Friday, September 02, 2011

கழுதை மூக்கு வெளுத்துப் போச்சு! காங்கிரஸ் சாயம் வெளுத்துப் போச்சு!


எரியும் கொள்ளியுடன் திரியும் குரங்கு….!

திரு. பழ. நெடுமாறன் தினமணியில் எழுதிய செய்திக் கட்டுரை

First Published : 01 Sep 2011 12:00:00 AM IST


2001-ம் ஆண்டில் நாடாளுமன்ற நிலைக்குழு பிரதமரையும் உள்ளடக்கிய புதிய லோக்பால் சட்டத்துக்கான வரைவை அளித்தது.

2002-ல் நீதியரசர் எம்.என். வெங்கடசுப்பையா தலைமையில் அமைக்கப்பட்ட குழுவும் 2005-ல் காங்கிரஸ் ஆட்சியில் அமைக்கப் பட்ட நிர்வாகச் சீர்திருத்தக் குழுவும் வலிமையான லோக்பால் சட்டம், மக்கள் பட்டயம், நீதித்துறை ஊழலை ஒழிக்கும் வழிமுறைகள் ஆகியவை குறித்துப் பரிந்துரை செய்தன. ஆனால், இந்தப் பரிந்துரைகள் கிடப்பில் போடப் பட்டன.

பிரதமராக ராஜீவ் காந்தி 1985-ல் பொறுப்பேற்ற பிறகுதான் உயர்மட்ட ஊழல்கள் தலையெடுத்துப் பெருகத் தொடங்கின.

ராஜீவ் காலத்தில் போபர்ஸ் பீரங்கி பேர ஊழல், அவரைத் தொடர்ந்து காங்கிரஸ் பிரதமரான பி.வி. நரசிம்மராவ் காலத்தில் ஹர்சத் மேத்தா பங்குச் சந்தை ஊழல், தெல்கி முத்திரைத் தாள் ஊழல் போன்றவையும் மன்மோகன் சிங் பிரதமரான பிறகு, இந்த ஊழல்களுக்குச் சிகரம் போன்ற 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஊழல், காமன்வெல்த் விளையாட்டுப்போட்டி ஊழல் போன்றவை நாட்டையே அதிர வைத்தன.

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பிரதமர்கள் காலத்தில்தான் இத்தகைய பெரும் ஊழல்கள் நடைபெற்றன என்பது குறிப்பிடத் தக்கது.

நாடு சுதந்திரம் பெற்ற பிறகு கடந்த 64 ஆண்டுகளில் நடைபெற்ற ஊழல்களில் சம்பந்தப்பட்ட தொகை சுமார் 911 லட்சம் கோடியாகும் என குத்துமதிப்பாகக் கூறப்படுகிறது.

அயல்நாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் இந்திய அரசியல் வாதிகள், பெருமுதலாளிகளுக்குச் சொந்தமான கருப்புப் பணம் ரூ. 300 லட்சம் கோடிகளுக்கும் மேலாகும். ஏழை இந்தியாவின் கடன் தொகை 45 லட்சம் கோடி மட்டுமே. ஊழல் பணத்திலும், கருப்புப் பணத்திலும் ஒரு சிறு பகுதியைக் கொடுத்தால் ஏழை இந்தியாவின் கடன் சுமை அடியோடு நீங்கும். ஆனால், ஊழல் பணமும், கருப்புப் பணமும் பெருகிக் கொண்டிருக்கின்றனவே தவிர, குறைந்தபாடில்லை. இந்திய மக்கள் மீதான கடன் சுமையும் நாளுக்கு நாள் கூடிக்கொண்டே இருக்கிறது.

2ஜி, ஸ்பெக்ட்ரம் ஊழல், காமன்வெல்த் போட்டி ஊழல், வெளி நாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கிற கருப்புப் பணப் பிரச்னை ஆகியவை குறித்து சி.பி.ஐ. பல மாதங்களாக விசாரணை நடத்தியும் எத்தகைய முன்னேற்றமும் இல்லை என்பதை உணர்ந்த உச்ச நீதிமன்றம் அதிரடியாகத் தலையிட்டது.

