சண்டேன்னா மூணு! புள்ளிராசா வங்கி! ஒபாமா! கூகிள்!ஒரு வருடத்துக்கு முன்னால் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த பாரக் ஒபாமா அமெரிக்க அதிபராகப் பதவி ஏற்றுக் கொண்ட போது , ஐயோ பாவமே என்று தான் பரிதாபப் படத் தோன்றியது! 

காரணம், அதற்கு முந்தைய எட்டு ஆண்டுகளில், ஜார்ஜ் புஷ் அமெரிக்கப் பொருளாதாரத்தைக் கொண்டுபோய் நிறுத்தியிருந்த இடம் அப்படி! ஜனநாயகக் கட்சி ஆட்சிக்கு வரும்போதெல்லாம், இந்தியாவுக்குக் குடைச்சல் அதிகமாகும், பாகிஸ்தானுக்குக் கொஞ்சம் அதிகமாகவே கொம்பு சீவப் படும் என்ற பழைய நிலை இன்னமும் இருக்கத் தான் செய்கிறது!

இந்த ஒரு ஆண்டில், அமெரிக்காவைத் தூக்கி நிறுத்திவிட முடியாது என்பது எல்லோருக்குமே தெரிந்தது தான்! ஆனாலும், நம்மூர் அரசியல் வாதிகளிடமிருந்து ஸ்பெஷல் ட்யூஷன் எடுத்துக் கொண்டார்களோ என்னவோ,  ரிபப்ளிகன் கட்சி கொஞ்சம் ஓவராகவே ஒபாமாவைச் சீண்டிக் கொண்டிருக்கிறது.

மருத்துவக் காப்பீடு எல்லோருக்கும் என்று ஒபமா அறிவித்ததில், எப்போதுமே வலதுசாரிகள் என்று சொல்லிக் கொள்வதில் பெருமிதம் அடைகிற அமெரிக்க மக்கள், ஒபாமாவை இடதுசாரி என்று நினைக்க ஆரம்பித்து விட்டது போல, ஆதரவு சதவீதம் கொஞ்சம் குறைந்து வருவதாக செய்திகள் சொல்கின்றன! இடது சாரி என்பது அமெரிக்காவில் ரொம்பவுமேகெட்ட வார்த்தை! 


அமெரிக்க நிறுவனங்கள் தங்களுடைய லாபத்தில் இரண்டு சதவீதம் வரை கட்சிகளுக்குத் தேர்தல் நிதியாக அளிக்கலாம் என்பதை அமெரிக்க உச்ச நீதிமன்றம் வழிமொழிந்திருப்பதைக் குறித்து, முந்தைய பதிவில் வாசகர் ஒருவர் கவலை தெரிவித்திருந்தார். இது பற்றிய செய்திக் கட்டுரை, பணம் என்பது பேச்சு சுதந்திரமாக முடியாது, கார்பரேஷன்கள் (பெரிய நிறுவனங்கள்)மக்களாகி முடியாது என்று அழுத்தம் திருத்தமாகச் சொல்வதைப் படிக்க.
oooOooo 

புள்ளிராசாவுக்குப் புள்ளி வருமா? நீண்ட நாட்களுக்கு முன்னால் இந்தியாவில் மிகப் பெரிய எய்ட்ஸ் விழிப்புணர்வு விளம்பர ஸ்லோகன் இது! எய்ட்ஸ் நோயை விட, அமெரிக்க வங்கிகளின் பேராசை மிக ஆபத்தானது, அவர்களோடு மட்டும் நின்றுவிடாமல், சுற்றியுள்ளவர்களையும் அழித்துவிடும் அளவுக்குப் பரந்துவிரிந்த நோயாக இருப்பதை, இந்தப் பக்கங்களில் கொஞ்சம் பார்த்திருக்கிறோம்!


தறிகெட்டுப்  பாய்ந்துகொண்டிருக்கும் மாட்டுக்கு மூக்கணாங்கயிறு கட்டுவது போல, பாரக் ஒபாமா சென்ற வியாழனன்று வங்கிகளைக் கட்டுப் படுத்த சில நெறி முறைகளாகச்  சட்டம் இயற்றப் போவதாக அறிவித்திருப்பது கொஞ்சம் அதிர்வுகளை உண்டாக்கி இருக்கிறது! 1929 இல் அமெரிக்கா சந்தித்த  நிதித்துறைச் சரிவிலிருந்து மீள்வதற்கு, பத்து ஆண்டுகளுக்கு மேலாயிற்று.

