நெனச்சது ஒண்ணு! நடந்தது ஒண்ணு!

"What men call knowledge, is the reasoned acceptance of
false appearances. Wisdom looks behind the veil and sees"


--The Mother

திரு.R Y தேஷ்பாண்டே! ஒரு எழுத்தாளர்! ஆன்மீகச் சிந்தனையாளர். தன்னுடைய எண்ணங்களை ஆங்கிலத்தில் ஒரு மின்னிதழாக நடத்திக் கொண்டிருக்கிறார்.  தேஷ்பாண்டேயிடம் ஒருவர் உங்கள் வலைப்பதிவில் (ப்ளாக்) எழுதியது...என்று ஆரம்பித்துச் சொன்னபோது, அவருடைய பதில்: 

" இது ப்ளாக் அல்ல, மின் மடல்  ( ஜார்னல்)! "  சில மாதங்களுக்கு முன்னால் படித்த இந்த வார்த்தை, இப்போது நினைவுக்கு வந்துநிற்கிறது.

 இது  இங்கே தமிழில் கூட நேசமுடன் என்ற முயற்சி இந்த வகையைச் சேர்ந்ததுதான். ஜார்னல் என்பதை, மடல் இதழ் என்று அழகாகத் தமிழ்ப்படுத்தி அறிமுகப் படுத்திக் கொள்வதை அங்கே பார்க்க முடியும். வலைப்பதிவு என்று சொல்வதற்கும், மடல் இதழ் என்று சொல்வதற்கும் அப்படி என்ன பெரிய வேறுபாடு இருக்கிறது? இரண்டிலும் ஒரே மாதிரியாகத் தானே எழுதப் போகிறோம் என்று நினைக்கிறீர்களா?

மிக நுண்ணிய வேறுபாடு இருக்கிறது. அதன் இலக்கு, பயன் என்று எதை நினைக்கிறோமோ, அதைத்  தலைகீழாகப் புரட்டிப் போட்டு விடக்கூடிய வேறுபாடு, நிச்சயமாக இருக்கிறது. "நெனச்சது ஒண்ணு! நடந்தது ஒண்ணு! அதனால் தவிக்குது அம்மாக்கண்ணு!" என்று ஜாலியாகப் பாடிவிட்டுப் போய்விடமுடியாது!


ஜார்னல் என்ற வார்த்தை,  தினசரி என்று பொருள் படும் diumalis என்ற லத்தீன் வார்த்தையில் இருந்து பிரெஞ்சு மொழிக்குத் தாவி, தினசரி, குறிப்பு, நிகழ்ச்சிகளைக் குறித்த  பதிவு, கணக்குப் பதிவதில் ஒரு நடைமுறை, இப்படிப் பலவிதமான பொருளைத் தருவதாக இருந்தாலும், திரு தேஷ்பாண்டே சொன்ன பதிலில் இருந்து தான், போகிற போக்கில் கிறுக்கித் தள்ளிவிட்டுப் போகிற அல்லது அந்த நேரத்திய மன நிலையை மட்டுமே காட்டுவதாக இருக்கும் டயரிக் குறிப்புக்களாக இருக்கும் பதிவுகளுக்கும், ஒரு விஷயத்தை எடுத்துக் கொண்டு முழுமையாகப் பார்க்க முயலும் சீரியசான முயற்சிக்கும் இருந்த வித்தியாசத்தையே என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. அப்படிப் பார்க்கும் போது, நேசமுடன் பதிவுகள் கூட, கொஞ்சம் அழகாக, வகைப்படுத்தப்பட்ட டயரிக் குறிப்புக்கள் மட்டுமே என்று கூட, எனக்குப் படுகிறது. குறையாகச் சொல்லவில்லை, இப்போது அதில் படிக்கும் விஷயம் கொஞ்சம் சுவாரசியமாக இருப்பதாக இருந்தாலும், மறுநாளே அந்த ரேட்டிங்  மாறிப்போய் விடுகிறதே, அந்த ஒரு காரணம் தான்!

