ஆசைக்கு அளவேதடா அறிவு கெட்ட அப்பா!
"ஆசைக்கு அளவேதடா அறிவு கெட்ட அப்பா!"

இப்படி ஒரு வசனம் பழைய தமிழ்த் திரைப்படம் ஒன்றில் கெட்ட மந்திரி ஒருவனைப் பார்த்து அவனைவிடக் கெட்ட, அவன் மகன் சொல்கிற மாதிரி வரும்! மந்திரி குமாரிகளும், மந்திரி குமாரர்களும் பேரன் பேத்திகளும் பேராசையின், ஊழல் செய்வதில்  எல்லை என்றால் என்னவென்றே தெரியாமல் தொடர்ந்துகொண்டிருப்பவர்கள் தான் இல்லையா!

யூதர்களைப் பேராசையின் வடிவமாகச் சித்தரிக்கும் ஷேக்ஸ்பியர் எழுதிய மெர்ச்சன்ட் ஆஃப்  வெனிஸ் கவிதை நாடகத்தில் ஷைலக் என்ற கொடூரமான வட்டிக்கடைக் காரனைப் படித்திருக்கிறீர்களா? மதுரை செல்லூர் மீட்டர் வட்டி ரன்வட்டிக்காரர்களில் ஒருவரிடம் சிக்கிக் கொண்டு, திரைப்பட தாயாரிப்பாளரும், மணிரத்தினத்தின் அண்ணனுமான ஜி. வெங்கடேஸ்வரன் தற்கொலை செய்து கொண்டதாவது  நினைவுவருகிறதா?


மிகப் பெரிய சரிவைச் சந்தித்து முழுதாகப் பதினாறு மாதங்கள் கூட ஆகவில்லை! அரசு, வரிப்பணத்தைக் கொட்டியிறைத்துக் காப்பாற்றிய நினைவு கொஞ்சம் கூட இல்லை! அமெரிக்கவங்கிகள் பேராசை பிடித்த பூதங்களாக, மறுபடி ரத்தம் குடிக்கும் ட்ராகுலாக்களாகத் தங்களுடைய சுயரூபத்தைக் காட்டத் தொடங்கிவிட்டன என்று நடப்புச் செய்திகள் சொல்கின்றன.

ஆச்சரியமொன்றுமில்லை தான்!

ஆச்சரியப் பட வைத்த செய்தி, அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா, அமெரிக்க வங்கி, நிதித் துறை, மக்களுடைய வரிப்பணத்தில் ஏழாயிரம் கோடி டாலர்களை உதவியாகப் பெற்றுக் கொண்டு, கொஞ்சம் தெம்பு ஊறினவுடன் மறுபடி ரத்தம் குடிக்கும் வேலையைத் தொடர்வதற்குக் கொஞ்சம் இடைஞ்சலாக வங்கிகள் மீது விதிக்க உத்தேசித்திருக்கும் வரி தான்! சுமார் ஆயிரத்து நூற்றெழுபது கோடி அமெரிக்க டாலர்களை அரசுக்கு வருவாயாகத் தரும் என்ற செய்திகள் வர ஆரம்பித்தவுடனேயே, அமெரிக்கப் பங்குச் சந்தை சரிய ஆரம்பித்திருக்கிறது. குறிப்பாக, அமெரிக்க வங்கிகளுடைய பங்குவிலைகளில் வீழ்ச்சி ஆரம்பித்து விட்டது.


இது பாங்க ஆப் அமெரிக்காவின் பங்கு நிலவரம் -போன வருடத்து ஏற்ற இறக்கங்களைக் காட்டுவது! ரத்தம் குடித்துக் கொழுத்தவுடன் பழைய குருடி கதவைத் திறடி கதை தான் 

அடுத்த ஆச்சரியம், அமெரிக்க அதிபர் வெளிப்படையாக, வங்கிகளுடைய பேராசையைப் புட்டு வைத்திருப்பது தான்! "அவர்களுக்குத் தேவை ஒரு மல்லுக்கட்டு யுத்தம் தான் என்றால், அப்படிஒன்றுக்கு  நான் தயாராகவே இருக்கிறேன்" என்று பகிரங்கமாகவே அறிவித்திருக்கிறார். ஒபாமா சொன்னதில் கொஞ்சம் பாருங்கள்!

