தேடலின் முந்தையபகுதி இங்கே
இந்தச் சின்னப் பையன் என்ன என்னவெல்லாமோ சொல்லிக் கொண்டே போகிறானே,இத்தனை வயதாகியும் எனக்கு இதெல்லாம் ஒன்று கூடப் புரியவில்லையே என்று எண்ணிக் கொண்டே ஹரி மோகனுக்குக் கண்ணன் இன்னும் என்ன சொல்லப் போகிறான் என்பதைத் தெரிந்து கொள்ள ஆவலாக இருந்தது.கண்ணனையே ஆர்வம் ததும்பியவனாய்ப் பார்த்துக் கொண்டிருந்தான்.
"இதைப் புரிந்துகொள் ஹரி மோகன். எந்த ஒரு செயலையும் மேலோட்டமாகவே பார்த்தால் அதன் உண்மையைப் புரிந்து கொள்ள முடியாது. நல்ல செயல்கள், நல்ல பழக்கங்கள் என்று செய்து வந்திருக்கிறாய், அதனால் புண்ணியம் கிட்டும் என்கிற நம்பிக்கை-ஆனால், அதை ஒரு வரட்டுத்தன்மையோடு கூடிய பழக்கமாகவே செய்து வந்ததால்,உண்மையை விலக்கி விட்டு வெறும் சடங்கு என்ற அளவோடு நிறுத்திக் கொள்வதால் வரும் பின் விளைவு இது.உயிரில்லாத சடங்கு என்ன தரும்? உனக்கு மகிழ்ச்சி இல்லை. உன்னுடைய செயல்களினால் விளையும் உணர்ச்சிகளின் சக்தியைத் தடுக்க உன்னால் முடியவில்லை. உன்னுடைய இந்த சிறிய அகங்காரத்தைக் கூட உன்னால் வெற்றி கொள்ள முடியவில்லை."
"அதே மாதிரி இந்த செல்வரங்கமும் கூட எந்த தீய செய்கைகளால் மகிழ்ச்சி கிடைக்கும் என்று செய்தானோ,அவைகளாலும் சந்தோஷமடையவில்லை. மாறாக, பழக்கங்களின் அடிமையாகவே இருப்பதில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்ள முடியாமல், இந்த வாழ்க்கையிலேயே நரக வேதனையை அனுபவித்துக் கொண்டிருக்கிறான்"
"இது தான் நல்வினை, தீவினை என்கிற இருவிதமான தளைகள். அறியாமையோடு கூடிய எண்ணப் பதிவுகளே இப்படிப் பந்த பாசம் ஆகிய விலங்குகளாக ஒருவனைக் கட்டிப் போட்டு வைக்கிறது. வேதனைப் பட வைக்கிறது.ஆனால் இதுவும் வேண்டியதே. செல்வரங்கத்தைப் பார். இந்த பயங்கரமான வேதனை தான், எது உண்மையான உறவு, எது நிலையானது, உண்மையானது என்பதைத் தேடச் சொல்லிக் கொடுக்கும். இதிலிருந்து எப்படி விடுபடுவது என்பதையும் ஒரு நேரம் வரும் போது சொல்லிக் கொடுக்கும்."
ஹரிமோகன் ஒரு பெருமூச்சுடன் சொன்னான்: "கண்ணா, நீ அழகாகத்தான் பேசுகிறாய். கேட்கும் போது நன்றாகத்தான் இருக்கிறது. ஆனாலும், உன்னை நிஜமாக நம்ப முடியவில்லை. சுகமும் துக்கமும், மனதின் ஒருவிதமான நிலைதான் என்கிறாய். இருக்கலாம், ஆனால் வெளிச் சூழ்நிலைகள் தானே அதற்குக் காரணமாய் இருக்கிறது? பட்டினியோடு இருப்பவன் மனது எப்படி சந்தோஷமாக இருக்க முடியும்? நோயாலும், வலியாலும் துடித்துக் கொண்டிருக்கும் ஒருவனால் எப்படி, அதை மறந்து, உன்னைத்தான் நினைக்க முடியுமா? "
"முடியும் ஹரிமோகன், முடியும், அப்படித்தான் இருக்க வேண்டும் என்பதை உனக்குக் காட்டுவதற்காகத்தானே இவ்வளவு நேரம் சொல்லிக் கொண்டிருக்கிறேன், இங்கே பார்" என்றான் கண்ணன்.ஹரிமோகனுடைய கண் முன்னால் காட்சி மாறியது. செல்வரங்கத்தின் வீட்டில் அவன் இப்போது இல்லை. ஒரு அடர்ந்த கானகத்தில் ஒரு யோகி ஆழ்ந்த நிஷ்டையில் இருப்பதைப் பார்த்தான். அவருடைய காலடியில், ஒரு பெரிய புலி அமைதியாகக் காவலுக்கிருப்பதைப் போல, காத்திருப்பதையும் பார்த்தவுடன், ஹரிமோகனுடைய உடல் நடுங்க ஆரம்பித்தது. புலியைப் பார்த்தவுடன், யோகியைப் பற்றியோ, பின்னணியில் தெரிந்த அழக்கான மலைச் சிகரம்,சுகமான தென்றல் வீசும் இனிய சூழல் எதுவும் ஹரிமோகனுக்குப் புலப்படவில்லை. திரும்பி ஓடி விடலாம் என்று திமிறியவனை, கண்ணன் சிரித்துக் கொண்டே யோகியின் அருகாமையில் இழுத்துச் சென்றான்.
