ஈயம், பித்தாளைக்குப் பேரீச்சம்பழம்! பிராண்ட், இமேஜ் என்றால் என்னாங்க?


ஒரு பொருள் அல்லது தயாரிப்பு, தேவையின் நிமித்தம் தொழில் தெரிந்த எவராலோ உருவாகிறது. ஆரம்ப நிலையில், எந்த விதமான நகாசு, ஜிகினா வேலையும் இல்லாமல், எளிமையாகத் தான் அந்தப் பொருள், அல்லது தயாரிப்பு இருக்கிறது.

அடுத்து, கொஞ்சம் விவரமான ஒருவரிடம், அதே பொருள் வந்து சேரும்போது, நகாசு, ஜிகினா வேலைகள் எல்லாம் சேர்ந்து கொள்கிறது.

அப்புறம் கலை தெரிந்தவர்களிடம், சுருக்கமாகக் கலைஞர்களிடம், அந்தப் பொருள் வந்து சேருகிறது.

அவர்களிடம் இருந்து, எம்பிஏ  மாதிரி மேலாண்மையைப் பாடமாகப் படிப்பவர்கள் கையில் அகப்பட்டுக் கொள்கிறது.

அப்புறம் ஒரு அரசு,  நிர்வாகம் அல்லது ஒரு நிர்வாகியிடம் சிக்கிக் கொண்டு, படாத பாடுபட்டு, ஒன்றுக்குமே ஆகாததாகப் போய் விடுகிறது.

ஊடகங்கள் பற்றிய இந்தப் பரிமாணத் தேய்மானத்தை, சேத் கோடின் தன்னுடைய பதிவில் மெல்லிய நகைச் சுவையோடு எழுதியிருக்கிறார். தொலைக் காட்சி  எப்படி, காமெராவைக் கையாள, ஒளிபரப்பத் தெரிந்தவர்களிடமிருந்து, 

எர்னி கோவாக் மாதிரி காமெடியன்கள், ராட்  ஸ்டெர்லிங் மாதிரி நிகழ்ச்சிகளை எழுதித் தயாரிப்பவர்கள் கைக்குப் போய், அப்புறம் சீரியல்களாக எடுத்துக்காசுபார்க்கும்  ஆசாமிகளிடம் போய்க் கடைசியில், இதுவும் ஒரு பிழைப்பு என்ற அளவுக்கு வந்து நிற்கிறது என்று சேத் கோடின் சொல்வதை உள்ளூர் நிலவரத்தோடு ஒப்பிட்டுப் பார்த்தால், மெகா சீரியல்களாக அழுது ஒப்பாரி வைப்பதையே பிழைப்பாகக் கொண்டு இங்கே சானல்களும், அதை எபிசோட் தவறாமல் பார்த்து மூக்கைச் சிந்தும் தாய்க் குலங்களுமாக...!

....ம்ம்மம்ஹூம்! சிரிக்க முடியவில்லை! நம்மூர் தொலைக்காட்சிகள், நிகழ்ச்சிகளைப் பற்றி ஒன்று அல்லது இரண்டு  வார்த்தையில் சொல்ல வேண்டுமானால் "மொக்கை"  "மரண மொக்கை"  ரகம் தான்! பார்ப்பவர்கள் எல்லோருமே அடி முட்டாள்கள் என்ற நினைப்பில் தான் நிகழ்ச்சிகளையே தயாரிக்கிறார்கள்! அவர்களுடைய நம்பிக்கையைப் பார்ப்பவர்களுமே, தொடர்ந்து காப்பாற்றிக் கொண்டிருக்கிறார்கள்!

என்ன செய்ய?!

ஒரே வார்த்தை சொல்லுங்கள்! ஓகோவென்று வாழுங்கள் என்று இதற்கு ஒரே  வரியில் தீர்வு சொல்ல வேண்டுமென்றால்..நோ டிவி! நோ மெகா சீரியல் என்று இருந்துவிடுவதுதான்!