சாட்டையைத் தனது கையிலெடுத்து சொடுக்கிய பிறகுதான் சி.பி.ஐ. செயல்படத் தொடங்கியது. உச்ச நீதிமன்றத்தின் கண் காணிப்பில் சி.பி.ஐ. செயல்பட வேண்டிய நிலை உருவாயிற்று. இதன் விளைவாக, மத்திய அமைச்சர்கள் உள்பட பலர் கைது செய்யப் பட்டனர். அப்படியானால் சி.பி.ஐ. இதுவரை மத்திய அரசின் விருப்பு, வெறுப்புகளுக்குத் தக்கப்படி செயல்பட்டது என்பது அம்பலமாயிற்று.

சி.பி.ஐ.யின் பொறுப்பில் விடப்பட்ட போபர்ஸ் ஊழலில் என்ன நடந்ததோ அது 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலிலும் நடந்திருக்கும் என்பதில் ஐயமில்லை..

இந்தப் பெரும் ஊழல்கள் நாடெங்கும் ஏற்படுத்திய அதிர்ச்சி அலைகளைத் தொடர்ந்து மக்கள் குறிப்பாக இளைஞர்கள் திடுக்கிட்டனர். ஆட்சிப் பொறுப்பில் இருப்பவர்கள் கொஞ்சமும் கூச்ச நாச்சம் இல்லாமலும் தங்குதடையற்ற வகையிலும், மக்கள் பணத்தைச் சூறையாடி வருவதைக் கண்டு கொதித்தெழுந்தனர். மக்களின் கொதிப்பின் அடையாளம்தான் அண்ணா ஹசாரே நடத்திய இயக்கமாகும்.

ஊழலுக்கு எதிராக அண்ணா ஹசாரே நடத்திய இயக்கத்தின் நோக்கம் என்ன என்பதைப் புரிந்து கொள்ளாமலேயே அந்த இயக்கத்தைக் கொச்சைப்படுத்த மத்திய அரசில் இருந்தவர்கள் முயன்றனர். நடைமுறை சாத்தியம் இல்லாதவற்றைக் கூறுவதாகக் குற்றம் சாட்டினர்.

அண்ணா இயக்கத்தை அலட்சியப்படுத்துவதன் மூலம் ஒழித்து விட முயன்றார்கள். ஆனால், ஊழல் ஒழிப்பு இயக்கம் மக்கள் இயக்கமாக வளரத் தொடங்கியதைக் கண்டு, அதிர்ச்சியடைந்த ஆட்சியாளர்கள் அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். இது மேலும் மக்களின் ஆத்திரத்தைத் தூண்டியது. அதைத் திசைதிருப்புவதற்காக அந்நிய வல்லரசுகளின் கையாள் என அவர் மீது பழி சுமத்தினார்கள்.

அமெரிக்காவுடன் அணு ஆயுத உடன்பாடு செய்துகொண்டு நாட்டை அமெரிக்காவுக்கு அடகு வைத்தவர்கள் தூற்றிய இந்தப் பழியைக் கண்டு மக்கள் நகைத்தார்கள். அரசியல் சட்டப்படி உருவாக்கப்பட்ட அமைப்புகளைப் புறக்கணித்துச் செயல்பட அண்ணா ஹசாரே முயல்வதாக பிரதமர் மன்மோகனும் இளவரசர் ராகுலும் குற்றம் சாட்டினார்கள்.

சோனியா தலைமையில் அமைக்கப்பட்ட தேசிய ஆலோசனைக் குழு பிரதமருக்கும் மேலான பிரதமராக சோனியாவையும், மத்திய அமைச்சரவைக்கு மேலான அமைச்சரவையாக இக்குழுவையும் ஆக்கியது. இத்தகைய குழு அமைப்பதற்கு அரசியல் சட்ட சம்மதம் உண்டா, நிச்சயமாக இல்லை.

நேரு, இந்திரா போன்றவர்கள் காலங்களில்கூட இத்தகைய குழுக்கள் ஒருபோதும் அமைக்கப்பட்டதில்லை. ஆனால், அவர்களைவிட பெரிய தலைவர்களாக மன்மோகனும் சோனியாவும் தங்களைக் கருதுகிறார்கள். உண்மையில் இவர்கள்தான் அரசியல் சட்டத்தை மதியாதவர்கள்.

