ஊருக்கும் வெட்கமில்லை! அட, யாருக்கும் வெட்கமில்லை!



இடையில் சில நாட்கள் இணையத் தொடர்பு இல்லாததால், இந்தப் பக்கங்களில் எழுதுவது பன்னிரண்டு நாட்கள் தள்ளிப் போய்விட்டது!

அதனால் ஒரு குறைவும் இல்லையே! பூமிப் பந்து எப்போதும் போல தன்னுடைய இயல்பான அச்சில் தானே இயங்கிக் கொண்டிருக்கிறது என்கிறீர்களா! அதுவும் சரிதான்!!

இந்தப்பக்கங்களில் அரசியல் செய்திகளை ஒரு விமரிசனத்தோடு எழுதி வருவதில்,மிக முக்கியமான தேவையாக தேர்தல் சீர்திருத்தங்கள், நிர்வாக சீர்திருத்தங்கள் இவற்றை வலியுறுத்திக் கொண்டிருப்பதைக் கவனித்திருக்கக் கூடும். மேலோட்டமாகப் பதிவுகளைப் படித்தால், என்னவோ காங்கிரஸ்,  திமுக மீது நான் அளவுக்கு மீறிய வெறி, வெறுப்போடு எழுதிக் கொண்டிருப்பதுபோலத் தோன்றலாம்! உண்மையில், இந்த இரண்டையும் விமரிசித்துக் கொண்டிருப்பதே, அதனதன் இடத்தில் ஒரு மோசமான போக்குக்கு வித்திட்டு, அடக்க முடியாத அளவுக்கு அதை வளர்த்துக் கொண்டே போகும் விபரீதத்துக்காகத் தான்! இந்த இரண்டு அரசியல் கட்சிகளும் எத்தனை மோசமான பக்க விளைவுகளை  உருவாக்கி இருக்கின்றன என்பதைக் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்!


புராணக் கதைகளில், ரக்த பீஜன் என்ற அசுரன், அவன் வெட்டுப்பட்டு சிந்துகிற ஒவ்வொரு ரத்தத் துளியிலும் இன்னொரு ரக்தபீஜன் உருவாகும் விதம் சொல்லப் படுகிற மாதிரி, மோசமான அரசியல் கட்சிகள், அரசியல் தலைவர்கள் செய்யும் ஒவ்வொரு தவறும் இன்னும் இன்னும் பல ரக்த பீஜர்களை உருவாக்கிக் கொண்டு இருப்பதை, கொஞ்சம் யோசித்துப் பார்த்தோமானால் புரியும்.சிக்கல்களுக்கு மேல் சிக்கல்களாகப் படு முடிச்சாகப் போட்டுக் கொண்டே போனால் அதற்கு என்ன தீர்வு இருக்க முடியும்?

பழைய ஏற்பாட்டில் புத்திசாலியான அரசன் சாலமன் செய்த மாதிரி, ஒரே வெட்டு! சீர்திருத்தம் செய்யவே முடியாமல் போகிற நிலையில், பழைய கட்டுமானங்களை ஒட்டுமொத்தமாகத் தகர்த்துவிட்டு, மறுபடியும் அஸ்திவாரத்தில் இருந்து ஆரம்பிப்பது தான் ஒரே தீர்வு!

எங்கே போகிறோம், என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்பது சிந்திக்கத் தெரிந்தவர்களுக்கு எழும் மிக அடிப்படையான கேள்விகள். அந்த வகையில் பதினைந்து நாட்கள் இடைவெளியில், வெவ்வேறு விஷயங்களைத் தொட்டு, அதே நேரம் சொல்ல முனைகிற விஷயம் ஒன்றாயிருக்கிற இரண்டு செய்திக் கட்டுரைகள், தினமணி நாளிதழில் வெளியானவை, 
தினமணிக்கு நன்றி சொல்லி, என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்போமா?
யாருக்கும் வெட்கமில்லை!!


First Published : 26 Sep 2011 02:41:41 AM IST


தமிழ்நாட்டில் அரசியல் கூட்டணி என்பது பெரும்பாலும் கொள்கை, கோட்பாடு, செயல்திட்டம், கருத்தொற்றுமை என ஆக்கப்பூர்வமான பல காரணிகளின் அடிப்படையில் அமையும்.(??)

