார். ஊர் கூடித் தேரை இழுக்க வேண்டும் என்பதில் இந்த மாதிரி சர்ச்சைகளை, மனக்குறைகளைத் தவிர்த்து, அதையும் தாண்டிப் போகும் பக்குவம் வேண்டும் என்பதற்காக இதையும் சேர்த்துப் பதிவு செய்கிறேன்.
இந்த இரண்டு மின்னஞ்சல் முகவரிகளும் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித் தலைவருடையது, இந்த மின்னஞ்சலுக்கு வாசகர்கள் தமது கண்டனங்களைத் தெரிவிக்கவேண்டும் என்றும் கோரி இருக்கிறார்கள்.
மின்னஞ்சல், தபால், மகஜர், கையெழுத்து இயக்கம், இவை எல்லாம் பயனளிக்கக் கூடியவைதானா என்ற சந்தேகமும் மின்தமிழ் கூகிள் வலைக் குழுமத்தில் இந்த இழையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
மாவட்ட ஆட்சித்தலைவருக்குத் தடுத்து நிறுத்தும் அதிகாரம் இருக்கலாம்! ஆனால், செய்ய வேண்டுமே!
வாசகர்கள், இதைப்படிக்கும் சகபதிவர்கள் இந்த செய்தியை இன்னும் அதிக நண்பர்களுக்கு கொண்டு சொல்ல வேண்டியது மிகவும் அவசியம் என்று கருதி இதை என்னுடைய பக்கங்களிலும் பகிர்ந்துகொள்கிறேன்.
ஆரூரன் வலைபதிவில் (வெயிலோன் பதிவு பார்த்து) இருந்து ஈ மெயில் அனுப்பிவிட்டேன், ஒரு குறிப்புச் செய்தியும் இணைத்து. ஆளுபவர்களை ஏற்றுவதும், இறக்குவதும் இத்தகைய ஒவ்வொரு வாக்கு தான்
ReplyDelete