"(அமெரிக்க நிதித்துறை) ஓராண்டுக்கு முன்னால் இருந்த நிலையை விட, இன்றைக்கு நன்கு தேறி வலிமையாக இருந்தாலும், ஏறத்தாழக் கவிழ்ந்து விடுகிறநிலைக்குக்  காரணமான அதே பழைய நடைமுறைகளையே இன்னமும் பின்பற்றி வருகின்றன."

கவிழவே முடியாத அளவுக்குப் பெரியதாக இருக்கும் வங்கிகள், மறுபடி வரி செலுத்தும் அமெரிக்கர்களைப் பிணைக்
கைதிகளாக்குவதை மறுபடி நடக்க விட மாட்டோம்."

வங்கிகளுடைய அளவை ஒரு எல்லைக்கு உட்படுத்துவது,  செயல்படுவதில் சில கடுமையான நடைமுறைகள் என்று கடுமையான விதிகளை சட்டமியற்ற ஒபாமா முடிவு செய்திருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அமெரிக்க மக்களிடையே,  வரிப்பணத்தை விழுங்கி ஏப்பமிட்ட வங்கிகள் மறுபடி, தங்களுடைய ஊழியர்களுக்கும், பங்குதாரர்களுக்கும் கொழுத்த போனஸ், டிவிடென்ட் என்று அறிவிக்க ஆரம்பித்திருப்பதில் கடுமையான அதிருப்தியும் கோபமும் நிலவுகிறது.

பேராசைக் காரர்கள், மக்களை, அவர்களுடைய அதிருப்தியை எப்போதுமே சட்டை செய்வது இல்லை!  அமெரிக்க வங்கித் துறை, வங்கித்துறையின் சிறகுகளை முடக்கி வைக்கும் சட்டம் இயற்றுவதற்கு  எதிராக ஒரு இயக்கத்தை ஆரம்பித்திருக்கின்றன. மாசாசூசட்ஸ்  தேர்தலில் ரிபப்ளிகன் கட்சி ஜெயித்துவிட்டதால் தான் இந்த ஸ்டன்ட் என்ற ஒரு பிரசாரமும் தொடங்கி விட்டது.  ஏற்கெனெவே ரிபப்ளிக் கட்சி, நம்மூர் அரசியல் வாதிகளை மாதிரியே, எதிரிக் கட்சியாகச் செயல் பட ஆரம்பித்து விட்டது.  செனேட்டில் இந்த சட்டம் நிறைவேறுவது கொஞ்சம் கடினமாகத் தான் இருக்கும் என்றுதெரிகிறது. 


"President Obama's pledge on Thursday afternoon to end the "excess and abuse" and a "binge of irresponsibility" in the financial system, shook shares in banks. The largest US banks suffered the biggest blows, with JP Morgan Chase off 7pc, Bank of America 6pc lower and Goldman Sachs down 4pc. But British banks with an American presence also suffered, with Barclays down 3pc and Royal Bank of Scotland 7pc lower at the close."

அமெரிக்கஅதிபர்  மாளிகையின் இந்த அறிவிப்பு இரண்டு பிரதானமான விஷயங்களை உள்ளடக்கியிருக்கிறது.

முதலாவதாக,  அமெரிக்க வங்கிகள் தங்களுடைய சுயலாபத்திற்காக வர்த்தகச் சூதாட்டத்தில் இறங்குவதையும், தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு எதிராக செயல்படுவதுமான செயல்களையும் கட்டுப் படுத்த நடவடிக்கைகள் எடுப்பது.

அடுத்து, எந்த ஒரு வங்கியும், ஒரு எல்லைக்கு மேல் பெரியதாக வளர்வதற்கு கட்டுப்பாடுகள்.

அமெரிக்காவின்
சரித்திரமே, வளர்ச்சியே, இந்த ரிஸ்க் எடுக்கும் சூதாட்ட மனப்பான்மையில் தான் இருக்கிறது, அதனால் அதைக் கட்டுப் படுத்தக் கூடாதென்றும், அது சுதந்திரத்திற்கு எதிரானதென்றும் காலகாலமாகச் சொல்லப்பட்டு வருகிறது. ஒபாமாவின் இந்த முடிவு ஒரு மிக நல்ல ஆரம்பம், எப்படி நடக்கிறதென்று கொஞ்சம் பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.