அந்தக் கூட்டணியானது தேர்தலைச் சந்தித்து வெற்றி பெற்றாலும் சரி, தோல்வி அடைந்தாலும் சரி, அடுத்த தேர்தல் வரும் வரையில் ஒருவரை ஒருவர் பற்றிக் கொண்டும், சுக துக்கங்களில் பங்கெடுத்துக் கொண்டும், சரியோ, தவறோ கொண்ட கூட்டணிக்காக ஒருவரை ஒருவர் ஏந்திக் கொண்டும் மக்கள் மன்றத்தில் காட்சி கொடுத்துக் கொண்டு இருப்பார்கள். அது ஒரு காலம்.

அரசியல் பரிணாம வளர்ச்சியோ என்னவோ, அண்மைக் காலமாக "அரசியல் கூட்டணி' என்ற அந்த ஆக்கப்பூர்வ, ஆத்மார்த்தமான உறவு மாறி "தேர்தல் உடன்பாடு' என்ற ஒரு வர்த்தக ரீதியிலான சொல்லாடல் மூலம் கட்சிகள் தேர்தல் களத்தில் இறங்கி, மக்களைச் சந்தித்து வருகின்றன.

இந்த "உடன்பாடு' என்பது கொண்ட கொள்கையின் அடிப்படையில் அல்லாமல் "பரஸ்பர ஆதாயம்' என்ற நோக்கத்தின் அடிப்படையில் கையெழுத்தாகிறது. அதில் அரசியல் சார்ந்த சுயலாபக் கணக்கு மட்டுமே பிரதானம். இந்த "உடன்பாடு" எப்போது ஏற்படும், எப்போது முறியும் என்பதற்கு எவ்வித உத்தரவாதமும் இல்லை என்பதுதான் தமிழக மக்கள் இதுவரையில் கண்டு வரும் அரசியல் காட்சிகள்.

 "தேர்தல் உடன்பாடு' மூலம் வெற்றி பெற்றாலும் சரி, தோல்வி அடைந்தாலும் சரி, அவரவர் விருப்பங்கள் நிறைவேறாவிட்டாலோ அல்லது "உடன்பாடு" மூலம் நஷ்டம் ஏற்பட்டாலோ அடுத்த கணமே அந்த "உடன்பாடு முறிந்து விட்டதாக இரு தரப்பினருமே வெட்கத்தை விட்டு அறிவித்து விடுகின்றனர். அடுத்த "உடன்பாட்டு"க்கும் தயாராகி விடுகின்றனர்.


இதையும் தமிழக மக்கள் பொறுத்துக் கொள்வதைத் தவிர வேறு வழி ல்லை. ஒப்பந்தத்தை முறித்துக் கொண்டவர்களே அடுத்த ஆறு மாதத்தில் "புதிய உடன்பாடு" செய்து கொண்டு ஜனநாயக மேடையில் ஏறி, எதிரில் இருப்பவர்கள் ஏமாளிகள் என நினைத்துக் கொண்டு காட்சிகளை அரங்கேற்றி வருகின்றனர்.

இப்போது அதையும் தாண்டி "தேர்தல் உடன்பாடு" என்பது அந்தத் தேர்தல் வரையாவது நீடிக்குமா? என ஐயம் கொள்ளும் அளவுக்குத் தமிழக அரசியல் களத்தில் நாள்தோறும் புதிய புதிய காட்சிகள் அரங்கேறி வருகின்றன.

ஆம்! நடந்து முடிந்த சட்டப் பேரவைத் தேர்தலில் அதிமுக, தேமுதிக, இடது சாரிக் கட்சிகள் என சில கட்சிகள் "தேர்தல் உடன்பாடு" செய்து கொண்டன. அந்த உடன்பாடு தேர்தல் முடியும் வரையாவது நீடிக்குமா என்ற கேள்வி எழும் வகையில் நிகழ்வுகள் இருந்தன. அதிமுகவுடன் "தேர்தல் உடன்பாடு" செய்து கொண்ட கட்சிகள் எல்லாம் வேறு ஓர் இடத்தில் ஒன்றுகூடி "புதிய உடன்பாடு" காண முயற்சித்தன. வெளியில் வீர முழக்கமிடும் கட்சிகள், தனி அறையில் அமர்ந்து சிந்திக்கும் போது தான் அவர்களது நோக்கம் என்ன? பலம் என்ன? பலவீனம் என்ன என்பது உறைக்கும் போலும்.