சின்னக் கண்ணனுக்கு இத்தனை பலமா?
சிறுவனின் பலத்தை வியந்து கொண்டே, அவன் இழுத்த இழுப்புக்கெல்லாம் அவனைத் தொடர்ந்து கொண்டிருந்த ஹரிமோகனுக்கு சிலீரென்று ஒரு புதிய அனுபவம்..அந்த யோகியின் மனம் ஒரு புத்தகம் போலத் தன் முன் விரிவதைக் கண்டான். எங்கு பார்த்தாலும் கிருஷ்ணா, கோவிந்தா, ஹே மாதவா என்று நாம ஜபமாகவே இருக்கக் கண்டான். ஒரு பரபரப்புமில்லாமல், அன்புமயமான சூழலில் கண்ணனையே எதிர்பார்த்துக் காத்திருக்கும் அனுபவம்,தனக்குள்ளும் ஊடுருவுவதைக் கண்டான். இத்தனைக்கும், அந்த யோகி பல நாட்களாகப் பட்டினி கிடப்பதாகத் தெரிந்தது. உடல் வெளுத்துச் சோர்வாகத் தென்பட்டாலும், யோகியின் மனதில் எந்த அலுப்பும் குறையும் இல்லாமல் இருப்பதையும் கண்டான்.
"கிருஷ்ணா, இது என்ன, இவர் சாப்பிட்டு பலநாட்கள் ஆகியிருக்கும் போலிருக்கிறதே. இவருக்கு யார் உணவளிப்பார்கள்? இவரோ அதைப் பற்றிக் கொஞ்சம் கூடக் கவலைப் படுவதாகவும் தெரியவில்லையே?"
"ஏன், நானில்லையா? பொறுப்பை என்னிடம் விட்டு விட்டான், அதுதான் கவலையில்லாமல் இருக்கிறான்."
"நன்றாயிருக்கிறது நீ பொறுப்புடன் கவனித்துக் கொள்ளும் விதம். புலிகள், மிருகங்கள் நடமாடும் காட்டில் குடிக்கத் தண்ணீரோ, பசிக்கு உணவோ இல்லாமல் இங்கே ஒருவன் தவித்துக் கொண்டிருக்கிறான். நீயோ சர்வ சாதாரணமாக அந்தப் பொறுப்பு என்னுடையது என்று சொல்கிறாய்..ஆனாலும் ஒன்றுமே செய்யாமலிருக்கிறாய். கிருஷ்ணா, நீ மிகவும் கொடியவன்."
ஹரிமோகன் உணர்ச்சி மேலிடப் பேசுவதைக் குறுஞ்சிரிப்புடன் கேட்ட கிருஷ்ணன், "ஹரிமோகன், இப்போது ஒரு வேடிக்கையைப் பார்க்கிறாயா?" என்றான். அவன் பதில் சொல்வதற்கு முன்னமே, யோகியின் காலடியில் சாதுவாக அமர்ந்திருந்த புலி திடீரென்று எழுந்து தன்னுடைய வாலைச் சுழற்றியதில், பக்கத்தில் இருந்த எறும்புப் புற்று உடைந்து, ஆயிரக்கணக்கில் எறும்புகள், யோகியின் உடல் மீது பரவின. புற்று உடைக்கப் பட்டதில் கிளர்ச்சியடைந்து,அவை யோகியைப் பல இடங்களிலும் கடிக்க ஆரம்பித்தன.
