சண்டேன்னா மூணு! செய்திகளும், சிந்தனையும்!

குற்றமும் தண்டனையும்!


ஒன்றை ஒன்று தொடர்ந்து  வருவது  என்று தானே நினைக்கிறீர்கள்? அதெல்லாம், சின்ன அளவில், கூட்டணி வைத்துக் கொள்ளாமல், கூட்டணி தர்மம் என்பது பெட்டிகளால் அளக்கப் படுவது. ஸ்பெக்ட்ரம் இத்தியாதி மாதிரி    வானம் வரை உயர்ந்து நிற்பது என்றில்லாத போது மட்டும் தான்!

குற்றமும் தண்டனையும் என்ற ரஷ்ய நாவலைப் படித்து முடித்த பிறகு. ஆர் எல் ஸ்டீவன்சன் என்ற ஆங்கில எழுத்தாளர் சொன்னாராம்:" நான் சொல்லக் கூடியதெல்லாம் இது தான்! இது (கதை) ஏறத்தாழ என்னை முடித்து விட்டது. ஒரு பெரிய நோய்க்கு ஆட்பட்டிருந்த மாதிரி இருந்தது."

செய்திகளைப் படிக்கும் போது, என்ன மாதிரியான சமூகச் சூழலில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று பார்க்கும் போது ஸ்டீவன்சன்  சொன்ன இந்த விமரிசனம் தான் நினைவுக்கு வந்து நிற்கிறது.

அரசியல்வாதிகளுக்கு மட்டுமென்று இல்லை, இப்போது உயர்ந்த தொழில் தர்மம் என்று எங்கேயுமில்லை.

மருத்துவரை வைத்யோ நாராயணோ ஹரி: என்று தெய்வமாகவே கொண்டாடின நாட்டில்,  மருத்துவர்கள் தொழில் தர்மமாகக் குறைந்த பட்ச நடத்தை விதிகள் உண்டு! நடைமுறைப் படுத்துவதற்கு  ஒரு அமைப்பும் உண்டு! ஆனால், தொழில் தர்மங்கள் காற்றில் பறக்க விடப்படும்போது, என்ன தண்டனை என்பதைத் தெளிவாகச்  சொல்லப் படாததால், நடத்தை நெறிமுறைகள் வெறும் காகிதமாகவும்,  அர்த்தமில்லாததாகவும், குப்பைகளாகவுமே ஆகிக் கொண்டிருக்கின்றன. இந்தச் செய்தியைப் படித்துப் பாருங்கள்! 

எனக்குத் தெரிந்த மருத்துவர் ஒருவர்! மருத்துவப் பிரதிநிதிகள் கொடுக்கிற சாம்பிள் மருந்துகளைத் தன்னிடம் வருகிற நோயாளிகளுக்குக் கொடுத்துத் தான் தொழில் நடத்தவேண்டிய அளவுக்கு, பரிதாபமான ப்ராக்டீஸ் அவருடையது! யாராவது ஒரு கம்பனிப் பிரதிநிதி வரத்தவறினாலோ, சாம்பிள் மருந்துகளைக் கொடுக்காவிட்டாலோ, உடனடியாக அந்த குறிப்பிட்ட கம்பனிக்கு புகார் எழுதுவதே அவர் செய்து கொண்டிருந்த ப்ராக்டீஸ்!

இது ஒரு விளிம்பு நிலை என்றால், ஒவ்வொரு சீசனுக்கும்  ஒரு குறிப்பிட்ட கம்பனி மருந்தை, தேவை இருக்கிறதோ இல்லையோ, அல்லது தேவைக்கு அதிகமாகவே ப்ரிஸ்க்ரிப்ஷன் எழுதி, அந்த வகையிலும் மருந்து தயாரிக்கும் நிறுவனங்களுடைய அபிமானத்துக்குரிய ஸ்பான்சர்களாக, அதற்குத் தகுந்த சன்மானம் பெறுபவர்களாகவும் இருப்பது ஏற்கெனெவே தெரிந்த செய்திதான் என்றாலும், இப்போது  இது செய்தியாக விமரிசனமாக வருவதற்குக் காரணம், ஒரு மாதத்திற்கு முன் அறிவிக்கப் பட்ட ஒரு விஷயம் தான்!


