பொழுதுபோக்கு நாத்திகம் -ஒரு கேள்வியும் பதிலும்

 படத்தின் மீது க்ளிக்கிப் பெரிதாக்கிப் படிக்கலாம்!

ஸ்ரீதர் நாராயணனுடைய வலைப்பதிவில் சுவாரசியமான ஒரு விஷயத்தைப் படித்துக் கொண்டிருந்தேன். அப்படியே நகலெடுப்பதை விட, என்னுடைய வார்த்தைகளிலேயே, அதைச் சொல்கிறேனே!

ஒரு அரசன், ஒரு துறவி. இருவரும் ஒரு சாலையில் சந்தித்துக் கொள்கிறார்கள். அரசனுக்கு அந்தப் பயணம் புதிது. பாதையைப் பற்றி விசாரிப்பதற்காக,

"இந்த சாலை எங்கே போகிறது?" என்று கேட்கிறான்.

துறவி சொல்கிறார்:"சாலை எங்கேயும் போகவில்லை, நீ தான் சாலை வழியே போயாக வேண்டும்!"

உடனே ஆஹா!ஜென் கதை என்று துள்ளிக் குதிக்கவும் வேண்டாம், இது என்ன பைத்தியக்காரத்தனமாக இருக்கிறது, உண்மையிலேயே எந்த ஒரு அரசினிடமாவது, ஒரு துறவி இப்படி விட்டேற்றியாகப் பதில் சொல்லி விடத் தான் முடியுமா என்று கேட்டுத் துளைக்கவும் வேண்டாம்!

எந்த ஒரு கேள்விக்கும், இரண்டு நேரெதிர் கோணங்களில் இருந்து பதிலைப் பெற முடியும் என்பதை மட்டுமே கதையில் இருந்து பெற வேண்டிய கருத்தே தவிர, ஆஹா! நல்ல கதை என்றோ, கதை சொல்லியே நம்மை பல நூற்றாண்டுகளாக முட்டாளாக வைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று கொதிக்கவோ வேண்டாம் என்பது தான் முதலும், முக்கியமானதுமான பாடம்!

கதைகள், ஒரு உருவகம், ஒரு உதாரணம் அவ்வளவுதான்!


உண்மைக்குக் கொஞ்சம் இப்போதிருப்பதைவிட இன்னம் அருகாமையில் கொண்டு சேர்ப்பதற்கு உதவியே தவிர, கதையே முழுமையானதும், உண்மையானதும் அல்ல! அப்படி எடுத்துக் கொள்ளும் போது தான் கற்பிக்கப்படாத விபரீதமான அர்த்தங்கள், அனர்த்தங்கள் என்று தொடர்கின்றன.

முந்தைய பதிவின் பின்னூட்டமாக, திரு கோவி கண்ணன் ஒரு நல்ல கேள்வியை எழுப்பியிருந்தார். வண்ணத்தில் இருப்பது அவரது வார்த்தைகளின் பகுதி.

/கதைகளின் தன்மை அப்படி இருக்கிறது. வேறென்ன சொல்ல முடியும். /

கஜேந்திர மோட்சம் கதையைத் தொட்டு, யானையைக் காப்பாற்ற, முதலையைக் கொன்றது என்ன நியாயம், யானையும் முதலையும் கடவுள் படைப்புத்தானே ?

எறும்பென்றாலும் யானை என்றாலும் உயிர்த்தன்மை என்பது இரண்டுக்கும் ஒன்றே தான்.

ஆன்மிகம் என்கிற புனிதபூச்சை மட்டும் பாருங்க கதையை கைவிட்டுவிடுங்கன்னு சொல்றிங்க சரியா ?


ஆத்திகன் கொஞ்சமாக நாத்திகம் பேசினாலும் அது ஆன்மிகம், நாத்திகன் தத்துவம் பேசினாலும் அது நாத்திகமா ?

இப்படி ஒரு கதைக்கு, கதையின் அடிப்படையை விட்டு விட்டு, வேறு வேறு திசைகளில் கேள்விகளோடு பயணிக்கச் செய்தால், ஊர் போய்ச் சேருவது எப்படி? ஆன்மீகப் பூச்சு, பூசி மெழுகுவது என்பது தேடலில் இருக்கும் எவருக்கும் தேவையே இல்லாத சுமை, இந்தச் சுமைகளை நான் தூக்கி வரவுமில்லை, எவர் தலையிலும் கட்டிவிட முயற்சிக்கவுமில்லை!

