Thursday, August 09, 2012

2G ஸ்பெக்ட்ரம் ஊழலும், இணையப் பரப்புரைகளும்! #செஞ்சது சரியா சொல்லு ராசா!.ராசா, ஜாமீனில் வெளியே வந்து, சில நாட்களில் புதிய தலை முறை தொலைக் காட்சிக்கு, தான் எந்தத் தவறுமே செய்யவில்லை என்ற ரீதியில் ஒரு பேட்டி கொடுத்திருந்தார்.உடனே 2G வழக்கும், திரு.ஆ.ராசா அவர்கள் நேர்காணலும் பின்னே ஒரு புஸ்ஸ் ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.... ஆன மாய பலூனும்! தகத்தகாய சூரியன் புறப்பட்டு விட்டார், ஊடகங்களின் பொய்யைக் கிழித்தெறிந்து விட்டாரென்ற ரீதியில் சில திமுக நண்பர்கள் கூகிள் ப்ளஸ், முகநூல் முதலான சமூக வலைத்தளங்களில் பரப்புரை செய்ய ஆரம்பித்தார்கள். 

இணையத்தில் கட்சி  வளர்ப்பதோடு, இணையத்திலேயே ஆ.ராசாவைக் குற்றமற்றவர் என்று நிரூபிக்க அவர்கள் செய்த பரப்புரை முயற்சிகள், கொஞ்ச நாட்களிலேயே சுருதி குறைந்து, சுத்தமாகக் காணாமலும் போய்விட்டது! ஆ.ராசா பேட்டியை அடுத்து அடுத்து, நாடாளுமன்றக் குழு முன்னால் சிபிஐ, அமலாக்கத் துறை  கொடுத்த அறிக்கையில் கலைஞர் தொலைக் காட்சிக்குப் பணம் வந்த விதம் லஞ்சமாகத்தான் என்றும், கனிமொழி, தயாளு இருவரையும் கைது செய்ய முகாந்திரம் இருப்பதாகச் சொன்னதில் சுருதிப்பெட்டியே தொலைந்து விட்டதோ என்னவோ! 

அப்புறம் ரிசர்ச் அண்ட் அனலிசிஸ்  விங் எனப்படும் இந்திய உளவுத் துறை ஆராசா  சட்டவிரோதமாக ஹவாலா மோசடி செய்து சுமார் நூற்றுப்பத்துக் கோடி ரூபாய் வெளிநாட்டில் முதலீடு செய்தார் என்று ஒரு குண்டைத் தூக்கிப் போட்டது! இப்போது அதன் மீது சிபிஐ விசாரனை தொடங்கியிருப்பதில் சென்னையை சேர்ந்த ராஜேஷ் ஜெயின் என்பவர் கொஞ்சம் வித்தியாசமாக அலறியிருக்கிறார்.

ஆ.ராசா அவரது  நண்பரோ, உறவினரோ, கூடப் படித்தவரோ, ஒரே பொதுவான மொழி பேசுபவரோ, ஒரே மதத்தை சேர்ந்தவரோ இல்லையாம்! ஊழல் என்பது இதையெல்லாம் கடந்தது, கூட்டாளிகளாக்குவது என்பது இவருக்குத் தெரியாதோ?

இன்றைய தினமணி தலையங்கம், இணைய உளுந்துகள் பரப்புரை முயற்சியை தவிடுபோடியாக்கியிருக்கிறது. கொஞ்சம் அல்ல! மொத்தமாகவே!
கலையும் ஒப்பனைகள்..!

First Published : 09 Aug 2012 01:52:58 AM IST2ஜிஅலைக்கற்றை ஒதுக்கீட்டில் ரூ.1.76 லட்சம் கோடி அரசுக்கு இழப்பு ஏற்படுத்தப்பட்டது என்பது சுத்தப் பொய். இது தலைமைக் கணக்குத் தணிக்கையாளரின் (சி.ஏ.ஜி.) கற்பனைக் கணக்கு' என்று வாதம் செய்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக் கட்சிகள், தற்போது அது கற்பனை அல்ல, உண்மைதான் என்று ஒப்புக்கொள்ளும் நிலைமைக்கு ஆளாகியுள்ளன.

முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்கிற பாஜக அரசின் கொள்கை முடிவின்படியே அலைக்கற்றை ஒதுக்கப்பட்டது என்று ஐக்கிய முற் போக்குக் கூட்டணிக் கட்சிகள் கூறின. ஆனால், முதலில் விண்ணப்பம் கொடுத்தவர்கள் என்ற அடிப்படையை, முதலில் பணம் அல்லது காசோலை கொடுத்தவர்கள் என்று மாற்றியது தவறு என்று நீதிமன்றம் தெளிவாகக் கூறிவிட்டதால், இதற்குப் பதில் சொல்லத் தெரியாமல் மத்திய அரசு திணறிக் கொண்டிருக்கும் வேளையில், இப்போது சி.ஏ.ஜி. போட்ட கணக்கில் தவறில்லை என்பதைச் சொல்லாமல் சொல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

செல்போன் நிறுவனங்களின் 122 உரிமங்களை உச்ச நீதிமன்றம் ரத்து செய்ததால், அந்த அலைக்கற்றைகளுக்கு மறுஏலம் நடத்தவுள்ள மத்திய அரசு, தற்போது நிர்ணயித்துள்ள அடிப்படைத் தொகை ஜிஎஸ்எம் (குளோபல் சிஸ்டம் ஆப் மொபைல்) சேவைக்கு 5 மெகாஹெர்ட்ஸ் ரூ.14,000 கோடி! சிஎம்டிஏ (கோட் டிவிஷன் மல்டிபிள் அக்ஸஸ்) சேவைக்கு ரூ.18,200 கோடி!

சிஏஜி போட்ட கணக்கு முழுக்க முழுக்க சரி என்பதை இதன் மூலம் நாம் அளவிட முடியும். தற்போது ஜிஎஸ்எம் சேவைக்கு நிர்ணயிக்கப் பட்டுள்ள கட்டணத்தின்படி 1,800 மெகா ஹெர்ட்ஸ் விற்பதால் அரசுக்குக் கிடைக்கக் கூடிய அடிப்படைத் தொகை ரூ. 2.52 லட்சம் கோடி.

2008-ல் நடந்த 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில், ஒரு மெகாஹெர்ட்ஸ் அலைக்கற்றை ரூ.1,658 கோடிக்கு விற்கப்பட்டது. 1,800 மெகா ஹெர்ட்ஸ் மூலம் அரசுக்குக் கிடைத்த வருவாய் ரூ.1.02 லட்சம் கோடி மட்டுமே! ஆனால் தற்போது, 1.50 லட்சம் கோடி அரசுக்கு கூடுதலாக கிடைக்கிறது.

இன்னும் சொல்லப்போனால், இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்காற்று ஆணையம் பரிந்துரைத்த தொகை, ஜிஎஸ்எம் சேவையில் 5 மெகா ஹெர்ட்சுக்கு ரூ.18,000 கோடி. இதை அப்படியே நிர்ணயம் செய்திருந்தால் அரசுக்குக் கிடைத்திருக்கக்கூடிய தொகை ரூ. 3.24 லட்சம் கோடி!

 2010-ல் மத்திய அரசு 3ஜி அலைக்கற்றைக்கு நிர்ணயித்த தொகையை அடிப்படையாகக் கொண்டு, 2ஜி அலைக்கற்றை ஏலத்தில் இந்திய அரசுக்கு ரூ.1.39 லட்சம் கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என்றும், உரிமம் பெற்ற நிறுவனங்கள், ஒதுக்கப்பட்ட 6.2 மெகா ஹெர்ட்சுக்கும் கூடுதலாக அலைக்கற்றையைப் பயன்படுத்தியதற்கான கட்டணம் வசூலிக்காத வகையில் அரசுக்கு இழப்பு ரூ.36,000 கோடி என்றும், ஆக மொத்தம் ரூ.1.76 லட்சம் கோடி அரசுக்கு இழப்பு' என்று இதைத்தானே தலைமைக்கணக்குத் தணிக்கைத் துறையினரும் சரியாகக் கணக்கிட்டுச் சொன்னார்கள்!