திடீரென்று ஏற்பட்ட இந்த நிகழ்ச்சியைப் பார்த்து ஹரிமோகன் அதிர்ச்சியடைந்தான். ஆனால் அந்த யோகியோ,எறும்புகள் கடிப்பதைக் கொஞ்சம் கூட சட்டை செய்யாமல், நிஷ்டையில் இருந்தார். "ப்ரியமானவனே, நண்பா" என்று அவர் காதில் விழும் படி அந்த சிறுவன், மென்மையாக அழைத்தான். அந்தக் குரல், பிருந்தாவனத்தில் கோபிகைகளிடம், ராதையிடம் அன்பொழுகப் பேசுவது போலவே யோகியின் மனம் முழுதும் எதிரொலிப்பதை ஹரிமோகன் ஆச்சரியத்துடன் பார்க்க ஆரம்பித்தான். நிஷ்டை களைந்து, யோகி தன்னுணர்வு பெற்ற போதும் கூட,எறும்புகள் கடிப்பதைப் பற்றியோ, சுரீர் சுரீரென்று வலி உடலில் பரவுவதைப் பற்றியோ கவலைப்படாமல் இப்படி நினைப்பதை ஹரிமோகன் கண்டான்.
"இது என்ன புதிய அனுபவமாக இருக்கிறதே! என்னுடைய கிருஷ்ணன் ப்ரியமானவனே என்றழைப்பதைக் கேட்டேன்.எறும்பு கடித்தால் இப்படிக் கூட ஆனந்தமயமான அனுபவம் கிடைக்குமா என்ன!" யோகியின் நினைவு பரவசமாகி, உடல் ஆனந்த மிகுதியால் துள்ள, உடல் மேல் ஊர்ந்துகொண்டிருந்த எறும்புகள் தூரப் போய் விழுந்தன.
சில வினாடிகளில், அங்கே ஒரு எறும்பு கூட இல்லை. யோகியோ, ஏற்கெனெவே பட்ட ஒவ்வொரு கடியும், ஆனந்த பரவசத்தை ஏற்படுத்தக் கை கொட்டி ஆடுவதையும் சிரிப்பதையும் ஹரிமோகன் வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தான்.
"கிருஷ்ணா! என்ன மந்திரம் போட்டாய்? இது என்ன மாயம்?"
ச்யாமசுந்தரனான ஸ்ரீ கிருஷ்ணன் கை கொட்டி சிரித்துக் கொண்டேசொன்னான், "ஆமாம், இது மாயம் தான்.என்னைவிடப் பெரிய மாயக் காரனோ, மந்திரவாதியோ எவருமில்லை.நானே இந்தப் பிரபஞ்சத்தின் ஒரே மந்திரவாதி.இது சொன்னால் உனக்குப் புரியாது. இது பரம ரகசியம். பார்த்தாயல்லவா, இந்த யோகியை எறும்புகள் கடித்த வேதனையை உடல் முழுவதும் அனுபவித்த நிலையில் கூட, எவ்வளவு சந்தோஷமாக இருந்தார்! ஏதேதோ சொன்னாயே, பசி, தாகம், களைப்பு என்று, அதையெல்லாம் அவர் கொஞ்சம் கூட சட்டை பண்ணவில்லை என்பதையும் நன்றாகப் பார்த்தாயா? இன்னமும் கவனித்துப் பார், என்ன நடக்கிறதென்று."
யோகி மறுபடியும் நிஷ்டையில் அமர்ந்து விட்டார். அவரது உடல், பசி தாகத்தினால் வாடியிருந்தாலும், அவரை அது ஒரு விதத்திலும் பாதிக்கவில்லை என்பதை ஹரிமோகன் கண்டான்.
"நண்பா, பிரியமானவனே, இதோ நான் வந்து விட்டேன்." இந்த வார்த்தைகளைக் கேட்டதும் ஹரிமோகன் தனது பக்கத்தில் அந்த மாயக்காரச் சிறுவன் இருக்கிறானா என்று பார்த்துக் கொண்டான்.சிறுவன் அவனருகிலேயே இருப்பதைக் கண்டான். அவனைப்போலவே, அதே மோகனக் கண்ணன் எதிரே கையில் பெரிய தட்டு, குவளையுடன் வருவதைப் பார்த்தான். யோகியும் கண் விழித்துப் பார்த்து, முகமலர்ச்சியுடன் அவனை வரவேற்பதைக் கண்டான்.