தலைதெறிக்க வெளியே ஓடிவந்து கேட்டதை விட்டுவிட்டு "அம்மா" கொடுத்ததை வாங்கிக் கொண்டு அரிதாரம் பூசிக் கொண்டார்கள். யார் செய்த புண்ணியமோ, ஜனநாயகம் காப்பாற்றப்பட்டது. இந்த நவீன காலத்து அதிரடி அரசியல் அத்துடன் முடிந்தது என்று பார்த்தால் இப்போது மீண்டும் தலைதூக்கியுள்ளது.

சட்டப் பேரவைத் தேர்தல் முடிந்த கையோடு உள்ளாட்சித் தேர்தல் வந்துள்ளது. பழைய கூட்டாளிகள் தொடருவார்கள் என பார்த்தால், திமுக கூட்டாளிகள் ஒட்டிக் கொண்டது போதும் எனக் கூறிவிட்டு வெட்டிக் கொண்டனர்.

அதிமுக தனது வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்து "சாதனை" படைத்துள்ளது.

அந்த "சாதனை" கூட்டணிக் கட்சிகளுக்கு வேதனையை ஏற்படுத்தி உள்ளது!அது ஒருபுறம் இருக்கட்டும்!!

தங்களை அசைக்க முடியாது, அழிக்க முடியாது என வலிமையைப் பறைசாற்றிக் கொள்ளும் அரசியல் கட்சிகள், ஜனநாயகத்தில் மக்களைத் தனியாகச் சந்திக்கத் திராணியற்றுத்தான் கூட்டணி, தேர்தல் உடன்பாடு என்ற மாய்மால வார்த்தை கூறி மக்களை ஏமாற்றுகின்றன. அந்தக் கூட்டணி அல்லது தேர்தல் உடன்பாடு என்று வந்த பிறகாவது அவர்கள் ஒருவகைப்பாட்டில் நிற்கிறார்களா என்றால் அதுவும் இல்லை. "மாற்றம் வரும் என்று எண்ணி வாக்களித்த மக்களுக்கு மயக்கம் வரும் நிலையைத் தான் அரசியல் கட்சிகள் ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன.

இந்த ஆபத்தான அசிங்கத்தைச் செய்வதில் பெரிய பங்குதாரருக்கும் வெட்கமில்லை, சிறிய பங்குதாரருக்கும் வெட்கமில்லை. 

மொத்தத்தில் யாருக்கும் வெட்கமில்லை!



உடனடித் தேவை - நிர்வாகச்சீர் திருத்தங்கள்!!

First Published : 15 Sep 2011 01:22:54 AM IST


அண்ணா ஹசாரே தலைமையில் நடந்த போராட்டத்துக்குக் கிடைத்த பேராதரவுக்குக் காரணம் தெளிவாகத் தெரிகிறது. உயர்மட்ட ஊழல்கள் படித்தவர்களிடம் ஆதங்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்றால், கீழ்மட்ட அரசுத்துறைகளில் தலைவிரித்தாடும் லஞ்ச ஊழல்களும், சேவைகளைப் பெறுவதில் ஏற்படும் சிக்கல்களும் தடைகளும், சாதாரண மக்களை வெறுப்படையச் செய்துள்ளது.

ஆக, இந்தியாவில் நாடாளுமன்ற, சட்டமன்றப் பிரதிநிதித்துவ ஜன நாயகக் குடியரசு முறை உண்மையாகவே மக்களுக்கு நன்மையளிக்க வேண்டும் என்றால் நமது ஆளுகையில் உடனடியாகச் சில மாற்றங்கள் தேவைப் படுகின்றன.

நாட்டில் கரை புரண்டோடும் லஞ்ச ஊழல் கட்டுப்படுத்தப்பட வேண்டும். அதற்கு,(முதலாதாக) ரசுப் பணிகளில் அதிகபட்ச வெளிப்படைத் தன்மையும், தகவல் தொழில்நுட்ப உதவியும் அவசியமாகிறது.

அடுத்தது, அரசு அமைத்துள்ள பல்வேறு கண்காணிக்கும், முறைப் படுத்தும் அமைப்புகள் முழுமையாகவும், சுதந்திரமாகவும் செயல்பட வேண்டும்.

மூன்றாவதாக, முடிவெடுக்கும் அதிகாரம், மக்கள் வரை (அதாவது கிராம சபைகள் வரை) பரவலாக்கப்பட வேண்டும்.