அந்த அறிக்கையைத்தானே வெறும் கற்பனை என்று மத்திய அமைச்சர்கள் கூறினார்கள்! கூட்டணிக் கட்சியின் மேடைகளில் எள்ளி நகையாடினர்! முறைகேடு நடந்தபோது அதற்கு அனுமதி மறுக்காத அன்றைய நிதியமைச்சரும், இப்போது உள் துறையிலிருந்து மீண்டும் நிதித்துறை பொறுப்பேற்றிருக்கும் ப. சிதம்பரமும், ஏனைய அமைச்சர்களும், முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கப் படாதபாடு பட்டார்கள்!

3ஜி அலைக்கற்றை விலையை 2ஜி விலையோடு ஒப்பிடலாமா, அம்பாஸிடர் காரையும் பிஎம்டபிள்யு காரையும் ஒப்பிட முடியுமா என்று கேலி பேசினார்கள்! மத்திய தகவல் தொடர்புத் துறை அமைச்சராக, ஆ.ராசாவுக்குப் பிறகு பொறுப்பேற்ற, கபில் சிபல், அலைக்கற்றை ஒதுக்கீட்டில் "இழப்பு ஒன்றுமே இல்லை' (ஜீரோ லாஸ்) என்று சொன்னாரே! ஆனால், இப்போது அதே அமைச்சர் இடம் பெற்றுள்ள மத்திய அமைச்சரவைதான் இந்தத் தொகையை நிர்ணயம் செய்திருக்கிறது!

ஜீரோ லாஸ் (இழப்பு ஒன்றுமே இல்லை) என்று அமைச்சர் கபில் குறிப்பிட்டாலும், ஏழைகளும் செல்போன் பயன்படுத்தவே குறைந்த கட்டணத்தில் விற்றோம் என்று ஆ. ராசா கூறினாலும், அந்த வாதங்கள் எடுபடவில்லை. ஏனென்றால், 2008 அலைக்கற்றை ஒதுக்கீட்டை பெற்றவர்கள் தங்கள் நிறுவனத்தின் பங்குகளை விற்று பல மடங்கு லாபம் பெற முடிந்தது.

ஸ்வான் டெலிகாம் 340 மில்லியன் டாலருக்கு 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு பெற்று, வெறும் 45% பங்குகளை 900 மில்லியன் டாலருக்கு விற்றது. யூனிடெக் நிறுவனம் 365 மில்லியன் டாலருக்கு அலைக்கற்றை ஒதுக்கீடு பெற்று, 60% பங்குகளை 1.36 பில்லியன் டாலருக்கு டெலினார் நிறுவனத்துக்கு விற்றது.

பொன்முட்டையிடும் வாத்து என்பது தெரிந்தே, அதைப் பற்றி கவலைப்படாமல் அல்லது அந்த உண்மையை வேண்டுமென்றே மறைத்து, சாதாரண வாத்துகளுக்கான விலைக்கு விற்றால், அதற்குப் பெயர் ஊழல் அல்லாமல் வேறென்ன?


 பிப்ரவரி 2012-ல் உச்ச நீதிமன்றம் 122 உரிமங்களை ரத்து செய்தது. இன்னமும் மத்திய அரசு ஏலம் நடத்தவில்லை. நடத்தவிடாமல் சில சுயநல சக்திகள் தடுக்கின்றன என்கிற சந்தேகமும் எழாமல் இல்லை. ஆகஸ்ட் 3-ம் தேதிதான் விலையை நிர்ணயித்துள்ளனர். ஏற்கெனவே இருக்கும் நிறுவனங்களைத் தவிர, புதிய நபர்கள் யாரும் ஏலத்தில் பங்குகொள்ள முன்வரவில்லையே ஏன் என்பதும் புதிராக இருக்கிறது. இதுகூடக் கூட்டு சதியோ என்னவோ, யார் கண்டது?