"உன்னை ரொம்ப நேரம் பட்டினி போட்டு விட்டேனா? உனக்கு என மேல் கோபம் ஒன்றும் இல்லையே?'
"உன் மேல் கோபமா? எதற்கு? நீ வரும் போது, உன்னுடைய தரிசனமே எனக்கு உணவு. மற்ற நேரங்களில், உன்னை நினைத்துக் கொண்டிருப்பதே தாகம் தீர்க்கும் சாதனம். பசி தாகம் தீர்க்க நீ இருக்கும் போது எனக்கு என்ன கவலை?"
"உனக்காக சில விசேஷமான பலகாரங்களைக் கொண்டு வர எண்ணினேன். அதனால் தான் நேரமாகி விட்டது. இங்கே வந்து பார், என்னென்ன கொண்டு வந்திருக்கிறேனென்று?"
"கண்ணா, வா, இருவரும் சேர்ந்தே உண்போம்."
மாயக் கண்ணனும், யோகியும் ஒருவருக்கொருவர் ஊட்டி விட்டுக் கொண்டனர். பரிகாசமாய்ப் பல கதைகள் பேசினர்.ஹரிமோகன் இந்தக் கட்சியை மிகுந்த ஆச்சச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான். உணவு உண்டு முடித்தவுடன்,அந்த சிறுவன், மறைந்து விட்டான். தன் பக்கத்திலிருந்தவனிடம் ஏதோ கேட்க வாயெடுத்த ஹரிமோகன், பக்கத்தில் சிறுவன் இல்லாததையும், கானகம், மலை, யோகி, புலி எல்லாம் மறைந்து தான் மட்டும் வேறோர் இடத்தில்,வேறோர் காலத்தில் இருப்பதையும் கண்டான்.
ஹரிமோகனுக்கு வியப்பு அடங்கக் கொஞ்ச நேரம் ஆயிற்று. ஏனென்றால், அவன் தன்னுடைய வாழ்க்கையையே பார்த்துக் கொண்டிருந்தான். அவன், அவனது மனைவி,பிள்ளைகள், உறவினர்கள் நண்பர்களோடு இருந்ததைக் கண்டான். ஒரு இயந்திர கதியில், அவன் சாத்திரங்களில் சொன்னபடி, பூஜை புனஸ்காரங்களைச் செய்து கொண்டிருந்தான்.
தான தர்மங்கள், பிள்ளைகளுக்குச் செய்ய வேண்டியது, உறவினர்களுக்கு, நண்பர்களுக்குச் செய்ய வேண்டியது இப்படி எதிலும் குறைவில்லை. ஆனால், அதில் உண்மையான அன்பு இல்லாதிருப்பதையும், செய்யப் பட்டவை எல்லாமே ஒரு சடங்கு, சம்ப்ரதாயத்திகாகத்தான் என்பதைப் பார்த்தபோது தன்னைப் பார்த்தே அவனுக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. மிகவும் உயர்வான ஆன்மிகம் என்று நினைத்திருந்தது, வெறும் இயந்திரத்தனமான சடங்குகளாகக் குறுகிப் போனதையும், உண்மையிலிருந்து விலகி வெகு தூரத்தில் இருந்ததையும் பார்த்த போது ஹரிமோகனுக்கு துக்கம் மேலிட்டது. அந்த இடத்தை விட்டு விலகி இருந்தால் தேவலை என்று தோன்றியது. உடல் மட்டும் கீழே விழ, அவன் வேறு இடங்களில் அலைவதைப் பார்த்தான்.
மிகவும் தாகமெடுப்பது போலத் தோன்றியது. தண்ணீரைத்தேடி வெகுதூரம் அலைந்த பிறகும் தண்ணீர் கிடைத்தபாடில்லை. தண்ணீரை குடிப்பது போல, தாகமெடுக்கும் போதெல்லாம் புழுதியையே உண்டுவந்ததைப் பார்த்தான். தாகம் தீர்வதற்குப் பதிலாக அதிகரித்துக் கொண்டே போனதையும் பார்த்தான். எங்கு பார்த்தாலும், ஒரே புழுதி, புழுதிமயம். அட, ஆண்டவனே குடிக்கத் தண்ணீர் கூடத் தர மாட்டாயா?