/கோழி என்று சொன்னால் கோழி தான் எல்லோரும் சாப்பிடுவதாச்சே...அதில் என்ன பாதக செயலை குறிப்பிட முடியும் என்கிற கேள்விக்கு பதிலாக அங்கே யானை./ 

இப்படி திரு கோவி கண்ணன் பதில் கேள்வி எழுப்பியிருப்பதை மட்டும் எடுத்துக் கொண்டு கோழி மட்டும் கடவுள் படைப்பில்லையா என்று கேட்கப் போனால், ஒரு வார்த்தைக்குச் சொன்னதைப் பிடித்துக் கொண்டு தொங்குகிற வரட்டுத் தனமாக, பிடிவாதமாக ஆகி விடும் இல்லையா?அது வேண்டாம்,  

உதாரணத்திற்கு எடுத்துக் கொண்ட ஒரு விஷயம், எவ்வளவு குறைபாடுகளோடு இருந்தாலும், அந்த உதாரணத்தில் இருக்கிற ஓட்டை உடைசல்களையே பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்காமல், உதாரணத்தின் வழியாக என்ன சொல்லப் படுகிறது என்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்பதைத் தான் ஸ்ரீ அரவிந்தருடைய வாக்கிலிருந்து எடுத்துச் சொல்லியிருந்தேன். தெளிவாகச் சொல்லவில்லை என்றால், குறை என்னுடையதே!

அதற்காக, ஆங்கில மூலத்தை மறுபடி படிக்கத் தருகிறேன்.

Because thou wert given at first imperfect conceptions about God, now thou ragest and deniest Him. Man, dost thou doubt thy teacher because he gave not thee the whole of knowledge at the beginning?

Study rather that imperfect truth and put it in its place, so that thou mayst pass on safely to the wider knowledge that is now opening before thee.”

Sri Aurobindo
Thoughts and Aphorisms, Aphorism 470

இந்தக் கதையை எப்படிப் பார்க்கிறோம், என்பதில் இருந்து தான் என்ன தேடுகிறோம் என்பதும், கதை சொல்ல வந்த உட்கருத்தைப் புரிந்து கொண்டோமா, இல்லை கவனம் சிதறி போகும் திசையை மறந்து போனோமா என்பதும் தெரிய வரும். இதை, இந்தக் கதையை வைத்தே ஏற்கெனெவே இந்த இடுகையில் சொன்னது தான். கேள்விதான் மறுபடி வந்திருக்கிறது.

சேற்றில் சிக்குண்டு முதலைவாய்ப்பட்ட யானையின் கதையைச் சொல்லும் போது, முதலைக்கும், யானைக்குமாய் நடந்த இழுபறிப் போராட்டம் ஆயிரம் வருடம் நடந்ததாகக் கதை சொல்லுவார்கள். யானை தன் பலத்தில் நம்பிக்கை வைத்துப் போராடிக் கொண்டிருந்த போது, இறைவன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான்.என் செயலாவதொன்றுமில்லை என்று உணர்ந்த பிறகு, அதே யானை "ஆதிமூலமே, நாகணையாய், வந்து என் ஆரிடறை நீக்காய்" என்று முறையிட்ட போது, இறைவன், அரை குலைய நிலை குலைய, யானையைக் காப்பாற்றுவதற்காக ஓடோடி வந்தானாம்.! 

 
கதையாகச் சொன்ன விஷயத்திலும், ஒரு ஆன்மீக ரகசியம் உள்ளங்கை நெல்லிக்கனியாக இருக்கிறது.


நான் எனது என்கிற நிலையில் இருந்து உயர்ந்தால் ஒழிய, நம்மைப் பீடித்திருக்கிற நோவுகளில், தளைகளில் இருந்து விடுபட வழியே இல்லை.”

கடவுளைப் பற்றி பேசும்போது அல்லது மறுக்கும்போது என் இப்படித் தடுமாறுகிறோம்? எவ்வளவு பேசியும் கூட, விஷயம் இன்னதென்றே பிடிபடாமல் இந்த ஒரு விவாதம் மட்டும் ரிலே ரேஸ் மாதிரித் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறது?