மருத்துவர்கள் தானாகவே முன்வந்து ஏற்றுக் கொள்கிற நடத்தை விதிகள்!  ஒரு குறிப்பிட்ட மருந்தை, அல்லது மருந்து தயாரிக்கும் நிறுவனங்களை, அவர்கள் கொடுக்கும் ஊட்டச் சத்துக்காக ஆதரிக்கும் போக்கைத் தடுப்பதற்காக வடிவமைக்கப் பட்டது! மீறினால் என்ன தண்டனை என்பது தெளிவாகச் சொல்லப் படாதபோது, இந்த நடத்தை விதிகளால் எந்தப் பயனுமிருக்காது என்று AIIMS புது தில்லியில், கார்டியாலஜி துறைத்தலைவராகப் பணியாற்றியவரும், இந்திய  பப்ளிக் ஹெல்த்  ஃபௌண்டேஷன் தலைவருமான டாக்டர் கே.ஸ்ரீநாத் ரெட்டி கவலைப் படுகிறார்.

அமெரிக்காவில் இருக்கும் சில நல்ல நடைமுறைகளைப் பின்பற்றுவதில் தவறு ஒன்றும் இல்லை தான்! கற்றுக் கொள்வதற்குத் திசையோ, துறையோ எதுவுமே தடை இல்லை தான்! ஆனால், நம்முடைய அமைப்பில் இருக்கும் அடிப்படைக் கோளாறுகளை நீக்காமல், காப்பி அடிப்பது, இன்னும் கொஞ்சம் கோளாறுகளை அதிகப் படுத்திவிடுமே!

ஸ்டீவன்சன் சொன்னதை இப்போது மறுபடி பாருங்கள்!

" நான் சொல்லக் கூடியதெல்லாம் இது தான்! இது (செய்தி) ஏறத்தாழ என்னை முடித்து விட்டது. ஒரு பெரிய நோய்க்கு ஆட்பட்டிருந்த மாதிரி இருந்தது."

அதே மாதிரி, சட்டத்துறையும், நீதி மன்ற அமைப்புக்களும்! வக்கீல்களுக்கும் நடத்தை விதிகள் உண்டு, அதைக் கண்காணிக்க ஒரு அமைப்பும் உண்டு. ஆனால் சட்டம் படித்தவர்கள் எப்போதுமே தங்களை, சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்களாகவும், தாங்கள் சொல்வது மட்டுமே சட்டம் என்று நினைத்துக் கொண்டிருப்பதை, சமீபத்தில் நடந்து கொண்டிருக்கும் சம்பவங்கள் சொல்கின்றன. ஊழல் செய்திருக்கிறார் என்று அடிப்படை ஆதாரங்கள்  prima facie சுட்டிக் காட்டின  பிறகுமே கூட, அப்படிப்பட்ட ஒருவருக்காக சாதி அடிப்படையில் ஆதரவுக் குரல்கள் அணி திரட்டப் படுவதைப் பார்க்கும் போது,    சட்டம் என்பது ஒரு இருட்டறை, அது வழக்கறிஞர்களுடைய வாதங்கள் விளக்கு மாதிரி என்ற வசனத்தை நினைத்துப் பார்க்கையில் கொஞ்சம் சிரிக்கத் தான் வேண்டியிருக்கிறது..

சட்டம் படிப்பதே மீறுவதற்காகத் தானே! அப்புறம் நடத்தை, விதிகள் எங்கிருந்து வரும்?

ராதோர் !  ஒரு காவல் துறை அதிகாரி! முன்னாள் டி ஜி பி!காவல் யாருக்கு, ஏவல் செய்தது யார் யாருக்கு என்ற கேள்விக்கு உண்மையாகவே விடை காண முடிந்தால், ஒரு ருசிகா மட்டுமல்ல, இன்னும் ஏராளமான அப்பாவி மக்களுக்கு நியாயம் கிடைக்கும்!

ஆனால், நம்முடைய அமைப்பில் இருக்கும் கோளாறு...! விசாரணை நடத்த வந்த உயர் அதிகாரியான தன்னையே மிரட்டினார், அம்பாலா பகுதியில் ஏதோ ஒரு சேரிப் பகுதி மக்களைத்  தூண்டி விட்டு ஆர்ப்பாட்டங்களைத் தனக்கெதிராகத் தூண்டி விட்டார் என்று டி ஜி பி ஆர் ஆர் சிங் பகிரங்கமாகவே சொல்லியிருக்கிறார்!