சின்னப் பிள்ளைகளுக்கான நர்சரிப் பாடல் ஒன்று நாலு வரிகளில் குட்டிக் கதை. ஹம்ப்டி டம்ப்டி என்ற கோழிமுட்டை வடிவத்தில் கொழுத்த ஒருவன் சுவற்றின் மீது உட்கார்ந்திருக்கிறான்! அவனுக்கு என்ன தைரியம் என்றால், ஏதோ அசந்தர்ப்பமாகக் கீழே விழுந்துவிட்டால் ராஜா, தன்னுடைய ஆட்களையும் குதிரைகளையும் அனுப்பி உதவுவதாகச் சொல்லியிருப்பது தான்! ஒரு நாள், கோழி முட்டை கீழே விழுந்தாயிற்று! சொன்னபடி ராஜாவும், குதிரை, ஆள். அம்பு சேனை எல்லாவற்றையும் அனுப்பியும்  ஒன்றும் காரியமாகவில்லை!இங்கேயும் அதே தைரியம் தான்! வங்கிகளில் கொழுத்த லாபத்திற்காக, இவர்கள் சூதாடுவார்களாம்! லாபம் வந்தால் சரி! தவறிப் போய் நட்டமாகி விட்டால்,  அரசாங்கம் வந்து இவர்களை மீட்க வேண்டும்!

இது அமெரிக்காவில் தானே, நமக்கெதற்கு என்கிறீர்களா?

இங்கே பொதுத்துறை இருப்பதே தனியார் பேராசைக்குத் தீனி போடுவதற்காகத் தான்! டாடாவிற்கு இருப்பது ஒரே ஒரு உருக்காலை, ஆனால், இரும்பு விலையை பொதுத்துறையில் இருக்கும் உருக்காலைகள் நிர்ணயிப்பதில்லை! டாடா தான் அதை வந்து செய்ய வேண்டும்! ஒவ்வொரு பொதுத் துறை நிறுவனமும், யாரோ ஒரு தனியார் தொழில் கொழுப்பதற்காகத் தான்!

பொதுத்துறை வங்கிகள், ஆளும் கட்சியின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காகத் தான் என்பது இந்திராகாந்தி காலத்தில் இருந்து இன்று வரை மாறாமல் இருக்கும் கலவரம்!

சரி அதனால் என்ன என்கிறீர்களா?
கொண்டை உள்ள சீமாட்டி அள்ளி முடிக்கிறாள், இதில் நமக்கென்ன என்றும் கேட்கத் தோன்றுகிறதா?

மானாட மயிலாட பார்ப்பதற்கு முன்னால் கொஞ்சம் பொழுது போக வேண்டாமா, அதற்காகத்தான்14 comments:

 1. நாட்டாமை தீர்ப்ப மாத்தி சொல்லுன்னு பேங்க்காரங்களாம் கேக்குறாங்களாக்கும்!

  இந்திய அரசாங்கத்திற்கு அம்பானி குரூப் மேல தான் பாசம், டாடாமேலயும் உண்டா!?

  ReplyDelete
 2. கவனித்துப் படித்தால், உருக்கு விலையை நிர்ணயிப்பது டாடா ஸ்டீல் என்றும் அரசு நிறுவனமான ஸ்டீல் அத்தாரிடி இல்லை என்பதும் தெரியும்! அம்பானிகள் வசம் எந்த ஸ்டீல் தொழிற்சாலையும் இல்லை!

  ஆனை அம்பானை என்று வலப்பக்கமுள்ள தேடுபொறியில் தேடிப் பாருங்கள், வங்கியில் உள்ளவர்கள் தீர்ப்பை மாற்றிச் சொல்லச் சொன்னார்களா இல்லையா என்பது புரியும்!

  ReplyDelete
 3. அய்யா,

  இந்தியாவில் எந்த பொதுதுறை நிறுவனம் சேவை செய்கிறது. தற்போது இந்தியாவின் எல்லா பொதுதுறை நிறுவனங்களும் லாப நோக்கோடுதான் செயல் படுகின்றன.
  இந்தியன் ரயில்வே - ஒவ்வொரு தத்கால் இருக்கைகளுக்கு எவளவு வசூலிக்கிறது ?
  ஏன் ஐம்பது சதவீத இருக்கைகள் தத்கால் இருக்கைகளாக மாற்றப்பட்டன ?
  (நாலு பில்லியன் டாலர் லாபம் இன்னும் பல மடங்காக மாறினாலும் ஆச்சரியமில்லை)

  SBI - Intercity cheque Payment Fee - ஏன் இவ்வளவு தொகை வசூலிக்கிறது ? ( Even Both accounts are belongs to SBI )
  வீட்டு கடனை pre -payment செய்தாலும் SBI -ன் penalty அதிகம்.
  பல தனியார் வங்கிகள் வாடிக்கையாளர் pre -payment செய்தால் penalty -ஐ
  குறைத்துக்கொள்ள முன்வருகின்றன.