அலுப்போடு, அவன் நகரத்தின் வேறொருஇடத்தில் இருப்பதைப் பார்த்தான். ஒரே வாழ்த்துமயமாக அந்த இடம் காட்சி அளித்தது. அட, அங்கே கம்பீரமாக அமர்ந்திருப்பது யார்? செல்வரங்கம், செல்வரங்கமே தான். அவனைச் சுற்றி ஒரு கூட்டமே காத்திருந்தது. ஒவ்வொருவருக்கும், கை நிறையப் பணம் அளிப்பதையும், அவர்கள் அவனை மனதார வாழ்த்திச் செல்வதையும் பார்த்த ஹரிமோகனுக்கு ஒரே வியப்பு! செல்வரங்கம் எப்போதிலிருந்து கொடை வள்ளல் ஆனான்? ஹரிமோகன் வாய் விட்டு, உரக்கச் சிரித்தான். அடக் கடவுளே!
பார்த்துக் கொண்டே இருக்கும் போதே, செல்வரங்கம் மனதில் இருந்த அத்தனையும் ஹரிமோகனுக்குத் தெரிந்தன.புகழுக்காக, நான்கு பேர் தன்னை மதிக்க வேண்டும் என்பதற்காக, காசினாலே நிறையக் காரியம் கை கூடும் என்பதற்காகவே செல்வரங்கம் பணத்தை அள்ளி இறைத்துக் கொண்டிருப்பதும், அவன் மனதில் பேராசையும்,வஞ்சகமும் மண்டிக் கிடப்பதையும் ஹரிமோகன் பார்த்தான். ஒவ்வொன்றும் அவனுள்ளே பேயாட்டம் ஆடி, இன்னும் கொடு, எங்களுக்கு திருப்தி இல்லை, எங்களைத் திருப்தி செய் என்று தலைவிரித்தாடிக் கொண்டிருப்பதையும் பார்த்தான். பார்த்துக் கொண்டே இருக்கும் போது காட்சி மாறுவதை ஹரி மோகன் உணர்ந்தான்.
வெவ்வேறு நம்பிக்கைகள், அதன் பின்னே செல்லும் மனிதக் கூட்டங்கள், அவரவர் நம்பிக்கைக்குத் தகுந்தமாதிரி உருவாக்கி வைத்திருந்த நீதி நெறிகள், தண்டனை முறைகள், ஸ்வர்க்கம், நரகம் இப்படிப் பலவிதமாய்ச் சொல்லப் படுவதையும் ஹரி மோகன் பார்த்தான். யார் யாரோ, அவனை இந்த இடங்களுக்கெல்லாம் அழைத்துச் சென்றதையும்,ஆனால் இந்த இடங்களைப் பற்றி முடிவாக எதுவும் சொல்லாமல் விட்டதையும் பார்த்துக் கொண்டே வந்த ஹரிமோகன் பழையபடி தன்னுடைய ஒட்டு வீட்டில், அதே அழுக்குப்பாய், தலையணையில் அமர்ந்திருப்பதை உணர்ந்தான். அப்போது, இதுவெல்லாம் உண்மையில்லையா, வெறும் கனவு தானா- இந்த சந்தேகம் பெரிய கேள்வியாக எழ, "சியாமசுந்தரா, நான் பார்த்ததெல்லாம் நிஜமா?" என்றான்.
ஷ்யாமசுந்தரன் கருணையோடு அவனைப் பார்த்துவிட்டுச் சொன்னான்,"இப்பொழுதே இரவு அதிக நேரம் ஆகிவிட்டது.இதற்கு மேலும் இங்கே என்னை நிறுத்திக் கேள்வி மேல் கேள்விகளாகக் கேட்டுக் கொண்டிருந்தாயானால், அங்கே என்னைப் பற்றி இல்லாததும் பொல்லாததும் சொல்லிக் கோள் மூட்டி, என் அன்னையிடம் தண்டனை வாங்கிக் கொடுக்க ஒரு பெரிய பட்டாளமே காத்துக் கொண்டிருக்கிறது. அனுபவங்களில் தெளிவு தானாகத் தான் வர வேண்டும்.இருந்தாலும், சில உண்மைகளைச் சுருக்கமாகச் சொல்லுகிறேன். கேட்டுக் கொள்.