நான் எனது என்ற தளைகளில் இருந்து விடுபட்டு, மனம் என்பது ஒரு தடையாக இல்லாத நிலை வரும்போதுதான் இறைநிலையை அடைய முடியும், புரிந்து கொள்ள முடியும், அனுபவிக்க முடியும்! மனமற்ற நிலை, மனமிறந்த நிலை, பேதங்களைக் கடந்த நிலை என்றெல்லாம் சொல்லப் படும் நிலையை எப்படி அறிந்து கொள்வது? அதற்குரிய பண்புகள் என்ன? ஸ்ரீ அரவிந்தர் தொடர்ந்து சொல்வதைக் கேட்போம்:

I knew my mind to be conquered when it admired the beauty of the hideous, yet felt perfectly why other men shrank back or hated."

Sri Aurobindo
Thoughts and Aphorisms – Aphorism 49

கண்ணாமூச்சி காட்டிக் கொண்டிருப்பதாலேயே கடவுளை இல்லையென்றும் வெறுக்க வேண்டுமென்றும் மனிதர்கள் சுருங்கிப்போவதை அறியும் தருணத்திலேயே, [அப்படி நானும் ஆகாமல் கண்ணாமூச்சி விளையாட்டை ரசிக்கத் தெரிந்து கொண்டதனாலேயே] மனத்தை வெற்றி கொள்ளப்பட்டதை அறிந்து கொண்டேன்!

சுத்தி சுத்தி வந்தீக'ன்னு பாடற மாதிரி, உண்மையைச் சுற்றிச்சுற்றி வந்து கொண்டே இருக்கிறோமே தவிர, உண்மையை நெருங்க முடியவில்லையே, ஏன்? காரணமென்ன?

ஸ்ரீ அரவிந்தர் சொல்வதைக் கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள்:

"The whole truth about any object is a rounded and all-embracing globe which forever circles around, but never touches the one and only subject only object of knowledge, God."

Sri Aurobindo
Thoughts and Aphorisms – Aphorism 537


9 comments:

  1. //கண்ணாமூச்சி காட்டிக் கொண்டிருப்பதாலேயே கடவுளை இல்லையென்றும் வெறுக்க வேண்டுமென்றும் மனிதர்கள் சுருங்கிப்போவதை அறியும் தருணத்திலேயே, [அப்படி நானும் ஆகாமல் கண்ணாமூச்சி விளையாட்டை ரசிக்கத் தெரிந்து கொண்டதனாலேயே] மனத்தை வெற்றி கொள்ளப்பட்டதை அறிந்து கொண்டேன்!//

    நாத்திகர்கள் கடவுளை வெறுப்பவர்கள் அல்ல, மறுப்பவர்கள், இல்லாத ஒன்று என்று அவர்கள் நம்பும் போது அதில் வெறுப்பு வரவாய்ப்பே இல்லை.

    உலகத்திலேயே சுவையான பழம் ஒண்ணு ஆப்ரிகாவில் ஒரு நாட்டில் அடர்ந்த காட்டில் இருக்கிறது என்று யாரோ கேள்விப்படுகிறார். அப்படி இருக்க வாய்ப்பு உண்டு என்று நம்பும் ஒருவர் ஆப்ரிக்கா பழம் தான் (பேரிக்காய் இல்லை) உலகத்திலேயே சுவையானது என்று எல்லோரிடமும் சொல்கிறார், அப்படியெல்லாம் ஒரு பழம் இருக்க முடியாதுன்னு இன்னொருவர் அதை மறுக்கிறார்.

    இது தான் ஆத்திக நாத்திகத்திற்கு நான் கொடுக்கும் சிறிய விளக்கம், அப்படியெல்லாம் ஒரு பழம் இருக்க முடியாது சொல்கிறவர் பழத்தை வெறுக்கிறார் என்ற எப்படி சொல்வது ?

    ***
    இல்லை என்று சொல்பவர்களை விடுவோம், ஆனால்
    கடவுள் இருக்கிறது என்று நம்ப வைப்பது தான் ஆத்திகரின் வேலையா ?

    ReplyDelete
  2. /நாத்திகர்கள் கடவுளை வெறுப்பவர்கள் அல்ல, மறுப்பவர்கள்/

    நடைமுறை நாத்திகம் என்பது, எது உண்மை அல்லது பொய் எனத் தேட முற்படுவதே இல்லை. நம்புகிறவனுடைய நம்பிக்கையை கேள்விக்குரியதாக ஆக்கி விடை சொல்ல முற்படுவது அதன் வேலையாகவும் இருந்ததில்லை. வெறும் கேலி, ஏச்சு, விதண்டாவாதம், வெறுப்பை உமிழ்வது, பிணக்குகளை வளர்ப்பதுமே அதன் பணியாக இருக்கிறது.

