எழுத்தும் விமரிசனமும் ! சந்தோஷத்திற்குக் குறுக்கு வழி உண்டா என்ன?

 
இன்று காலை, செய்தி சானல்களை மாற்ற முயற்சித்துக் கொண்டிருக்கையில் இடையில், ஸ்டார் மூவீஸ் வந்து போனது. சந்தோஷத்திற்கான குறுக்குவழி Shortcut to Happiness ஓடிக் கொண்டிருந்தது. ஏற்கெனெவே இதை ஸ்டார் மூவீஸ் சானலிலேயே  மூன்று நான்கு தரம் பார்த்தது தான்!

என்றாலும், சுவாசிக்கப் போறேங்க வலைப்பக்கங்களில், வாசிப்பு அனுபவங்களை வைத்து எது நல்ல எழுத்து என்று மூன்று நான்கு பதிவுகளை எழுதியதன் தொடர்ச்சியாக இந்தத் திரைப்படம், ஒரு புதிய பார்வையில்,பார்க்கத் தூண்டியது என்றே சொல்லவேண்டும்!

அல்லது ஏற்கெனெவே, ஆழ்மனதில், இந்தப் படத்தை முதன் முதலில் பார்த்தபோதே தங்கிவிட்டதாகக்  கூட இருக்கலாம்! எப்படியிருந்தாலும், இங்கே தமிழ் எழுத்துலகத்தில் இப்போது நடந்து வரும் சில போக்குகளுக்கு, இந்தத் திரைப்படம், ஒரு அழகான அடித்தளம், தொடர்பு இருப்பதை எடுத்துக்காட்டுகிறது.

Faust, Faustus என்ற லத்தீன் வார்த்தைக்கு அதிர்ஷ்டம் என்று பெயர். இதையே ஜெர்மானிய மொழியில் சொல்லும்போது fist,  அதாவது கைவிரல்களை மடக்கிக் காட்டுகிற முஷ்டி, இது ஜெர்மானிய நாடோடி இலக்கியங்களில் சாத்தானோடு செய்து கொள்ளும் ஒப்பந்தத்தைக் குறிப்பதாகவும் இருக்கிறது! இந்த ஜெர்மானிய நாடோடி இலக்கியக் கதை அடிப்படையை வைத்து வாஷிங்டன் இர்விங்  என்பவர் எழுதிய கதைத் தொகுப்பில்(1824) இருந்து சாத்தானும் டாம் வாக்கரும் என்ற கதையை,  தன்னுடைய பாணியில் திரும்பச் சொல்கிற விதமாக சாத்தானும் டேனியல்வெப்ஸ்டெரும்  என்ற  தலைப்பில் 1937 வாக்கில் ஸ்டீபன் வின்சென்ட் பெனெட்  என்ற கதாசிரியர் எழுதினார். எழுத்தாளர்  ஒ ஹென்றி பெயரிலான விருதையும் இந்தக் கதை 1938 ஆண்டு பெற்றது.

1941 இலும், அப்புறம் 2007 இலும் திரைப்படமாக வந்த இந்தக் கதை என்ன தான் சொல்கிறது? 2007 வடிவத்தைப்  பார்ப்போம்! இதில் 1941 வடிவத்தைப் போல அல்லாமல், சாத்தான் ஒரு அழகான பெண்ணாக வருகிறது என்பதற்காக மட்டுமல்ல! முந்தைய வடிவத்தைப் பார்க்கும் வாய்ப்பு எனக்குக் கிடைக்கவில்லை, நம்ப முடிந்தால்நம்புங்கள்!

ஜாபெஸ் ஸ்டோன், ஒரு பிரபலமாகாத எழுத்தாளர். அவருடைய எழுத்துக்களை பதிப்பகங்களுக்கும்,  இலக்கியத் தரகர்களுக்கும் அனுப்பிவிட்டுக் காத்திருக்கிறார். வாய்ப்பு வருகிற மாதிரித் தெரியவில்லை. ஒரு நாள், வெறுத்துப்போய்,  தன்னுடைய எழுத்துக்களை சேர்த்து வைத்திருக்கும் லேப்டாப்பை ஜன்னல் வழியாக வீசி எறிகிறார். அது வீதியில் நடந்துபோய்க் கொண்டிருக்கும் ஒரு பெண்ணின் தலைமீது விழுந்து, அந்தப் பெண் உயிரிழக்கிறார்.

