முந்தைய பதிவில், ஆளவந்தார் எனும் பரமாசார்யனின் கதையை கொஞ்சம் நீட்டி முழக்கிச் சொன்னதற்கு ஒரு காரணம் உண்டு.
அதிலே வருகிற, ஆக்கியாழ்வான் எனும் பண்டிதனைப் போல, வெற்று வார்த்தைகளில் தனக்கு சௌகர்யமான விதத்தில் ஏதோ ஒன்றை நிறுவிவிட்டதாகவும் Q E D என்று தனக்குத் தானே முத்திரை குத்திக் கொள்வதும், சமய நம்பிக்கைகளின் அடிப்படையில் சிந்திப்பவர்கள் அனேகமாக எல்லோருமே அன்று முதல் இன்று வரை செய்து கொண்டிருப்பது தான்!
அனுபவங்களைத் தேடி அதில் வெற்றி பெறுகிற ஒருவர் அல்லது வெற்றி பெற்றதாக நினைக்கும் ஒருவர் தன்னுடைய அனுபவங்களைப் பிறருடன் பகிர்ந்து கொள்ளும்போது, அவர்களும் அதை நம்பிப் பின் பற்றும் போது அங்கே ஒரு சமயம் உருவாகிறது. அதைத் துவங்கியவருடைய அனுபவங்களின் அடிப்படையில் மட்டுமே, அது பிரபஞ்சத்தின் ரகசியங்களைப் புரிந்து கொள்ள முயல்கிறது. புரிந்து கொள்ள முடியாததை, அப்படி ஒன்று இருக்கவே முடியாதென நிர்தாட்சணியமாக நிராகரிக்கிறது. அப்புறம் என்ன, பிரபஞ்சத்தின் ஒருமையைப் புரிந்து கொள்ளத் தோன்றிய அனுபவங்கள் பிணக்குறும் சமயங்களாகிப் போகின்றன!
குருடர்கள் யானையைத் தடவிப் பார்த்துத் தன் கைகளுக்குப் பட்ட பகுதியை, தான் புரிந்துகொண்டவிதத்தில் சொல்வது மாதிரித் தான் அது! ஆனால், இந்தக் குருட்டுத் தனத்திலும் கூட, ஆன்மீகத்தைப் புரிந்து கொள்ள, ஒரு ஆரம்பம் அங்கே இருக்கிறது என்பது எவ்வளவு ஆறுதலான விஷயம்?!
ஸ்ரீ ஆளவந்தார் அருளிய ஒரு துதியைப் பார்த்தோமல்லவா, அதை மறுபடி நினைவுபடுத்திக் கொள்வோம்:
கீதையில் கண்ணன் நான்கு விதமான யோகங்களைச் சொல்லுகிறான், ஞான யோகம், ராஜ யோகம், கர்ம யோகம், பக்தி யோகம் என்று இந்த நான்கையும் விஸ்தாரமாகச் சொல்லி விட்டுக் கடைசியில், ஒரே வரியில் சொல்கிறான்:
"உனக்குத் தெரிந்த தர்மங்களையெல்லாம் விட்டு விடு. என் திருவடிகளையே பற்றிக் கொள்" [அப்படிச் செய்தாயானால், உன்னைப் பீடித்திருக்கிற தளைகளில்] எல்லாப் பாவங்களிலிருந்தும் விடுவிக்கிறேன், கவலைப் படாதே என்று மேலும் சொல்கிறான்.
இங்கே கண்ணன் வெவ்வேறு பாதைகள் இருக்கின்றன, அவைகள் எல்லாமே தன்னையே வந்தடைகின்றன, ஆக அடையத் தகுந்த பொருள் தானே என்பதைக் காட்டிக் கொடுக்கிறான். அடைய வேண்டிய இலக்கு, இந்தப் பிறவிஎடுத்ததன் நோக்கம் எல்லாமே வெட்ட வெளிச்சமாகி, கதவு திறக்கிறது.
ஏதோ நம்முடைய கையில் தான் எல்லாம் இருக்கிறது என்ற நினைப்பில் ஞான, கர்ம, பக்தி யோகங்களை வைத்துக் கொண்டு அவனைப் பிடித்துக் கொள்ளலாம் என்று தேடினோமானால், தேடிக் கொண்டே இருக்க வேண்டியது தான்! அவன் கிடைத்தாலும் கிடைக்கலாம், இல்லை தேடித் தேடிக் களைத்துப் போக வேண்டியும் வரலாம்! அறிவால் அறியப் பார்க்கிற ஞான மார்க்கம் எல்லோருக்கும் உண்டானதல்ல. கடமையைச் சரிவரச் செய்கிற கர்ம யோகம் எளிது தான் என்றாலும் கூட, இங்கே ஏற்படுகிற மயக்கங்கள் கர்மா நம்மை விடுவிப்பதற்குப் பதிலாக, இன்னமும் கனத்த சங்கிலிகளில் பிணைத்து விடுகிற அபாயமும் உண்டு. பக்தி கொஞ்சம் சுலபமானது தான் என்றாலும், சீக்கிரமே திசைமாறிப்போய் விடக் கூடியது. கோவிலுக்குப் போகிறோம், கண் குளிரப் பெருமாள் தரிசனம் ஆகிறது. பிரசாதத்தை சாப்பிடும் போது, நேற்றைக்குப் புளியோதரை விநியோகம் செய்தது இதை விட நன்றாக இருந்தது என்றோ, எதிர் வரிசையில் நின்ற பெண் ரொம்ப அழகு என்றோ திசை மாறிப் போகும். இழை அறுந்து போகும். ஒரு தறியில் புடவை நெய்யும் போது இழை அறுந்து போனால், நெசவு எவ்வளவு கடினமாக இருக்கும் என்பதைப் போய்ப் பார்த்து விட்டு சொல்லுங்கள். பக்தியும் ஒருவிதமான நெசவு தான். இழை அறுந்துபோகாமல் இருக்கும் வரை, ஒரு பிரச்சினையும் இல்லை. அறுந்துபோனாலோ...?!