நீ பார்த்த ஸ்வர்க்கம், நரகம் எல்லாம் கனவுலகைச் சேர்ந்தவை. ஒரு அனுபவத்திற்கும் அடுத்ததற்கும்இடையில் ஒரு சின்ன இடைவேளை, குட்டித்தூக்கம் அல்லது கனவு மாதிரி.அதைத்தான் ஒரு மனிதன் இறந்தவுடன் ஸ்வர்கத்திற்கோ, அல்லது நரகத்திற்கோ சென்று தன்னுடைய கடந்த ஜன்மத்தின் பலன்களை அனுபவிக்கிறான் என்று சொல்கிறார்கள். உனையே எடுத்துக் கொள், உன்னுடைய முற்பிறவியில் சில அறநெறி உயர்வுகளைப் பெற்றிருந்தாய். ஆனால், உன்னுடைய இதயத்தில் அன்புக்கு இடமில்லாமல் போயிற்று. நீ கடவுளையோ,மனிதனையோ, நேசிக்கவில்லை. அதனால் தான், அந்தப் பிறவி முடிந்ததும், ஒரு இடைவேளை-அதில் உன் மனத்தின் உந்துதல்கள், அதன் விளைவுகளுக்கேற்றவாறு வசித்து வந்தாய். அதுவும் உனக்குப் பிடிக்கவில்லை-எனென்றால் உனது பிராணமய உணர்வு பொறுமையற்றுப் போயிற்று.அடிநாதமான அன்பு எனும் நீருக்காகத் தவித்தாய். புழுதிபடர்ந்த ஒரு நரகத்தில் வசிக்கப் போனாய்.
அதற்கப்புறம், உன்னுடைய புண்ணியங்களை அனுபவித்து முடிந்ததும் மறுபடி பிறந்தாய். அதிலும் கூட, ஒரு வரட்டுத்தனமான ஆசாரக் கோட்பாடுகளையும், கட்டாயம் செய்தே ஆக வேண்டும் என்கிற சில தர்மங்களையும் செய்ததைத் தவிர, உதவி கேட்டு வந்த எவருக்கும் உள்ளன்போடு எதுவும் செய்யாமல் போனதன் காரணமாகத்தான்,இந்தப் பிறவியில், உனக்கு இவ்வளவு தேவைகள், மனக்குறைகள் இருந்துகொண்டே இருக்கின்றன.இத்தனைக்குப் பிறகும், வழக்கமான புண்ணியங்களை தேடும் செயல்களையே தொடர்ந்து செய்ய விழைவாய் எனில், உன்னுடைய புண்ணிய பாவங்களாகிற இருபெரும் தளைகள், முன்னமே சொன்னேனே, அந்தக் கனவுலக அனுபவத்தால் இன்னமும் வேரோடு அற்றுப் போகவில்லை இன்னும் மீதமிருக்கிறது, மறுபடி மறுபடி கனவுக்கும் நிஜத்திற்கும் இடையில் அவஸ்தைப் பட்டேயாக வேண்டும். இந்த உலக வாழ்க்கையிலேயே, கனவுலகில் அல்ல, உன்னுடைய ஆசைகள், ஆர்வத்தின் பலனாலேயே அவை மறைய வேண்டும்.
செல்வரங்கத்தின் கதையைப் பார்- முந்தைய பிறவியில் பெரும் கொடையாளியாக இருந்ததால்,ஏராளமானவர்களுடைய இதயபூர்வமான ஆசியினால், கோடிகளுக்கு அதிபதியாய்ப் பிறந்திருக்கிறான். ஆனாலும்,அவனது மனம் இன்னும் பண் படுத்தப் படவில்லை. பூர்த்தி செய்யப் படாத கொடிய இயல்புகளைத் திருப்தி செய்யவே,கொடிய எண்ணங்களும், கொடிய செயல்களுடனும் பிறந்திருக்கிறான். மண்ணைக் கொத்தி, பக்குவப் படுத்துவது போல, இங்கே கொடுமையாகத் தெரிவது கூடப் பக்குவப் படுத்துகிற சாதனம் தான். மண் பக்குவமாய் இருந்தால் தான், விதை முளைக்கும்.அன்பாகிற தண்ணீர் விட்டு கவனமாகப் பார்த்துக் கொண்டால் தான், செடி வளரும், பூ பூக்கும்.
இப்போது கர்மவினையின் சட்டங்கள் கொஞ்சமாவது புரிகிறதா?