ஒரு ப்ராண்ட் என்பது என்ன என்பதை இங்கே கொஞ்சம் பார்த்திருக்கிறோம்!

ஒரே மாதிரியான தயாரிப்புக்கள் தான்! தங்களை வித்தியாசப் படுத்திக் கொள்வதற்காக, ஒரு முத்திரையை தாங்கி வருவதே ப்ராண்ட் என்று பொத்தாம் பொதுவாக சொல்லிவிடலாம்!

ஆனால் ப்ராண்ட் என்பது, அந்த மாதிரியான, பொத்தாம் பொது ஸ்டேஜை எல்லாம் தாண்டி, ஒரு வலிமையான சக்தி, செய்தி, வாக்குறுதியைத் தருவதாக உருமாற்றம் பெற்று நீண்ட நாட்களாகி விட்டது. MBA பட்டம் பெற்று, மார்கெடிங் துறையில் இருக்கும் ஒரு பதிவர், ப்ராண்ட் பற்றிப் பதிவுகள் எழுதிக் கொண்டிருந்ததைப் படித்த போது, இந்த தலைப்பில் பேச வேண்டியது இன்னமும் இருக்கிறது என்று தோன்றுகிறது!

கூகுளில் define: brand என்று தேடிப்பாருங்கள்! எத்தனை எத்தனை தேடல் முடிவுகள்!

ஆரம்ப நாட்களில், தன்னுடைய பொருளைப் பற்றி, அதன் தயாரிப்பாளர் அளந்து விடுவது தான் ப்ராண்ட் என்று இருந்தது உண்மை! தன்னுடைய தயாரிப்பை, வாடிக்கையாளர் எப்படிபார்க்க  வேண்டும் என்று தூண்டுகிற மாதிரி மறைமுகமாக மூளைச் சலவை செய்கிற மாதிரி?) சொல்வது மிகப் பழைய  முறை! ஒரு காலத்தில், ஒரு சோப் விளம்பரம், சினிமா நட்சத்திரங்களின் அழகு சோப் என்றே அறிமுகப் படுத்தப் பட்டது.

தன்னுடைய குரல்வளத்தால் தமிழ்நாட்டு ரசிகர்களை, அந்த நாட்களில் கட்டிப் போட்டிருந்த  எம் கே தியாகராஜா பாகவதர், வாசனைத்திரவியங்களுக்காகச் செலவழித்த தொகை, தன்னுடைய ப்ராண்டாகக் குரலை விட, வாசனையையே நம்பியிருந்ததாகச் சொல்லக் கேள்வி! இமேஜ்! ப்ராண்ட்! என்ன பாடு படுத்துகிறது?!

இப்போது கூட, ஒரு வாசனை ஸ்ப்ரே விளம்பரம், அதை உபயோகித்தால், வாசனையில் மயங்கி அத்தனை பெண்களும் மேலே விழுந்து மொய்ப்பார்கள் என்ற முட்டாள்தனமான கற்பனையை விதைப்பதாக ...!

முத்தாலிக் மாதிரிக் கலாசாரக் காவலர்களுக்கு பிங்க் கலர் ஜட்டியை அனுப்பிய ரசிகர்களும், பெண்ணீயம் பேசுபவர்களும் சும்மாத்தானே இருக்கிறார்கள்?

ஆக ஒரு ப்ராண்ட், தன்னிடமில்லாத ஒன்றை  இருப்பதுபோல பாவலா காட்டுவது நீண்ட நாட்கள் எடுபடாது என்பதை, சந்தையில் உருவான போட்டிகளே தீர்மானித்தன. போட்டியில் ஏற்பட்ட அடுத்த நல்ல விஷயம், ப்ராண்ட் என்பது தரத்தைச் சொல்வதாகவும் இருக்க வேண்டும் என்றாகிப் போனது!