சந்தர்ப்பம் கிடைத்தவுடன், சாத்தான், ஒரு அழகிய பெண்ணாக உள்ளே நுழைகிறது! வெறுப்பு, குற்றவுணர்வுடன் தவிக்கும் எழுத்தாளனோடு,பேரம் ஆரம்பிக்கிறது. நாம் இருவரும்  கூட்டு சேர்ந்து கொண்டால் புகழ், பணம் எல்லாம் கிடைக்கும் என்று ஆசை காட்டுகிறாள் அந்த அழகான ராட்சசி! பதிலுக்கு உன்னுடைய ஆத்மாவை எனக்கு விற்றுவிடு என்கிறாள்.

கதாநாயகன் ஒத்துக் கொள்கிறான். கீழே லேப்டாப் விழுந்து தலையில் அடிபட்டு இறந்த பெண்மணி உட்பட, சிக்கல்கள், வேறு விதமாக மாறி, கதாசிரியனைத் தேடி, இது வரை அவன் பார்த்திருக்காத அங்கீகாரம், புகழ் பணம் எல்லாமே கிடைக்கிறது. அந்த அழகான ராட்சசி, அவனோடு சல்லாபித்துக் கொண்டே, வாக்களித்தபடி எல்லாவற்றையும் தந்தாலும், ஜாபெஸ் ஸ்டோன் ஒரு வெறுமையை உணர்கிறார். தான் எதிர்பார்த்தது இது இல்லை, இதிலிருந்து விடுபட்டால் தேவலை என்று தவிக்கிறார்!


தான் முன்னால் சந்திக்கத் தவமிருந்த ஒரு பதிப்பாளரைச் சந்தித்து, தனக்கு உதவும்படி வேண்டுகிறார்.

வழக்கு ஆரம்பிக்கிறது! உண்மையிலேயே ஒரு நீதிமன்ற விசாரணை மாதிரித் தான் களம் விரிகிறது.


கதாநாயகன் தரப்பில், டேனியல் வெப்ஸ்டர் வழக்கறிஞராகவும், சாத்தான் அழகிய பெண்வடிவத்தில் எதிர்த்தரப்பு வழக்கறிஞராகவும்  வழக்கு நடக்கிறது. ஜாபெஸ் ஸ்டோன் தன்னிடம் ஒப்புக் கொண்டபடி ஆத்மாவைத் தர மறுத்து மோசடி செய்ததாக சாத்தான் குற்றம் சாட்ட, பதிலுக்கு டேனியல் வெப்ஸ்டர் வாதங்கள் என்று கதை மிகவும் சுவாரசியமான தளத்தில் விரிகிறது!

அந்தோணி ஹாப்கின்ஸ், பதிப்பாளர், கதாநாயகனின் வழக்கறிஞரான  டேனியல் வெப்ஸ்டராகவும், அலெக் பால்ட்வின்  கதாநாயகன் ஜாபெஸ் ஸ்டோன் ஆகவும், ஜெனிஃபர் லவ் ஹெவிட் . அழகான சாத்தானாகவும் நடித்திருக்கும் இந்தத் திரைப்படம், ஒரு எழுத்தாளன் ஏங்குவது எதற்காகவெல்லாம் என்பதை அழகாகப் படம் பிடித்துக் காட்டுகிறது. நல்ல எழுத்தாளனாக வரஆசையில் முனைகிறவன்,  திசை மாறிப்போய் புகழ், பணம், அங்கீகாரம் என்பது போதையாகிக் கடைசியில் தன்னுடைய ஆத்மாவையே இழந்து நிற்கிற அவலத்தைத் தொட்டுச் சொல்கிறது.