நாடாளுமன்றத்தின் மாண்பை அண்ணா ஹசாரே இயக்கத்தினர் சீர்குலைக்க முயல்வதாக காங்கிரஸ் தலைவர்கள் குற்றம் சாட்டினார்கள். ஆனால், நாடாளுமன்றத்தைவிட மக்களே உயர்ந்தவர்கள் என்பதையும் அந்த மக்களிடமிருந்தே நாடாளுமன்றம் அதிகாரம் பெறுகிறது என்பதையும் இவர்கள் வசதியாக மறந்து விட்டார்கள்.

பத்திரிகைகள் பொறுப்பற்று நடந்துகொள்வதாக மன்மோகனும் அவரது சகாக்களும் சாடினார்கள். 2008 டிசம்பரில் பயனியர் ஏடு, ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்த முதல் செய்தியை வெளியிடாமல் போயிருந்தாலோ, அதைத் தொடர்ந்து பத்திரிகைகள் யாவும் இப்பிரச்னையை மக்களிடம் கொண்டு செல்லாமல் போயிருந்தாலோ, ராசாவும் கனிமொழியும் பிறரும் கைது செய்யப்பட்டிருக்க மாட்டார்கள்.

அதிகார பீடத்தில் உள்ளவர்களுக்கு மசியாமலும் யாருக்கும் அஞ்சாமலும் இந்த ஊழல்களைத் துணிவாக வெளியிட்டு மக்கள் கவனத்தை ஈர்க்காமல் போயிருந்தால் ஊழல்கள் மறைக்கப் பட்டிருக்கும்; ஊழல் பேர்வழிகள் தப்பியிருப்பார்கள்.

தனது நிழலின்கீழ் அமைச்சர்களும், கூட்டணித் தலைவர்களும் மேற் கொண்ட ஊழல்களை மன்மோகன் நினைத்திருந்தால் தடுத்திருக்க முடியும். போபர்ஸ் ஊழல் பிரச்னையில் ராஜீவ் அமைச்சரவையில் இருந்து மனசாட்சியுடன் வெளியேறிய வி.பி. சிங்குக்கு இருந்த நேர்மையும் துணிவும் மன்மோகனுக்கு இல்லை.

பிரதமர் பதவியில் ஒரு பொம்மையாக அவரை உட்கார வைத்துவிட்டு ஊழல்களையெல்லாம் திரைக்குப் பின்னாலிருந்து இயக்கிக் கொண்டிருக்கிற கரங்கள் யாருடைய கரங்கள் என்பது மக்களுக்குத் தெரியும். நீண்ட நாளைக்கு அதை மூடி மறைக்க முடியாது.

திரைக்குப் பின்னிருந்து இயக்கும் இந்தச் சக்திக்கும் மேலான அதிகாரம் படைத்த உச்ச நீதிமன்றம் விசுவரூபம் எடுத்து சி.பி.ஐ.யை தனது கண்காணிப்பில் வைத்துக்கொண்டதால்தான் ஊழல் பேர்வழிகள் சிறையில் அடைக்கப்பட்டார்கள். சி.பி.ஐ.யும் தவறு புரிய வழி இல்லாமல் போயிற்று.

பிரதமருக்கு ஆலோசனை கூறுபவர்களாகவும் அவர் சார்பில் பேச்சு வார்த்தைகள் நடத்துபவர்களாகவும் இருக்கக்கூடிய பிரணாப் முகர்ஜி,

ப. சிதம்பரம், கபில்சிபல் போன்றவர்களில் ஒருவர்கூட நாடறிந்த மக்கள் தலைவர் அல்லர். மேலிடத்தின் தயவால் இந்தப் பதவிக்கு வந்தவர்கள். மக்கள் மனத்துடிப்பை உணர முடியாதவர்கள் அல்லது மதிக்கத் தெரியாதவர்கள். இவர்களது தவறான ஆலோசனைகளை ஏற்றதால் பிரதமர் மக்கள்முன் தலைகுனிந்து நிற்கிறார்.

நாடெங்கும் ஊழல் காடாகிப் போனதோடு நிற்கவில்லை. மக்களுக்கு எதிரான அடக்குமுறைகளும் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன. அசாம், நாகாலாந்து, மிசோரம் போன்ற மாநிலங்களில் ஆயுதப் படைகளுக்கு வழங்கப்பட்டிருக்கும் சிறப்பு அவசரச் சட்டத்தின் மூலம் அந்த மக்களுக்கு சொல்லொண்ணாத கொடுமைகள் இழைக்கப்பட்டு வருகின்றன.