தரமே இல்லாமல், வெறும் விளம்பரங்களிலேயே ஓட்டிவிடலாம் என்று நினைப்பது எவ்வளவு முட்டாள்தனமானது என்பதை, நிறையவே சமீபகால சந்தைப் பொருளாதாரம்காட்டிவருகிறது.


பயன் படுத்துபவர் பார்வையில் இருந்து ப்ராண்ட் என்பது, தன்னை நாணயமான முறையில் அறிமுகப் படுத்திக் கொள்வது என்பதில்  ஆரம்பித்து-------


இன்றைய நிலையில், ப்ராண்ட் என்பது, ஒரு பொருளின், அதன் தயாரிப்பாளரின், ஒரு ஸ்தாபனத்தின், அப்புறம் அதைப் பயன்படுத்துகிறவரின் அடிப்படைப் பண்பு எத்தகையது என்பதன் அளவீடாக இருக்கிறது. எங்கே இருந்தோம், எங்கே போகிறோம் என்பதன் வெளிப்பாடாகவும் மாறி வருகிறது.

ப்ராண்ட் என்பது ஏமாந்தவன் தொடையில் கயிறு திரிக்கிற விஷயமல்ல!
 
ப்ராண்ட் என்பது தரத்தின் வெளிப்பாடு! தொடர்ந்து உறுதிப் படுத்தும் அடையாளம்!
 
ப்ராண்ட் என்பது, தவறான சித்திரத்தையோ, பொய்யான வாக்குறுதியையோ அளிப்பதுமல்ல.
 
ப்ராண்ட் என்பது, பயன்படுத்துபவருடைய  நம்பிக்கை! அதைக் காப்பாற்றும் தயாரிப்பாளரின் உத்தரவாதம்!
 
ப்ராண்ட் என்பது நேற்றைய காலத்தின் அடையாளமாக நின்று விடுவது அல்ல! நாளை வரும் நாட்களிலும் நிலைத்து நிற்பது!

8 comments:

  1. அருமையான பதிவு வாழ்த்துகள்

    ReplyDelete
  2. ரொம்ப நல்ல பதிவுங்க கிருஷ்ணா.

    இப்பெல்லாம் இளைஞர்கள் மத்தியில் பரவலாக பேசப்படும் சில கம்பெனி ப்ராண்ட் பொருட்களை பெருமைக்காகவே உபயோகப்படுத்தும் நிலையையும் பார்க்க நேரிடுகிறது.

    பொதுவாக எந்த கம்பெனிக்கும் பொருந்தும் வகையில் சொல்லனுமென்றால், எந்த ஒரு பொருளுக்கும் மார்க்கெட்டில் ஒரு டிமாண்ட் ஏற்படுத்தினாலே போதுமானது,அவர்கள் அதை விற்க வேண்டியதில்லை, பொருள் தானாக விற்றுவிடும். இதற்காக செய்யும் உத்திகளில் ஒன்றுதான் பொய்யான வாக்குறுதிகள் கொடுத்து விளம்பரம் செய்வதும் மற்ற எல்லாமும்.

    ReplyDelete
  3. வாருங்கள் நவாஸுதீன்!
    கூட்டத்தோடு சேர்ந்து கொண்டு நானும்உங்களை மாதிரித் தான், உங்க சாதிதான் என்ற ரீதியில் தான், பெரும்பாலான பிராண்டுகள் தங்களை அடையாள படுத்திக் கொள்கின்றன. ஜனங்கள் எங்கெல்லாம் திரளுகிரார்களோ அங்கெல்லாம்,கிரிக்கெட், கால்பந்தாட்டம், இசை நிகழ்ச்சிகளில் விளம்பர ஸ்பான்சர்களாகப் புகுந்து கொண்டு, நம் தோள்களில் கையைப் போடுவது மாதிரி ஆரம்பித்துக் கடைசியில், தலையில் ஏறி உட்கார்ந்து விடுகின்றன. இது ஒரு ரகம். கோக், பெப்சி எல்லாம், தவிர்க்க முடியாமல் போனது இந்த மாதிரித்தான்!