பள்ளி நாட்களில் இருந்து ரொம்ப சீரியஸாக டயரி எழுதிக் கொண்டிருந்த பழக்கம் எனக்கு இருந்தது. அனேகமாக, என்னுடைய அன்றன்றைய சரித்திரமாக நினைத்துக் கொண்டு எழுதிய நாட்கள்! ஒரு நேரத்தில், என்னுடைய டயரியை, ஒரு வேண்டப்பட்டவரிடம்,  அவரைப் பற்றி முந்தைய தருணத்தில் நான் என்ன நினைத்தேன், எழுதியிருந்தேன் என்பதைக் காண்பித்தேன்! சொந்தச் செலவில்..........வைத்துக் கொள்வது என்றால் என்ன என்பதை நேரடியாக அனுபவித்துச் சூடுபட்டுத் தெரிந்துகொண்ட தருணமாக அது இருந்தது. அதற்குப் பிறகு, டயரி எழுதுவதில் இருந்த வெறி, ஆர்வம், ஆவேசம் எல்லாம் போயி போயிந்தி....இட்ஸ் கான்! அம்புட்டுத்தேன்!

இப்போது எதற்கு இந்த சொந்தக்கதை, சோகக்கதை எல்லாம் என்கிறீர்களா? சேத் கோடின் வலைப்பதிவில்   பிராண்ட் என்று  எதை வைத்துச் சொல்வது  என்பது குறித்த ஒரு பதிவைப் படித்துக் கொண்டிருந்த போது, வலைப் பதிவுகளுக்குமே இந்த   brand concept ஐ  வைத்துப் பார்த்தால் எப்படியிருக்கும்  என்று கற்பனை சிறகடித்துப் பறக்க ஆரம்பித்து விட்டது!  அதனால் தான்!

Brand என்று எதைவைத்துச் சொல்வது? எப்படி சொல்வது?

கொஞ்ச நாட்களுக்கு முன்னால் ஒரு டூத்பேஸ்ட் விளம்பரம்! இரண்டு சிறுவர்களை வைத்து, பத்து இல்லைன்னா பத்தாது என்ற பன்ச் லைன் வைத்து ஒரு குறிப்பிட்ட கம்பனி தன்னுடைய  தயாரிப்புக்கு ஒரு இமேஜ், நேரடியாக  இதில் இன்ன இன்னவெல்லாம்  இருக்கிறது என்று சொல்கிற சந்தடி சாக்கில், போட்டியாளருடைய தயாரிப்பில் அத்தனை எல்லாம் இல்லை என்பதை இன்னொரு சிறுவன் தயங்கித் தயங்கிச் சொல்கிற விளம்பரம்! நினைவு வருகிறதா? 

இரண்டு தரப்புமே  டூத்பேஸ்ட் தான் தயாரிக்கிறார்கள்!  ஒரே மாதிரியான உபயோகம் தான்! அப்படியானால், இங்கே பிராண்ட் என்பது என்ன?

நினைப்பு மட்டுமே போதாதே! நிரூபணமும் வேண்டுமே!

முதலில், தன்னுடைய தயாரிப்பை வித்தியாசப்படுத்திக் காண்பிக்கிற உத்தி! அது மட்டுமே போதுமா? போதாது என்பதால் தானே, தயாரிப்பைப் பற்றி, அதன் குணநலன்களை பன்ச் டயலாக் எல்லாம் வைத்துச்  சொல்ல வேண்டியிருக்கிறது! வெறும் பன்ச் டயலாகை மட்டுமே நம்பிக் கொண்டிருந்தால் போதுமா? பன்ச் டயலாக் பேசியே  பஞ்சராகிப் போன விஜய் கதை மாதிரி ஆகி விடும் என்பதைத் தயாரிப்பாளர்கள் உணர்ந்திருக்கிறார்கள். அதனால் தான், சந்தையில் கிடைக்கும், இன்னொரு பிரபலமான போட்டித் தயாரிப்பைப் பெயர்சொல்லியோ, சொல்லாமலோ எடுத்துக் கொண்டு, அதை விட இது இன்ன விதத்தில் உசத்தியாக்கும் என்று உங்கள் கவனத்தை ஈர்க்கிற மாதிரிச் சொல்கிறார்கள்!