இவையெல்லாமும் சாத்தியமாக வேண்டுமென்றால், மேலிருந்து கீழ்வரை எல்லாத் துறைகளிலும் நிர்வாகச் சீர்திருத்தம் செய்யப்பட வேண்டும். ஆட்சிக்குத் தலைமை வகிப்பவர்கள், நிர்வாகச் சீர்திருத்தம் வேண்டும் என்று தணியாத ஆர்வமும், அதீத முனைப்பும் கொண்டால் மட்டுமே இந்த மாற்றம் ஏற்படும்.

இன்றைய அரசியல்வாதிகள் எல்லோருமே மோசமானவர்கள் என்று மேம்போக்காகப் பேசுபவர்கள், இன்று சில மாநிலங்களிலாவது, தொலை நோக்குப் பார்வையுடன், மக்கள்நலன் சார்ந்த, சிறந்த நிர்வாகத்தைக் கொடுத்துவரும் ஆட்சிகளைக் கவனித்தால், தங்கள் கருத்தை மாற்றிக் கொள்வார்கள்.

அண்ணா ஹசாரே உண்ணாவிரதமிருந்து போராடிய ஜன லோக்பால் மசோதாவில் மிக விரும்பத்தக்க அம்சம் ஒன்று உண்டென்றால், அது வலுவான மக்கள் சாசனம் என்பதுதான்.

ஆனால், ஜன லோக்பால் மசோதாவுக்கு முன்னோடியாக, கடந்த ஆண்டே, மத்தியப் பிரதேச மாநில அரசு, இந்த வலுவான மக்கள் சாசனத்தின் சாராம்சமான, "அரசு சேவை உத்தரவாத உரிமைச்சட்டம்" என்ற புதிய சட்டத்தை முதன்முதலாக இயற்றிப் புரட்சிக்கு வித்திட்டது.

இச்சட்டத்தின்படி, எல்லா அரசு அலுவலகங்களும், அவர்களது செயல்படும் நடைமுறைகள், சட்டதிட்டங்கள், அலுவலர்களின் பெயர்கள், தொடர்பு எண்கள் ஆகியவற்றைப் பொதுமக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும். ரேஷன் அட்டை, ஜாதிச்சான்றிதழ், மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு உள்பட எல்லாவிதமான அரசு சேவைகளுக்கும் விண்ணப்பித்தவர்களுக்கு உடனடியாக ரசீது வழங்க வேண்டும். ரசீதில் குறிப்பிடப்பட்டுள்ள காலக் கெடுவுக்குள் சேவையை அளிக்க வேண்டும். காரணமின்றித் தாமதமானால், குறைந்தபட்ச அபராதமும், தாமதமாகும் ஒவ்வொரு நாளுக்கும் கூடுதல் அபராதமும் விதித்து, அலுவலக ஊழியரின் சம்பளத்திலிருந்து பிடித்தம்செய்து, பாதிக்கப்பட்ட குடி மகனுக்கு அளிப்பதற்கும் இச்சட்டம் வழிவகை செய்கிறது. அலுவலர்கள் மட்டுமல்லாது, அமைச்சர்களும், முதலமைச்சரும்கூட, இச்சட்டத்தின்கீழ் கொண்டு வரப்பட்டிருக்கிறார்கள்.

மத்தியப் பிரதேச அரசைத் தொடர்ந்து, பிகார், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர், கோவா மாநில அரசுகளும் இந்த "அரசு சேவை உத்தரவாத உரிமைச் சட்டத்தை" இயற்றியுள்ளன. கேரள அரசும் இதற்கான மசோதாவைக் கொண்டுவந்துள்ளது.

1988-ம் ஆண்டு இயற்றப்பட்ட "ஊழல் தடுப்புச் சட்டத்'தின்கீழ், இன்றைக்கு அரசு ஊழியர்களை விசாரித்து, நடவடிக்கை எடுப்பதற்கு மிகக் கால தாமதமாவதால், ஊழல்பேர்வழிகள் தப்பித்து விடுகிறார்கள். இப்படிப்பட்ட தாமதங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும்விதமாக, மாநில அரசு ஊழியர்கள் மட்டுமல்லாது, ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மீதான லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளையும்கூட, அதிகபட்சமாக ஓராண்டுக்குள் விசாரித்து, குற்றம் நிரூபிக்கப் பட்டாலோ அல்லது வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்திருந்தாலோ, அந்த ஊழியரின் சொத்துகளை, தீர்ப்பு வழங்கப் பட்ட 30 நாள்களிலேயே பறிமுதல் செய்து, அரசுடைமை ஆக்குவதற்கான மற்றொரு புரட்சிகரமான புதிய மசோதாவை, பிகார் அரசு 2009-ம் ஆண்டு வடிவமைத்தது.