    அப்புறம், ஒவ்வொருக்குள்ளும் இருக்கும் பலவீனங்கள், கனவுகளைப் பயன்படுத்தி நானிருக்க பயமேன் என்ற ரீதியில் சிகப்பழகுக் க்ரீம் , ஆயில் என்று தேவையில்லாதவைகளைக் கூடத் தலையில் கட்டிவிடுகிற சாமர்த்தியம்! இது இன்னொரு விதம்!

    பிராண்ட் என்று பேச ஆரம்பித்ததே, மனித இயல்புகள், அவை எப்படிப் பிறரால் வெகு சாமர்த்தியமாகவும் வணிக ரீதியாக வெற்றியைத் தருவதாகவும் ஆகி விடுகின்றன என்பதைத் தொட்டுப் பேசுவதற்காகத் தான்! வணிகம் என்று மட்டுமில்லை, அரசியல், ஆன்மிகம், மதம் இப்படி எதைப் பார்த்தாலும் அங்கே நிறைய பிராண்டுகள் புழக்கத்தில் இருப்பதையும் சேர்த்துத் தான்சொல்கிறேன்!

    ReplyDelete
  4. ///அரசியல், ஆன்மிகம், மதம் இப்படி எதைப் பார்த்தாலும் அங்கே நிறைய பிராண்டுகள் புழக்கத்தில் இருப்பதையும் சேர்த்துத் தான்சொல்கிறேன்!///

    உண்மைதான்.நானும் ஒத்துக்கிறேன்.

    ReplyDelete
  5. ஒத்த உணர்வும், எண்ண ஓட்டமும்,அவலங்களை கண்ட வேதனையும் "இதற்க்கு எண்ண செய்யலாம்" என்ற கையாலாகாத நிலையில் உள்ளவர்களுள் நானும் உண்டுதான். வேறு எண்ண சொல்ல!

    அம்மணக்குண்டிகளின் ஊரில் கோவணம் கட்டியவன் கிறுக்கனன்றோ நண்பரே !!

    ReplyDelete
  6. இங்கே ப்ராண்டுகளைப் பற்றிப் பேசுகையில், எதற்காக இவ்வளவு மனச் சோர்வு என்று எனக்குப் புரியவில்லையே, திரு சட்டநாதன்!

    இயற்கையில் எல்லாமே, ஒருவிதமான பரிணாம வளர்ச்சியின் விதிகளுக்கு உட்பட்டவையே! இங்கே எண்ணங்களின் போக்கும் அப்படித்தான்! வணிகம் என்று ஆரம்பித்தபோதே, அடுத்தவருடைய தேவையைப் பூர்த்தி செய்வது என்று ஆரம்பித்ததில், கொஞ்சம் அல்லது நிறைய மிகைப்படுத்துதல், கலப்படம், தரக்குறைவு இப்படிப் பதர்களும் கலந்துவிடுவது இயல்பான ஒன்று தான்! ஆனால் நிலைப்பதில்லை என்பதைத் தான் பதிவின் கடைசி வரிகளில், பிராண்ட் என்பது எப்படி எப்படியெல்லாம் தீர்மானிக்கப் படுகிறது என்பதாகச் சொல்ல முயசித்தேன். தெளிவாகச் சொல்லவில்லையோ?

    ReplyDelete
  7. தாங்கள் தெளிவாகத்தான் சொல்லியுள்ளீர்கள். இத்தனை தெளிவும் உணர்வும் நம்மிடம் இருந்திருந்தால்

    ///அரசியல், ஆன்மிகம், மதம் இப்படி எதைப் பார்த்தாலும் அங்கே நிறைய பிராண்டுகள் புழக்கத்தில் இருப்பதையும் சேர்த்துத் தான்சொல்கிறேன்!///

    மேற்க்கண்டவாறு எழுத நமக்கு சந்தர்பமே இல்லாமல் போயிருக்குமே!!

    ReplyDelete
  8. அருமையான பதிவு வாழ்த்துகள்

    ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!