சமீபத்தில் நான் பார்த்த திரைப்படங்களில், மிக வித்தியாசமான அணுகுமுறை, வழக்கு, வாதங்கள் என்று சுவாரசியமான திரைக்கதை இது! தியேட்டர்களைப் பார்க்காத படம் என்று சொல்கிறார்கள்! ஸ்டார் மூவீஸ் சானலில் இந்த நான்கு அல்லது ஐந்து மாதங்களில்,  குறைந்தது நான்கு முறையாவது போட்டிருப்பார்கள்! இன்னும் ஒரு பத்துத் தரமாவது போடுவார்கள் என்று தான் நினைக்கிறேன்! பார்க்க முடிந்தால்பாருங்கள்!
எப்படியிருந்த தமிழ்க் கதை உலகம் என்று தன்னுடைய ஆதங்கத்தைப் பேசியிருந்த பதிவு இது. "கதை படிக்கிறோம்' என்ற எண்ணத்தையே மறக்கச் செய்த எழுத்தாளர்கள் வலம் வந்த காலம் அது; எழுத்தாளனுக்கும் எழுத்தை நேசித்த வாசகனுக்கும் பொற்காலம் அது! இப்பொழுது எழுத்தாளனுக்குப் பெயர், கதைசொல்லியாம்!"

பூவனம் வலைப் பதிவில் சென்ற ஆகஸ்ட் மாதம், எழுத்தாளர் ஜீவி விமரிசனக் கலையும், கதையின் கதையும் என்ற பதிவில் எழுத்தாளனைக் கதைசொல்லி என்று அழைக்கிறார்களே என்று ரொம்பவுமே ஆதங்கப்பட்டு எழுதியிருந்தார். அவருடைய ஆதங்கத்தைப் புரிந்து கொண்டு 'இதுவும் கடந்துபோகும்!' என்று சொன்னேன். அவருக்கு மனது ஆறவில்லை. ""காலங்கள் மாறும்"--இது சயின்ஸ் விதிதான்! இருந்தாலும் இப்பொழுதும் ராமராஜ்யத்தைப் பற்றி சொல்லிக் கொண்டிருக்கிறோம், இல்லையா?"

அப்போது கொஞ்சம் பற்றற்ற நிலையில் இருந்து பதில் எழுதுவதாக நினைத்துக் கொண்டு எழுதியது இது!

"காலங்கள் மாறும் என்ற முழுமையான மாற்றத்தைச் சொல்வதில்லை இது-just a passing phase or passing cloud ஒரு நிலையில் இருந்து இன்னொரு திசைக்கு நகருகிற மாற்றத்தின் இடைப்பட்ட பகுதியாகப் பாருங்களேன்!

எந்தக் காலத்திலுமே கூட கலைஞனை, தகுதிக்குமேல் தூக்கி வைத்துக் கொண்டாடினதும் உண்டு, கண்டுகொள்ளாமல் விட்டதும் உண்டு.ஜனங்கள் வெற்று ஆரவாரங்களில், ஒரு கலைஞனைத் தூக்கி நிறுத்தினார்கள், மற்றொருவனைத் தரையில் தேய்த்தார்கள்.

இத்தனையையும் மிஞ்சி நிற்பதில்தான் உண்மையான கலைஞனின் வெற்றி இருக்கிறது.அப்படிப்பட்ட கலைஞனைப் பிரித்து அடையாளம் கண்டுசொல்வதில் தான், நல்ல விமரிசகனின் வெற்றியுமே இருக்கிறது என்று எனக்குத் தோன்றுகிறது.

நினைவில் நின்ற ஒரு பொற்காலத்தைப் பற்றி ஆதங்கத்தோடு சொல்லியிருக்கிறீர்கள்.எவ்வளவு அழகான கனவாக இருந்தால் தான் என்ன? ஒரு நேரம், கலைந்து போக வேண்டியது தான் இல்லையா? அப்படி கலைந்துபோவது கூட, அதைவிட இன்னொரு அழகிய கனவைப் படைப்பதற்காகத் தான்!

என்றோ ஒருநாள் மறுபடியும் ஒரு அழகிய கனவு வரும்!"

கிருஷ்ண பிரபு  மோகமுள் புதினத்தை இப்போதுதான் படித்து விட்டுத்  தனது கண்ணோட்டத்தைச் சொல்லியிருக்கிறார்.

"மோகமுள் - பல வருடங்களுக்கு முன்பே திரைப்படமாகப் பார்த்துவிட்டதால் புத்தகத்தை வாங்கியிருந்தும் வாசிக்காமலே வைத்திருந்தேன்."

