435 உறுப்பினர்களைக் கொண்ட அமெரிக்கப் பிரதிநிதிகள் சபைக்கும், நூறு உறுப்பினர்களைக் கொண்ட செனேட்டிற்கும் கடந்த செவ்வாய்க் கிழமையன்று நடந்த இடைத் தேர்தலில் ஒபாமாவின் ஜனநாயகக் கட்சி பெருத்த பின்னடைவை சந்தித்திருக்கிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட சமயத்தில், ஒபாமா மீது அமெரிக்க வாக்காளர்கள் கொண்டிருந்த பெருத்த நம்பிக்கையும் கூட பின்னடைவை சந்தித்திருக்கிறது.
இந்தப் பின்னடைவிற்குத் தானே காரணம் என்று ஒரு தரமல்ல, நான்கு முறை ஒபாமா ஒத்துக் கொள்ள வேண்டிய சூழ்நிலை! கோபத்தோடு கொந்தளிக்கும் வாடிக்கையாளர்களிடம் ஒரு விற்பனை மேலாளர் உணர்ச்சி பொங்கப் பேசுவது போல ஒபாமா பேசியதாக இந்த செய்தி சொல்கிறது.பிரதிநிதிகள் சபைத் தேர்தலில் ஜனநாயகக் கட்சி இப்படிப்பட்ட சரிவை 1948 இல் தான் சந்தித்திருப்பதாகவும் இந்த செய்தி மேலும் தெரிவிக்கிறது.
Yes We can! என்று நம்பிக்கையோடு ஆட்சியைப் பிடித்த ஒபாமா,சீரழிந்த அமெரிக்கப் பொருளாதாரத்தின் போக்கில் குறிப்பிடத் தகுந்த மாற்றம் எதையுமே செய்ய முடியாத நிலையில், ஜனங்களுடைய ஆதரவை வேகமாக இழந்திருக்கிறார்.
பொருளாதாரச் சீரழிவுக்குப் பெரிய அளவு காரணமாக இருந்த ரிபப்ளிகன் கட்சி, இந்த அதிருப்தியை, நன்றாகவே பயன்படுத்திக் கொண்டிருக்கிறது.
இந்த வருடம் ஜனவரியில் எழுதிய ஒரு நாள் போதுமா என்ற இந்தப்பதிவில், ஒபாமா தொடர்ந்து ஜனங்களுடைய ஆதரவை இழந்துவருவதைப் பற்றிக் கொஞ்சம் விரிவாகவே பேசியிருந்தது நினைவிருக்கிறதா?
இந்த நிலையில் ஆசிய நாடுகளில் பத்து நாள் சுற்றுப் பயணமாக, அதில் முதல் மூன்று நாட்கள் இந்தியாவில் என்று அமெரிக்க அதிபர் ஒபாமாவும், அவரது மனைவி மிஷெல் மற்றும் பரிவாரங்களுடன் வந்து மும்பையில் இறங்கியிருக்கிற செய்தியை தொலைகாட்சி செய்திகளில் பார்த்துக் கொண்டிருந்தேன். அமெரிக்க அதிபரின் இந்த விஜயத்தில், வெறும் வாயை மெல்லப் பழகி விட்ட ஊடகங்களுக்குக் கொஞ்சம் கலர் கலராகப் பஞ்சுமிட்டாயைக் கட்டித் தொங்க விட்டுக் காண்பிக்கிற மாதிரி, அமெரிக்க அதிபரின் "வரலாறு காணாத விஜயத்தைப் பற்றி" கதை விட ஒரு சான்ஸ் கிடைத்திருக்கிறது என்பதைத் தவிர, ஒபாமாவின் இந்த விஜயத்தினால் சொல்லிக் கொள்கிற மாதிரி எந்த ஒரு பயனும் கிடைத்து விடப் போவதில்லை!
பொதுவாகவே ஜனாயகக் கட்சி ஆட்சிக்கு வரும்போதெல்லாம், இந்தியாவுக்குத் தொந்தரவுதான்! அமெரிக்க அரசின் வெளியுறவுக் கொள்கையில், பாகிஸ்தானுக்கு இருக்கும் முக்கியத்துவம், இந்தியாவுக்கு எப்போதுமே இருந்ததில்லை. ஆனால், சீனாவிடம் பொருளாதார ரீதியாகத் தோற்றுக் கொண்டிருக்கும் நிலையில், இந்தியாவை முழுமையாகப் புறக்கணிக்க முடியாத சூழ்நிலையும் அமெரிக்காவுக்கு இப்போது ஏற்பட்டிருக்கிற நிர்பந்தம்.
தாஜ் ஹோட்டலில் தங்கி, தீவீரவாதிகளுக்கு ஒபாமா, ஒரு அழுத்தமான செய்தியைக் கொடுத்திருப்பதாக ஒரு சிரிப்புச் செய்தியைப் பார்க்க முடிந்தது.