கர்மவினை என்பது-பரிசுகளோ, தண்டனையோ அல்ல.
அவரை விதைத்தால் அவரை தான் விளையும். துவரை விதைத்தால் துவரை தான் விளையும். இந்த இயற்கை விதி புரிகிறதல்லவா-அதைப் போலத்தான், நல்ல செயல்களில் இருந்து நன்மை-கொடிய செயல்களில் இருந்து கொடுமை.அது தான் புண்ணியம்-பாவம். இந்த எளிய ஏற்பாடு எதற்காக என்றால், மனமும் இதயமும் சுத்தமாவதற்கும், கொடிய மிருகத்தன்மை அழிவதற்காகவும் இருக்கிறது. பொய்மையிலிருந்து தான் உண்மையைக் கண்டாக வேண்டும்..இருட்டில் இருப்பவன்தான் வெளிச்சத்தைத் தேடியாக வேண்டும்.. பார்த்தாயா ஹரிமோகன்! எல்லையற்ற பிரபஞ்ச வெளியில் இந்த பூமி, எனது படைப்பில் ஒரு சிறு பகுதிதான். ஆனாலும் நீங்கள் எல்லோரும் ஒரு உன்னதமான உண்மையைக் கண்டறிவதற்காகப் படைக்கப் பட்டிருக்கிறீர்கள். நன்மை-தீமை, புண்ணிய-பாவம், இப்படி எதிர்மறையான இரட்டைத்தன்மைகளின் பிடியிலிருந்து விடுபடும் போதுதான் கர்மவினை- -அதன் விளைவுகளில் இருந்தும் விடுபட முடியும்.
நீயும் கூட இந்த விடுதலையை நோக்கித்தான் உன்னை அறியாமலேயே நகர்ந்து கொண்டிருக்கிறாய். இந்த முயற்சியில், உனக்கு உறுதுணையாக தெய்வீகம் துணையிருக்கும். இந்த நிபந்தனைக்கு உட்பட்டால் தான், நீ என் தோழனாக ஆக முடியும். விளையாட்டிலிருந்து விலகிக் கொள்கிறேன், எனக்கு விடுதலை இப்பொழுதே கொடு என்றெல்லாம் கேட்கக் கூடாது.
என்ன, சம்மதமா?”
ஹரிமோகன் ஆழ்ந்த பெருமூச்சு விட்டான். அவனுக்கு ஏதோ புரிந்த மாதிரி இருந்தது. எப்படிச் சொல்வது, என்ன சொல்வது என்கிற யோசனையில் கொஞ்ச நேரம் இருந்தான்.
ஸ்ரீ கிருஷ்ணன்,அவனுடைய இனம்புரியாத யோசனையிலிருந்து எழுப்பினான்: "என்ன ஹரிமோகன், ஏதாவது புரிந்ததா?"
"புரியாமல் என்ன, கிருஷ்ணா? நீ ஏதேதோ பேசி என்னை நன்றாக மயக்கி விட்டாய். இப்போது எனக்கு, உன்னை மடியில் வைத்துக் கொஞ்ச வேண்டும், என்னிடத்திலும் அன்பிருக்கிறது, அது உனக்காகத்தான் அதை உனக்குக் காண்பிக்க வேண்டும் என்பதைத் தவிர வேறொரு ஆசை இல்லை." இப்படிச் சொல்லிக் கொண்டே வந்தவன்,திடீரென்று ஒரு யோசனை கிளம்ப, "அடப் பொல்லாத பயலே! மறுபடியும் நீ என்னை ஏமாற்றி விட்டாய்.என்னென்னவெல்லாமோ சொன்னாயே, தீயதை ஏன் படைத்தாய் என்பதற்கு ஒரு காரணமும் சொல்லாமல் விட்டு விட்டாயே?" இப்படிக் கேட்டுக் கொண்டே சிறுவனின் கரங்களை கெட்டியாகப் பற்றிக் கொண்டான்.
சிறுவனோ வெகுலாவகமாகத் தன் கைகளை விடுவித்துக் கொண்டு, சற்றே எட்டி நின்று கொண்டான். ஒரு கள்ளச் சிரிப்புடன், "பார்த்தாயா? கொஞ்சம் இறங்கி வந்து உனக்குப் புரிய வைக்க வந்தால், ஒரே மணி நேரத்தில் அத்தனை ரகசியங்களையும் தெரிந்து கொண்டு விடலாம் என்று பார்க்கிறாயே! "
"அப்படி இல்லை கிருஷ்ணா......" ஹரிமோகன் சிறுவனை நோக்கி நகர்ந்து வந்தான்.