"ஒரு முதிர் கன்னியை, அவளைவிட பத்து வயது இளையவன் ஒருவன் காதலிப்பதை மையமாக வைத்து தி. ஜாவால் எழுதப்பட்ட அருமையான நாவல். வெளிவந்த காலத்தில் அதனை வாசிப்பதற்கு வீட்டிலுள்ள பெரியவர்கள் அனுமதித்ததில்லை என்று சில வயோதிக நண்பர்கள் சொல்லக் கேள்விப் பட்டிருக்கிறேன்." என்ற வார்த்தைகளைப் படித்தபோது, ஜீவி சார் ஆதங்கப்பட்டது போலவே எனக்கும் ஒரு ஆதங்கம் எழுந்ததைத் தவிர்க்க முடியவில்லை.

எழுத்தாளர் ஜெயமோகன் தனது எண்ணத்தைச் சொல்வது இப்படி:

மோகமுள் ——- தி.ஜானகிராமன்.


அடிப்படையில் அழகிய கதை. நாவலுக்கான விரிவும் தீவிர அகஆராய்ச்சியும் இல்லை. ஆனால் சொகுசான நடை, தளுக்கான உரையாடல்கள், உள்ளே இறங்கி உலவி வரச்செய்யும் காட்சிச் சித்தரிப்புகள், மறக்கமுடியாதபடி மனதில் பதியும் கதாபாத்திரம் சித்தரிப்புகள் ஆகியவற்றுடன் தமிழ் மனதை கொள்ளை கொண்ட படைப்பு. இசையனுபவம் மொழியை சந்திக்குமிடங்கள் இந்நாவலின் உச்சங்கள். யமுனா என்ற (தி.ஜானகிராமன் முடிவின்றி காதலித்த இலட்சிய பெண்ணுருவான) மராட்டிய பேரிளம் பெண்ணை ஒரு தலையாக காதலிக்கும் பாபு என்ற இசைக்கலைஞனின் புரிந்து கொள்ள முடியாத (அவனால்) தாகத்தின் கதை.

1956ல் பிரசுரமாயிற்று.

அம்மா வந்தாள். —- தி. ஜானகிராமன்.

மரபான தமிழ் ஒழுக்கவியல் மீது ஃபிராய்டியம் ஓங்கி அடித்ததின் விளைவு. அலங்காரத்தம்மாள் தன் ( நெறிதவறியதனால் விளைந்த) குற்ற உணர்வை வெல்ல மகன் அப்புவை வேத பண்டிதனாக்க முயல்கிறாள். நெறிகளுக்கு அப்பால் உள்ள காதலின் தூய்மையை அப்பு உணர்ந்து தன்னை விரும்பும் இளம் விதவை இந்துவை ஏற்கிறான். ஜானகிராமனின் படைப்புகளில் வரும் ‘காமம் கனிந்த ‘ அழகிய பெண்கள் தமிழ் வாசகனுக்குள் பகற்கனவை விதைத்தவை. பாலகுமாரன்கள் முளைக்கும் நாற்றங்கால்.

1967ல் பிரசுரமாயிற்று.

அம்மா வந்தாள் புதினத்தைப் பற்றி இன்னொரு விரிவான பதிவாக ஜெயமோகன் எழுதியது இங்கே!  ஒரு சின்ன மனவோட்டத்தைப் பற்றிப் போகிற போக்கில் தி.ஜானகிராமன் சொல்லிவிட்டுப் போகிற ஒரு வரியை வைத்துக் கொண்டு, ஈடிபஸ் காம்ப்ளெக்ஸ், ஃபிராய்டியன்  பாதிப்பு, காமம் கனிந்த அழகிய பெண்கள் என்ற வார்த்தைகளுக்குள், ஒரு படைப்பாளியை அடக்கிவிடத் துடிக்கிற மாதிரி இருக்கிறதே தவிர, ஒரு நேர்மையான விமரிசனமாக இல்லை என்பதோடு  கதை விரியும் தளங்களைப் பற்றிய பிரக்ஞையே இல்லாமல் வீசப்படும் வெற்று வார்த்தைகளாகவே நின்று போய்விடுகின்றன!