"பிகார் சிறப்பு விரைவு நீதிமன்றங்கள் சட்டம் 2009" என்று பெயரிட்டு, ஓராண்டு போராடி, குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறப்பட்டுள்ள இந்தச் சட்டத்திலிருந்து, பணியிலிருந்து ஓய்வுபெற்ற ஊழல் பேர்வழிகளும் தப்பிக்க முடியாது என்பது மற்றொரு சிறப்பு. இந்த சிறப்பு விரைவு நீதி மன்றங்கள், நன்றாகச் செயல்படத் தொடங்கி ஊழல் பெருச்சாளிகளின் சொத்துகள் அரசுடைமையாக்கப்படுவதுடன், அவர்களது பங்களாக்கள், அரசுப் பள்ளிகளாக மாற்றப்பட்டு வருகின்றன.

பிகாரைப் பின்பற்றி, சமீபத்தில் மத்தியப் பிரதேசம், ஹிமாச்சல பிரதேசம், ராஜஸ்தான் மாநில அரசுகளாலும், இதே மசோதா அம்மாநிலச் சட்ட மன்றங்களில் நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இவை மட்டுமல்லாமல், ம.பி., பிகார், ராஜஸ்தான் ஆகிய அரசுகள் வெளிப்படையான பல நிர்வாகச் சீர் திருத்தங்களை அடுத்தடுத்துக் கொண்டுவந்து, மக்களை அதிகாரப்படுத்தும் வேலைகளில் இறங்கியுள்ளன. மத்தியப் பிரதேச அரசு, சுயாட்சியுடன் செயல்படும் நல்லாட்சி மற்றும் கொள்கை ஆய்வு மையம் ஒன்றை ஏற்படுத்தி, அந்த மையம் அளிக்கும் பல ஆலோசனைகளை அமல்படுத்தி வருகிறது.


வெளிப்படையான நிர்வாகத்தை வலியுறுத்தும் உலகளாவிய அமைப்பான "டிரான்ஸ்பரன்ஸி இண்டர்நேஷனல்' இந்த மூன்று மாநில அரசுகளின் முன்மாதிரி நிர்வாக நடவடிக்கைகளைப் பாராட்டியுள்ளது. சொல்லப் போனால், இந்த மாநில அரசுகளுக்குள், சிறப்பான நிர்வாகத்தை அளிப்பதில் ஓர் ஆரோக்கியமான போட்டியே நிலவுகிறது.

அதேபோல, 15-க்கும் மேற்பட்ட மாநில அரசுகள், 2009-ம் ஆண்டு நாடாளுமன்றத்தால் இயற்றப்பட்ட "கல்வி உரிமைச் சட்டத்'தை அமல் படுத்தவும், அது தொடர்பான விதிகளை இயற்றவும் தொடங்கியுள்ளன. ம.பி. அரசு, ஆசிரியர்கள் நியமனத்தில், பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு அளித்துள்ளது. கேரள அரசு, அம்மாநில பாடத்திட்டக் குழுவை சுயஅதிகாரம் கொண்ட, அரசியல் குறுக்கீடுகள் இல்லாத சுதந்திர அமைப்பாகச் செயல்பட அனுமதித்து, பள்ளிக் கல்வித்துறையில் சிறந்த மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது.


பல மாநில அரசுகள், உள்ளாட்சிகளில் பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு அளித்தும், அதன்படி உள்ளாட்சித் தேர்தல்களை முறையாக நடத்தியும், அடிப்படை ஜனநாயகத்துக்கு வலுசேர்த்து வருகின்றன. இது மட்டுமல்லாது, பல மாநில அரசுகள், ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்க, மாநில லோக்ஆயுக்த நீதிமன்றங்களை அமைத்துள்ளன.

இவையெல்லாம், மக்களை மதிக்கிற, பங்குதாரராகப் பார்க்கிற, ஆரோக்கியமான அணுகுமுறை இந்த மாநிலத் தலைவர்களிடம் ஏற்பட்டுள்ளது என்பதைப் பிரதிபலிக்கிறது. பின்தங்கிய மாநிலங்கள் என்று கூறப்படும் மத்தியப் பிரதேசம், பிகார் ஆகியவற்றின் முதல்வர்கள், மாநிலங்களின் விடிவெள்ளியாக, காமராஜைப் போன்று எளிமையாக மக்கள் அணுகமுடியும் விதத்திலும், ஆரவாரமின்றியும், தீர்க்க தரிசனத்துடனும் செயல்பட்டு வருவது மிகுந்த மகிழ்ச்சியை உண்டாக்குகிறது.