சூடிக் கொடுத்த சுடர்க்கொடியான கோதை, மிச்சம் இருக்கும் ரகசியத்தையும் உடைத்துச் சொல்கிறாள்:
அறிவொன்று மில்லாத ஆய்க்குலத் துன்றன்னைப் பிறவி பெறுந்தனைப் புண்ணியம் யாமுடையோம்
குறைவொன்றுமில்லாத கோவிந்தா! உன்றன்னோடு உறவேல் நமக்கிங்கு ஒழிக்க ஒழியாது
அறியாத பிள்ளைகளோம் அன்பினாலுன்றன்னைச்
சிறுபேரழைத்தனவுஞ் சீறியருளாதே
இறைவா நீ தாராய் பறையேலோ ரெம்பவாய்!
குறை ஒன்றுமில்லாத கோவிந்தா! உன்னுடனான உறவை, என்னால் மட்டுமல்ல, உன்னாலும் ஒழிக்க முடியாது! நான் உனதுடல், நீ எனதுயிர்! அதனால், நான் உன்னை மறந்திருந்தாலும், உன்னால் என்னை மறந்திருக்க முடியாது என்ற ரகசியத்தை ஆண்டாள் திருப்பாவையில் மிக அழகாகச் சொல்கிறாள்! எப்படி என்றால், அவன் காரணன், நாம் கார்யம். இரண்டும் ஒன்றைவிட்டு ஒன்று பிரிந்திருக்க முடியாது. உடைமையை இழந்தால், சொத்துக்குரியவனுக்குத் தான் நட்டமே தவிர, சொத்துக்கல்ல. அதுபோல, புண்ணிய பாவங்களைக் காட்டி எங்களை இழந்து விடுவாயானால், உனக்குத் தான் நட்டமே தவிர எங்களுக்கல்ல என்கிறாள் கோதை!
ஒரு வலைக்குழு விவாதத்தில், ஆத்ம விசாரத்தைப் பற்றி ஒரு பேச்சு, சம்பந்தமே இல்லாமல் நுழைந்தது, தானும் பதப்பட உதவியாக இருக்குமே என்ற ரீதியில் ஒரு நண்பர் எழுதியிருந்தார். ஆத்ம விசாரம் என்பதும் பதப்படுதலும் தனக்குள்ளேயே நிகழ வேண்டியது, அது விவாதக் களங்களில் நிகழ்பவை அல்ல என்று அவருக்குச் சொன்னதை, இப்போது மறுபடி நினைத்துப் பார்க்கிறேன்.
ஆன்மீகஅனுபவம் என்பது, காதலர்களுக்கிடையில் இருப்பதைப் போல மிகவும் அந்தரங்கமானது, தனித்தன்மையானது, ஒருவரோடொருவர் ஒப்பிட்டுச் சொல்லிக் கொள்ள முடியாதது, தானே அனுபவத்தில் புரிந்துகொண்டால் ஒழிய,
ஊகித்தும் அறிய முடியாதது!
இன்றைக்கு வருமோ? நாளைக்கு வருமோ? அன்றி இப்போதே வருமோ? தெரியாது! அன்று குன்றமேந்திக் குளிர் மழை காத்தவன் கருணைக்காகக் காத்திருக்க வேண்டியது தான்!
ஸ்ரீ அரவிந்தர் பரிணாமத்தில் மனிதனின் எதிர்கால வளர்ச்சியைப் பற்றி இப்படிச் சொல்கிறார்:
“For man is not intended to grasp the whole truth of his being at once, but to move towards it through a succession of experiences and a constant, though not by any means perfectly continuous self -enlargement. The first business of reason then is to justify and enlighten to him his various experiences and to give him faith and conviction in holding on to his self-enlargings. It justifies to him now this, now that, the experiences of the moment, the receding light of the past, the half-seen vision of the future. Its inconstancy, its divisibility against itself, its power of sustaining opposite views are the whole secret of its value. It would not do indeed for it to support too conflicting views in the same individual, except at moments of awakening and transition, but in the collective body of men and in the successions of Time that is its whole business. “
"The mind's door of entry to the conception of him [the Divine] must necessarily vary according to the past evolution and the present nature. .. "
SRI AUROBINDO,
‘The Synthesis of Yoga ‘
இதைப் பற்றி ஸ்ரீ அரவிந்த அன்னை இன்னும் கொஞ்சம் விளக்கமாகச் சொல்வதையும் கொஞ்சம் பார்ப்போமா?
"I said a while ago:
Each individual is a special manifestation in the universe, therefore his true path must be an absolutely unique path. There are similarities, there are resemblances, there are categories, families, churches, ideals also, that is, a certain collective way of approaching the Divine, which creates a kind of church, not materialised but in a more subtle world -there are all these things -but for the details of the path, the details of yoga, it will be different according to each individual, necessarily, and conditioned physically by his present bodily structure, and vitally, mentally and psychically, of course, by former lives.”
கொஞ்சம் இன்றைய சிந்தனைக்கு இதை எடுத்துக் கொள்வோமா!
No comments:
Post a Comment
ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!