அத்தனைக்குப்  பிறகும் குற்றம் சாட்டப் பட்டவரை இந்த வீடியோவில் பாருங்கள்! 

புன்னகை மன்னன்! என்னமாய்ச் சிரித்துக் கொண்டு, எந்தக் கவலையுமே இல்லாமல் உலா வருகிறார்! பெரிய இடத்து சம்பந்தம் எவ்வளவு வலுவாக இருந்திருக்க வேண்டும் என்பதை யோசித்துப்பாருங்கள்!

கம்யூனிஸ்டாக இருந்து, அதன் மாயையில் இருந்து விலகி ஜார்ஜ் ஆர்வெல் எழுதிய கதை மாதிரி, ஆனால் கம்யூனிச ஆட்சியின் அவலங்களைப் படம் பிடித்துக் காட்டிய எழுத்துக்களில், விலங்குப் பண்ணை (The Animal Farm) புதினத்தில் வரும் பன்ச் லைன், கம்யூனிச தத்துவம் பேசிக் கொண்டே எப்படி இருப்பார்கள் என்பதைச் சொல்லும் ஒன் லைன் தீம் இது!

 அரசியல்வாதிகள் என்றாலே எந்த முத்திரை குத்திக் கொண்டாலுமே இப்படித் தான் இருப்பார்கள்.


"All pigs are equal. Some pigs are more equal than others!"

மாதிரி நடத்தை விதிகளில் சொல்லியிருந்ததை வைத்தே தேர்தல் சமயத்தில் குடைச்சல் கொடுத்துக் கொண்டிருந்த, இந்த நடத்தை விதிகளில் கூட உருப்படியாக எதையோ செய்து விடலாம் என்ற மயக்கத்தை உண்டாக்கினவர் அன்றைய தலைமைத் தேர்தல் அதிகாரியாக இருந்த திரு. டி  என். சேஷன்!  காங்கிரஸ் கட்சிக்குப் பொறுக்குமா? எல்லா மரபுகளையும், நன்னடத்தைகளையும் கொள்கைகளையும், அரசியல் நாகரீகத்தையுமே சொந்த, குறுகிய அரசியல் ஆதாயங்களுக்காக நீர்த்துப் போகச் செய்ததிலும், ஒன்று படுத்துகிறேன் என்ற கோஷத்தில், மேலும் மேலும் பிளவை அதிகப் படுத்திக் கொண்டிருக்கிற காங்கிரஸ் கட்சி என்ன செய்தது என்பது தெரிந்தவிஷயம்!

கம்யூனிசம் அது இது என்று வெட்டியாய்ப் பேசிக் கொண்டிருக்காமல், நேரடியாகவே அந்த ஒன் லைன் தீமைச் செயல் படுத்திக் கொண்டிருக்கும் அரசியல்வியாதியைச் சரி செய்யாமல், மற்ற எதையுமே சரி செய்ய முடியாது!


மூணு விஷயம் ஆச்சா!  இது கொஞ்சம் வித்தியாசமாக, த்ரீ இன் ஒன் பதிவு!

******
புது வருடத்தில், இன்னுமொரு புது முயற்சி!


படித்த, பிடித்த விஷயங்களைப் பேசுவதற்காகவே தனியாக ஒரு வலைப் பதிவை ஆரம்பித்தாயிற்று! 

 புத்தகங்கள் என்று மட்டுமில்லை, மனித வளம் குறித்த அத்தனை விஷயங்களையும் பேசுவதற்கான, பகிர்ந்து கொள்வதற்கான  முயற்சியாக இங்கே!




நினைவுபடுத்திக் கொள்வதற்காக, நாமும் பங்கு கொள்ள, என்ன நடக்கிறது இணையத்தில் என்பதைத் தெரிந்து கொள்ள!

நல்லெண்ணங்களை விதைத்தல்! கொரியாவில் வளர்ந்து வரும் சொன்ஃபில் இயக்கம்!  Sunfull!