  BSNL - "வாடிக்கையாளர் சேவை ௦பூஜியம். நிகர லாபம்". பல நேரங்களில் BSNL வலை பூமிக்கு வெளியேதான் வேலை செய்யும்.
  (கொசுறு - BSNL ஊழியர்கள் ஒவ்வொரு பண்டிகைக்கும் வாடிக்கையாளர்களுடைய வீட்டிற்கு வந்து பண்டிகைகால
  இனாம் கேட்கின்றனர். ஏதும் கொடுக்காவிட்டால் டெக்னிகல் பிரச்சனைகளை உடனடியாக கவனிக்க மாட்டார்கள்.இது காலங் காலமாக நடக்கும் செயல். )

  மேல குறிப்பிட்டது சிறிதளவுதான். ஒவ்வொரு பொதுதுறை நிறுவனமும் கையாளும் லாப நோக்கு உத்திகள் எண்ணற்றவை.
  இப்படி இந்தியாவில் உள்ள பொதுதுறை நிறுவனங்கள் எவ்வாறு கொளுத்த லாபமடைகின்றன என்று எழுதிக்கொண்டே இருக்கலாம்.
  இவை அமெரிக்க நிறுவனங்களை மிஞ்சும் நாட்கள் வெகு தொலைவில் இல்லை.

  இப்படியெல்லாம் கேட்டால் கவர்மெண்ட எப்புடிதான் நடத்துறதுன்னு இந்திய நிதி அமைச்சர் கேட்ப்பார்.

  ReplyDelete
 4. பாகற்காய்! வித்தியாசமான பெயரில் பதிவு, நான்கு பதிவுகளுமே நன்றாகத் தான் இருக்கின்றன. தொடர்ந்து எழுத நேரமில்லையா அல்லது மனமில்லையா?

  இந்தப் பதிவில் அமெரிக்க நிதித்துறையின் பேராசையைப் பற்றி மட்டுமே பிரதானமாக எடுத்துக் கொண்டிருக்கிறேன்.இங்கே நீங்கள் பார்த்துக் கொண்டிருப்பதற்கும், அங்கே நடப்பதற்கும் மடுவுக்கும் மலைக்குமுள்ள வித்தியாசம் இருக்கிறது.

  இருந்தாலும் நீங்கள் எழுப்பிய கேள்விகளுக்குச் சுருக்கமாக--

  தொழில் நடத்துவது ஆதாயத்திற்காகவே என்பது தவறு எதுவுமில்லை. கட்டணங்கள் கூட இருப்பது கூடத் தவறு இல்லை. அப்படிச் செயல்படுவது, பெருமானமுள்ளதுதானா என்பது தான் அதைப் பற்றி மதிப்பிடுவதற்கான அளவுகோல்.

  வங்கிகளில் காசோலைப் பரிமாற்றம், இதர சேவைகளுக்கான கட்டணம் இதுவுமே கூட, சந்தை, அதன் தேவையின் அடிப்படையில் மட்டுமே நிர்ணயிக்கப் படுகிறது. இதிலுமே கூட ரிசர்வ் வங்கி சில புதிய முறைகளை, தொழில் நுட்பத்தைப் பயன்படுத்திச் செய்ய உத்தேசித்திருக்கிறது, Cheque truncation என்று ஒரு வெளியூர்க் காசோலையை இங்கேயே உடனடியாகப் பரிமாற்றம் செய்ய ஒரு பைலட் ஸ்கீம் கூட இருக்கிறது. வங்கிச் சேவை என்பது வணிக அடிப்படையில் நடப்பது- தமிழக அரசு அறிவிக்கும் இலவசங்கள் அல்ல என்பதை முதலில் புரிந்துகொண்டால் நல்லது.