இப்படிச் சொல்லும்போதே, அங்கே ஒரு குறைந்தபட்ச உத்தரவாதம், வாக்குறுதியும் சேர்ந்தே இருக்கிறது! அது எந்த அளவுக்கு இருக்கிறது என்பதை, பயன்படுத்துபவர்கள் நம்புகிறார்கள், ஏற்றுக் கொள்கிறார்கள் என்பதைப் பொறுத்தே அந்த குறிப்பிட்ட பிராண்ட் ஜெயிப்பதோ தோற்பதோ இருக்கிறது.

இங்கே இன்னொன்றும் இருக்கிறது! அதிகத் தம்பட்டம் அடிப்பதில், நிறைய  எதிர்பார்ப்பும் சேர்ந்துகொள்கிறது அல்லவா, அதை ஈடு கொடுக்கிற மாதிரி  அந்தத் தயாரிப்பு  இருக்கிறதா, அதை வாங்கியே ஆக வேண்டும் என்கிற உந்துதலை ஏற்படுத்துகிறதா என்று அடுத்தடுத்த சங்கிலித் தொடராகப் போய்க் கொண்டே இருக்கிறது.

முந்தைய நாட்கள் மாதிரி, பிராண்ட் என்றால், கவர்ச்சிகரமான ஸ்லோகன், லோகோ, பன்ச் வைத்துச் செய்யப்படுகிற விளம்பரங்கள் மட்டுமே என்ற நிலை கடந்த காலமாகிவிட்டது.

" A brand is the set of expectations, memories, stories and relationships that, taken together, account for a consumer’s decision to choose one product or service over another."

பிராண்ட் என்றால் என்னவென்று  இப்படித் தன்னுடைய  கருத்தாக சேத் கோடின் சொல்கிறார்!

உங்களது குறிக்கோள் என்ன என்பதைத் தெளிவாகச் சொல்லுங்கள்! வெறும் வாக்குறுதிகளை மட்டுமல்ல! இப்படி, இன்றைய சூழ்நிலையில் ஒரு பிராண்டாக உருவாக என்னென்ன அவசியம் என்பதைப் பற்றிய அருமையான செய்திக்காட்டுரை இங்கே! மேலாண்மை, மார்கெடிங் துறையில் இருப்பவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும், பிடிக்கும்!

சரி, வலைப்பதிவுகள், மடல் இதழ் என்று ஆரம்பித்துவிட்டு, பிராண்ட் அது  இது என்று கதை வேறுபக்கம் போய்க் கொண்டிருக்கிறதே என்று நினைக்கிறீர்களா? நிச்சயமாக இல்லை!
 
வலைப்பதிவுகள், வெறும் கிறுக்கல்கள், நான் எனக்காக மட்டுமே எழுதிக் கொண்டிருக்கும் குறிப்புக்கள், எனக்கு இவ்வளவு வாசகர்கள், ரசிகர்கள், தொண்டர்கள்  இருக்கிறார்கள், தினசரி இத்தனை ஹிட்ஸ் கிடைக்கிறது என்பதெல்லாம் ஆறிப்போன பழங்கதை! வெற்றுக் கூச்சல்கள், பிரச்சாரங்கள், எதிர் பிரச்சாரங்கள் என்று இருந்து விட முடியாது!

படிக்க வருகிறவர்கள், கொஞ்சம் விஷயத்தையும் எதிர்பார்க்கிறார்கள், உங்களிடம் இருந்து தெரிந்து கொள்ள விரும்புகிறார்கள் என்பதையும் நினைவில் வைத்துக் கொண்டால், பதிவிடுபவரும், படிப்பவருமே பயன் பெறுகிற விதத்தில் ஒரு பிராண்ட் ஆக நினைவில் நிற்கும். இன்னும் கொஞ்சம் கவனமாகச் செதுக்கும்போது, மடல் இதழாகவும் வளரும்! மலர்ந்து தமிழ்மணம்  பரப்பும்!