இங்கேயும் வளர வேண்டியதன் அவசியத்தைப் புரிந்துகொள்ளவும் அங்கே கொரியாவில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ளவும் இங்கே!



..

5 comments:

  1. ஐயா வணக்கம்,தலைப்ப பாத்துட்டு "ஏதோ கிளுகிளுப்பான மேட்டேர்ன்னு" உள்ள வந்தேன், சூப்பர் ,சமூக அக்கறையுள்ள பதிவு.வாழ்த்துகள்..

    ReplyDelete
  2. ரதோர் நாயை டீவியில் பார்க்கும்போதெல்லாம் கல்லால அடிச்சு கொல்லனும்போல தோனுது. 6 மாசம் தண்டனைன்னு சொல்றது இந்திய அரசியல் சட்டத்தையே கேவலப்படுத்துற மாதிரி இருக்கு. இதில் அடுத்த நொடியே ஜாமீனில் வெளிவந்தது இன்னும் நல்லா வயிறெரிங்கடான்னு அந்த ராட்சசன் சொல்றமாதிரி இருக்கு.

    ReplyDelete
  3. வாங்க ஜெரி!
    தலைப்புல குற்றமும் தண்டனையும்னு தானே இருக்கு! இப்பல்லாம் குற்றமும் தண்டனையுமே கூடக் கிளு கிளுப்பான சமாச்சாரமா ஆயிடுச்சா என்ன :-))

    நவாஸுதீன்!
    இதில் பெரும் கொடுமை, பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர்கள் இத்தனை ஆண்டுகளாகப் போராடியதை எவருமே கவனிக்கவில்லை. ஊடகங்களுக்குத் திடீர் சமூகப்பிரக்ஞை வந்து எழுதிக் கிழிக்க ஆரம்பித்த பிறகு, வேறு வழியே இல்லாமல் நடவடிக்கைகள் தொடங்குகின்றன. உள்துறை மந்திரி ருசிகாவின் பெற்றோர்களைச் சந்திக்கிறார்.

    இப்போதிருக்கும் சட்டம், நீதிமன்ற முறைகளில் இருக்கும் ஓட்டைகளைப் பயன்படுத்தி ராதோர் தண்டனையில் இருந்து தப்பி விடக்கூட முடியும்!

    ReplyDelete
  4. தலைமைத் தேர்தல் அதிகாரியாக இருந்த திருடி என் சேஷன்"//

    ஒரு ஸ்பேஸ் விடவில்லை என்றால் எப்படி அர்த்தமே மாறுது பாருங்க....உண்மை...மனதைத் திருடிய சேஷன்தான் ....!
    நல்ல பதி(கிர்)வு.

    ReplyDelete
  5. ஸ்ரீராம்! நன்றாக proof திருத்துகிறீர்கள்!
    மிகவும் நன்றி. நான் வேறு விதமான பிரச்சினைகளைச் சந்தித்துக் கொண்டிருக்கிறேன். google indic இல் தட்டச்சு செய்து விட்டு, அதை ப்ளாக்கரில் பதிவிடும்போது, எழுத்து சைஸ் வேறுவிதமாக மாறி அவ்வப்போது சோதனை செய்யும். அந்த மாதிரி நேரங்களில் எழுத்துப் பிழை வந்து விடும்! அப்புறம், ஒவ்வொன்றாக நானே பார்த்து, திருத்திக் கொண்டிருப்பேன்.

    இதயத்தைத் திருடிய சேஷன், அப்புறம் காமெடியனாக ஆகிப் போனார் என்பது தனிக் கதை! இந்த மனிதன் செய்து காட்டிய ஒரு நல்ல விஷயம், வானளாவிய அதிகாரங்கள் இருந்தால் தான், செயல்பட முடியும் என்பதில்லை, இருப்பதை வைத்துக் கொண்டு கூட, இப்போதிருப்பதைவிட, நன்றாகச் செயல்பட முடியும் என்று காட்டியது தான்! அரசியல் அதையும் நீர்த்துப் போகச் செய்து விடுகிறது!

    அந்த ஒன் லைன் தீமை இல்லாதபடிக்குப் பண்ணுங்கள்! டி என் சேஷன் இதயத்தை எல்லாம் திருட வேண்டாம்!

    ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!