  தத்கல் முறையில், மம்தா பானெர்ஜி வந்தவுடனேயே கட்டணத்தைப் பாதியாக்கிவிட்டார். லாலு காலத்து லொள்ளு எல்லாம் இல்லை என்றாலுமே மிகப் பெரிய நிறுவனம், தவறுகளும் குறைபாடுகலுமே மிகப் பெரிய அளவில் தெரிவதில் வியப்பே இல்லை!

  டிக்கெட் எடுத்து ரயிலில் பயணம் செய்பவர் எண்ணிக்கை இந்தியாவில், குறிப்பாக வட இந்தியாவில் மிக மிகக் குறைவு என்பது உங்களுக்குத் தெரியுமா?

  ReplyDelete
 5. ///////இங்கே பொதுத்துறை இருப்பதே தனியார் பேராசைக்குத் தீனி போடுவதற்காகத் தான்! டாடாவிற்கு இருப்பது ஒரே ஒரு உருக்காலை, ஆனால், இரும்பு விலையை பொதுத்துறையில் இருக்கும் உருக்காலைகள் நிர்ணயிப்பதில்லை! டாடா தான் அதை வந்து செய்ய வேண்டும்! ஒவ்வொரு பொதுத் துறை நிறுவனமும், யாரோ ஒரு தனியார் தொழில் கொழுப்பதற்காகத் தான்!///////

  Corus Steels பத்தி தெரியுமில்லையா உங்களுக்கு. ஐரோப்பாவிலேயே இரண்டாவது இடத்தில் உள்ளது. உலகின் முதல் பத்தில் ஒன்றாக இருக்கிறது. இது டாடா ஸ்டீல் க்ரூப்போடதுதான்.
  இதனால்தான் டாடாவிற்கு இந்த முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறதோ என்ற எண்ணத்தோன்றுகிறது.

  ReplyDelete
 6. வாருங்கள் நவாசுதீன்!

  கோரஸ் ஸ்டீல் டாடா கைக்கு வந்தது சமீபத்தில் தான்! நான் சொல்கிற நிலைமை, ஆரம்ப நாட்களில் இருந்தே இருந்து வருகிற நிலைமை. டாடா என்றில்லை, ஆரம்ப காலத்தில்இருந்தே காங்கிரஸ் கட்சி உள்ளூர் முதலாளிகளை அனுசரித்தே செயல்படுகிற கட்சியாகவும், ஆட்சியாளர்களுமாக இருந்த நிலைமையை மட்டுமே குறிப்பிட்டுச் சொன்னேன்.

  சென்னையில் மூடப்பட்ட ஸ்டாண்டர்ட் கார் தொழிற்சாலை ஒன்றே, பல கதைகளைச் சொல்லும்! அப்புறம், பின்னி ஆலை! எத்தனை கைமாறி, எத்தனை அரசு சலுகைகளை, வங்கிக் கடன்களை விழுங்கி ஏப்பமிட்டு விட்டுக் கடைசியில்.....!

  இந்தியாவில் முதலாளித்துவம்-முதலாளிகள் வளர்ந்த கதை இன்னும் கொஞ்சம் தமாஷான கொடூரம்!

  டிராகுலா கதையெல்லாம் இதற்கு முன்னால் ஜுஜூபி!

  ReplyDelete
 7. In the US, the latest Supreme Court ruling removing corporate spending on elections worsens the situation dramatically. 2% profits of Exxon Mobile is more than the total money John McCain and Obama spent together for the election. The ruling means that the companies can pretty much dictate who can win, legally! Well, We have been seeing it for a while. Now America is going to have a taste of it.

  ReplyDelete
 8. வாருங்கள் ரவி! உங்களைப் பற்றிய விவரம் எதுவும் அறிய முடியவில்லையே ஏன் ?

  அமெரிக்க உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முன்னாலேயும் கூடத்தான், அரசின் முடிவுகளை, யுத்தங்களையும் சேர்த்து, மிகப் பெரிய கார்பரேட்டுக்கள் தான் தீர்மானித்துக் கொண்டிருந்தன, கொண்டிருக்கின்றன! ஆக இந்தத் தீர்ப்பு, ஒரு சட்ட வடிவம் கொடுத்திருக்கிறதே தவிர புதியதாக எதையும் நிறுவி விடவில்லை.