இப்போது ஓராண்டிலேயே, அதைவிடப் பெரிய சரிவில் இருந்து அரசு, வரிப்பணத்தின் உதவியோடு மீண்டு வந்து கொண்டிருக்கும் நிலையில் அமெரிக்க நிதித்துறை, மறுபடி கட்டை மீறிப் பழையபடிப் புகுந்து விளையாட ஆரம்பித்திருக்கிறது.

"உன்னை விட மாட்டேன்" என்று ஒபாமா அறிவித்திருக்கிறார். தேவையானால் சண்டைக்களத்தில் இறங்கவும் தயார் என்றும் சொல்லியிருக்கிறார்.  அமெரிக்க வங்கித் துறையும் ஒரு யுத்தத்திற்குத் தயாராகிக் கொண்டிருப்பது போலத் தான் தெரிகிறது. 
   சொரிபிடித்தவன் கை சும்மா இருக்காது எண்பது போல, பேராசைக் காரனும் சூதாடியும் சும்மா இருக்க முடியுமா என்ன?   

எண்பது  வருட இடைவெளிக்குள் நிகழ்ந்த இந்தப் பொருளாதாரச் சரிவுகளில், குறிப்பிடத் தகுந்த மாற்றம் என்னவென்றால், சாமானிய அமெரிக்க ஜனங்கள், இந்த முறை கைகட்டி வேடிக்கை பார்க்கவில்லை. ஜனங்களுடைய கோபம், கார்பரேட் கொள்ளைகளுக்கு, பேராசைக்கு எதிராக ஒரு இயக்கமாகவே நடந்து கொண்டிருக்கிறது.
"MOVE YOUR MONEY"  என்று, பெரிய வங்கிகளில் இருந்து பணத்தைச் சிறிய நடுத்தர உள்ளூர் வங்கிகளுக்கு மாற்றும் இயக்கமாக அங்கே சத்தமே இல்லாமல் ஒரு மாறுதல் நடந்து கொண்டிருப்பது, ஒபாமாவுக்குச் சாதகமாக இருக்கக்கூடும்! 

என்ன நடக்கும் என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்! நிச்சயமாக, நம்மூர் காங்கிரஸ்காரன் மாதிரி ஆறப்போட்டு, மறக்கடிக்க வைக்கிற டெக்னிக் அமெரிக்கர்களுக்கு இன்னமும் தெரியாது!


oooOooo  

கூகிள் -சீன த்வந்த யுத்தத்தில், வெளியே அதிகம் விவாதிக்கப் படாத விஷயங்கள் நிறைய இருக்கின்றன!


உலகம் முழுக்க கூகிள் நான் தான் நம்பர் ஒன் என்று மார்தட்டிக் கொண்டாலும், சீனாவைப்  பொறுத்தவரை  கூகிள் இரண்டாவது இடத்தில் தான் இருந்துவருகிறது. உள்ளூர்த் தயாரிப்பான பைடூ டாட் காம் தான் அங்கே நம்பர் ஒன் தேடுபொறி!  தினசரி முப்பது கோடி வருகைகள், தேடுபொறி உபயோகத்தில், வருமானத்தில்  அறுபத்து மூன்று சதவீதத்தைக் கையில் வைத்துக் கொண்டு நம்பர் ஒன் இடத்தில் இருக்கிறது! கூகிள் ஆண்டவர், அங்கே வெறும்  முப்பத்து மூன்று சதவீதம் தான் உபயோகத்தில் உள்ளார்! முதலிடத்தைப் பிடிக்க முடியாது என்ற ஒரு விஷயமே கூட, சீனாவை விட்டு வெளியேறிவிடலாம் என்ற கூகுளின் முடிவுக்கு ஒரு காரணமாக இருக்கலாம் என்றும் iResearch என்கிற சீன ஆராய்ச்சி நிறுவனம்  சொல்கிறது!


பீகிங் பல்கலைக் கழகத்தில் படித்துவிட்டுப் பிறகு, நியூ யார்க் மாகாணப் பல்கலைக் கழகத்தில் படிக்க வந்த ராபின் லீ என்ற 41 வயது  இளைஞர் தாயகம் திரும்பியவுடன் இன்னொரு நண்பருடன் சேர்ந்து துவக்கிய பைடூ உள்ளூர் மக்களுடைய ரசனைக்குத் தீனி போடுவதில் தன்னுடைய தனித்தன்மையை நிலை நாட்டிக் கொண்டது. பாட்டு, பொழுதுபோக்கு என்று அலைந்த சீன இளைஞர்களுக்கு பைடூ நல்ல தளமாக இருந்ததில் வியப்பொன்றுமில்லை!