    ரிச்சர்ட் டாகின்ஸ் மாதிரி இறக்குமதி செய்யப் படும் நாத்திகர்களும், உள்ளூர் நாத்திகர்களும் இந்த ஒரு விஷயத்தில் ஒன்று படுகிறார்கள்.

    சார்வாகம், சாங்கியம், என்று இறை மறுப்பை முன்னிலைப்படுத்தும் தத்துவ மரபுகளுமே இந்தியத் தத்துவ தரிசனத்தின் ஒரு பகுதியாகவே இருந்திருக்கிறது. சமணம் பேசும் அறநெறிகள் இந்த வகையில் வருபவையே. சடங்குகளையும், புரோகிதனையும் மறுத்து, அறிவொன்றே தெய்வம் எனக் காண்பித்தவை.

    /இது தான் ஆத்திக நாத்திகத்திற்கு நான் கொடுக்கும் சிறிய விளக்கம்/

    இரணியனின் கதையிலேயே அது இருக்கிறது. நாராயணன் இல்லை, அவன் பெயரை எவருமே சொல்லக் கூடாது என்கிறான். நாராயணனை மறுக்கிறான். ஆனால், அவனுக்கு, நாராயணன் இருப்பது தெரியும், தன்னுடைய உடன்பிறந்தவனைக் கொன்றான் என்ற ஒரே காரணம், பகையாக, வெறுப்பாக, மறுப்பாகவும் வெளிப்படுகிறது.

    ஆத்திக நாத்திகமே வேறு.உதாரணத்திற்கு, இங்கே வலைப்பக்கங்களில் ஒரு பெண்மணி,மிகவும் கற்றவராக, எல்லாம் தெரிந்தவராகப் பதிவுகள் எழுதிக் கொண்டிருக்கிறார். கோபிகா கீதம் என்று ஒன்று உண்டு. பக்தியின் உச்ச நிலையை, பரம்பொருளிடம், நாங்கள் மிகச் சிறியவர்கள், எங்களிடம் உன்னுடைய பிரம்மாண்டத்தைக் காட்ட வேண்டாம் என்று உருகுகிறார்கள். பிரேம பாவம் என்பதன் உச்சம் அது. இந்தப் பெண்மணி சர்வ சாதாரணமாக, அதைப் படித்தால், காணாமல் போன பொருள் கிடைக்கும் என்று நம்பிக்கை என அதைப் பற்றி எழுதுகிறார். ராம நாமமே துதி செய் என்று எழுதி விட்டு, பெரியவா சொன்னதுனால நாங்க ஏத்துக்கறோம், என்ற ரீதியில் தொடர்ந்து எழுவதைப் பார்க்கும் போது, ஒரு பக்கம் சிரிப்பாக வருகிறது. இவர்களுக்குப் புரிந்தது அவ்வளவுதான்! கிளிப்பிள்ளைகள் போல இருப்பதே தத்துவத்தைப் புரிந்துகொண்டதாக நினைக்கிறார்கள் பாருங்கள், இது தான் ஆத்திக நாத்திகம். இவர்களை விட, நேரடியாகவே, கடவுள் இல்லை என்று சொல்பவர்களை நான் மிகவும் மதிக்கிறேன்.

    /கடவுள் இருக்கிறது என்று நம்ப வைப்பது தான் ஆத்திகரின் வேலையா ?/

    நிச்சயமாக இல்லை.நம்பிக்கையைச் சிதைப்பது, மதம் மாற்றுவது, இதை உண்மையான ஆத்திகன் செய்வதில்லை. அவசியமும் இல்லை.

    இங்கே ஒரு கருத்துப் பரிமாற்றம் மட்டுமே நிகழ்வதாக நான் கருதுகிறேன். என் நிலையை நீங்கள் ஏற்றுக் கொண்டு மாற வேண்டும் என்ற எதிர்பார்ப்பு, நப்பாசை எதுவுமே இல்லை.உங்களுடைய கருத்தை நீங்கள் முன்வைக்கிற அதே விதத்தில், அதைப் புரிந்துகொள்ள முயற்சிப்பதும், அது சரிதானா, எனக்கு என்ன தோன்றுகிறது என்பதைப் பரிமாறிக் கொள்வதைத் தவிர, வேறு எந்த உள்நோக்கமும் இல்லை.