காலத்துக்கும் அழியாத கோலமாக, கவிதையாக எழுத வேண்டுமென்றெல்லாம் கூட அவசியமில்லை. கொஞ்ச நேரம் கழித்துப் படித்தால், நமக்கே, இப்படி எழுதியிருக்க வேண்டாமோ என்று தோன்றுகிற  மாதிரி இருந்துவிடாமல் இருந்தாலே  முதல் தடையைத் தாண்டியாகிவிட்டது! அப்புறம், கொஞ்சம் நிதானித்தால், நாம் என்ன சொல்ல வருகிறோம் என்பதைத் தெளிவாகவே சொல்ல முடியும்! எல்லாமே மாறிக் கொண்டிருப்பது என்ற நிலையை மனதில் வைத்துக் கொண்டோமேயானால், இப்போது நமது கருத்தாக இருப்பது, நமக்கு இப்போது கிடைத்திருக்கிற அனுபவத்தை, அல்லது கேள்விப்பட்டதை வைத்து மட்டுமே சொல்லப்பட்டது, இதுவுமே அனுபவங்கள் கூடக் கூட, மாறக் கூடியதுதான் என்பதைப் புரிந்து கொண்டாலே, மற்றவர்கள் சொல்வதும் அப்படித்தான், அதில் அவர்களுடைய அப்போதைய  புரிதல் மட்டுமே வெளிப்படுகிறது  அதுவுமே  மாற்றத்திற்குட்பட்டது தான் என்பதும் புரிய வரும்.

வாதம் என்பது ஒருபக்கச் சார்பு நிலை! பக்கவாதம் வந்த மாதிரி முடக்கிப் போட்டு விடக் கூடிய அபாயம் அதிகம்! விவாதம் என்பது, எதிரெதிர்  கருத்துக்களையும் உள்வாங்கிக் கொண்டு, அடுத்த கட்டத்திற்கு உதவுகிற படி!

தமிழில் வலைப் பதிவுகள், சாலையோரப் பெட்டிக் கடைகளாக இருப்பதில் இருந்து, ஒரு பிராண்டாக உருவாக்குவதில், நமக்கு அதிகம் பொறுப்பிருக்கிறது! எழுதும் போது உங்கள் குறிக்கோள் என்ன என்பதைத் தெளிவாகச் சொல்லுங்கள்! வாதங்கள், பிடிவாதங்களாக இறுகிப் போய்விடாமல், பயனுள்ள விவாதங்களாக நடக்கும்போது மட்டுமே  எழுதுபவர், வாசகர் இருவருமே ஜெயிக்கிற சூழ்நிலை உருவாகும்.

ஜெயிக்கலாம் வாங்க!


4 comments:

  1. அதை வாதம், விவாதம் என்பதை விட உரையாடல் என்று மாற்றி விட்டால் இன்னும் நலம்!

    ReplyDelete
  2. வால்ஸ்!
    வாதம்- விவாதம் என்று கொஞ்சமல்ல பெரிய வேறுபாடு இருப்பதால் தான்!
    வாதம் என்பது இங்கே argument என்பதாக, விவாதம் என்பது கொஞ்சம் விவேகத்துடன் கூடிய வாதம் அல்லது discussions என்ற பொருளில் தனித் தனியாகச் சொல்ல வேண்டியிருந்தது. உரையாடல் என்ற ஒற்றைச் சொல்லில் நான் சொல்ல வந்த கருத்தை அடக்கி விட முடியுமா என்பது எனக்குத் தெரியவில்லை.

