அதிமுக--பிஜேபி கூட்டணி எந்த லட்சணத்தில் இருக்கிறது? இப்படி இன்னொரு வலைப்பக்கத்தில் நேற்று எழுதிய பதிவுக்கு நண்பர் நெல்லைத்தமிழன் ஒரு காட்டமான பின்னூட்டத்தை எழுதியிருந்தார். அவருக்காக சேகர் குப்தா பிஜேபியின் கூட்டணிக் கட்சிகள் எதற்காக பிஜேபியுடன் வந்து ஒட்டிக் கொண்டன, எதற்காகக் கழன்று கொண்டன என்பதை அவரது பார்வையில் இந்த 26 நிமிட வீடியோவில் சொல்வதைப் பரிந்துரைக்கிறேன்.
NDA கூட்டணியில் பிஜேபியுடன் கூட்டு சேர்ந்திருந்த கட்சிகளில் 19வதாக ஒரு ராஜஸ்தான் கட்சி NDA வில் இருந்து கழன்று கொண்டதை விரிவாகச் சொல்வதற்கு முன்னால் ரஜனிகாந்த் அரசியலுக்கு முழுக்குப் போட்டதை வாய் நிறையச் சிரிப்புடன் சொல்லி ஆரம்பிக்கிறார் சேகர் குப்தா.நவம்பர் மாதத்திலேயே இங்கே சார்ட் போட்டுச் சொன்னதைத்தான் சேகர் குப்தாவும் கொஞ்சம் காரணங்களோடு சொல்கிறார்.
தமிழகத்தைப் பொறுத்தவரையில் பாஜக உமி, அதிமுக அரிசி. ஆனால் பாஜக தமிழகத் தலைவர், ஏதோ இது தேசியக் கூட்டணி போலவும், யார் முதலமைச்சர் என்பதை பாஜகவின் தேசியத் தலைமை அறிவிக்கும் என்று சொல்வது டூ டூ மச் இல்லையோ? முருகன் அவர்களின் பேச்சு எனக்கே கடுப்பாகிறது எனும்போது, போனாப் போகுதுன்னு ஆட்டத்தில் சேர்த்துக்கொண்ட அதிமுகவினருக்கு எப்படி இருக்கும்? அதிமுகவுக்கு பாஜக என்பது பெரும் சுமை, 8-10 சதவிகித ஓட்டிழப்பிற்குக் காரணமாக இருக்கும் கட்சி. பாஜக கூட்டணி இல்லாவிடில் குறைந்தது ஐந்து எம்பிக்களாவது அதிமுகவிற்கு இருந்திருக்கும்.
கேபி முனுசாமி பேசியது சரிதான். முருகன் அவர்கள் அதீதமாகப் பேசுவதை நிறுத்த வேண்டும். தைரியம் இருந்தால் தனித்துப் போட்டியிட்டு பாஜக, 2 சதவிகித வாக்குகளுக்கும் அதிகம் இருக்கும் கட்சி என நிரூபிக்கட்டும். நெல்லைத்தமிழன் எழுதியது இது . இதற்கான பதிலை இந்தப்பதிவின் முதல்வரியிலேயே இருக்கும் இணைப்பைக் க்ளிக் செய்து வாசிக்கலாம்.
NDA கூட்டணி பற்றிப் பேசுவதற்கு முன்னால், சோனியா இன்னமும் தலைமை தாங்கிக் கொண்டிருப்பதாகச் சொல்லப் படுகிற UPA ஐக்கிய முற்போக்குக் கூட்டணி யோக்கியதை என்னவாக இருக்கிறது என்பதையும் சேர்த்தே பார்த்து விடலாமா?