    ReplyDelete
  3. சார்.. அருமையான கட்டுரை.
    அரவிந்தரைப் படித்தோர் மனதில் சலனம் ஏது?
    நாத்திகம் என்பது வீம்பு என்பது நாத்திகம் பேசுவோர்க்கு நிச்சயம் புரியும்தான்.
    ஆனால் ஆன்மீகம் பேசும்போது அது வீம்பு என்று படுவதில்லையே..
    'உருவாய் அருவாய் உளதாய் இலதாய்' என்று பாடிய அருணகிரியாரின் வரிகள் நினைவுக்கு வருகின்றன.
    திவாகர்

    ReplyDelete
  4. மரபுச் செல்வர் திவாகர் அவர்களே!
    தமிழ் மரபு அறக்கட்டளை அளித்த மரபுச் செல்வர் மகுடத்தோடு, உங்களை வரவேற்கிறேன்!

    ஆன்மிகம் என்றால், இங்கே ஒரு தவறான கண்ணோட்டமும், புரிதலும் தங்களை ஆன்மீகவாதிகள் என்று நம்பிக் கொண்டிருப்பவர்களிடமே இருப்பதைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். மதங்களின் குறுகியபார்வை, பிடிகளில் இருந்துகொண்டு இவர்களால் எப்படி தங்களை ஆன்மீக வாதிகளாக நினைத்துக் கொள்ள முடிகிறது என்பதில் நிறையவே ஆச்சரியப் பட்டுப் போயிருக்கிறேன்!

    ReplyDelete
  5. எனக்கு நிறையா வேலை இருக்கு இன்னைக்கு!

    ReplyDelete
  6. வால்பையன் சொன்னது:

    /எனக்கு நிறையா வேலை இருக்கு இன்னைக்கு!/

    நானும் அதைத் தான் சொன்னேன், இங்கே பொழுது போக்குவதற்காகத் தான் கொஞ்சப் பேர் நாத்திகம் பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்று! சரிதானே :-))

    ReplyDelete
  7. //"The whole truth about any object is a rounded and all-embracing globe which forever circles around, but never touches the one and only subject only object of knowledge, God."

    Sri Aurobindo
    Thoughts and Aphorisms – Aphorism 537//

    இதனால்தான் இல்லை எனச் சொல்வது பலருக்கு எளிதாக இருக்கிறது.

    எப்போது இயலாமை ஏற்படுகிறதோ அப்போது இல்லை என சொல்வது சுலபமே.

    அருமையான கட்டுரை ஐயா. மீண்டும் எழுதுவேன் கதைகள் பற்றிய பார்வை. மிக்க நன்றி.

    ReplyDelete
  8. இதை இப்படியும் பார்க்கலாம்.

    இருக்கிறது என்று வெறும் மத நம்பிக்கையின் அடிப்படையில் மட்டும் சொல்பவர்கள் கூட, உண்மைக்கு நெருக்கத்தில் வருவதில்லை. அவர்களுமே கூட சுற்றி சுற்றித் தான் வந்து கொண்டிருக்கிறார்கள். சுற்றி வருகிற பாதையில் இருந்து விலகி, கடவுளிடம் வந்து சேர எப்படி trajectory இல் மாற்றம் தேவைப்படுகிறதோ, அதே மாதிரி, மதங்களின் குறுகிய பாதையில் இருந்து விலகி ஆன்மீகப் பார்வைக்குத் திரும்பினால் தான் சாத்தியம். இதை முந்தைய பதிவுகளில், கொஞ்சம் விரிவாகவே பேசியிருக்கிறேன்.

    ReplyDelete
  9. //கதைகள், ஒரு உருவகம், ஒரு உதாரணம் அவ்வளவுதான்,
    உண்மைக்குக் கொஞ்சம் இப்போதிருப்பதைவிட இன்னம் அருகாமையில் கொண்டு சேர்ப்பதற்கு உதவியே தவிர, கதையே முழுமையானதும், உண்மையானதும் அல்ல!//

    மிகவும் ரசித்தேன் ஐயா. கதைகள் பற்றிய பார்வை வெகு சிறப்பு. உண்மையைச் சென்றடையும் வழி குறித்த ஆன்மிகம் பற்றிய சிந்தனையை விரிவாகப் படித்துவிடுகிறேன்.

    ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!