  நலத்திட்டங்கள் என்ற பெயரில் அரசு செலவழிக்கும் தொகையை இந்த மாதிரி பெருமுதலைகள் கபளீகரம் செய்துவிடுவது, அங்கே மட்டுமல்ல இந்தியாவிலும் கூட உண்டு, கொஞ்சம் அதிகமாகவே!

  இந்த ஒரு விஷயத்திலாவது அமெரிக்காவை விட இந்தியா கொஞ்சம் முன்னணியில் இருக்கிறதே என்று சந்தோஷப்பட முடியவில்லை!

  ReplyDelete
 9. இர்விங் வாலஸ் எழுதிய The Man புதினம் படித்திருக்கிறீர்களா? இதே மாதிரி ஒரு சிச்சுவேஷன் அந்தக் கதையின் மைய ஓட்டமாக இருக்கும்.

  சமயங்களில் கதையாகச் சொல்லப் பட்டிருப்பதை விட உண்மை அதிகக் கொடூரமாக இருப்பது உண்டு!

  ReplyDelete
 10. I am just a reader and so have not published my profile - not much to publish!

  We live in the US and I am an avid reader of few selective blogs and I actively follow your blog as I see immense value in what you blog.

  It is true that the corporate sponsoring was going on even before this supreme court ruling. But consider that the crimes are less only because they are illegal, not because they are un-ethical. Now that it is legal, it can only proliferate from now!

  ReplyDelete
 11. அடிப்படையில் நானும் ஒரு வாசகனே!

  குற்றங்கள் சட்டபூர்வமாக இல்லாத போது குறைவாக இருக்கும் என்ற நம்பிக்கை உங்கள் கருத்தில் வெளிப்படுகிற மாதிரி இருக்கிறதோ?!

  பொதுவாக, சட்டங்கள் என்பதே, அந்தந்த நேரத்துக்குத் தகுந்த மாதிரியோ அல்லது பொருந்துகிற மாதிரியோ இருப்பவை தானே!

  Give a dog a bad name and then hang it! இது பிரிட்டிஷ் சட்டம், நியாயம்! நாயைத் தூக்கில் போடுவது என்று முடிவு செய்தாகி விட்டது! அதைக் கூட சட்டபூர்வமாக்கின நாகரீகம் அவர்களுடையது! எப்படி என்பதை அவர்களுடைய சட்ட முறை தீர்மானித்து வந்திருப்பதை நிறையவே பார்த்திருக்கிறோம் இல்லையா?

  இங்கே தமிழ் நாடு ஒன்றும் குறைந்து போய்விடவில்லை! வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால், தமிழர்களைக் கொடுமைப் படுத்தினார்கள், அடிமைப்படுத்தினார்கள் என்று இனவாதத்தை, உணர்ச்சிகளைக் கிளப்பி விட்டு, கலிங்கத்துப் போர் நடத்தின சோழர்கள் உண்மையில், தங்களுடைய வாணிக ஆதாயத்திற்காக, அந்தப் போரை நடத்தியதை வரலாறு சொல்லும்! கலிங்கத்துப் பரணி பாடின புலவன், வழக்கம் போலவே அதை நியாயப் படுத்திப் பாடியதும், இன்றும் கூட அதே வழிமுறைகள் கையாளப் படுவதும் கூட அறிந்தவை தானே!

  வணிகத்தோடு போட்டி, பொறாமை, சண்டை சச்சரவு, போர்கள், ஊழல்கள், இலவசங்கள் என்ற பெயரில் மோசடி இப்படி எல்லாவிதமான கோளாறுகளுமே சம்பந்தப்பட்டவை! நெருங்கிய உறவு கொண்டவை!

  ReplyDelete
 12. அய்யா,

  என் மனதில் இருந்த திரைகளை விலகியதற்கு நன்றி!
  ஆனால் இன்னும் சில நினைப்புக்கள்.