ஒரிசாவில் பாஸ்கோ திட்டத்துக்கு எதிராக மக்கள் போராட்டம் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது.

நியாம்கிரி மலையில் வேதாந்தா நிறுவனம் நடத்திவரும் சுரண்டலை எதிர்த்து பழங்குடியினர் போராடுகிறார்கள். நர்மதா அணையால் இடப்பெயர்வுக்கு உள்ளான பழங்குடி மக்கள் போர்க்கொடி உயர்த்தி உள்ளார்கள்.

சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் என்ற பெயரில் விளைநிலங்கள் பறிக்கப்பட்டு அந்நிய நிறுவனங்களுக்கு வழங்கப்படுகின்றன. நிலம் இழந்த விவசாயிகள் பிழைப்புத்தேடி நகரங்களை நோக்கிச் செல்கிறார்கள். பிழைக்க வழியில்லாத விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ளும் நிகழ்ச்சிகள் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டிருக்கின்றன.

மக்களுக்கும், நெசவாளர்களுக்கும், விவசாயிகளுக்கும் மின்வெட்டு. ஆனால், அந்நிய நிறுவனங்களுக்குத் தங்கு தடையில்லாத மின்சாரம் அளிக்கப்படுகிறது. மத்தியப் பிரதேசம், ஒரிசா, ஜார்க்கண்ட் மலைப் பகுதிகளில் உள்ள கனிம வளங்களை அந்நிய நிறுவனங்கள் சூறையாடுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.
இதற்கு எதிராகப் போராடும் மலைவாசி மக்களை மாவோயிஸ்டுகள் எனக் குற்றம்சாட்டி அவர்களுக்கு எதிராக ராணுவம் ஏவப்பட்டுள்ளது.
இலங்கையில் சிறுபான்மையினரான தமிழர்கள் திட்டமிட்ட இனப் படுகொலை செய்யப்படுவதற்கும் தமிழக மீனவர்கள் தொடர்ந்து கொல்லப் படுவதற்கும் இந்திய அரசு துணையாக நிற்கிறது.

இதற்கெதிராக தமிழ்நாட்டு மக்கள் நடத்திய போராட்டங்களை இந்திய அரசு அலட்சியம் செய்கிறது. மொத்தத்தில் மன்மோகன் தலைமையில் நடைபெறும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நாட்டை அழிவுப் பாதையில் இழுத்துச் செல்கிறது.

கொங்குவேள் எழுதிய பெருங்கதைக் காவியத்தில் வரும் ஒரு பாடலைத்தான் இன்றைய சூழ்நிலைக்கு ஒப்பிடத் தோன்றுகிறது.

குரங்கு ஒன்றை நண்டு கவ்வியது. தேள் கொட்டியது. பேயும் பற்றியது. இவை போதாதென்று அந்தக் குரங்கு மதுவைக் குடித்து, இஞ்சியைக் கடித்து, காஞ்சொறியின் பொடியைத் தூவிக்கொண்டு கையில் எரியும் கொள்ளிக்கட்டையைத் தூக்கிக்கொண்டு புறப்பட்டது.

அந்நிலையில் அது செய்யும் கேட்டுக்கு அளவுண்டா?

அதுபோல் புல்லியர்களிடம் ஆட்சிப் பொறுப்பு சேர்ந்துவிட்டால் அவர்கள் செய்யும் கேட்டுக்கும் அளவில்லை என்பதுதான் அந்தப் பாட்டின் பொருளாகும்.

குரங்குமாய் நண்டுகட்டித் தேளும் கொட்டிக்
குடியாத மதுக்குடித்துப் பேயு மேறி
இரங்கவரும் காஞ்சொறியின் பொடியும் தூவி
இஞ்சிதின்று கொள்ளிபிடித் தெழுந்தாற் போலத்
தருங்கருணை இல்லாத புல்லர் வாழ்வில்
தண்டிகையின் மீதேறிச் சம்பத் தேறிக்
கருங்கைமதக் களிறேறிக் கழுவி லேறிக்
காடேறி நாடேறித் திரிவார் கண்டீர்.

இதைப் படிச்சீங்களா?

கம் செப்டெம்பர்! காங்கிரஸ் சாயம் வெளுத்துப் போச்சு...!

No comments:

Post a Comment

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்?அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்! அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!

இங்கேயும் பார்க்கலாமே....! Related Posts with Thumbnails