தகவல்களைத் தேடத் தேடு போறியா,அல்லது பொழுதுபோக்கத்
தேடு போறியா என்ற கேள்வியில், பொழுதுபோக்கு முதலிடம் பெற்றதில் ஆச்சரியமென்ன இருக்கிறது!


தவிர சீன அரசின் மனோபாவத்தைப் புரிந்துகொள்வதில் கூகுளுக்கு இயல்பாகவே ஒரு தடியன்கள் இருந்து வந்ததையும் பார்க்க வேண்டும்! Don't be evil என்ற முழக்கத்தோடு புறப்பட்ட கூகிள் சீனாவில், முழக்கத்தைத் தொண்டைக்குழிக்குக் கீழேயே  வைத்துக் கொண்டு செயல் படத் தயாராக இருந்தாலும் அவ்வப்போது உரசல்கள் வந்துகொண்டுதான் இருந்தன! வெளியேறவும் தயார் என்று வீரப் பிரதாபமாக முழங்கி இரண்டு நாட்களிலேயே, அப்படி ஒரு எண்ணம் இல்லை என்று அறிவிக்க வேண்டிய நிலையும் வந்தது.கூகுளின் அறிவிப்பைச் சீன அரசு நேரடியாகத் தொட்டு எதையுமே கண்டு கொள்ளவில்லை.

ஹில்லாரி கிளிண்டன் இணைய நடைமுறைகளைப் பற்றி உபதேசம் செய்ய முற்பட்ட போது, பாடம் கேட்டுக் கொள்வதற்கெல்லாம்  அவசியமே இல்லை என்று அமெரிக்கத் திமிருக்கு ஒருபங்கு கூடுதலாகவே சீனஅரசு பதில் சொல்லவும் தவறவில்லை!

கூகிள் என்று மட்டுமில்லை, சீனாவின் சந்தையைப் பிடிக்கும் கனவுகளோடு உள்ளே நுழைந்த அமெரிக்க கம்பனிகள் அத்தனையுமே இந்த இடியாப்பச் சிக்கலில் மாட்டிக் கொண்டு விழிப்பது இன்னொரு வேடிக்கை! 


சீனர்களைப் பொறுத்தவரை, நவீனத் தொழில் நுட்பம், செய்முறைகளை, ஆராய்ச்சியோ, செலவோ இல்லாமல் காப்பியடித்து, ஒரிஜினலைத் துரத்துகிற கலை நன்றாகவே கை வருகிறது! ஆராய்ச்சி புண்ணாக்கு என்று ஏகப்பட்ட செலவை செய்து விட்டு, அதை வைத்து ஒன்றுக்குஆயிரமாக  கொள்ளை லாபம் பார்க்கலாம் என்று வந்தவர்கள், சீன டிராகனின் சாமர்த்தியத்துக்கு முன் ஈடு கொடுக்க முடியாமல் தடுமாறுவதைப் பார்க்கும்போது, வினோதமான வேடிக்கையாகத் தான் இருக்கிறது!


WTO, GATT, INTELLECTUAL PROPERTY RIGHTS, MONOPOLY, TECHNOLOGY AS NEW FORM OF CAPITAL இப்படி அமெரிக்கா சமீபத்திய காலங்களில் உலகையே ஆட்டிப் படைத்தது எல்லாம், வெறும் கேலிக் கூத்தாகவே இருக்கிறது!  அவனை இவனுக்கு எதிராகத் தூண்டிவிட்டு, அப்புறம் இவனைக் கொஞ்சம் தடவிக் கொடுத்து விட்டு வேறொருவனுக்கு எதிராகத் தூண்டிவிட்டு, ரஷ்யாவைச் சிதறு தேங்காய் போலச் சிதற  விட்ட சாமர்த்தியம், ஆப்பில் சிக்குண்ட குரங்கு கதையாக சீனாவில் ஆகிப் போனதைப் பார்க்கும்போது----

சீனப் பெருமிதம் அல்லது சீனப் பூச்சாண்டி, வெற்று உதார் விடுவதில் நிறையவே இருக்கிறது என்றாலும், அவர்களுடைய சாமர்த்தியத்தை வியக்காமல் இருக்கவும் முடியவில்லை! 


உதார் விடுவதை ஒரு பெரும் கலையாகவே சீனர்கள் வளர்த்து வைத்திருப்பதும் புரிகிறது! 