    தவிர வாதம் என்று சொல்லும் போதே, வாதம் செய்கிற இரு தரப்புமே நீயா நானா என்ற அளவுக்குப் போய் விடுகிற நிலைமையைத் தான் இங்கே பார்த்துக் கொண்டிருக்கிறோம்.வாதம் செய்வதில், கவனித்துப் பார்த்தால், விஷயத்தை விட்டு வெகுதூரம் விலகிப்பொஇவித்திருப்பதையும், மனம் இறுகிய நிலைக்குப் போய்விடுவதையும் பார்க்க முடியும். விவாதம் என்பது, கொஞ்சம் பண்பட்ட சூழலில், ஒரு கருத்தை எடுத்துக் கொண்டு, அதை இன்னும் விரிவு படுத்திப் பார்க்க முடியுமா, இருதரப்புமே பயன் பெறுகிற விதத்தில், செழுமைப்படுத்த முடியுமா என்று இருதரப்பையுமே ஆக்கபூர்வமாக ஈடுபடுத்துகிற செயலாகப் பார்க்கிறேன்.

    உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் என்று, செய்கிற எந்த ஒரு காரியமும், நமக்கோ பிறருக்கோ ஏதோ ஒருவிதத்தில் பயன் படுவதாக இருக்க வேண்டும் என்பது இந்தப் பக்கங்களில் பல இடங்களில் பேசப்பட்டிருக்கிறது! குறைந்தபட்சம், அப்படி ஒரு ஆசையாவது வெளிப்படுத்தப் பட்டிருக்கிறது !

    ReplyDelete
  3. கூடல் முதற்கொண்டு நான் எழுதும் வலைப்பதிவுகளில் சிலவற்றையாவது நீங்கள் படித்துக் கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறேன் ஐயா. ஏதேனும் பிராண்ட் தென்படுகிறதா?

    உங்கள் பதிவினைப் பற்றிய (அதன் மூலம் உங்களைப் பற்றிய) எனது மனப்பிம்பம்: ஆழமாக எழுதக் கூடியவர், அகலமான அனுபவம் உள்ளவர், பல இடுகைகளும் இவ்விரண்டையும் காட்டும், சில நேரங்களில் தேவையில்லாத டாபிகல் விசயங்களில் ஈடுபட்டு திசை திரும்புபவர். :-) அந்த டாபிகல் விசயங்கள் வரும் போது மட்டும் அந்த இடுகைகளைப் படிக்காமல் விட்டிருக்கிறேன். :-)

    ReplyDelete
  4. கூடல் மட்டுமல்ல, உங்களுடைய வேறு பதிவுகளையும் அவ்வப்போது படித்துக் கொண்டிருக்கிறேன், சில பதிவுகளில் கருத்தும் சொல்லியிருக்கிறேனே, திரு.குமரன்!

    என்னுடைய வாழ்க்கை நிறையத் தருணங்களில் தேவையில்லாமல்(?) திசைதிரும்பி,குப்பையாகவே போயிருக்கிறது,பொய்யில்லை!

    என்செயலாவதொன்றுமில்லை என்று அடிமேல் அடி வாங்கி, தெரிந்துகொண்டுவருபவன் என்பதையுமே, ஆரம்ப காலப் பதிவுகளில் சொல்லியிருக்கிறேன்!

    எதையோ சாதிக்கப் போவதாக எண்ணி ஏமாந்து, கசந்து, ஒதுங்கி, ஓரமாக நின்று கொண்டு இப்போது வேடிக்கை மட்டும் பார்த்துக் கொண்டிருக்கிறேன்!

    என்னைப் பற்றிய பிம்பம் நிச்சயமாகச் சிறியது கூட இல்லை, மிகவும் அற்பம் தான் என்பதை எனக்கே நினைவுபடுத்திக் கொள்வதற்காகத் தான், ஸ்ரீ அரவிந்தரின் சாவித்திரி மகாகாவியத்தில் இருந்து Consent to be nothing and none என்ற வரியை இந்த வலைப்பதிவுகளின் தலைப்பாகவுமே வைத்திருக்கிறேன்.

    ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!