ஐமுகூ சேர்பெர்சனாக சரத் பவார் ஒன்றும் தவம் கிடைக்கவில்லை. அந்த வெற்று நாற்காலியால் அவருக்கு பைசா பிரயோசனமில்லை. ஆனால் சிவசேனா தரப்பிலிருந்து, எதிர்க்கட்சியாக இருப்பதற்கே தகுதியில்லாத நிலையில் சோனியா காங்கிரஸ் இருக்கும் நிலையில், பிஜேபிக்கு எதிரான கட்சிகளை ஒன்றிணைக்கும் சக்தியாக சரத் பவார் மட்டுமே இருக்க முடியும் என்று வலுவான வாதம் முன்னெடுக்கப்பட்டது கூட இருபது நாட்களுக்கு முன்னால் தான்! சோனியா தலைவராக இருந்த காங்கிரஸ் கட்சி அனேகமாக நாசமாகப்போய்விட்டது.2004 இலிருந்து சோனியா அலங்கரித்த ஐமுகூ சேர்பெர்சன் பதவியும் கூட எவரும் சீந்த விரும்பாத ஒன்றாகத்தான் இருக்கிறது.
காங்கிரசோடு சேர்ந்து நின்றாலே பீடை ஒட்டிக் கொள்ளும் என்று சொல்லாமல் கொள்ளாமல் எதிர்க்கட்சிகள் ஒதுங்கி நிற்கிற அளவுக்குக் காங்கிரசின் இன்றைய நிலைமை இருக்கிறது.
NDA ஆரம்பமானது 1998 இல். காங்கிரசுக்கு எதிரான கட்சிகளின் கூட்டணியாக அன்று தொடங்கப்பட்டது போன்ற நிலைமை இன்றிருக்கிறதா? பிஜேபியை மதவாதக்கட்சியாக, தீண்டத்தகாத ஒன்றாகப் பூச்சாண்டி காண்பித்த செகுலர் போலிகளின் காலம் முடிந்தே போய்விட்டது. வடவர்கள் கட்சி என்று சொல்லப்பட்ட நிலையும் மாறிவிட்டது. இந்தியா முழுதும் பரந்து விரியும் ஆலமரமாக பிஜேபி இன்று தனிப்பெரும் கட்சியாக வளர்ந்து நிற்பதில், துண்டு துக்காணிக் கட்சிகள் ஒட்டிக் கொடிருந்தால் என்ன? உதிர்ந்து போனால் என்ன? பிஜேபியின் இன்றைய தலைமை இதை ஒரு பெரிய விஷயமாகவே எடுத்துக் கொள்ளவுமில்லை, சேகர் குப்தா போல, என்னமோ பெரிய அரசியல் ரகசியத்தை உடைத்துவிட்டதுபோல பொதுவெளியில் விவாதிப்பதுமில்லை.
ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் ஏதோ ஒரு செயல் திட்டம், காலவரையறை என்று இருக்கக் கூடும் நான் அறிந்த வரை கம்யூனிஸ்ட் கட்சிக்கு அதுமாதிரி ஒரு strategy, tactics என்று ஏட்டளவிலாவது இருந்ததுண்டு ஆனால் கம்யூனிஸ்ட் கட்சிகள் எதுவுமே இப்போது புரட்சி, சோஷலிசம், என்றெல்லாம் பேசுவதில்லை. ஆனால், பிஜேபியினர் மட்டும் ஒரு இலக்கு, அதை அடைவதற்கான செயல்திட்டம் என வகுப்பதோடு அதை நடைமுறைப்படுத்த வருடம் முழுவதும் கடுமையாக உழைத்து வருவது கண்கூடாகவே தெரிகிறது.
இங்கே தமிழகத்தில் காலூன்ற பிஜேபி என்னமோ ரஜனி ஒருவரைத்தான் மலைபோல நம்பியிருந்தது போலவும், அவர் வீட்டுக்குள் சுருண்டு படுத்துக் கொண்டதும், அது கனவாகப் போனது போலவும் இங்கே நிறையப்பேர் நமட்டுச் சிரிப்புடன் அலைவது சரிதானா என்பதைக் காலம் தான் தீர்மானிக்க வேண்டும்.
மீண்டும் சந்திப்போம் .