ஆனால், துரதிருஷ்டவசமாக, இந்த மாநிலங்களில் ஏற்பட்டு வரும் வெளிப்படைத்தன்மையும், ஊழல் ஒழிப்புச் சட்டங்களும், நிர்வாகச் சீர்திருத்தங்களும், தொலைநோக்குப் பார்வையும், மக்களை அதிகாரப்படுத்தும் நடவடிக்கைகளும் நம் மாநிலத்தில் அறவே இல்லை. 

முந்தைய திமுக அரசும் சரி, இன்றைய அதிமுக அரசும் சரி, மக்களை அதிகாரப்படுத்தும் வகையாக இல்லாமல், நுகர்வோராக, பயனாளியாக, மனு போடுபவராக மட்டுமே வைத்துக்கொள்ள விரும்புகின்றன.


மக்கள் நலத்திட்டங்கள் இரு வகைப்படும், ஒன்று இலவச மதிய உணவு, தரமான இலவசக் கட்டாயக் கல்வி, தரமான இலவச மருத்துவம், மானிய விலையில் தரமான உணவுப்பொருள்கள், ஆதரவற்றோருக்கு உதவித் தொகை போன்ற மேம்படுத்தும் திட்டங்கள். மற்றவை, இலவச வண்ணத் தொலைக்காட்சி, இலவச வேட்டி சேலை, இலவச அரிசி, இலவச மிக்சி, லேப்டாப், இலவச தாலி போன்ற பிற்போக்கு வகையறாக்கள்.


வாக்கு வங்கியை நிலைநிறுத்த நலத்திட்டங்கள் என்ற போர்வையில் மக்களிடம் பல்வேறு இலவச நுகர்வுப் பொருள்களைத் திணித்து, சலுகைகளை அளித்து, அவர்களை வளர்ச்சி அரசியல் ஈடுபாட்டிலிருந்து அன்னியப்படுத்தும் செயல்பாடுகளை ஆள்பவர்கள் துரிதப்படுத்துகிறார்கள். இது தமிழக மக்களின் அரசியல் ஈடுபாட்டை அழித்தொழிக்கும் ஆபத்து கொண்டது.

இரு கழக ஆட்சியிலுமே, சட்டமன்றத்தில் ஆரோக்கிய விவாதங்கள் குறைந்து, எதிர்க்கட்சியை எதிரிக்கட்சியாகக் கருதி தூற்றுவதும், ஆளும் கட்சித் தலைவரை உச்சகட்ட செயற்கைத்தன்மையுடன் வானளாவப் புகழ்ந்து குளிர்விப்பதுமே புளித்துப்போன வாடிக்கையாகிவிட்டது.

ஆளும் கட்சி, கூட்டணிக்கட்சிகள், எதிர்க்கட்சிகள் ஆகியவற்றின், குறிப்பாக இக்கட்சித் தலைவர்களின் இத்தகைய பிற்போக்கான சந்தர்ப்பவாத அணுகுமுறையானது, தமிழக ஜனநாயகத்தளத்தைப் படிப்படியாக அரித்து வரும் கரையான்கள் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். பின்னர், ஜனநாயக முகமூடி அணிந்துகொண்டு, யதேச்சாதிகாரம்தான் மீண்டும் மீண்டும் தலைதூக்கும். கடந்த ஆட்சி, நமக்கு மிகப்பெரிய படிப்பினையைக் கொடுத்திருக்கிறது.

இப்படிப்பட்ட பின்னணியில், மக்களுக்குப் பயனளிக்கும் சட்டங்களை இயற்றி அமல்படுத்தும்படியும், மக்களை அதிகாரப்படுத்தும் வகையான, வெளிப்படைத்தன்மையில் ஊறிய நிர்வாகச் சீர்திருத்தங்களைக் கொண்டு வரும்படியும், அரசை வலியுறுத்துவது நமது வரலாற்றுக் கடமையாகிறது.
---------------------------------------------------------------------------------------------------------------------------------------
என்ன நினைக்கிறீர்கள் என்பதைக் கொஞ்சம் சொல்லுங்களேன்!

No comments:

Post a Comment

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!