இந்த ஏலம் மேலும் சில மாதங்கள் தள்ளிப்போகலாம் என்று சொல்லப் படுகிறது. ஒப்பனைகள் யாவும் கலைந்துபோன நிலையில், புது ஒப்பனையுடன் தோன்றுவதற்காக இந்தக் காலநீட்டிப்பு அவசியமாக இருக்கிறதோ என்னவோ?

6 comments:

 1. //புது ஒப்பனையுடன் தோன்றுவதற்காக இந்தக் காலநீட்டிப்பு அவசியமாக இருக்கிறதோ என்னவோ?//

  எனக்கும் அப்படிதான் தோனுது..

  ReplyDelete
 2. தினமணியே ஒரு ஜால்ரா பண்டாரம் .வேலிக்கு ஓணான் சாட்சி என்பதுபோல் இதை போய் துணைக்கு அழைத்து ஒரு பதிவு .நல்ல காமெடி .

  ReplyDelete
 3. வாருங்கள் கோவி!

  நடப்பதைப் பார்த்தால், ஆ.ராசாவை மட்டுமே மாட்டி விட்டு, மற்ற அத்தனை பேருமே உத்தமர்களாக முயற்சிக்கிற மாதிரித்தான் தோன்றுகிறது! தவிர, வாங்கியதைத் திருப்பிக் கக்க வேண்டியிருக்குமே அந்த ஒன்று கூட இந்த புது ஒப்பனைக்குப் பின்னால் இருக்கலாம்!ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரம் இப்போதைக்கு ஓயப்போவதில்லை என்பது மட்டும் நிச்சயம்! தொட்ட எவரையும் இந்த ஸ்பெக்ட்ரம் விட்டு வைக்கப்போவதில்லை என்பது மட்டும் தெளிவு.

  பராரி என்கிற சுய விவரம் இல்லாத அனானி!

  தினமணி ஜால்ராதான்! அப்படிச் சொல்கிற உங்களைப்போன்றவர்கள்கூட யாருக்கோ ஜால்ரா அடித்துக் கொண்டுதான் இந்தமாதிரிப் பின்னூட்டம் எழுதுகிறீர்கள் இல்லையா!தினமணியையோ, இந்தப் பதிவையோ நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டுமென்பதில்லை!ஆனால், எதை வைத்து மாறுபடுகிறீர்கள்,நிராகரிக்கிறீர்கள் என்பதை சொல்வது பொருத்தம், நாகரீகமானதும் கூட!

  ReplyDelete
 4. @barari,

  யார் சொன்னார்கள் என்பதைவிட என்ன சொன்னார்கள் என்பதை ஆராய்ந்து பார்த்தால் உண்மை விளங்கும். இது பற்றிய கட்டுரை ஓன்று 08-08-2012 ஹிந்து நாளிதழில் "Cabinet decision on 2G auction price demolishes zero-loss theory" "This shows CAG was correct in calculation or Rs.1.76 lakh - crore loss" என்ற தலைப்பின் கீழ் வெளியாகி உள்ளது.முடிந்தால் அதையும் படித்துப் பாருங்கள். ஒருவேளை இனி ராசாவே சொன்னால்தான் நீங்கள் நம்புவீர்களோ என்னவோ!?

  ReplyDelete
 5. ராசா முகமுடி கிழிந்து ரொம்ப நாள் ஆகிவிட்டது ... அடுத்து மாட்ட போவது யார் என்பதுதான் கேள்வி ?

  ReplyDelete
 6. This comment has been removed by a blog administrator.

  ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்?அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்! அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!

இங்கேயும் பார்க்கலாமே....! Related Posts with Thumbnails