மரபான தமிழ் ஒழுக்கவியலை என்னவோ தி.ஜா வந்து தான் கெடுத்து விட்டது போல இந்த வார்த்தை இருக்கிறது! சங்க இலக்கியங்களும், சிலப்பதிகாரமும் சொன்னதெல்லாம், தி.ஜானகிராமனை மட்டம் தட்ட வேண்டும்  என்ற ஒரே நினைப்பில் சௌகரியமாக மறந்து போய்விடுகிறது. மோகமுள்ளில் நாவலுக்கான விரிவும், தீவீர அக ஆராய்ச்சியும் இல்லையாம்!இப்படித் தன் எழுத்தைத் தானே பாராட்டிக் கொள்ளும் ஒருவருடைய எழுத்தில் இருந்து  நல்ல எழுத்தைப்  பிரித்து அறிவது மிகவுமே கடினம். தமிழ் ஸ்மார்த்த எழுத்தாளர்களைப் பற்றிய ஒரு அவதானிப்பு எனக்கு உண்டு என்று பீற்றிக் கொள்கிறவருக்கு, தி.ஜாவைப் பற்றி  ஒன்றுமே தெரியாது என்பது தான் உண்மை.

தி.ஜானகிராமன் என்ற தமிழ் ஸ்மார்த்த எழுத்தாளருக்கு, காஞ்சி மடத்தின் கடுமையான அனுஷ்டானம் என்ற போலித்தனத்தைச் சாடுகிற தெம்பு அந்த நாளிலேயே இருந்தது. காஞ்சிப்பெரியவர் என்றாலே எல்லோரும் கைகட்டி வாய் பொத்தி நின்ற அந்த நாட்களிலேயே அங்கே இருந்த ஆஷாடபூதித் தனத்தைச் சாடினவர் தி.ஜா!.  


இதயம் பேசுகிறது மணியன் மாதிரி சில  தமிழ் ஸ்மார்த்த எழுத்தாளர்கள், தி.ஜாவை வசைபாடியதை விட ஜெயமோகன்  அபத்தமாக உளறுவது ஒன்றும் பெரிய விஷயமே இல்லை! மணியன் போன்றவர்களுக்குத் தாங்கள், காஞ்சி மடத்தின் காவலர்கள் என்ற மமதை, உள்நோக்கம், எல்லாவற்றிற்கும் மேலாக வியாபாரம் எல்லாம்  இருந்தது. ஜெயமோகன் மாதிரித் தற்பெருமையில் ஊறிய எழுத்தாளர்களுக்குத் தங்களுக்கு முன்னால் கொண்டாடப் பட்ட எழுத்தாளர்களைப் பற்றித் தப்பும் தவறுமாக இப்படி எதையாவது பேத்திக் கொண்டிருப்பது, ஒரு பிழைப்பாக இருக்கிறது.

இத்தனை குப்பையையும் கிளறுவதற்கு ஒரு காரணமிருக்கிறது.
தெரிந்து கொள்ள முயற்சி செய்யாமலேயே விமரிசனம் செய்வது, இங்கே தமிழில் மிக எளிதாக இருக்கிறது. தங்களுக்குப் பிடித்திருந்தால் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுவது! இல்லையோ, தரையில் போட்டுத் தேய்ப்பது!

நல்ல எழுத்து, நல்ல வாசிப்பு என்பது வீணையும் மீட்டும் விரல்களும் சேருகிற மாதிரி! இனிமையான இசை அங்கே தான் பிறக்கும்!

இங்கே ஜெயகாந்தனைப் பற்றிய பகிர்வு ஒன்று!

புத்தகங்களைப் பேச விருபுகிறவர்கள், படிப்பதில் ஆர்வம் உள்ள வாசகர்களை வரவேற்கிறேன்!


5 comments:

 1. சிறு வயதில் ராணி படித்து பின் ராஜேஷ்குமார் பிடித்து இளம்பிராயத்தில் சுஜாதா,பாலகுமாரன் விரும்பி தற்போது ஜெயமோகன் ,எஸ்.ராமகிருஷ்ணன் என் ரசனை மாறிக்கொண்டேயிருக்கிறது. நல்ல படைப்பை வாசித்து முடிந்ததும் எழும் உணர்வுகளே தனி.இரண்டு நாட்களுக்கு நமது சிந்தனையிலேயே சுழன்று கொண்டிருக்கும். வெகு நாட்கள் கழித்தும் நினைவிருக்கும்.
  இப்போது நல்ல எழுத்தாளர்களையும் அவர்களது நல்ல படைப்புகளையும் அறிமுகம் செய்வதை படிக்க காத்திருக்கிறேன்.