கொஞ்சம் சரக்கு இருப்பதும்தெரிகிறது! 


6 comments:

 1. தலை சுற்றுகிறது...
  ஒபாமா ஏதோ ஒப்பெத்தறா மாதிரி தெரியுது...
  கூகிள் சீனாவை விட்டு வெளியேறும் முடிவு வாபஸ் பெறப் பட்டு விட்டது என்றார்களே...

  ReplyDelete
 2. /வெளியேறவும் தயார் என்று வீரப் பிரதாபமாக முழங்கி இரண்டு நாட்களிலேயே, அப்படி ஒரு எண்ணம் இல்லை என்று அறிவிக்க வேண்டிய நிலையும் வந்தது/

  என்று சொன்னேனே!

  கூகிள்ஒருவிதமாகப் பிரச்சினையில் சிக்கியது என்றால், மைக்ரோசாப்ட் இன்னொரு விதத்தில், இன்டர்நெட் எக்ஸ்ப்லோரரில் இருக்கும் கோளாறு தான் பிரச்சினைக்குக் காரணம் என்று சிக்கியிருக்கிறது.

  தொழில் ரீதியாகவும், அமெரிக்க நிறுவனங்கள், சீனாவின் அப்பட்டமான தொழில்நுட்பத் திருட்டு அல்லது காப்பியடிப்பதில் அடிமேல் அடிவாங்கிக் கொண்டிருக்கின்றன.

  ReplyDelete
 3. You can follow any blog without the followers widget. I have removed many links/widgets as they cause heavy delay in page loading.

  ReplyDelete
 4. //சீனப் பெருமிதம் அல்லது சீனப் பூச்சாண்டி, வெற்று உதார் விடுவதில் நிறையவே இருக்கிறது என்றாலும், அவர்களுடைய சாமர்த்தியத்தை வியக்காமல் இருக்கவும் முடியவில்லை! //

  சீனர்களுக்கு காப்பியடிக்கும் திறமை கன்னாபின்னாவென்று உள்ளது, இது அனைவருக்குமே தெரிந்தது தான். ஆனால் இதை பார்த்து வியப்பதா?? சோக்கா திருடுரான்யா, சூப்பரா கொல்லோ அடிக்கிரான்யா என்று நீங்கள் யாரையாவது பார்த்து சொல்லி இருக்கிறீர்களா?? நாளைக்கு இந்தியர்கள் நாம் எதையாவது கண்டுபிடித்து காப்புரிமை வாங்கியிருந்தாலும் அஹ்டை மதிக்காமல் காப்பியடித்து உள்ளூர் சந்தையில் விற்று காசு பார்பார்கள் இந்த புத்திசாலி காட்டுமிராண்டிகள். ( அது சரி, நாம் தான் எதையுமே கண்டுபிடிப்பதில்லையே என்று நம்மையே நக்கல் செய்பவர்களுக்கு - பிரணவ் என்பவற்றின் sixth sense என்ற கண்டுபிடிப்பை பாருங்கள்)

  தயவு சித்து மருந்துக்கு கூட சீனர்களை பார்த்து பாராட்டாதீர்கள்.

  ReplyDelete
 5. சீனர்களை வியப்பது நிச்சயமாக அவர்களுடைய "திருடும்" திறமைக்காக இல்லை! ஒரு பயங்கரக் கொள்ளைக் காரனுக்குப் பெப்பே காட்டும் வித்தைக்காக மட்டுமே!

  சீனர்கள் மட்டுமில்லை, கிழக்கத்திய மக்களுக்கு ஒரு அடிப்படைப் பண்பு இருக்கிறது, ஒரு அரசன் அல்லது ஒரு தலைவனுக்குப் பணிந்து நடப்பது! முன்னோர்களுக்கு மரியாதை, முதல் கீழ்ப்படிதல் உள்ளிட்டு நிறைய நல்ல குணங்களைச் சொல்லலாம்.

  எதிரியாகவே இருந்தாலுமே கூட, எதிரியிடம் இருக்கும் திறமை, வலிமையைப் புரிந்துகொள்வதும் வியந்து பாராட்ட முடிவதும், தவறு என்று எனக்குத் தோன்றவில்லை!

  காப்புரிமை, கண்டுபிடிப்புக்களைப் பற்றிப் பேசியிருக்கிறீர்கள். நல்லது, அதன் பெயரில் ஏகபோகமாகக் கொள்ளையடிப்பது என்பது மட்டும் சரியாக இருக்குமா?

  ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!