ஸ்ரீ அரவிந்தர் திருவடிகளைச் சிந்திக்க வேண்டிய தருணம் இது!

அருட்பெரும் ஜோதியாம் பொன்னொளியை பூமிக்குக்  கொண்டு வருவதற்காக பகவான் ஸ்ரீ அரவிந்தர் தன்னுடைய உடலையே அர்ப்பணித்து மகாசமாதிக்கு எழுந்தருளிய நாள் இன்று! டிசம்பர் 5. புதுச்சேரி ஸ்ரீஅரவிந்தாசிரமத்தில் அடியவர்கள் கூடி சமாதி அருகே கூட்டுத் தியானம் செய்கிற, தரிசன நாளாகவும்  இன்று டிசம்பர் 5 இருக்கிறது. இன்றைய தரிசன நாள் செய்தியாக!


ஸ்ரீ அரவிந்தர் தன்னுடைய யோகம் பூர்த்தியாவதற்கு தன்னுடைய உடலையே த்யாகம் செய்த நாள் இன்று. டிசம்பர் 5.


அருட்பெருஞ்சோதி என்று ராமலிங்க வள்ளலார் பெருமானாலும்,அதிமானச ஒளி என்று ஸ்ரீ அரவிந்தராலும் அழைக்கப்பட்ட அருட்பேரொளி ஸ்ரீ அரவிந்தர் உடலில் ஐந்து நாட்கள் பொன்னொளியாக இறங்கிய நாள் இன்று.

மரணம் என்பது பொய்மையின் தற்காலிக வெற்றி தானே அன்றி நிரந்தரமானது அல்ல. மரணம் என்பது வெற்றி கொள்ளக் கூடியதே. தென் தமிழ்க் கோடியில் சித்தர்களாலும், ஞானிகளாலும் மிக ரகசியமாக வளர்க்கப் பட்ட வித்யை இது. ராமலிங்க அடிகள் என்று அழைக்கப்பட்ட வள்ளல் பெருமானும், ஸ்ரீ அரவிந்தரும் சற்றேறத்தாழ சம காலத்தில் அறிவித்த உண்மை இது.

இருபத்து நான்காயிரம் வரிகளில் சாவித்திரி என்கிற தன்னுடைய பெருங்கவிதையில் ஸ்ரீ அரவிந்தர் இந்த பூரண யோகத்தின் அனைத்து அம்சங்களையும் மிக நுட்பமாகச் செதுக்கியிருக்கிறார். "கண்டவர் விண்டிலர்;விண்டவர் கண்டிலர்" என்று வழக்கில் இருந்தாலும் உரை, மனம் கடந்த ஒரு சத்தியப் பெருக்கை, தன்னுடைய யோக சாதனையில் கண்டதை சாவித்திரி எனும் மகா காவியமாக ஸ்ரீ அரவிந்தர் படைத்திருக்கிறார். 'உரை மனம் கடந்த ஒரு பெருவளி அதன் மேல் அரைசு செய்தோங்கும் அருட்பெருஞ்சோதி' என்று வள்ளல் பெருமான் கூறாமல் கூறியதை சாவித்திரி ஒரு பெரும் மந்திரமாக தன்னைப் படிப்பவர்களுக்கு பேரானந்த நிலையை அருளும் தாயின் தயவாக, நமக்கெல்லாம் வழங்கியிருக்கிறார்.

இந்தப் பெருங்கருணைக்கு எப்படி கைம்மாறு செய்ய முடியும்? எப்படி நன்றி செலுத்த முடியும்?


Om Sri Aurobindo Mirra!

Open my mind, my heart, my life

to

your Light, your Love, your Power.

In all things may I see the Divine!

கை கூப்பி, சிரம் தாழ்த்தி வணங்குவதை அன்றிக்கு வேறென்ன செய்ய முடியும்?

ஸ்ரீ அன்னை, ஸ்ரீ அரவிந்தர் இருவருடைய திருவடிகளிலும் எனது கரணங்கள், மனம், ஜீவன் அனைத்தையும் சமர்ப்பணம் செய்கிறேன்.

ஓம் நமோ பகவதே ஸ்ரீ அரவிந்தாய!

1 comment:

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!