  ReplyDelete
 2. நல்ல திரை படத்தை பற்றி எழுதியதற்கு மிக்க நன்றி.
  தமிழ் திரைஉலகில் அரைத்த மாவையே அரைதுக்கொண்டிருக்கின்றனர். சில இயக்குனர்கள் நல்ல திரைப்படங்களை தருகிறார்கள், மக்களாகிய நாங்கள் பார்ப்பதில்லை. ஆகவே நல்ல தமிழ்படங்கள் நஷ்டமடைகின்றன. இப்போதுள்ளவர்கள்(இளைஞ்யர்கள்) புத்தகம் படிப்பது மிக மிக குறைவு.
  எவனோ ஒருவனுக்கு அடிமையாக வேலை பார்த்து காலத்தை வீணடிக்கிறோம்.

  ReplyDelete
 3. இதைத் திரைப்பட விமரிசனமாகவே எழுத முதலில் ஆரம்பிக்கவில்லை. என்னுடைய இன்னொரு வலைப்பதிவில், புத்தகங்கள், புத்தகங்கள் என் மீது ஏற்படுத்திய தாக்கங்களை பேசுவதற்காக மட்டுமே எழுத ஆரம்பித்திருக்கிறேன்.

  இங்கே தமிழ் எழுத்தாளர்களுடைய தற்சமய நிலைமை சுய தம்பட்டம் மட்டும் தான்! சரக்கு எதுவுமில்லாமலேயே, இங்கே எழுதிக் குவித்துக் கொண்டிருக்கிறார்கள், எவராவது கேள்வி கேட்க முனைந்தால், நான் இத்தனை ஆயிரம் பக்கங்கள் எழுதியிருக்கிறேன், அதில் எத்தனை பக்கங்களை நீ படித்திருப்பாய் என்று பரீட்சை வைக்கிற கிளாஸ் வாத்தியார் மாதிரி சண்டைக்கு இழுப்பார்கள்.

  நேற்றைக்கு சுவாசிக்கப்போறேங்க தளத்தில் எழுதியதைத் தான் இங்கே, முதலில் அப்படியே பதிவிட்டிருந்தேன். இன்றைக்குக் காலையில், தற்செயலாக இந்தப் படத்தைப் பார்த்தபோது, ஆத்மார்த்தமாக எழுதுகிற எழுத்துக்கும், இந்த மாதிரி புகழ் போதைக்காக கண்ணைக் குருடாக்கிக் கொண்டு சித்திர விமரிசனமும், சித்திரம் வரைதலும் நிகழ்த்தும் சில எழுத்தாளர்களைப் பற்றிய பொருந்திப் போகிற விதத்தைக் கண்டு, அப்புறம் தான் ஷார்ட் கட் டு சக்சஸ் திரைப்படத்தைப் பற்றிய விமரிசனத்தோடு சேர்த்து எழுதினேன்!

  அப்புறம் எவனோ ஒருவனுக்கு அடிமையாக வேலை பார்த்து....!

  நாம் எல்லோருமே நம்முடைய ஆசைகளுக்கு அடிமையாக இருப்பதனால் தான் எவனோ ஒருவனுக்கு அடிமையாகவும் இருந்துவிட்டுப் போகிற நிலையம் ஏற்படுகிறது இல்லையா?!

  ReplyDelete
 4. //நாம் எல்லோருமே நம்முடைய ஆசைகளுக்கு அடிமையாக இருப்பதனால் தான் எவனோ ஒருவனுக்கு அடிமையாகவும் இருந்துவிட்டுப் போகிற நிலையம் ஏற்படுகிறது இல்லையா?! //

  முற்றிலும் உண்மை.

  ReplyDelete
 5. விமர்சனம் படித்தது படம் பார்க்கனும்போல இருக்கு. இதில் சில விஷயங்கள் ஃபாக்ஸ் சீரிஸில் வரும் கோஸ்ட் விஸ்பரர் (இதிலும் ஜெனிஃபர் லவ் ஹெவிட்தான்)சீரியலில் அவரே காப்பியடித்திருப்பதுபோல் தோன்றுகிறது.

  மோகமுள் - ஊருக்கு வரும்போது தான் வாங்கிப் படிக்கனும்.

  ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!