  //இந்தப் பதிவில் அமெரிக்க நிதித்துறையின் பேராசையைப் பற்றி மட்டுமே பிரதானமாக எடுத்துக் கொண்டிருக்கிறேன்.இங்கே நீங்கள் பார்த்துக் கொண்டிருப்பதற்கும், அங்கே நடப்பதற்கும் மடுவுக்கும் மலைக்குமுள்ள வித்தியாசம் இருக்கிறது.//

  அமெரிக்காவின் GDP 14.2 Trillion dollars
  இந்தியாவின் GDP 1.22 Trillion dollars

  இங்குள்ள பொதுத்துறை/தனியார்துறை நிறுவனகள் பின்பற்றுவது "American Business Model, not India's Business Model which existed in india before Globalisation".
  இந்தியாவின் வியாபார தனித்தன்மை ஏதும் இல்லை.
  இந்தியாவில் தனியார்துறை நிறுவனங்களின்(Manufacturing,Banking,Insurance,Telecom,Retail,...) அசூர வளர்ச்சிக்கு காரணம் பொதுத்துறை நிறுவனங்களின் மெத்தன போக்குதான்.

  ReplyDelete
 13. பாகற்காய் என்று அழைப்பது கொஞ்சம் கஷ்டமாக இருக்கிறது! வருகைக்கு நன்றி!

  இங்கே இந்தியாவில், அரசுத்துறை, தனியார் துறை வளர்ந்த கதை கொஞ்சம் விரிவாகப் பேச வேண்டியது. தனிப் பதிவாகவே எழுத வேண்டிய விஷயங்கள் இருக்கின்றன.

  ஏற்கெனெவே இந்த விஷயத்தை லேசாகத் தொட்டு எழுதிய பதிவு இது

  http://consenttobenothing.blogspot.com/2009/09/blog-post_6855.html

  இந்தப் பதிவில் ஒரு கோணத்தில் இருந்து எழுதியது! இன்னும் சொல்லவேண்டிய விஷயங்கள் இருக்கின்றன.

  ஆனால், உங்களுடைய பின்னூட்டத்தின் கடைசியில் சொல்லியிருப்பது போல இங்கே நடக்கவில்லை!

  அரசுத்துறை நிறுவனங்களைச் சுரண்டியே இங்கே தனியார் நிறுவனங்கள் வளர்ந்தன! வளர்ந்துகொண்டும் இருக்கின்றன!

  அரசுத்துறையில், பொறுப்பற்ற தன்மை, ஊழல் இருப்பது உண்மையே என்றாலும், மெத்தனம் என்ற ஒரு வார்த்தைக்குள், அத்தனை காரணங்களையும் அடக்கி விட முடியாது.

  உதாரணமாக, இங்கே நான் ஏர்டெல் பிராட்பாண்ட் உபயோகிக்கிறேன்! எனக்கு இணையத் தொடர்பு கொடுக்க வந்த போது, எவரெவர் கவனிக்கப் பட்டார்கள் என்பதையும் பார்க்க முடிந்தது!

  மதுரையில் தொலைத் தொடர்பு ஊழியர்கள் மாவட்ட முதன்மை அதிகாரி சுப்பையா, ஒரு தனியார் நிறுவனத்துக்கு ஆதரவாக, பிஎஸ்என்எல் ஐ, முடக்கி வைத்திருக்கிறார் என்று பகிரங்கமாக ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்களை நடத்திய தமாஷுமே நடந்திருக்கிறது.

  அரசுத் தொலைக் காட்சி, தனியார் தொலைக் காட்சிகளை விட அதிகப் பார்வையாளர்களைக் கொண்டது, தரமான நிகழ்ச்சிகளுமே வருகின்றன என்றாலுமே கூட, தனியார் தொலைக் காட்சி சானல்கள், விலைக்கு வாங்க வேண்டியவர்களை விலைக்கு வாங்கியோ, அல்லது அதிகாரத்தைப் பயன்படுத்தியோ,அடக்கி வைத்திருக்கின்றன என்றால் உங்களால் நம்ப முடியுமா?

  இங்கே அமெரிக்க மாடல், பிரிட்டிஷ் மாடல்கள் எல்லாம் வெளிப் பூச்சுக்குத் தான்!

  ஊழல் தான் இங்கே பிரதானமான மாடல்!

  ReplyDelete
 14. அய்யா,

  தாங்கள் கூறியதை நூறு சதம் ஒத்துகொள்கிறேன்.
  ( http://consenttobenothing.blogspot.com/2009/09/blog-post_6855.html )

  இந்தியர்களுக்கு வேல வெட்டி பாக்கம கோடிகோடியா கொட்டனும்னு ஆசை.
  தனி மனித ஒழுக்கம் என்று வரும் ? -காத்திருப்போம்.

  ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!