சிறுவனது முகத்தில் பொய்க்கோபம், அதையும் மீறிய சிரிப்புடன் சொன்னான்:
" நகர்ந்து போ ஹரி மோகன்! உன்னை எனக்குத் தெரியாதா? கொஞ்ச நேரம் முன்பு வரை, இந்தப் பயல் மட்டும் என் கையில் கிடைக்கட்டும், கட்டி வைத்து உதைக்கிறேன் என்று கருவிக் கொண்டிருந்தவன் தானே நீ! உனக்கே அது மறந்து போய் விட்டதா என்ன? அதற்கு பயந்து கொண்டுதானே, நான் உன்னிடத்திலிருந்து ஒரு நாலடி தள்ளியே நின்று கொண்டிருந்தேன்?"
ஹரிமோகன் இருட்டில் கைகளைத் துழாவியபடி, தேடி வந்துகொண்டிருந்தான். சிறுவனோ இன்னமும் தள்ளியே நின்று கொண்டு சொன்னான்:" இல்லை இல்லை. இந்த திருப்தி, விளையாட்டெல்லாம், உனக்கு அடுத்த பிறவியில் தான்."
இப்படிச்சொல்லிக் கொண்டே, நீண்ட இருட்டில் சிறுவன் ஓடி மறைந்து விட்டான்.
ஹரிமோகனுக்கு நடந்ததெல்லாம் கனவா, நிஜமா என்ற சந்தேகம் எழத் தனக்குத் தானே பேசிக் கொள்ளலானான்.
"அந்த வசீகரமான முகம், புன்சிரிப்பு, இது எதுவுமே கனவில்லை, நிஜம் தான் என்று தோன்றியது. சின்னப் பையனாக இருந்தாலும், என்ன அழகாகச் சொன்னான்? தன் முந்தின பிறவி, ஸ்வர்க்கம்-நரகம் இரட்டையைப் பார்த்தது இது எல்லாம் வெறும் கனவாக இருக்கவே முடியாது.
என்னுடைய ஷ்யாமசுந்தரன் என்னைத் தேடி வந்தான். என்னுடன் பேசினான்.ஐயோ, நான் தான் அவனிடத்தில் மரியாதை இல்லாமல் பேசினேன்...அவனைக் கட்டி வைக்கப் போகிறேன் என்றேன். அடிப்பேன் என்றேன். அவனைப் பொய்யன், பித்தலாட்டக்காரன் என்றெல்லாம் ஏசினேன். அது தெரிந்தும் என் பிரபு என்னைத் தேடி வந்தான்,என்னோடு சமமாகப் பேசினான், சிரித்தான், பொய்க்கோபம் காட்டினான். கேள்விகளைக் கேட்டு முடிப்பதற்குள்ளேயே,என் பிரபு என் கேள்வியிலேயே பதிலாக வந்து விட்டான். கிருஷ்ணா! கிருஷ்ணா!"
ஹரிமோகனுடைய மொத்தமும் ஒரே ஒரு கேள்வியைத் தான் கேட்டுக் கொண்டிருந்தது
" கோவிந்தா! என் பிரபோ, உன்னை மறுபடி காண்பது எப்போது?"
ஸ்ரீ அரவிந்தர் சொசைடி வெளியிடும் மாத இதழான அகில இந்திய இதழில், [ஏப்ரல் 2002] ஒரு கனவு என்ற தலைப்பில் டாக்டர் மீரா ஷர்மா தமிழில் மொழிபெயர்த்து வெளியான ஒரு வங்க மொழிக் கதையைத் தழுவியது. ஆசிரியர் விவரம் தெரியவில்லை. எப்போதோ படித்தது..மறுபடி கிடைத்தது, இதில் வரும் ஹரிமோகன் நான் தானோ என்ற சந்தேகம் கூட வந்தது. நானாக இருக்கக் கூடாதா என்ற ஏக்கமே கதையை வாசித்து முடித்தபின் வந்தது. இது 2009 இல் எழுதியதன் மீள்பதிவுதான் நான் ஏன் பிறந்தேன் என்ற தேடலில் மறுவாசிப்புக்காக
*****