இர்விங் வாலஸ் எழுதிய ஒரு புதினம், The Man. இந்தக் கதையின் விமரிசனத்தை இந்தப்பக்கங்களில் பார்த்திருக்கிறோம் நினைவிருக்கிறதா?
அந்த மாதிரி எதிர்பார்ப்புக்களோடு ஆரம்பித்த ஒபாமாவின் அரசியல் இந்த இரண்டு ஆண்டுகளுக்கு சற்றுக் குறைவான காலத்திலேயே புஸ்வாணமாகப் போனதைப் பார்க்கும் போது சற்று வருத்தமாகத் தான் இருக்கிறது. ஆனால் ஒபாமா, தான் எங்கே சறுக்கினோம் என்பதைப் பற்றிக் கொஞ்சமும் கவலைப் படுவதாகவோ, இவர் தேறி விடுவார் என்று அமெரிக்க வாக்காளர்கள் நம்புவதாகவோ எந்த அறிகுறியும் இல்லை. இர்விங் வாலஸ் படைத்த அந்த உறுதியான ஆப்ரோ அமெரிக்கனைக் கற்பனையில் மட்டும் தான் பார்க்க முடியும் போல.
இனிமேலும் நம்புவதில்லை என்று அமெரிக்க வாக்காளர்கள் சொல்லிவிட்டார்களே!
அமெரிக்க ஜனாதிபதியின் இந்த விஜயத்துக்கு அமெரிக்கா ஒரு நாளைக்கு இருபது மில்லியன் டாலர்கள் அல்லது சுமார் தொள்ளாயிரம் கோடி ரூபாய்கள் செலவு செய்வதாகத் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. சோழியன் குடுமி சும்மா ஆடாது என்பது போல, அமெரிக்கர்களுடைய தாராளத்துக்குப் பின்னால் என்னென்ன ஏமாற்றங்களை இந்த தேசம் சந்திக்க வேண்டியிருக்கும் என்பது இன்னும் சிறிது காலத்துக்குள்ளேயே தெரிந்து விடும்.இந்தப் பதிவில் சொல்லியிருந்ததை மறுபடி நினைவு படுத்திக் கொள்வது மிக மிக அவசியம் என்றே கருதுகிறேன்!
மீன்களைக் காப்பாற்ற வேண்டுமென்றோ, காதல் கொண்டோ எவரும் தூண்டிலில் புழுவை வைத்துக் காத்திருப்பதில்லை!
எலிகளுக்கு, ஊசிப்போன வடையோ வெங்காயமோ எதுவானாலும், கருணையினால் வைக்கப் படுவது இல்லை.
இயேசு அழைக்கிறார் என்று கூவுகிறவன் கோடிகளில் மிதக்கிறான்! அழைப்பைக் கேட்டுப் போனவன், அவனிடம் தசம பாகத்தைக் கொடுத்து விட்டு, என் ஆண்டவர் மிகவும் நல்லவர், அவர் என்னை என்றும் ரட்சிப்பார் என்று பாடிக் கொண்டு திரும்புகிறான்!
அதே மாதிரித் தான்!
சமூக நீதி காக்கிறேன், சமத்துவம் தருகிறேன் என்று இலவசங்களைத் தருகிறவன் என்ன நிலையில் இருக்கிறான், அதை நம்பிப் போகிறவன் என்ன நிலையில் இருக்கிறான் என்பதைக் கொஞ்சம் கண்திறந்து பார்த்தாலே புரிந்து விடும்!
சுதந்திரம் என்பது இவர்கள் பாடப் புத்தகங்களில் எழுதி வைத்தது போல, காந்தித் தாத்தாவும், நேரு மாமாவும் கடைக்குப் போய் வாங்கி வந்து கொடுத்ததல்ல!
எப்போது நமது பொறுப்பை உணரப் போகிறோம்?
இப்போதிலிருந்தாவது.---
இலவசங்களில் ஏமாறுவது இல்லை என்ற உறுதியோடு !
உலகத் தொல்லைக் காட்சி வரலாற்றிலேயே முதன் முறையாக என்று கூவும் பெட்டிகள் முன்னால் அமர்ந்து நேரத்தை வீணடிக்காமல்,
எங்கோ என்னமோ நடக்கிறது எனக்கென்ன என்றிருக்காமல், சக மனிதர்களிடம் கொஞ்சம் அக்கறையோடு, பரிவோடு, பொறுப்போடு ---
இருக்க முயற்சியை ஆரம்பிப்போமா!
அப்படிப் பட்ட முயற்சியின் முதல் படி காங்கிரஸ் கட்சியை முற்றொட்டாக நிராகரிப்பதில் இருந்து ஆரம்பிக்கிறது என்பதைத் தனியாகச் சொல்ல வேண்டியதில்லை தானே!